சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, October 5, 2007

அடைக்கலம்

சிறுகதை

ஆதிமூலத்திடம் இருந்த கடைசி சொத்தும் அவர் கையை விட்டுப் போய் விட்டது. வீட்டின் விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்துப் போடும் போது கூட அவரிடம் வருத்தம் தெரியவில்லை. ஆனால் சாட்சிக் கையெழுத்துப் போடும் போது மளிகைக் கடை சாம்பு கண் கலங்கி விட்டார். ரிஜிஸ்டர் ஆபிசிலிருந்து வெளியே வந்தவுடன் ஆதிமூலத்திடம் தன் மனத்தாங்கலைக் கொட்டாமல் இருக்க அவரால் முடியவில்லை.

"நீங்க என்ன நினைச்சாலும் சரி ஐயா, உங்களை மாதிரி ஒரு பிழைக்கத் தெரியாத ஆளை நான் இது வரை பார்த்ததில்லை. தான தர்மம் செய்ய வேண்டியது தான். அதுக்குன்னு இப்படியா? இது வரைக்கும் ஆறு அனாதைக் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கினீங்க. பதிலா என்னத்தைக் கண்டீங்க? ஒண்ணாவது உங்க பக்கம் ஆதரவாய் இப்ப நிக்குதா? இருந்த சொத்தெல்லாம் கரைஞ்சது தான் மிச்சம். இந்தக் காலத்தில் பெத்த குழந்தைகளுக்கு செலவு செய்யறதுன்னா கூட சொத்துள்ள சனங்க தங்களோட கடைசி காலத்துக்குன்னு கொஞ்சமாவது வச்சிக்காம செலவு செய்யறதில்லை"

"விடு சாம்பு. இந்த சொத்தெல்லாம் இருந்தால் கூட நான் சாகறப்ப விட்டுட்டு தானே போகணும். என்ன, அதுக்கும் கொஞ்சம் முன்னாடியே விட வேண்டி வந்துடுச்சு" சொல்லி விட்டு கள்ளங்கபடமில்லாமல் ஆதிமூலம் புன்னகைத்தார்.

சாம்புவிற்கு இப்படியும் ஒரு ஆள் இந்தக் கலியுகத்தில் இருக்கிறாரே என்று மலைப்பாக இருந்தது. "உங்க மனசு அதுகளுக்குப் புரியலியே. நன்றி மறந்த அதுங்க நல்லாயிருக்காதுங்க. நீங்க வேணும்னா பாருங்க"

காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல ஆதிமூலம் பதறினார். "சிவ சிவா! அப்படியெல்லாம் ஒரு பேச்சுக்குக் கூட சொல்லாதே சாம்பு. எங்க இருந்தாலும் அதுங்க நல்லா இருக்கணும். வேறு எதை எதிர்பார்த்தும் நான் அவங்களுக்குச் செய்யல"

அந்த நல்ல உள்ளத்தை மேலும் புண்படுத்த விரும்பாத சாம்பு, வீடு வரை மௌனமாகக் கூட வந்து விட்டு ஆதிமூலத்திடம் இருந்து விடை பெற்றார்.
அந்தக் கிராமத்து வீடு ஆதிமூலம் பிறந்து வளர்ந்த வீடு. அவரது அன்பு மனைவி அவரோடு ஒரு வருடம் வாழ்ந்து விட்டு குறைப் பிரசவத்தில் குழந்தையோடு சேர்ந்து உயிரை விட்ட வீடு. வெவ்வேறு கால கட்டங்களில் ஆறு சிறுவர்கள் ஓடியாடி விளையாடி படித்து வளர்ந்த வீடு. பெரிதான பிறகு அவர்கள் தங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போய் விட்டார்கள். தனது நிலங்களையெல்லாம் முன்பே விற்றிருந்த அவர் மிஞ்சியிருந்த அந்த வீட்டின் மீதும் நிறைய கடன் வாங்கி இருந்தார். கடனைத் தீர்க்க வேறு வழியில்லாமல் போகவே இப்போது அவர் இந்த வீட்டையும் விற்க வேண்டி வந்து விட்டது. வீட்டைக் காலி செய்ய மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி எதிரே சுவரில் மாட்டி இருந்த மனைவியின் படத்தை நிறைய நேரம் பார்த்தார். அவளுடன் வாழ்ந்த அந்த ஒரு வருட காலத்தில் ஒரு நூறு வருட அன்னியோன்னியம் அவர்களுக்குள் இருந்தது. இருவருமாய் சேர்ந்து குழந்தைகள் பற்றி ஏராளமான கனவுகள் கண்டிருந்தார்கள். அவள் இறந்த பின்பு அவள் இடத்தில் வேறு யாரையும் அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் குழந்தைகள் பற்ற்¢ய கனவுகள் மட்டும் மனதில் மறுபடி மறுபடி வந்தன. அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. பலரும் "ஒரு பெண் இல்லாமல் குழந்தைகள் வளர்ப்பது மிகவும் கஷ்டமான காரியம்" என்று சொன்னார்கள்.

இதே சாய்வு நாற்காலியில் அமர்ந்து அன்று அவள் படத்தைப் பார்த்துக் கேட்டார். "நீ என்ன சொல்றே சிவகாமி". அவள் அனுமதி கொடுப்பதாக அவருக்குக் குறிப்பு தென்பட்டது. பின் அவர் யோசிக்கவில்லை. தன் யோசனையை நடைமுறைப்படுத்தினார். முதலில் இரு அனாதைக் குழந்தைகளுடன் அவரது புதிய குடும்பம் ஆரம்பமாகியது.

மூன்றாவது சிறுவன் மட்டும் அவரும், அவர் மனைவியும் கண்ட கனவின் படியே இருந்தான். அவர் அவனை முதலில் சந்தித்தது ஒரு சிறிய ஓட்டலில். அப்போது அவனுக்கு வயது சுமார் ஏழிருக்கும். ஒரு கையில் எச்சில் பக்கெட்டும், மறு கையில் துடைக்கும் துணியும், முகத்தில் புன்னகையுமாய் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த அவனைப் பார்த்தவுடனேயே அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.

"உன் பெயர் என்ன?"

"குமார்"

"நீ ஸ்கூலிற்குப் போறதில்லையா?"

"இல்லை... நான் அனாதை"

"நீ என் கூட வந்துடறியா?"

"எந்த வேலைக்கு?"

அவன் யதார்த்தமாகக் கேட்ட போது ஆதிமூலம் பாகாய் உருகிப் போனார். அவனை வாரி அணைத்தபடி சொன்னார். "படிக்கிற வேலைக்கு".

குமார் அவரைப் பிரமிப்புடன் பார்த்தான். அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். கிராமத்து பள்ளிக்கூட ஆசிரியரான ஆதிமூலத்தை முன்பு வந்த சிறுவர்கள் "ஐயா" என்று தான் அழைத்தார்கள். குமாரும் ஆரம்பத்தில் அப்படித்தான் அழைத்தான். பின் ஒரு நாள் தயங்கித் தயங்கி அவரிடம் கேட்டான். "நான்.. உங்களை.. அப்பான்னு கூப்பிடட்டுமா"

அவர் கண்கள் ஈரமாயின. பேச முடியாமல் தலையசைத்து அவனை அரவணைத்தபடி மனைவியின் படத்தின் முன் வந்து நின்று "சிவகாமி..பார்த்தாயா" என்று உணர்ச்சிவசப்பட்டார். அன்று முதல் அவன் மட்டும் அவரை அப்பா என்றே அழைத்தான். சில நாட்களிலேயே தனது சுறுசுறுப்பாலும், புத்திசாலித்தனத்தாலும், அன்பாலும் அவன் அவர் மனதில் தனி இடத்தைப் பிடித்தான். நன்றாகப் படித்தான். போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் வாங்கினான்.

அவரை எல்லா விதங்களிலும் பெருமிதப் படுத்திய குமார் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தவுடன் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தான். கல்லூரியில் சில பணக்கார இளைஞர்கள் ஸ்கூட்டரிலும், காரிலும் வந்து போவதையும், பணத்தைத் தாராளமாக செலவழித்து வாழ்க்கையை அனுபவிப்பதையும் பார்த்த போது தனது கிராமத்து வாழ்க்கையின் வறட்சி அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே பிரதானமாக ஆரம்பித்தது. படிப்பு வீண் என்று கூட பேச ஆரம்பித்தான். அவர் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லியதெல்லாம் அவனுள் சென்று சேரவில்லை.

ஒரு நாள் அவரிடம் கேட்டான். "அப்பா உங்களுக்கு நிறைய பணம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?"

"உங்களை மாதிரி இன்னும் நிறைய பேரை எடுத்து வளர்ப்பேன்"

"உங்களுக்குன்னு வேற ஆசையே இல்லையாப்பா?"

"இல்லை. உனக்கு நிறைய பணம் கிடைத்தால் என்ன செய்வாய் குமார்?"
அவன் பேரார்வத்துடன் சொல்ல ஆரம்பித்தான். அது அவருக்கு ஒரு புதிய குமாரை அறிமுகப் படுத்தியது. அவனுள் இருந்த வேகமும், எல்லாவற்றையும் அடையாமல் விட மாட்டேன் என்கிற உறுதியும் அவரைச் சற்று பயமுறுத்தியது. அதற்கேற்றாற் போல் இரண்டு நாட்கள் கழித்து அவர் பீரோவில் இருந்த அவரது மனைவியின் நான்கு தங்க வளையல்களை எடுத்துக் கொண்டு அவன் தலைமறைவானான்.

அந்த வளையல்கள் அவர் மனைவி மிகவும் ஆசைப்பட்டு வாங்கியவை. வாங்கிய நாள் முதல் இறந்த நாள் வரை அவள் கைகளில் இருந்தவை. அவ்வப்போது அவர் அந்த வளையல்களை எடுத்துப் பார்ப்பார். அவற்றைத் தொடும் போதெல்லாம் அவள் கைகளைத் தீண்டுவது போல் உணர்வார். அவர் அவற்றை எத்தனை பெரிய சொத்தாய் நினைத்தார் என்பது குமாருக்கும் தெரியும். அந்த வளையல்களும், அவனும் போனது மறுமுறை தன் மனைவியையும், மகனையும் பறிகொடுத்தது போல் பெரிய இழப்பாய் அவருக்குப் பட்டது. அந்த துக்கத்திலிருந்து மீள அவருக்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டன. போனவன் திரும்ப வருவான் என்ற நம்பிக்கை அவருக்கு ஆரம்ப நாட்களில் இருந்தது. ஆனால் நாட்கள் வருடங்களாய் நகர்ந்த பின் அந்த நம்பிக்கை சுத்தமாய் போய் விட்டது.

மிஞ்சியவர்களில் ஒருவன் டாக்டர் ஆனான். திருமணம் முடிந்த பின் அவரை மறந்து போனான். ஓருவன் இஞ்சீனியர் ஆகி அமெரிக்காவிற்குப் போனான். போனவன் திரும்பவில்லை. ஆரம்ப நாட்களில் அவருக்குக் கடிதங்கள் எழுதினான். நாளடைவில் அதுவும் நின்று விட்டது. மற்ற மூவர் டிகிரி முடித்தார்கள். வெளியூர்களில் வேலை கிடைக்க அங்கேயே தங்கி விட்டார்கள். எப்போதாவது பொங்கல் வாழ்த்துகள் வரும். அவரைப் பொருத்த வரை எல்லா சொத்தும் போனதில் அவருக்கு வருத்தமில்லை. எல்லாம் நல்ல விதத்தில் தான் செலவாகி இருக்கிறது. ஆறு பேர் வாழ்க்கைக்கு உதவி இருக்கிறது.

அவருடைய நிலத்தை சிறிது சிறிதாக வேறு வேறு நபர்களுக்கு விற்றாலும் இரண்டு வருடங்கள் முன்பு ஒரு பொது நல டிரஸ்ட் ஒன்று மொத்தமாக வாங்கி விட்டது. அந்த டிரஸ்ட் அங்கு அடைக்கலம் என்ற பெயரில் ஒரு பெரிய அனாதை ஆசிரமம் கட்டி அது தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அதிலும் அவருக்கு ஒரு ஆத்ம திருப்தி. அவருடைய மூதாதையர்களது அந்த பூமியில் இன்னும் பல அனாதைகள் அடைக்கலம் பெறுவார்கள்.

அந்த சாய்வு நாற்காலியில் நிறைய நேரம் கண்ணயர்ந்து விட்டவர், விழித்த போது லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. அவரது கால் மாட்டில் யாரோ அமர்ந்திருந்தார்கள். "யாரது?"

"திருடன்"

"இங்கே திருட இப்ப எதுவுமில்லை" என்று விளையாட்டாய் சொன்னவர் உற்றுப் பார்த்தபடி "யாருன்னு தெரியலையே" என்றார்.

"உங்க மனைவியின் நான்கு வளையல்களைத் திருடிட்டு போன திருடன்"

விளக்கைப் போட்டு விட்டு குமார் திரும்ப அவர் காலருகில் உட்கார்ந்தான். அவன் தோற்றத்தில் நிறையவே மாறியிருந்தான். உடலிலும், உடையிலும் செல்வச் செழிப்பு தெரிந்தது. ஆனால் முகத்தில் குற்ற உணர்ச்சியும், துக்கமும் நிறைந்திருந்தன.

அவனைப் பார்த்த ஆதிமூலத்திற்கு மகிழ்ச்சியில் சிறிது நேரம் வார்த்தைகள் வரவில்லை. "சாகறதுக்கு முன்னாடி உன்னை ஒரு தடவையாவது பார்க்க முடியுமான்னு பல தடவை ஏங்கியிருக்கேன். பரவாயில்லை. இந்தக் கிழவனை ஞாபகம் வச்சுட்டு வந்துட்டே"
அவரது மடியில் முகம் வைத்து கண் கலங்கக் கேட்டான். "மன்னிப்பு கேட்கக் கூட எனக்கு தகுதியில்லை. ஆனாலும் கேட்கிறேன். இந்தத் திருடனை மன்னிப்பீங்களாப்பா"

"இன்னொரு தடவை திருடன், மன்னிப்புன்னு எல்லாம் சொன்னால் எனக்குக் கோபம் வரும். அது உன் அம்மா நகை. பிள்ளை நீ எடுத்துட்டு போற உரிமை உனக்கிருக்கு"

ஒரு கணம் திகைத்துப் போய் அந்த நல்ல மனிதரைப் பார்த்தவன், அவர் மடியில் முகம் புதைத்து நிறைய நேரம் அழுதான். அவனை சமாதானப் படுத்த முயன்று, முடியாமல் போகவே அவன் தலையைப் பாசத்தோடு கோதி விட்டார். "இன்னும் என்னை மறக்கலை. என்னைப் பார்க்க வந்திருக்கிறான்" என்ற எண்ணமே அவருக்கு நிறைவாயிருந்தது.

அழுது ஓய்ந்த பின் அவன் நிமிர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தான். பின்பு அவரிடம் மனம் விட்டுப் பேசினான். உடனடியாக ஒரு வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும் என்கிற வெறியில், மூலதனத்திற்காக அந்த வளையல்களை அடகு வைத்து வியாபாரம் ஆரம்பித்ததைச் சொன்னான். இடையிடையே குற்ற உணர்வு தன்னை படுத்திய பாட்டைச் சொன்னான். ஓரளவு பணம் சேர்ந்ததும் நகையை மீட்கச் சென்ற போது அது ஏலத்தில் போய் விட்டதைச் சொன்னான். அவருக்கு அது எவ்வளவு பெரிய நினைவுப் பொக்கிஷம் என்பதை உணர்ந்த அவனுக்கு அதைத் திருப்பித் தராமல் பார்க்க வரவோ, தொடர்பு கொள்ளவோ தைரியம் வராததைச் சொன்னான். தன் வியாபாரம் பற்றியும் நிறைய சம்பாதித்தது பற்றியும் சொன்னான்.

அவரும் அவன் சென்ற பின்பு நடந்ததை எல்லாம் சுருக்கமாகச் சொன்னார். "...நம்ம நிலம், வீடு எல்லாம் வாங்கின டிரஸ்ட் "அடைக்கலம்"கிற பெயரில் ஒரு அனாதை ஆசிரமம் கட்டியிருக்காங்க. இங்க வர்றப்ப நீ பார்த்திருப்பே. வர்ற புதன் கிழமை கலெக்டர் வந்து திறந்து வைக்கிறார். அந்த ஆசிரமத்தைப் பார்த்துக்கிற மானேஜர் எனக்கு நல்லாப் பழக்கமாயிட்டார். போன வாரம் போய் அவர் கிட்ட பேசி குழந்தைகளைப் பார்த்துக்கிற, பாடம் சொல்லித் தர்ற வேலையைக் கேட்டு வாங்கியிருக்கேன். நல்ல மனுஷன். புதன் கிழமையே வேலைக்கு வரச் சொல்லிட்டார். எனக்கும் ஒரு போக்கிடம் வேணுமே..."

"இந்த வயசுல நீங்க வேலைக்குப் போகணுமாப்பா. பேசாம என் கூட வந்துடங்களேன்"

"இல்லை குமார். அது வேலைன்னு எனக்குத் தோணலை. நம்ம இடம், நிறைய குழந்தைகள்னு நான் கடைசி வரை இருந்துட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் இல்லையா."

மறு நாள் காலையிலேயே அவனை அழைத்துக் கொண்டு போய் உற்சாகமாக 'அடைக்கல'த்தைக் காண்பித்தார். மானேஜரிடம் அவனை "என் மகன்" என்று பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தினார். அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே இருந்த விசாலமான தங்கும் அறைகள், நூலகம், கம்ப்யூட்டர் அறை, பூஜையறை, விளையாட்டு மைதானம் எல்லாவற்றையும் காண்பித்தார்.

"எல்லாத்தையும் யோசிச்சு எவ்வளவு அழகாய் கட்டியிருக்காங்க இல்லையா, குமார்" என்று ஒரு குழந்தையின் சந்தோஷத்துடன் அவர் கேட்க அவனும் தலையசைத்தான். பார்த்து விட்டு வரும் போது முகப்பில் ஒரு முழு உருவப்படத்தை ஒரு திரைசீலை மூடியிருந்ததைப் பார்த்த குமார் "இது என்னப்பா?" என்று கேட்டான்.

"இது இதையெல்லாம் கட்டிய புண்ணியாத்மா படமாம். நானும் பார்த்ததில்லை. புதன்கிழமை தான் திறப்பார்கள்"

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மானேஜர் முன் வந்து "இப்பவே கூடப் பார்க்கலாம் ஐயா" என்று சொல்லி திரைசீலையை விலக்கியும் விட்டார். ஆதிமூலத்தின் ஆளுயர ஓவியம் அவரைப் பார்த்துச் சிரித்தது. அதிர்ச்சியின் எல்லைக்கே போன ஆதிமூலம் குழப்பத்துடன் மானேஜரைப் பார்க்க அவர் புன்னகையுடன் குமாரைக் கை காட்டினார்.

குமார் அடக்கமாகச் சொன்னான்."இந்த டிரஸ்டே உங்க மகனோடது தாம்ப்பா"

இன்னும் நம்ப முடியாமல் அவர் குழப்பத்துடன் விழித்த போது குமார் குரலடைக்கச் சொன்னான்: "வெறும் கையோட மன்னிப்பு கேட்கறதுன்னா நான் எப்பவே வந்திருப்பேன்பா. எதை செஞ்சா உங்க மனசுக்குச் சந்தோஷமாய் இருக்கும், நான் செஞ்ச தப்புக்குப் பரிகாரமாய் இருக்குனு நிறையவே யோசிச்சப்ப இந்த யோசனை தோணிச்சு. நான் இத்தனை வருஷம் சம்பாதிச்சு சேர்த்ததெல்லாம் உங்களுக்கு இதைத் தரத் தான்பா. ஆனா இந்த நிலம், கட்டிடம் எல்லாம் சேர்ந்தாக் கூட அது உங்க நல்ல மனசுக்கும் அந்த நாலு வளையலுக்கும் ஈடாகும்னு எனக்குத் தோணலைப்பா"

எவ்வளவோ முயன்றும் ஆதிமூலம் பேச வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தார். கடைசியில் கண்கள் கலங்க அந்த மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.

- என்.கணேசன்

15 comments:

  1. கண்களில் நீரை வரவழைத்த சிறுகதை. ஆசிரியரின் கற்பனை வளமும் எளிமையான நடையும் சொல்லாடல்களும் வைர வரிகளும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    //"திருடன்"


    //"இங்கே திருட இப்ப எதுவுமில்லை" என்று விளையாட்டாய் சொன்னார் //

    //இன்னொரு தடவை திருடன், மன்னிப்புன்னு எல்லாம் சொன்னால் எனக்குக் கோபம் வரும். அது உன் அம்மா நகை. பிள்ளை நீ எடுத்துட்டு போற உரிமை உனக்கிருக்கு//

    //நான் இத்தனை வருஷம் சம்பாதிச்சு சேர்த்ததெல்லாம் உங்களுக்கு இதைத் தரத் தான்பா. ஆனா இந்த நிலம், கட்டிடம் எல்லாம் சேர்ந்தாக் கூட அது உங்க நல்ல மனசுக்கும் அந்த நாலு வளையலுக்கும் ஈடாகும்னு எனக்குத் தோணலைப்பா//

    நான் படித்ததில் ரசித்து மனம் நெகிழ்ந்ததில் சில வரிகள் இவை.

    ReplyDelete
  2. படித்து முடிக்கையில் கண்களில் நீர். ஆதிமூலமும், குமாரும் மனதைத் தொட்டு விட்டார்கள். இது போல் மேலும் நிறைய எழுதுங்கள் சார். - மாதவன்

    ReplyDelete
  3. sir, neenga yeppavum
    nalla karuthukkalai
    solringa.kanneerudan
    nanri...
    Abishek.Akialn...

    ReplyDelete
  4. Dear Mr Ganeshan,

    Very nice and i was felt with this storey.

    Golden man Mr Ganeshan.

    By
    Dhanagopal.P

    ReplyDelete
  5. கணேசன் இப்பொழுது தான் தங்கள் பதிவுகளை பற்றி தெரிந்து கொண்டேன். தங்களை பாராட்ட வார்த்தை இல்லை. God Bless U.

    ReplyDelete
  6. சார் நான் அழுதுட்டேன்

    ReplyDelete
  7. மனிதம் வாழ இது போன்ற கதைகள் மிகவும் அவசியம். திரு கணேசன் உங்கள் பணி சிறு கதைகளாக பல்லாண்டுகள் தொடரவேண்டும் - எழில்

    ReplyDelete
  8. This story brought tears in my eyes whe I complete reading. congratulations

    ReplyDelete
  9. a story that justifies your blog's preface.
    very happy to read it.

    ReplyDelete
  10. மிகச் சிறந்த கதை இதை படிக்கும் போதே அழுகை வந்து விட்டது .

    ReplyDelete
  11. I also cried a lot. A nice story.

    ReplyDelete