சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 16, 2009

நியூட்டனும் ஆப்பிளும்


மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்ததைக் கண்ட நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். நியூட்டன் காலத்துக்கு முன்னும் கூட மரங்களில் இருந்து ஆப்பிள்கள் விழுந்து கொண்டு தான் இருந்தன. எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உலகமெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள்.

மரத்திலிருந்த ஆப்பிள் தலையிலேயே விழுந்தாலும் தலையைத் தடவிக் கொண்டு 'எல்லாம் நேரம்' என்று நொந்து கொண்டு ஆப்பிளைப் பொறுக்கி சாப்பிட்டபடி எத்தனையோ பேர் நடையைக் கட்டியிருப்பார்கள். அப்படி தலையிலேயே விழுந்தாலும் 'உதிரும் ஆப்பிள் ஏன் கீழே விழ வேண்டும்' என்ற கேள்வி அந்த மனிதர்களிடம் எழாத போது நியூட்டனுக்கு மட்டும் ஏன் அந்த சாதாரண நிகழ்ச்சியைக் கண்டு அசாதாரணமான ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது?

இந்தக் கேள்விக்கு தற்செயலாகத் தோன்றியிருக்கலாம் என்பதை பதிலாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான பதில் நியூட்டன் தயாரான மனநிலையில் இருந்தார் என்பது தான். அந்த சாதாரண நிகழ்ச்சி ஒரு பொறியாய் தாக்க அந்த தயார் நிலை மனம் அதைப் பெற்று அக்னி பற்றிக் கொண்டது. அது சம்பந்தமான எல்லா விடைகளையும் பெற்ற பின் தான், எல்லாக் கேள்விகளையும் சாம்பலாக்கிய பின் தான் அந்த அக்னி அடங்கியது. அந்த தயார் நிலை இருந்திரா விட்டால் ஈர விறகில் பட்ட தீப்பொறியாக அந்த நிகழ்வு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது போயிருக்கும்.

ஒன்றைப் பெறத் தயாரான நிலையில் இருந்தால் மட்டுமே நாம் அதைப் பெற முடியும். அதனால் பயனடைய முடியும். இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார். நாம் தினந்தோறும் அதைக் காணத்தவறிய வண்ணமே இருக்கிறோம். காரணம் அவையெல்லாம் தயார்நிலையில் இருப்பவன் கண்களுக்கு மட்டுமே அவை தென்படும்.

சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந்து அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தெரிந்திருப்பதைத் தான் சிலர் அதிர்ஷ்டம் என்றழைக்கிறர்கள். சந்தர்ப்பம் வரட்டும் பிறகு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன் என்று இருப்பவர்களுக்கு சந்தர்ப்பமே சந்தர்ப்பமாகத் தெரியாது. தெரிந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டு நிற்கும் போது சந்தர்ப்பம் கை நழுவிப் போய் விடும்.

எனவே ஏதாவது ஒன்றில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதில் வெற்றி பெற எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் அறிந்து வைத்திருங்கள். சில திறமைகள் உதவுமென்றால் அந்தத் திறமைகளை உங்களுக்குள் வளர்த்து வைத்திருங்கள். எப்போதும் தயார்நிலையில் விழிப்புணர்வுடன் நம்பிக்கையுடன் காத்திருங்கள். வெற்றி தேவதை சந்தர்ப்பம் என்ற மாலையுடன் வருவாள். நிச்சயமாகத் தங்கள் கரம் பிடிப்பாள்.

- என்.கணேசன்

நன்றி : விகடன்

10 comments:

  1. \\சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந்து அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தெரிந்திருப்பதைத் தான் சிலர் அதிர்ஷ்டம் என்றழைக்கிறர்கள். சந்தர்ப்பம் வரட்டும் பிறகு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன் என்று இருப்பவர்களுக்கு சந்தர்ப்பமே சந்தர்ப்பமாகத் தெரியாது. தெரிந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டு நிற்கும் போது சந்தர்ப்பம் கை நழுவிப் போய் விடும்.\\

    மிக(ச்)சரி.

    ReplyDelete
  2. //அந்த சாதாரண நிகழ்ச்சி ஒரு பொறியாய் தாக்க அந்த தயார் நிலை மனம் அதைப் பெற்று அக்னி பற்றிக் கொண்டது. அது சம்பந்தமான எல்லா விடைகளையும் பெற்ற பின் தான், எல்லாக் கேள்விகளையும் சாம்பலாக்கிய பின் தான் அந்த அக்னி அடங்கியது. அந்த தயார் நிலை இருந்திரா விட்டால் ஈர விறகில் பட்ட தீப்பொறியாக அந்த நிகழ்வு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது போயிருக்கும்.

    ஒன்றைப் பெறத் தயாரான நிலையில் இருந்தால் மட்டுமே நாம் அதைப் பெற முடியும். அதனால் பயனடைய முடியும். இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார். நாம் தினந்தோறும் அதைக் காணத்தவறிய வண்ணமே இருக்கிறோம். காரணம் அவையெல்லாம் தயார்நிலையில் இருப்பவன் கண்களுக்கு மட்டுமே அவை தென்படும்.//

    இந்த பதிவு கூட அப்படி தயார் நிலையில் இருப்பவனுக்கு மிக உதவியாக இருக்கும்.
    விகடனோ, தாங்களோ தொகுத்து புத்தகமாக
    வெளியிடுவீர்களா?

    ReplyDelete
  3. Excellent article

    ReplyDelete
  4. சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந்து அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தெரிந்திருப்பதைத் தான் சிலர் அதிர்ஷ்டம் என்றழைக்கிறர்கள்.

    அதிர்ஷ்டத்திற்கு அழகாய் அர்த்தம் சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  5. பாராட்டுகளுக்கு நன்றி.

    அறிவே தெய்வம் கூறியது போல் வேறு பலரும் ஒரு தொகுப்பாய் இது போன்ற கட்டுரைகளை வெளியிட்டால் பலருக்குப் பலனளிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். தங்களைப் போன்றோர் நல்லெண்ணப்படி ஒரு நாள் அது சாத்தியமாகும் என்று நானும் நம்புகிறேன்.

    அன்புடன்
    என்.கணேசன்

    ReplyDelete
  6. எந்த ஒரு பொரிக்கும் தயார்நிலை வேண்டும் அழகாக சொன்னீர்கள். இதில்.. கடவுளை இழுத்ததுதான் புரியவில்லை..

    //இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார். நாம் தினந்தோறும் அதைக் காணத்தவறிய வண்ணமே இருக்கிறோம். //

    எதாற்தமான நிலையில் சொல்லியிருக்கலாம்.. நம்மை சுற்றி அறிவியலும் வாய்ப்புகளும் இருப்பதுதான் இயல்புநிலை... தயார்நிலையில் உள்ளவன் ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவான்.. இப்பொழுது என்னைபொல..... இதற்கு கடவுளை காட்டியது பொருந்தவில்லை

    ReplyDelete
  7. Hi Ganeshan,
    I am reading your blog from long time, i realized you are doing excellent job.
    thanks for writing this kind articles.

    ReplyDelete
  8. //இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்.// இதுபோன்ற‌ வரிகளை தவிர மற்றவைகளுடன் நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன். இறைவன் என்பதிற்கு பதில் 'காலம்' எனும் பதமே சாலச்சிறந்ததாக எனக்கு படுகிறது.

    பொதுவாகவே விஞ்ஞானிகளும், மிகப்பெரிய ஆராய்ச்சியாளர்களும், அதி்மேதாவிகளும் சமுதாய சூழல்கள், சிக்கள்கள் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகள் போன்ற பிடிப்புக‌ளில் இருந்து விலகி வெகுதூரம் இருந்தே வாழக்கற்றுக்கொண்டவர்கள். அதாவது ஒருசில துறவிகளைப்போல் அல்லது வல்லமை படைத்த கவிஞர்களைப்போல். இவர்களை போன்றவர்கள் இயற்கையின் சக்திகளை உணரக்கூடிய அசாத்திய தன்மையானது சாதாரண மக்களுக்கு ஒருபோதும் கிட்டாது.

    நன்றி.

    ReplyDelete
  9. "வெற்றி பெற வேண்டுமென்றால் அதில் வெற்றி பெற எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் அறிந்து வைத்திருங்கள். சில திறமைகள் உதவுமென்றால் அந்தத் திறமைகளை உங்களுக்குள் வளர்த்து வைத்திருங்கள். எப்போதும் தயார்நிலையில் விழிப்புணர்வுடன் நம்பிக்கையுடன் காத்திருங்கள்."

    மிகச்சரியான வாழ்க்கைப் பாடம்.
    நன்றி.
    ஜா.பிரபு

    ReplyDelete