சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, October 5, 2007

பார்வைகள்



பெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் "பாசிடிவ்". "எதையும் 'பாசிடிவா' பாருடா. எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு 'பாசிடிவ்" அம்சம் இருக்கும். அதிலே கவனம் வை. நீ ஜெயிச்சிடலாம்" என்று அடிக்கடி சொல்வார்.

"அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும் போது அவர் வேணும்னா இப்படி பேசலாம். நம்மள மாதிரி அடி மட்டத்தில் இருந்துகிட்டு தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்கு தான் கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய விஷயம்" என்று அண்ணா அவர் போனவுடன் கிண்டலடிப்பான். அவன் சொன்னதிலும் யதார்த்தம் இருந்தது.

எது எப்படியோ எனக்கு சிறு வயதிலிருந்தே பெரியப்பா மீது ஒரு ஹீரோ வர்ஷிப் இருந்தது. தோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில் ஒரு வேகம், எப்போதும் எதிலும் நல்லதே பார்க்கும் ஒரு தனிப் பெரும் குணம் என எல்லாமாய் சேர்ந்து அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன.


வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்கு கடந்த ஐந்து வருடங்களாக இறங்குமுகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன் சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்து விட்டார். திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது தான் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டில் படிக்கிறான். அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர் ஒருவர் ஹோட்டலில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்றும் கேள்விப்பட்ட போது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பை சென்ற பின் அவரை நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது ஆபிஸ் வேலை விஷயமாக மும்பை வந்த எனக்கு அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த 'பாசிடிவ்' அணுகுமுறை அவரிடம் இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.

அந்தேரியில் அவர் வீட்டைக் கண்டு பிடிக்க சிறிது சிரமப்பட்டேன். கதவைத் திறந்த பெரியம்மா "வாப்பா" என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள். பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது.

"பெரியப்பா இல்லையா"

"உள்ளே பூஜை செய்யறார். இருக்கிற எல்லாத்தையும் கடவுள் பிடுங்கியாச்சு. ஆனா உன் பெரியப்பாவுக்கு பக்தி குறையலை"

அவள் பேசியது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க வேண்டும். "வாடா...உட்கார்" என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்று போலவே இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார். "இவளுக்கு சொன்னாப் புரியறதேயில்லை. இப்பப் புடுங்கிட்டாருன்னு ஏன் நினைக்கிறே. இவ்வளவு நாள் கொடுத்திருந்தாரேன்னு சந்தோஷப் படேன்".

பெரியம்மா அப்படி சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. பேசாமல் உள்ளே போனாள். அவர்கள் மகன் எங்கோ வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும் விசாரித்தார். பொதுவாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அரண்மனை போன்ற வீட்டில் அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படி ஓரு சூழ்நிலையில் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது. அதைக் குரல் கம்ம அவரிடம் சொல்லியே விட்டேன்.

பெரியப்பா அமைதியாக சொன்னார். "கையை விட்டுப் போனதைப் பற்றியே நினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப் படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு. அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்க காசு இல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி 'இருக்கிற' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு"

 பெரியம்மா காபியுடன் வந்தாள். "உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே...அனுபவிச்சு இழந்துட்டு கஷ்டப்படறது வேறே... ஊம்...எதுவும் சாசுவதமில்லை"

"எதுவுமே சாசுவதம் இல்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம் சாசுவதமா என்ன? இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே" என்று புன்சிரிப்புடன் என்னைக் கேட்டார்.

பிரமிப்புடன் தலையாட்டினேன். வெற்றியின் உச்சாணிக் கொம்பிலிருந்த போது இருந்த இடத்தை விட பெரியப்பா என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்து போனார். நிஜமாகவே பெரியப்பா 'பாசிடிவ்' தான்.


 - என்.கணேசன் 

 நன்றி: நிலாசாரல்.காம்

10 comments:

  1. //'இருக்கிற' விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு !! //

    //"எதுவுமே சாசுவதம்இல்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம் சாசுவதமா என்ன? இதுவும் ஒரு நாள் மாறும்."//

    நல்லதையே நினைக்கும் நல்லவர்களுக்கு என்றுமே எந்த நிலையிலும் எல்லாமே நல்லவைகளாகத் தான் தெரியும்.

    positive attitude - every one should practise

    ReplyDelete
  2. //"கையை விட்டுப் போனதைப் பற்றியே நினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப் படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு. அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்க காசு இல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி 'இருக்கிற' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு" பெரியம்மா காபியுடன் வந்தாள். "உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே...அனுபவிச்சு இழந்துட்டு கஷ்டப்படறது வேறே... ஊம்...எதுவும் சாசுவதமில்லை"//

    மிகவும் அருமை...

    ReplyDelete
  3. "இதுவும் ஒரு நாள் மாறும்."

    intha sol nichayam unmai.
    nanri ungal pathivukku.

    Abishek.Akilan.

    ReplyDelete
  4. மிகவும் அருமையான சிறுகதை. வாழ்க்கையில் எதையும் பாசிடிவ் ஆக எடுத்துக்கொண்டு போனோம் என்றால் எல்லாமே கிடைக்கும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  5. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

    உங்கள் தளம் தரமானதா..?

    இணையுங்கள் எங்களுடன்..

    http://cpedelive.blogspot.com

    ReplyDelete
  6. Good one. Nothing is permanent, yes suffering also. Excellent Ganesan sir.

    ReplyDelete
  7. Maatram ondre maaraathathu ! Mela ponathu keela varum. Keela ullathu mela pokum ! Namma jeyikkap poradanum !

    ReplyDelete
  8. "எதுவுமே சாசுவதம்¢ல்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம் சாசுவதமா என்ன? இதுவும் ஒரு நாள் மாறும்."

    என்ன ஒரு அருமையான வார்த்தை . நன்றி

    ReplyDelete
  9. மிகவும் அருமையான கதை ... ஒவொரு வசனங்களும் சிறந்த கருத்துக்களை கொண்டுள்ளன.

    ReplyDelete