என்னுடைய நூல்கள் வாங்க விவரங்களுக்கு பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்....

Tuesday, October 17, 2017

இருவேறு உலகம் – 52

ப்ரேக் பிடிக்காமல் எதிரே வந்து கொண்டிருந்த லாரியைத் தவிர்க்க வேண்டுமானால் அந்தக் குறுகலான தெருவில் இருபக்கமும் இருந்த பெரும்சுவர்களில் தான் மோத வேண்டும். அந்தச் சுவர்களும் ஒரு தொழிற்சாலையின் கனமான சுவர்கள். லாரியில் மோதுவது போலவே அந்தச் சுவர்களில் மோதுவதும் உயிருக்கு ஆபத்தையே விளைவிக்கும். காரை விட்டு பக்கவாட்டில் நான்கு பேரும் குதித்தால் காயங்களோடு உயிர் தப்பலாம். தப்பாமலும் போகலாம். ஆனால் அதை மற்றவர்களுக்குச் சொல்லித் தெரிவிக்கக் கூட நேரம் இல்லை. அதற்கு மூளையும் வேலை செய்யவில்லை.  வேகமாகப் பின்வாங்கலாம் என்றால் பின்னால் ஒரு ஜீப் நெருக்கமாகவே வந்து கொண்டிருந்தது. அந்த ஜீப்காரன் நிலவரத்தைக் கவனித்தானா இல்லையா என்றும் தெரியவில்லை. அவனுக்கு நிலவரத்தைத் தெரிவிக்கவும் நேரமில்லை. என்ன செய்வது என்று புரியாமல் உதய் காரைப் ப்ரேக் போட்டு நிறுத்தினான்…..

க்ரிஷும், கமலக்கண்ணனும் கூட அப்போது தான் ஆபத்தின் உச்சக்கட்டத்தை உணர்ந்தார்கள். உதயைப் போலவே அவர்களும் அதிர்ச்சியில் செயலற்று உறைந்து போனார்கள். உதய் ப்ரேக் போட்டவுடனேயே பின்னால் நெருக்கமாக வந்து கொண்டிருந்த ஜீப்காரனும் உடனடியாகப் ப்ரேக் போட்டு ஜீப்பை நிறுத்தினான்

லாரி மட்டும் கட்டுப்பாடில்லாத வேகத்தோடு அவர்கள் காரை நெருங்குவதற்கு ஒரு அடி முன்னால் வரை  வந்து திடீரென்று நின்றது. நான்கு பேரும் நம்ப முடியாத அதிர்ச்சி கலந்த திகைப்புடன் அந்த அதிசயத்தைப் பார்த்தபடி சிலையாக சமைந்திருந்த போது க்ரிஷ் மனதில் வேற்றுக்கிரகவாசி சொன்னான்.

இந்த முறையும் நீ தப்பித்து விட்டாய். க்ரிஷ். நல்ல வேளையாக நான் பூமியின் தொடர்பு எல்லையை விட்டுப் போய் விடவில்லை. அமேசான் காடுகளில் சிலவற்றை ஆராய்ச்சிக்காக எடுத்துச் செல்ல குறித்து வைத்திருந்தேன். அதை எடுத்துக் கொண்டு கிளம்புவதற்கு நேரமாகி விட்டது. எல்லையை நெருங்கும் போது தான் உனக்கு வந்திருக்கும் ஆபத்து தெரிந்தது. லாரியை நான் தான் நிறுத்தி வைத்திருக்கிறேன்…..”

உதய் காரிலிருந்து வேகமாக இறங்க மற்றவர்களும் இறங்கினார்கள். எதிரே வந்த லாரியின் டிரைவர் க்ளீனர் இருவரும் இறங்கினார்கள். இருவர் முகத்திலும் பீதியும், அதிர்ச்சியும் அளவுக்கடங்காமல் விரிந்தன. உதய் தன் குடும்பம் பின்னால் நிற்கிற நினைவு கூட இல்லாமல் வாயிற்கு வந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்லி அவர்களைத் திட்டினான். வடநாட்டுக்காரர்களான அவர்கள் நடுங்கியபடி அவன் எதிரில் நின்றார்கள். அவர்கள் எதிர்த்தோ, கோபமாகவோ ஒரு வார்த்தை பேசி இருந்தால் உதய் அவர்களை அடித்துப் புரட்டி எடுத்திருப்பான்….. அவர்கள் பீதி குறையாமல் பேச்சிழந்து நின்றது அவனிடமிருந்து அடிபடாமல் காப்பாற்றியது. பிறகு மராட்டி கலந்த ஹிந்தியில் அவர்கள் வண்டி ப்ரேக் திடீர் என்று வேலை செய்யவில்லை என்றும் கஷ்டப்பட்டு தான் வண்டியை நிறுத்த முடிந்ததாகவும் பரிதாபமாகச் சொன்னார்கள்.

ஆனால் க்ரிஷ் மனதில் வேற்றுக்கிரகவாசி சொன்னான். “இப்போது உன்னைக் கொல்ல முயற்சி செய்திருப்பது உன் உண்மையான எதிரி க்ரிஷ். இனி நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இரண்டாவது முறையும் அவன் தன் உயிரைக் காப்பாற்றியிருப்பது க்ரிஷ் மனதில் அளவிட முடியாத நன்றியுணர்வை ஏற்படுத்தியது. “நன்றி நண்பா

வேற்றுக்கிரகவாசி விடைபெறும் முன் அவசரமாகச் சொன்னான். “….” நான் பூமி எல்லையில் இப்போது இருக்கிறேன்இனி சிறிது நேரத்தில் தொடர்பு எல்லையைத் தாண்டிப்போய் விடுவேன். இனி நான் உனக்கு உதவவோ தொடர்பு கொள்ளவோ முடியாதுஜாக்கிரதையாயிரு…..”

வேற்றுக்கிரகவாசியிடமிருந்த தொடர்பு விடுபட்டது. லாரி டிரைவர், க்ளீனர் இருவரையும் க்ரிஷ் கூர்ந்து பார்த்தான். பார்க்க பரமசாதுக்களாய் தோற்றமளித்த இவர்களும் வாடகைக் கொலையாளிகள் தான் என்பதை நம்பக் கஷ்டமாய் இருந்தது. இவர்களைப் பிடித்து விசாரிப்பது பெரிய காரியமல்ல. ஆனால் இவர்கள் மூலம் அந்த எதிரியை அவன் அடைய முடியாது என்று உள்ளுணர்வு சொல்லியது. அவன் திரும்ப வந்தது அவன் குடும்பத்திற்கே தெரிந்து சுமார் இரண்டரை மணி நேரம் தான் ஆகியிருக்கும். அப்படி இருக்கையில் அதையும் உடனே தெரிந்து கொண்டு இவ்வளவு விரைந்து கொலை முயற்சியில் இறங்கியிருக்கும் அந்தச் சக்தி வாய்ந்த மனிதனை இந்தக் கொலையாளிகளே நேரடியாய் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை......

இப்படிப்பட்ட எதிரியை இனி எப்படி சமாளிப்போம் என்பது க்ரிஷுக்குப் பிடிபடவில்லை. இனியொரு முறை ஆபத்து வந்தால் காப்பாற்ற வேற்றுக்கிரகவாசி கூட இல்லை…..


ர்ம மனிதனிடம் மனோகர் வந்து தகவல் சொன்ன போது அவன் கண்களைச் சுருக்கி விஷப்பார்வை பார்த்தான். அதிகமாய் அமைதி இழக்காத அவன் அபூர்வமாய் மிகுந்த கோபம் அடைகிற போது மட்டுமே அப்படிப் பார்ப்பான்அந்த நேரங்களில் அவன் மேலும் ஆபத்தானவன்....

மனோகர் அவசரமாகச் சொன்னான். “அவங்க மேலே தவறு இருக்கறதா தெரியல. எல்லாமே கச்சிதமா தான் திட்டம் போட்டுச் செஞ்சிருக்காங்க. அந்த ப்ரேக் பிடிக்காத லாரி எப்படி நின்னுச்சுன்னு அவங்களுக்கு இப்பவுமே பிடிபடல. டிரைவர் சொல்றான் பல யானை பலத்துல யாரோ பிடிச்சு நிறுத்தின மாதிரி ஒரு அங்குலம் கூட நகராம நின்னுச்சுன்னு. அவன் பல வருஷமா லாரி ஓட்டறவன். அந்த நிலைமைல அவனே மனசு மாறி அதை நிறுத்த முயற்சி செஞ்சிருந்தாக்கூட முடிஞ்சிருக்காதுங்கறான். அவன் சர்வீஸ்ல இப்படியொரு அதிசயத்தை பார்த்ததில்லைங்கறான். கடைசில அந்த லாரியை ஸ்டார்ட் பண்ணக்கூட முடியலை அவங்களால. ஏதோ ஜாம் ஆன மாதிரி நின்ன வண்டிய இன்னொரு லாரி மூலமா தான் இழுத்துட்டு போய் ரோட க்ளியர் பண்ணியிருக்காங்க. மெக்கானிக்னால கூட லாரிய சரி செய்ய முடியல. என்ன ப்ரச்சனைனே தெரியாம அவனும் குழம்பறதா இப்ப தான் டிரைவர் போன் செஞ்சான்.....”

மர்ம மனிதன் ஒருசில வினாடிகள் கண்களை மூடியிருந்து விட்டுத் திறந்தான். மனோகரைப் பார்த்துபோகலாம்என்று சைகை செய்ய மனோகர் அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்று வேகமாக நகர்ந்தான்.

மர்ம மனிதன் மனம் கேள்விப்பட்ட விஷயங்களை ஆழமாய் அசை போட்டது. க்ரிஷ் என்கிற விதை சாதாரணமாய் அழிகிற மாதிரி தெரியவில்லை.... சதாசிவ நம்பூதிரியின் அந்த விதை உதாரணம் இப்போதும் அவனுக்கு நெருடலாக இருந்தது. ” அந்தப் பையன் சாகாமல் இருந்தான்னா சாதாரணமா இருந்துட மாட்டான்…” என்ற வார்த்தைகள் இப்போதும் அவன் காதுகளில் ஒலித்தன. க்ரிஷ் சாகவில்லை. அவனை ஏதோ ஒரு சக்தி சாக விடவில்லைகட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டு ஓடும் லாரியை எங்கோ இருந்தபடி ஒரு சக்தி அப்படியே தடுத்து நிறுத்துகிறது என்றால் அது சாதாரண சக்தியாய் இருக்க வாய்ப்பில்லை... அது அந்தக் கருப்புப் பறவை சம்பந்தப்பட்ட சக்தியாகத் தான் இருக்க வேண்டும். அது ஏதாவது சித்தர், அல்லது யோகியாக இருக்கலாம் அல்லது  அது ஒரு ஏலியனாகக் கூட இருக்கலாம். இஸ்ரோ ஏலியன் என்ற கோணத்தில் தான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது…..

எதையுமே ஆரம்பத்திலேயே அழிப்பது சுலபம். வளர விட்டு அழிப்பது கஷ்டம்…. அறிவாளிக்கு அந்த இரண்டாவது வழி அனாவசியமும் கூட. அதனால் தான் சதாசிவ நம்பூதிரியின் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடனேயே மர்ம மனிதன், க்ரிஷ் வீடு போய் சேர்வதற்கு முன் அவனை அழித்து விட முடிவெடுத்து மின்னல் வேகத்தில் இயங்கினான். ஏதோ ஒரு சக்தி இடைமறித்திருக்கா விட்டால் இன்னேரம் அவன் க்ரிஷை முடித்தே விட்டிருப்பான்…… உடனடியாக சென்னை போக அவன் மனம் துடித்தது. நேரடியாகவே இறங்கி எல்லாம் முடித்து விட்டு வர அவன் ஆசைப்பட்டான். ஆனால் இரண்டு விஷயங்கள் அந்த எண்ணத்தை உடனடியாகச் செயல்படுத்த விடாமல் தடுத்தன.

முதலாவதும், முக்கியமானதுமாய் மாஸ்டர். அவர் சென்னையில் இருக்கிறார். அவர் கண்டிப்பாக க்ரிஷை அடிக்கடி சந்திப்பார். அல்லது க்ரிஷோடு தொடர்பில் இருப்பார். அப்படிப்பட்ட நிலையில் யார் க்ரிஷ் வழியில் குறுக்கிட்டாலும் அது அவர் கவனத்திற்கு வராமல் போகாது. க்ரிஷை காப்பாற்றிய சக்தி தான் எதிரியாக அவனை இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். அந்த எண்ணத்தை ரகசியமாக விதைத்ததே மர்ம மனிதன் தான். அதை அவன் மிகக் கவனமாக அவர் சிறிதும் அறியாமல் செய்திருக்கிறான். க்ரிஷையும் மாஸ்டரையும் எதிரெதிர் அணியில் இருக்க வைத்ததன் உத்தேசமே தப்பித் தவறி மாஸ்டர் கவனம் சரியான திசையில் போய் விடக்கூடாது என்பதற்காகத் தான். இப்படியொரு சூழ்நிலையை புத்திசாலித்தனமாக உருவாக்கி விட்டு இப்போது சென்னைக்குப் போய் மாஸ்டர் கவனத்திற்குத் தட்டுப்பட அவன் விரும்பவில்லை.

இரண்டாவது க்ரிஷைக் காக்கும் சக்தி. தமிழ் நாட்டில் பாம்புக்கடி பட்டவனை அமேசான் காடுகளுக்குக் கொண்டு போய் காப்பாற்றுகிற சக்தி, எங்கோ இருந்து கொண்டு க்ரிஷ் விபத்தில் சிக்காதபடி காப்பாற்றும் சக்தி சாதாரணமாக இருக்க வாய்ப்பில்லை. அந்த சக்தியைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் க்ரிஷ் பாதையில் நேரடியாகக் குறுக்கிட அவன் விரும்பவில்லை.

ஆனாலும் க்ரிஷை அவன் நேரடியாக மதீப்பீடு செய்தேயாக வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்…..

(தொடரும்)
(வழக்கம் போல் அடுத்த வியாழன் அன்று அடுத்த அத்தியாயம் வரும்)

என்.கணேசன்
(வாசக அன்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்)