சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 27, 2008

படித்ததில் பிடித்தது- If Life is a Game.....


வாழ்க்கை விளையாட்டு என்றால் இவைகளே விதிகள் என்று பத்து விதிகளை மிக அழகாக சிந்தனையைத் தூண்டும் விதத்தில் செரி கார்டர் ஸ்காட் எழுதியதைப் படித்து மிகவும் ரசித்தேன். வாழ்க்கையைப் படிக்க இந்தப் பாடங்கள் மிகவும் உதவும். ஒவ்வொன்றும் பொருள் பொதிந்த தத்துவம். நீங்களும் படித்துப் பயன் பெறுங்களேன்.

என்.கணேசன்

1) You will receive a body.
You may like it or hate it, but it will be yours for the entire period this time around.

2) You will learn lessons.
You are enrolled in a full-time informal school called "life." Each day in this school you will have the opportunity to learn lessons. You may like the lessons or think them irrelevant or stupid.

3) There are no mistakes, only lessons.
Growth is a process of experimentation - trial and error. The so-called "failed experiments" are as much a part of the process as the experiments that ultimately "work".

4) A Lesson is repeated until learned.
It will be presented to you in various forms until you have learned it. When you have learned it you can then go on to the next lesson. If you do not learn easy lessons, they become harder. You will know you have learned a lesson when your actions change.

5) Learning lessons does not end.
There is no part of life that does not contain its lessons. Every person, every incident is the universal teacher. If you are alive, there are lessons to be learned.

6) "There" is no better than "here."
Nothing leads to happiness. When your "there" has become a "here," you will simply obtain another "there" that again will look better than "here."

7) Others are merely mirrors of you.
You cannot love or hate something about another person unless it reflects something you love or hate in yourself.

8) What you create of your life is up to you.
You have all the tools and resources your need; what you do with them is up to you.

9) All your answers lie inside you.
All you need to do is look, listen and trust.

10) You will forget all of this.


-Cherie Carter-Scott, Ph.D.
"If Life is a Game, These are the Rules"

Monday, March 24, 2008

உங்கள் கோப்பை நிறைந்திருக்கிறதா?


ஜென் துறவி நான்-இன் என்பவர் மிகப்பெரிய ஞானி. அவரிடம் ஜென் புத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு மேலை நாட்டுப் பேராசிரியர் வந்திருந்தார். வந்தவர் ஏற்கெனவே ஜென் புத்த மதத்தைப் பற்றி படித்து தெரிந்து வைத்திருந்தார். அவர் தான் கற்றறிந்தவற்றைப் பற்றியும் தன் கருத்துக்களைப் பற்றியும் நான்-இன்னிடம் மணிக்கணக்கில் விவரித்துக் கொண்டு இருந்தார்.

பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு நான்-இன் அவருக்கு தேநீர் பரிமாறினார். கோப்பையில் தேநீர் ஊற்றியவர் அது நிரம்பிய பின்னும் தேநீர் ஊற்றிய வண்ணம் இருந்தார். ஆரம்பத்தில் நான்-இன் கவனிக்கவில்லையோ என்று சும்மா இருந்த பேராசிரியர் அவர் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே போவதைப் பார்த்து பொறுமை இழந்து போனார்.

"ஐயா நிறைந்த கோப்பையில் தேநீர் ஊற்றிக் கொண்டே போகிறீர்கள். இடமே இல்லாத போது மேலும் தேநீர் ஊற்றி என்ன பயன்?"

"இந்தக் கோப்பையைப் போல் நீங்களும் உங்கள் கருத்துகளாலும், சித்தாந்தங்களாலும் நிறைந்திருக்கிறீர்கள். ஜென்னை அறிய உங்களிடமும் இடமில்லை" என்று நான்-இன் அமைதியாகக் கூறினார்.

ஒரு வேளை அந்தக் கோப்பையில் பாதி தண்ணீர் இருந்து அதில் மீதியை தேநீரால் நிரப்பினால் கூட நாம் அந்தத் தண்ணீரையும், தேநீரையும் சேர்த்து வீணாக்குவது போல் அல்லவா இருக்கும்.?

நம்மில் பலரும் நமது சொந்தக் கருத்துக்களுடனும் சித்தாந்தங்களுடனும் நிறைந்திருக்கிறோம். இந்த சேகரிப்புகளுடன் தான் பல சமயங்களிலும் நாம் புதியனவற்றை அணுகுகிறோம். அதை நாம் உள்ளது உள்ள படி புரிந்து கொள்ளாமல் போவதற்கு இதை விடப் பெரிய காரணம் என்னவாக இருக்க முடியும்.?

ஜென் போன்ற பெரிய விஷயங்களை அறிய மட்டுமல்ல ஒரு மனிதனைப் புரிந்து கொள்ளக் கூட இந்த அணுகுமுறை நமக்கு உதவாது. நாம் ஆழமான நம்பிக்கைகளுடனும், ஆணித்தரமான கருத்துகளுடனும், தீவிர விருப்பு வெறுப்புகளுடனும் எதை அறிய முற்பட்டாலும் உண்மையை அறியவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. மாறாக நமக்குள் இருக்கும் இந்த சாயங்கள் பூசப்பட்ட பொய்யையே மெய்யென அறிய நேரிடும்.

அதுவும் அடுத்த மனிதனையும், அடுத்தவர் மதத்தையும், அடுத்த நாட்டையும் நாம் பொதுவாக இப்படித் தான் புரிந்து கொள்கிறோம் என்றால் அது மிகையாகாது. இதன் விளைவாக நாம் அறியாமையை வளர்த்துக் கொள்கிறோம். சண்டை சச்சரவுகளையும், கலவரங்களையும், பகையையும் பெருக்கும் அபாயத்திற்கு இந்த தவறாகப் புரிந்து கொள்வதே மூலகாரணமாக இருக்கிறது.

எனவே எதை அறிய வேண்டுமானாலும், யாரைப் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் அதற்கு முற்படும் முன் ஒரு கேள்வியை கண்டிப்பாகக் கேட்டுக் கொள்ளுங்கள் - "என் கோப்பை நிறைந்திருக்கிறதா?"

விருப்பு வெறுப்பில்லாமல், முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல், எதையும் யாரையும் திறந்த மனத்துடன் அறிய முற்படும் போது மட்டுமே புரிதல் என்பது நிகழும்.

-என்.கணேசன்

Wednesday, March 19, 2008

அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல்


நேற்றைய அறிவியல் உண்மை இன்றைக்கு உண்மையல்ல என்று நிரூபிக்கப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆணித்தரமாக உண்மை என்று நம்பி வந்த நியூட்டனின் பௌதிகம் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின் உண்மையில்லை என்றாகி விட்டது. இப்படி வருடங்களில் அறிவியல் சித்தாந்தங்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி வருகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்றால் ஆச்சரியமே அல்லவா?

முதலில் இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பெரிய டெக்னிகல் வார்த்தைகளுக்குப் போகாமல் பொதுவாக கண்டறியப்பட்ட சில உண்மைகளைப் பார்ப்போம்.

அணுக்களில் இருந்து x கதிர்களும், பலவிதமான சக்தி வெளிப்பாடுகளும் வெளிப்படுவதைக் கண்ட விஞ்ஞானிகளுக்கு அணுவுக்குள் என்ன இருக்கிறது என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அணுவை அதை விட நுட்பமான ஆல்பா கதிர்களால் துளைத்துப் பார்த்தார்கள்.

அணுவுக்குள் உள்ளே பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதையும் மையத்தில் கரு போல சில ப்ரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றியபடி சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டனர். உதாரணமாக ஒரு மிகப் பெரிய மண்டபத்தை அணுவென்று எடுத்துக் கொண்டால் கடுகு அளவு தான் அதன் உட்கரு இருந்தது.

அந்த அணுத்துகள்களை ஆராய்ந்த போது தான் விஞ்ஞானிகள் குழம்பிப் போனார்கள். எதையும் ஆணித்தரமாக சொல்லும் சக்தி படைத்ததாக கருதப்பட்ட விஞ்ஞானம் அணுவைப் பிளந்து பார்த்த போது பிரமித்து பேச்சிழந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்தத் துகள்கள் சில சமயங்களில் திடப் பொருளாகக் காணப்பட்டாலும் சிலசமயங்களில் அலைகளாக மாறுவதைக் கண்டு அதிசயித்தார்கள். துகள் என்றால் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது ஓரிடத்தில் இருக்க வேண்டும். அலை என்றால் அது எங்கும் பரவி இருப்பது. ஆனால் ஒரே வஸ்து இந்த முரணான இரட்டை நிலைகளில் எப்படி இருக்க முடியும்? சில சமயங்களில் பார்க்கின்ற போதே பார்க்கும் விதத்திற்குத் தக்க துகள்கள், அலைகள் என மாறிக் காட்சி அளிக்கும் இந்த வினோதம் விஞ்ஞானம் இது வரை கண்டிராதது. இதுவே ஐன்ஸ்டீன் சொன்ன க்வாண்டம் சித்தாந்தத்தின் அடிப்படை தத்துவம்.

மேலும் ஒரு துகள் அணுவுக்குள் இந்த இடத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு துகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒரு கோணத்தில் பார்க்கும் போது துகளாகத் தெரிவது வேறொரு கோணத்தில் காணாமல் போய் அலையாக மாறி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டுமாய் எப்படி அது இருக்க முடியும் என்பதை விஞ்ஞானம் விளக்க முடியாமல் திணறியது.

கடைசியில் அணுவைப் பிளந்த விஞ்ஞானம் உள்ளே இருக்கும் இருக்கும் துகள்களை சக்தியின் வெளிப்பாடான பல வடிவங்களாகக் கண்டது. அவை சதா சஞ்சரித்துக் கொண்டிருப்பதையும், ஒன்றுடன் ஒன்று உறவாடுவதையும், தத்தம் சக்திகளைப் பரிமாறிக் கொள்வதையும் விஞ்ஞானிகள் கண்டனர். அவை சக்திகளை பல விதங்களில் வெளிப்படுத்துவதையும், புதிது புதிதாக மாறுவதையும் கண்டு அதிசயித்தனர். இயற்கை விஞ்ஞானிகளுக்கு வசதியாக எதையும் தனியாகப் பிரித்துக் காட்டவில்லை. அவர்களால் உணர முடிந்ததெல்லாம் அந்த துகள்களின் இயக்கத்தின் விளைவுகளையே. முடிவில்லாத இந்த இயக்கத்தின் விளைவாக ஏற்படும் ஒட்டு மொத்த வடிவமைப்பே நாம் காணும் பொருள்கள். உண்மையில் பிரபஞ்சம் முழுவதுமே ஓர் சக்தி இயக்கம் தான், உலகமே சக்தியின் துடிப்பு தான் என்ற முடிவுக்கு விஞ்ஞானம் வந்திருக்கிறது. சில உண்மைகள் தெளிவாக வார்த்தைப்படுத்த முடியாதவை என்பதையும் அறிவியல் ஒத்துக் கொண்டு இருக்கிறது.

இப்போது சில உபநிடதங்கள் சொல்வதைப் பார்ப்போம்.

சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க முற்பட்ட ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்.

"இந்தாருங்கள் குருவே"

"அதை உடை"

"உடைத்தேன் குருவே"

"உள்ளே என்ன இருக்கிறது?"

"மிக நுணுக்கமான சில துகள்ப் பொடிகள்"

"அதையும் உடை"

"உடைத்தேன் குருவே"

"அதனுள் என்ன பார்க்கிறாய்?"

"ஒன்றும் இல்லையே குருவே"

"உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அது போல சூட்சும சக்தியில் தான் ஒவ்வொன்றின் மூலமும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அந்த சூட்சும சக்தியில் தான் இருக்கிறது. இயங்குகிறது"

அணுவை உடைத்து அறிவியல் அறிஞர்கள் கண்டதும் இதையே அல்லவா?

கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். "ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?"

ஈசோபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது:
"அது நகர்கிறது. அது நகர்வதில்லை.
அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது.
அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது.
அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது"

பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: "பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது....."

இதையெல்லாம் முதலில் சொன்ன அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவியல் உண்மைகளை அறிந்தும் உணர்ந்துமிருந்தார்கள் என்று தோன்றுகிறது அல்லவா?

- என்.கணேசன்

Saturday, March 15, 2008

படித்ததில் பிடித்தது - The Man in the Glass


நீங்கள் கண்ணாடியில் காணும்  மனிதன் மிக முக்கியமானவன். அவன் திருப்தி அடைவது உங்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியம். உலகமே உங்களைப் பாராட்டினாலும், புகழின் உச்சாணிக் கொம்பில் முடி சூட்டி வைத்தாலும் அவன் அதிருப்தியுடன் இருந்தால் அமைதியின்மையும் வெறுமையுமே மிஞ்சும்.

கண்களை விற்று சித்திரம் வாங்கினால் ரசிக்க முடியுமா? ஆத்மாவை இழந்து உலகையே அதற்கு வெகுமதியாகப் பெற்றாலும் அது வெற்றியாகுமா?

அதை அழகாகச் சொல்லும் டேல் விம்ப்ரோவின் இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. படித்து மனதில் இருத்தி தங்கள் வாழ்க்கை போகும் விதத்தை நீங்களும் பரிசீலியுங்களேன்.

- என்.கணேசன்


The Man in the Glass

When you get what you want in your struggle for self
And the world makes you king for a day,
Just go to the mirror and look at yourself
And see what that man has to say

For it isn't your father or mother or wife
Whose judgment upon you must pass
The fellow whose verdict counts most in your life
Is the one staring back from the glass

You may be like Jack Horner and chisel a plum
And think you're a wonderful guy.
But the man in the glass says you're only a bum
If you can't look him straight in the eye.

He's the fellow to please - never mind all the rest,
For he's with you clear to the end.
And you've passed your most dangerous, difficult test
If the man in the glass is your friend.

You may fool the whole world down the pathway of years
And get pats on the back as you pass.
But your final reward will be heartache and tears
If you've cheated the man in the glass.

- Dale Wimbrow, 1895-1954

Tuesday, March 11, 2008

எதிர்பாருங்கள்- உங்களிடம் மட்டும்


திர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றங்களும் குறைவாக இருக்கும் என்ற பழமொழி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அது நூறு சதவீதம் உண்மையும் கூட. எதிர்பார்ப்புகள் இருக்கையில் அதற்கு எதிர்மாறாக என்ன நடந்தாலும், யார் நடந்து கொண்டாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கசப்பையே எதிர்பார்ப்பின் பலனாக நாம் காண நேர்கிறது.

எத்தனையோ விதங்களில் நடந்ததும் மற்றவர் நடந்து கொண்டதும் சிறப்பாக இருந்தாலும் நம் எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறாக நடந்த சிறு சிறு விஷயங்கள் அந்த சிறப்பு அம்சங்களை ரசிக்க விடாமல் மனம் சிணுங்க வைக்கிறது. இப்படி செய்திருக்கக்கூடது, அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று மனம் விமரிசித்துக் கொண்டே இருக்கையில் நன்றாக நடந்த மற்ற விஷயங்களை நாம் கவனிக்கவும் மறந்து விடுகிறோம். எனவே எதிர்பார்க்காமல் இருக்கும் போது நடப்பதை ஏற்றுக் கொள்வது எளிதாகிறது. அப்படி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறும் போது எல்லா சூழ்நிலைகளிலும் மன அமைதியுடன் இருக்கவும் செயல்படவும் முடிகிறது.

மார்கஸ் அரேலியஸ் என்ற ரோமானியப் பேரரசர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அவர் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் "இன்று நான் எல்லா தரப்பட்ட மோசமான மனிதர்களையும் சந்திக்கப் போகிறேன். அவர்களது சொல்லும் செயலும் என்னைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப் போகிறேன்...."என்று கூறி மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு தான் வேலையைத் துவங்குவார் என்று கூறுவார்கள். இந்த எதிர் மறையான எதிர்பார்ப்பு அவரை எல்லாவற்றிற்கும் தயார் மனநிலையில் வைத்திருந்தது. இதில் முக்கியமானது அவரது இரண்டாம் வாக்கியம்.

மார்கஸ் அரேலியஸ் சொன்னது போல மற்றவர்களது சொற்களும், செயல்களும் நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். அதை சாதிக்க மற்றவர்களிடம் எதிர்பார்க்காமல் இருப்பது மிகவும் உதவுகிறது. எனவே மற்றவர்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் கைவிடுங்கள். அந்த எதிர்பார்ப்பை புறத்திலிருந்து உட்பக்கம் திருப்புங்கள். உங்களிடமிருந்து எதிர்பார்க்கத் துவங்குங்கள். எதிர்பார்க்கும் உரிமையும் அங்கு மட்டும் தான் உங்களுக்கு இருக்கிறது.

ஆனால் பொதுவாகவே இதற்கு நேர்மாறானததைத் தான் நாம் செய்கிறோம். நம்மிடம் அதிகம் எதிர்பார்க்காமல் மற்றவர்களிடம் தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம். நம்மை நாம் இருப்பது போலவே ஒத்துக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்கிறோம். "நான் சின்னதில் இருந்தே அப்படித்தான்.." என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். மற்றவர்களை அளக்கும் போதோ நம் அளவுகோல்கள் மாறி விடுகின்றன. கறாராக மாறி விடுகிறோம். இந்த ஏற்றுக் கொள்தலும், எதிர்பார்ப்பும் நம்மிடம் இருப்பது நல்லதே - ஏற்றுக் கொள்தல் அடுத்தவரிடத்தும், எதிர்பார்ப்பு நம்மிடத்தும் இருக்கும் வரை.

"ஒவ்வொரு கல்லிலும் ஒரு அழகான சிலை ஒளிந்து கொண்டு இருக்கிறது. தேவையற்ற பகுதிகளைத் தட்டி எறிந்து மீதமிருப்பதை அழகாக செதுக்கினால் கல்லும் சிற்பம் ஆகும்"

நம்மில் பலரும் அப்படி கல்லாக இருக்கிறோம். என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குத் தேவையில்லாத பலதையும் நம்மிடம் இருந்து நீக்க வேண்டும். சிலவற்றை நம்மில் மெருகுபடுத்த வேண்டும். சிலவற்றைக் கூராக்க வேண்டும். அப்படியெல்லாம் செய்ய உந்துதல் வேண்டும். அப்படி ஆக நம்மிடம் நமக்கு உறுதியான எதிர்பார்ப்பு வேண்டும். நம்மை நாம் இப்படி ஆராய்ந்து எதிர்பார்த்து செயல்பட ஆரம்பிக்கும் போது, ஒரு சில மாற்றங்கள் நம்மில் ஏற்பட்டு நாம் சாதிக்க ஆரம்பிக்கும் போது தானாக உற்சாகம் நம்மில் பிரவாகம் எடுக்கும். வேகமும் ஏற்படும். நாம் விரும்பிய உருவத்தை நம் வாழ்வில் தரும் வரை நம்மால் ஓய முடியாது.

எனவே உங்களிடம் இருந்து நிறைய எதிர்பாருங்கள். ஒவ்வொரு கணத்திலும் உயர்ந்ததை மட்டுமே வெளிப்படுத்துவேன் என்று உறுதி பூணுங்கள். அந்த எதிர்பார்ப்பிற்குக் குறைவாக நீங்கள் செயல்படத் துவங்கும் போதெல்லாம் உங்களையே கடிந்து கொண்டு உயர்வுக்கு மாறுங்கள். "நான் அப்படித்தான். என்னால் இதற்கு மேல் முடியாது. ஏனென்றால் ....." என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். உங்களுக்கு எதிரியாக நீங்களே செயல்படாதீர்கள். உங்களை நீங்களே மட்டுப்படுத்தி விடாதீர்கள்.

இன்றே உங்களிடமிருந்து அகற்ற வேண்டியதையும், மெருகூட்ட வேண்டியதையும் பட்டியல் இடுங்கள். உங்கள் ஆதர்ச உருவம் இப்படி இருக்க வேண்டும் என்று உருவகம் கொடுத்து உங்களைச் செதுக்க ஆரம்பியுங்கள். உங்களிடம் உங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் வரை, அதற்கு நேர்மாறான எதையும் உங்களிடத்தில் நீங்கள் சம்மதிக்காத வரை, அந்த உருவமாக நீங்கள் உருவாவதை யாருமே தடுக்க முடியாது.

-என்.கணேசன்

Friday, March 7, 2008

படித்ததில் பிடித்தது - The Desiderata



அறிவுரையை பக்கம் பக்கமாக எழுதி வழங்கினாலும் வாசிப்பவர் மனதில் அது தங்காமல் அவர்கள் படித்தே களைத்துப் போவதுண்டு. ஆனால் சிலர் சொல்வது சுருக்கமாக இருந்தாலும் நச்சென்று மனதில் பதிவதும் உண்டு. அப்படிப் பதிந்த ஒரு அறிவுரை தான் இது. வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து தான் பெற்ற ஞானத்தை வரும் தலைமுறைக்கு சொல்வது போல இது இருக்கிறது. வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளாமல் சிறப்பாக வாழ இந்த பொருள் பொதிந்த வார்த்தைகள் ஒருவருக்கு மிகவும் உதவும். சில வாக்கியங்கள் வழி காட்டுகின்றன. சில நம்மை சமாதானப்படுத்துகின்றன. சில நம்மை ஊக்குவிக்கின்றன. முக்கியமாக மேக்ஸ் எர்மான் சொல்வது போல பல குறைபாடுகளையும் மீறி உலகம் அழகாகவே இருக்கிறது.
இதில் நிறைவையும், வெற்றியையும் பெற இவரது வழிகாட்டுதலைப் பின்பற்றினால் அதுவே போதுமானது.

நீங்களும் படியுங்கள். படித்ததை தினசரி வாழ்க்கைக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

என்.கணேசன்


The Desiderata

Go placidly(அமைதியாக) amid the noise and the haste and remember what peace there may be in silence.

As far as possible without surrender be on good terms with all persons. Speak your truth quietly and clearly and listen to others, even the dull and ignorant; they too have their story.


Avoid loud and aggressive persons, they are vexations to the spirit. If you compare yourself to others you may be become vain and bitter, for always there will be greater and lesser persons than yourself.


Enjoy your achievements as well as your plans. Keep interested in your career however humble; it is a real possession in the changing fortune of time. Exercise caution in your business affairs, for the world is full of trickery. But let this not blind you from what virtue there is; many persons strive for high ideals, and everywhere life is full of heroism.


Be yourself, especially do not feign affection. Neither be cynical about love; for in the face of all aridity(வரட்சி) and disenchantment(வசீகரிப்பின்மை) it is as perennial as the grass.


Take kindly the counsel of the years gracefully surrendering the things of youth. Nurture the strength of spirit to shield you in sudden misfortune. But do not distress yourself with imaginings. Many fears are born of fatigue and loneliness.


Beyond a wholesome discipline, be gentle with yourself. You are a child of the Universe, no less than the trees and the stars; you have right to be here. And whether or not it is clear to you, no doubt the universe is unfolding as it should.


Therefore be at peace with God, whatever you conceive him to be; and whatever your labours and aspirations, in the noisy confusion of life, keep peace with your soul. With all its shams, drudgery and broken dreams, it is still a beautiful world.


Be cheerful. Strive to be happy.


- Max Ehrmann, 1927

Monday, March 3, 2008

நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?


ஒரு கால் டாக்சியில் ஏறுகிறீர்கள். டிரைவர் "எங்கே போக வேண்டும்?" என்று கேட்கிறார். நூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு இடத்தைச் சொல்கிறீர்கள். அது தான் நீங்கள் போக வேண்டிய முக்கியமான இடம். அதற்கு இப்போதுள்ள தெருவிலேயே நேராகப் போக வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

கார் மூன்று மைல் போனதும் உங்களுக்கு வலதுபக்கத் தெருவில் உள்ள வேறொரு இடத்திற்குப் போனால் என்ன என்று தோன்ற டிரைவரிடம் வலதுபக்கம் காரைத் திருப்பச் சொல்கிறீர்கள். அவரும் திருப்புகிறார். அந்தத் தெருவில் அந்த இடத்திற்குப் போக இன்னும் 20 மைல் பயணம் செய்ய வேண்டும். ஐந்து மைல் போனவுடன் ஒரு திருப்பத்தில் நீங்கள் பல காலமாக போக நினைத்திருந்த ஒரு கோயில் 12 மைல் தான் என்று எழுதி இருப்பதைப் பார்க்கிறீர்கள். இத்தனை தூரம் வந்த பின் அந்தக் கோயிலிற்குப் போனால் என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது. டிரைவரை அந்தத் தெருவில் திருப்பச் சொல்கிறீர்கள். டிரைவர் அந்தத் தெருவில் காரைத் திருப்புகிறார்.

கார் ஏழு மைல் போனவுடன் தெருவில் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். மாற்றுப் பாதையில் போகும்படி ஒரு பலகையில் எழுதியிருக்கிறது. அப்படிப் போனால் நீங்கள் போக நினைத்த கோயிலுக்கு 25 மைல் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்று அறிந்த போது கோயிலுக்குப் போகும் எண்ணத்தைக் கை விடுகிறீர்கள். வண்டியைத் திருப்பச் சொல்கிறீர்கள். கார் வந்த வழியே திரும்புகிறது. வழியில் டீ சாப்பிட காரை நிறுத்தச் சொல்கிறீர்கள். டீக்கடையில் ஒருவர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் ஏழு மைல் தூரத்தில் இருப்பதாகச் சொல்கிறார். இவ்வளவு தூரம் வந்து விட்டு அங்கு போகாமல் இருப்பதா என்று தோன்ற காரை அவர் சொன்ன பாதையில் விடச் சொல்கிறீர்கள்..........

இப்படி நாள் முழுவதும் பல முறை தங்கள் பயணத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்தால் நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் நீங்கள் போக நினைத்திருந்த அந்த முக்கியமான இடத்திற்கு நீங்கள் போய்ச் சேர முடியுமா? எத்தனையோ முக்கியமில்லாத இடங்களுக்கு நீங்கள் போய்ப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் எங்கு போகக் கிளம்பினீர்களோ அந்த இடத்திற்கு தூரத்திலேயே அல்லவா
நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

போக வேண்டிய முக்கியமான இடத்தை விட்டு பல வழிகளில் சுற்றி மற்ற இடங்களுக்குப் போவது முட்டாள் தனம் என்று சாதாரண அறிவு படைத்தவராலும் சொல்ல முடியும். ஆனால் இந்த முட்டாள்தனத்தை நம்மில் எத்தனை பேர் நம் வாழ்க்கைப் பயணத்தில் செய்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நம் வாழ்க்கைப் பயணமும் இந்த கார் பயணம் போலத்தான். ஒரு முக்கிய காரணத்திற்காக நாம் பிறந்திருக்கிறோம். அது தான் நாம் போய்ச் சேர வேண்டிய அந்த முக்கிய இடம். பிரபஞ்சமே அந்த கார் டிரைவர். நாம் எங்கு போக வேண்டும் என்று எப்படி டிரைவர் தீர்மானிக்க மாட்டாரோ பிரபஞ்சமும் நம் இலக்குகளைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் நம் விருப்பப்படி நம்மை அது கொண்டு செல்லக் காத்திருக்கிறது.

நம் விருப்பம் தெளிவாகவும் நமக்கு உண்மையிலேயே முக்கியமாகவும் இருக்கிற வரையில் நம் நடவடிக்கைகள் அதற்கு எதிர்மாறாக இருப்பதில்லை. எண்ணத்திலும், செயலிலும் தெளிவிருக்கிற போது நமது குறிக்கோளை எட்டுவது நமக்கு எளிதாகிறது. ஆனால் நம் விருப்பங்கள் அடிக்கடி மாறிக் கொண்டு இருந்தால், ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தால் வாழ்க்கையில் குழப்பமே அல்லவா மிஞ்சும்.

கார் பயணத்தில் மேலே குறிப்பிட்ட குழப்பங்கள் இருந்தால் பணமும் காலமும் மட்டுமே அந்த ஒரு நாள் விரயமாகும். ஆனால் அதுவே வாழ்க்கைப் பயணத்தில் குழப்பம் இருக்குமானால் வாழ்க்கையே விரயமாகிறது. இன்னொரு வாழ்க்கையும் சந்தர்ப்பமும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

எனவே நாம் ஒவ்வொருவரும் இது வரை பிரபஞ்சம் என்ற கார் டிரைவருக்கு எப்படியெல்லாம் போகக் கட்டளையிட்டு இருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது நல்லது. நமக்கு உண்மையில் என்ன வேண்டும், எது முக்கியம் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறோமா? இல்லை முரண்பாடுகளால் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா?

எனக்கு உடல் டிரிம் ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நான் உடற்பயிற்சி செய்வதில் சோம்பலும், உடலுக்கு ஆகாத உணவுப் பதார்த்தங்கள் சாப்பிட ஆவலும் காட்டினால் அது மேலே குறிப்பிட்ட கார் பயணம் மாதிரி தான். முக்கியம் என்று நான் நினைப்பதாக நினைக்கும் ஒரு குறிக்கோளுக்கு எதிர்மாறாக நடவடிக்கைகள் செய்து என் குறிக்கோளுக்கு தொலைவிலேயே நான் நிற்கிறேன் என்று பொருள்.

கிரிக்கெட் சீசனில் பெரிய கிரிக்கெட் வீரராக ஆசை, சில நாட்கள் கழித்து பிரபல பாட்டுப் போட்டி ஒன்றைக் கண்டு சிறந்த பாடகனாக ஆசை, அடுத்த மாதம் இன்னொரு ஆசை என்று வேறு வேறு ஆசைகள் நம்மை ஆட்கொள்ள ஒவ்வொன்றிலும் சில காலம் பெரிய ஈடுப்பாட்டுடன் இருந்து இன்னொன்றிற்குத் தாவிக் கொண்டே இருந்தால் நாம் இதில் எதுவும் ஆகப்போவதில்லை என்பதே யதார்த்த உண்மை. ஏனென்றால் பிரபஞ்சத்திற்கு மாற்றி மாற்றி கட்டளை கொடுத்தபடி இருக்கிறோம்.

அதே போல ஒரு குறிக்கோள் மனதில் இருந்தாலும் அதற்காக எதுவும் செய்ய நாம் தயாராக இல்லாத போதும் எண்ணம் மூலமாக ஒரு கட்டளையும், செயல் மூலமாக நேர் எதிரான கட்டளையும் பிரபஞ்சத்திற்கு தந்து கொண்டு இருக்கிறோம் என்பது பொருள்.

நம்மில் எத்தனை பேர் எங்கு போக வேண்டும், என்ன ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்?

பலரும் தெளிவாக இருப்பதாக சொல்லக்கூடும். ஆனால் தெளிவு என்பது எண்ணத்தோடு ஒருங்கிணைந்த செயல். அது நம்மிடம் உள்ளதா?

மனித வாழ்க்கை ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் நிச்சயமில்லை. நமக்குள்ளே தெளிவான லட்சியம் இருந்தால், அதை அடைய மன உறுதியும் இருந்து நம் செயல்களும் லட்சியத்தை நோக்கியே இருக்குமானால் விளைவைப் பற்றி நாம் கவலையே பட வேண்டாம். பிரபஞ்சம் நம்மை அதை நிச்சயமாக அடையச் செய்யும்.

பிரபஞ்சம் எல்லை இல்லாத சாத்தியக் கூறுகளோடு நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாம் தெளிவாக அதனிடம் கட்டளையிடத் தயாரா?

- என்.கணேசன்