சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, July 29, 2009

கேட்டதும் பெற்றதும்



நான் பலத்தைக் கேட்டேன்.
கடவுளோ சிக்கல்களைத் தந்து
"இதை சமாளி. பலம் பெறுவாய்" என்றான்.

நான் ஞானத்தைக் கேட்டேன்.
கடவுளோ பிரச்னைகளைக் கொடுத்து
"இதைத் தீர்க்கும் போது ஞானம் சித்தியாகும்" என்றான்.

நான் செல்வத்தைக் கேட்டேன்.
கடவுளோ தந்த அறிவையும், கொடுத்த உடலையும் காட்டி
"சிந்தித்து உழைத்தால் செல்வம் சேரும்" என்றான்.

நான் தைரியத்தைக் கேட்டேன்.
கடவுளோ அபாயங்களை அளித்து
"இதை சந்தி. தைரியம் தானாய் வரும்" என்றான்.

நான் வாழ்வில் நிறைவைக் கேட்டேன்.
கடவுளோ கொடுத்ததையெல்லாம் காட்டி
"தாராளமாய் பகிர்ந்து கொள். நிறைவு நிச்சயம்" என்றான்.

கேட்ட எதையும் கடவுள் அப்படியே தருவதில்லை.
ஆனால் பெறும் வழிகளைக் காண்பிப்பான்.
பெறுவதும், விடுவதும் அவரவர் கையில்.

கடவுள் அரசியல்வாதியல்ல. எனவே இலவசமாய் எதையும் அவன் தருவதில்லை. பக்தர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதில் அவனுக்கு உடன்பாடில்லை. 'தட்டுங்கள், திறக்கப்படும். கேளுங்கள் தரப்படும்' என்பதன் பொருள், கேட்டு முடித்த பின் மடி மேல் விழும் என்பதல்ல. கேட்டதை கௌரவமாய் பெற வழி காண்பிக்கப்படும், அதற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்பது தான்.

மண்ணை மனிதன் உருவாக்கவில்லை. சூரியக் கதிர்களையும் அவன் உருவாக்கவில்லை. மழையை அவன் உருவாக்கவில்லை. அதையெல்லாம் இறைவன் ஏற்படுத்தித் தந்திருக்கிறான். தானியம் பெற விரும்புபவன் கடவுள் ஏரையும் எடுத்து உழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல.

எனவே பிரார்த்தனை செய்வோரே, பிரார்த்தனை செய்து முடித்த பின் அறிவுக் கண்களைத் திறந்து காத்திருங்கள். கடவுள் கண்டிப்பாக வழிகாட்டுவான். எத்தனையோ சந்தர்ப்பங்களை உங்கள் வழியில் ஏற்படுத்தித் தருவான். அதைப் பயன்படுத்தி பிரார்த்தித்ததை அடைந்து அனுபவியுங்கள். முயற்சியில் பெறுவதே உங்களுக்கும் கௌரவம். அப்படிப் பெற்றாலே பெற்றதன் அருமையையும் நீங்கள் அறிய முடியும்.

எனவே நீங்கள் கேட்டதும், பெற்றதும் என்ன என்பதை அறிவுபூர்வமாக அலசுங்கள். கேட்டதற்கும், பெற்றதற்கும் இடையே உள்ள இடைவெளிக்குக் காரணங்கள் உங்களிடத்தே இருக்கக் கூடும்.

-என்.கணேசன்

நன்றி: விகடன்

Friday, July 24, 2009

இந்தப் பாத்திரம் நிரம்புவதில்லை!


ஒரு சு·பி கதை...

ஒரு அரசர் தனியாக நகர்வலம் சென்று கொண்டிருந்தார். எத்தனையோ வேலைகளின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க அவருக்கு தனிமையின் அமைதி தேவைப்பட்டது. அப்படிச் சென்று கொண்டிருக்கையில் ஒரு பிச்சைக்காரன் அவரிடம் வந்து பிச்சை கேட்கிறான். அரசர் எரிச்சலடைந்து "நானே அமைதிக்காக தனியாக வந்திருக்கிறேன். என் அமைதியைக் கெடுக்காதே" என்று சொல்லி விரட்டுகிறார். பிச்சைக்காரன் வாய் விட்டுச் சிரித்துச் சொன்னான். "அரசே! உங்கள் அமைதி இப்படிப் பலராலும் கெடக் கூடிய நிலையில் இருந்தால் அதற்குப் பெயர் அமைதியே அல்ல"

வந்திருப்பவன் வெறும் பிச்சைக்காரர் அல்ல என்பதைப் பேச்சிலிருந்தே புரிந்து கொண்ட அரசர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள், தருகிறேன்" என்று சொல்ல அந்தத் துறவி ஏளனமாக சிரிக்கிறார். "அரசே! உங்களால் முடியாததை எல்லாம் தர முடியும் என்று வாக்குறுதி கொடுக்காதீர்கள்" என்று கூறுகிறார்.

நாடாளும் மன்னவனுக்குத் தன்னால் தர முடியாத செல்வமா என்று கர்வம் வர "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கிறார்.

துறவி தன் பிச்சைப் பாத்திரத்தைக் காட்டி "இது நிறைய பொற்காசுகள் வேண்டும்" என்கிறார்.

மன்னனுக்கு இவ்வளவு குறைவாகக் கேட்டது தன்னை சிறுமைப்படுத்துவது போல் தோன்றியது. ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் அந்தத் துறவியை அரண்மனைக்கு அழைத்துச் சென்று ஒரு தாம்பாளம் நிறைய பொற்காசுகள் வரவழைத்து அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் கொட்டுகிறார். கொட்டக் கொட்ட பிச்சைப் பாத்திரம் நிரம்பாமல் விழுங்கிக் கொண்டே இருக்கிறது. மன்னனுக்கு அது கௌரவப்பிரச்சினை ஆகி விடுகிறது. கஜானாவில் இருந்து ஒரு மூட்டை நிறைய பொற்காசுகள் வரவழைக்கிறார். அதனாலும் அந்தப் பாத்திரம் நிரம்பவில்லை. இன்னும் மூட்டை மூட்டையாகப் போட்டும் அந்தப் பிச்சைப் பாத்திரம் நிரம்பாமலிருக்க மன்னன் கர்வம் கரைந்தது. துறவியிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

துறவி சொன்னார். "மன்னா! உன்னால் மட்டுமல்ல குபேரனே தன் கஜானாவைக் கொண்டு நிரப்பப் பார்த்தாலும் இந்தப் பிச்சைப் பாத்திரம் நிரம்பாது. காரணம் இது சாதாரண பிச்சைப் பாத்திரம் அல்ல. இது நிறைய பேராசைகளுடன் வாழ்ந்து, நிறைய செல்வத்தை சேர்த்தும் திருப்தி இல்லாமல் இறந்து போன ஒரு மனிதனின் மண்டை ஓட்டினால் செய்யப்பட்ட பாத்திரம்...."

இருந்த போது மட்டுமல்ல இறந்த பின்னரும் நிறைக்க முடியாத மனோபாத்திரம் அது.

இன்றைய நம் ஊழல் அரசியல்வாதிகளிடம் இருக்கும் சொத்து பல்லாயிரம் கோடிகள் இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அவர்களில் யாராவது 'வேண்டுமளவு சம்பாதித்து விட்டோம். பல தலைமுறைகளுக்குத் தேவையான அளவு சொத்துக்கள் சேர்த்து விட்டோம். போதும். இனியாவது பாவப்பட்ட பொதுமக்கள் பணத்தை சுரண்டாமல் அவர்கள் பணத்தை அவர்களுக்காகவே பயன்படுத்துவோம்' என்ற நல்ல தீர்மானத்திற்கு வருகிறார்களா?

உண்ண உணவில்லாமல், உடுக்க சரியான உடையில்லாமல், இருக்க சிறு குடிசையுமில்லாமல் எத்தனையோ கோடி மக்கள் தினமும் போராடுவதைப் பார்த்த பின்னராவது அவர்களுக்கு மேலும் மக்களை சுரண்டுவதை நிறுத்த மனம் வருகிறதா? அவர்களது மனோபாத்திரம் பணத்தை மட்டுமல்லாது, அவர்களது மனசாட்சியையும், மனித நேயத்தையும் சேர்த்தல்லவா கபளீகரம் செய்து விட்டிருக்கிறது. போதாது இன்னும் அதிகம் வேண்டும் என்று கடைசி மூச்சு வரை கேட்கும் பிச்சைப் பாத்திரமாக அல்லவா அது இருக்கிறது.

அவர்களிடம் இருப்பது செல்வமா, பிச்சைக்காரத்தனமா?

- என்.கணேசன்

Monday, July 20, 2009

80/20 விதி


ஆராயப்படாத வாழ்க்கை வாழத்தகுந்ததல்ல என்றான் ஒரு கிரேக்க ஞானி. ஏனென்றால் ஆராயும் போதே வாழ்க்கை ஆழமாகின்றது. சரியையும், தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமாகிறது. அப்படி ஆராயவும், ஆராய்ந்தறிந்த உண்மைகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே இந்த 80/20 விதி.

இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்ப்ரெடொ பரெடொ (Vilfredo Pareto) என்பவர் தன் நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்ந்த போது கண்டுபிடித்தார். தன் நாட்டின் 80% சொத்துக்கள் 20% மக்களிடம் இருப்பதாக 1906 ல் கணக்கிட்டார். 1930-40 களில் அமெரிக்க மேனேஜ்மெண்ட் நிபுணர் டாக்டர் ஜோசப் ஜூரன் (Dr.Joseph Juran) அதே விதி எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும் என்று கூறி வந்தார். எல்லாவற்றிலும் பெரும்பாலான விளைவுகளை சிறுபாலான காரணங்களே ஏற்படுத்துகின்றன என்று கூறிய அந்த விதி பின்னர் பலராலும் பரெடொ விதி அல்லது 80/20 விதி என்றழைக்கப்பட ஆரம்பித்தது.

இந்த விதியை மையமாக வைத்து ரிச்சர்ட் கொச் (Richard Koch) என்பவர் 1998ல் "80/20 விதி - குறைந்ததைக் கொண்டு நிறைய அடையும் ரகசியம்" என்ற ஒரு நூலை எழுதி அது மிகப்பிரபலமடைந்தது.
இதில் எண்பதும், இருபதும் அதிகத்தையும், குறைவையும் குறிக்கும் குறியீடுகளே தவிர துல்லியமான சதவீதத்தைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு வியாபாரி தனக்கு பெரும்பாலான (80%) வியாபாரத்தை அளிப்பது குறைவான எண்ணிக்கையுடைய (20%) பெரிய வாடிக்கையாளர்களே என்பதை எளிதாகக் கூற முடியும். ஒரு மனிதன் தனக்கு அதிகமான (80%) திருப்தியைத் தரும் செயல்கள் ஒருசில (20%) தான் என்பதைக் காண முடியும். தனக்கு 80% வருவாயைத் தருவது 20% முக்கிய செயல்பாடுகளே என்பதைக் கணக்கிட முடியும். இப்படி எல்லா விஷயங்களிலும் இந்த விதி பெரும்பாலும் பொருந்துவதாகவே இருக்கிறது.

இந்த விதியை நினைவு வைத்து புத்திசாலித்தனமாகச் செயல்படும் மனிதன் அதிக சிரமமில்லாமல் நிறைய சாதிக்க முடியும். வியாபாரத்தில் ஒருவன் முக்கியமான 20% பெரிய வாடிக்கையாளர்களை மிகத் திருப்திகரமாக வைத்துக் கொண்டால் 80% லாபத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இப்படி வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக பலனைத் தருவனவற்றை அறிந்து வைத்திருந்து அவற்றை சிறப்பாக செயல்படுத்த முடிபவன் அந்தந்த விஷயங்களில் பெரும் வெற்றியையும், திருப்தியையும் காணலாம்.

மிகவும் ப்ராக்டிகலாகவும், எளிமையாகவும் தெரிகின்ற இந்த உண்மையை பெரும்பாலானோர் உணரத் தவறிவிடுகிறார்கள். முக்கியமானது, முக்கியமில்லாதது, அதிக பலன் தருவது, குறைவான பலன் தருவது என்று பகுத்தறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக அல்லது எல்லாவற்றையும் ஒரே போல செயல்படுத்துகிறார்கள். பின் 'நான் எவ்வளவு செய்தாலும் எனக்கு அதிக பலனே கிடைப்பதில்லை' என்று புலம்பும் மனிதர்களாகி விடுகிறார்கள்.

முதலில் எது முக்கியம் என்பதில் ஓவ்வொருவரும் தெளிவாக இருத்தல் நல்லது. எது எவ்வளவு பலன் தரும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாவற்றையும் முழுமையாக சிறப்பாகச் செய்து முடித்தல் சாத்தியம் இல்லை. நேரமும், சூழ்நிலைகளும் பல சமயங்களில் பாதகமாக இருக்கும் போது அவன் பலவற்றைச் செய்ய முடியாமல் போகிறது. அப்படிச் செய்ய முடியாமல் போகும் செயல்கள் 80% பலன் தரும் விஷயங்களாக இருந்து விடாமல் அவன் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

அதே போல் அதிக பலன் தரும் விஷயங்களுக்கு மற்ற விஷயங்களுக்குக் காட்டும் அக்கறையையும், உற்சாகத்தையும் விட அதிக அக்கறையும், உற்சாகமும் காட்டுதல் பலன்களின் அளவையும், தரத்தையும் அதிகரிக்கும். பலர் பலன் குறைவாகத் தரும் அதிக விஷயங்களில் முதலிலேயே முழு சக்தியையும் விரயமாக்கி விட்டு பின்னர் அதிக பலன் தரும் விஷயங்களுக்கு வரும் போது சோர்ந்து விடுகிறார்கள். அதிக வெற்றிகளை அடைய விரும்புபவர்கள் அப்படி முன்யோசனையில்லாதவர்களாக இருந்து விடக்கூடாது.

முடிந்தால் 80% பலன்களைத் தரும் செயல்களை ஓவ்வொரு நாளும் முதலில் செய்வது நல்லது. முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு செயலாகப் புரிவது நல்லது. அது நடைமுறைக்கு ஒத்து வரா விட்டால், பிற்பாடே கூட அந்த முக்கிய செயல்களுக்கு அதிக நேரம், அதிக கவனம், அதிக உற்சாகம் தந்து செயல்படுவது நல்ல விளைவுகளைத் தரும்.

இந்த 80/20 விதியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறீர்களா? இல்லையென்றால் அதை உணர்ந்து செயல்படுத்த ஆரம்பிக்க இன்றே, இதுவே நல்ல முகூர்த்தம்.

- என்.கணேசன்

நன்றி: விகடன்

Thursday, July 16, 2009

நன்றி அபூர்வமாகிறது

ஒரு காலத்தில் பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்தால் அவர்கள் கைகூப்பி "மகராசனாயிரு, மகராசியாயிரு" என்ற வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவதை சரளமாகக் கேட்க முடியும். இன்று பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்து பாருங்கள். ஏதோ கொடுத்த காசைத் திரும்ப வாங்குவது போல் சலனமே இல்லாமல் அவர்கள் நகர்வதை நீங்கள் சர்வசகஜமாகப் பார்க்கலாம். காசு தருவதற்கு முன்பாவது சில உருக்கமான வசனங்கள் வரலாம். காசு தந்த பின் நன்றி தெரிவிக்கும் பார்வையோ, வார்த்தைகளோ பெற்றால் அது அதிசயமே.

பிச்சைக்காரர்கள் வட்டத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இப்போது நன்றி என்கிற உணர்வு மிக அபூர்வமாகி வருகிறது எனலாம். குடும்பத்தில், அலுவலகத்தில், பொது இடத்தில் என எல்லா மட்டங்களிலும், எல்லா இடங்களிலும் அது மனிதனிடம் காணச் சிரமமான அபூர்வமான உணர்வாகி வருகிறது. பல சமயங்களில் நன்றி தெரிவிக்கப்படுவது கூட சம்பிரதாயமாகவும், வாயளவிலும் இருக்கிறதே ஒழிய அது ஆத்மார்த்தமாக இருப்பதில்லை.

தினையளவு உதவி செய்தாலும் அதைப் பனையளவாக எடுத்துக் கொள்ளச் சொன்ன திருவள்ளுவர் வாக்கு ஏதோ வேற்றுக் கிரக சமாச்சாரம் போல் தோன்ற ஆரம்பித்து விட்டது.

எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு செல்வந்தரிடம் பெரிய பெரிய உதவிகள் வாங்கி வந்தார். அதைப் பற்றிப் பேச்சு வந்த போது அலட்டாமல் சொன்னார். "வேணும்கிற அளவு இருக்கிறது. தருகிறார்".

"அதற்கும் மனம் வேண்டுமே சார். இருக்கிறவர்கள் எல்லாம் தருகிறார்களா?" என்றேன்.

"அதுவும் வாஸ்தவம் தான். என்னோட சொந்தத் தம்பி வேணும்கிற அளவு வச்சிருக்கிறான். ஆனா எனக்கு நயாபைசா உபகாரம் கிடையாது"

இருப்பவர்கள் எல்லாம் நமக்குத் தந்து உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதே தவிர நம்மை விடக் கீழே இருப்பவர்களுக்கு நாம் என்ன உதவி எந்த அளவு செய்கிறோம் என்கிற சிந்தனை சுத்தமாகப் பலரிடமும் வற்றி வருகிறது.

மேலும், தருபவன் எப்போதும் தந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் வரை அவன் நல்லவன் என்று பெரிய மனதுடன் ஒத்துக் கொள்வேன். அவன் ஒரு தடவை மறுத்து விட்டால் வாயிற்கு வந்ததைச் சொல்வேன் என்ற மனோபாவமும் பலரிடமும் வலுத்து வருகிறது.

"அவன் முன்னை மாதிரி இல்லை" என்று சொல்வதன் அர்த்தமே பல இடங்களில் அவன் கொடுப்பதை நிறுத்தி விட்டான் என்பதே.

"கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உளக் கெடும்" என்ற குறளுக்கெல்லாம் இப்போது ஆதரவு சுத்தமாகக் கிடையாது. குழந்தைகள் பெற்றோரிடம் "நீங்கள் பெரிதாக என்ன செய்தீர்கள்?" என்று கேட்பதை நாம் சர்வ சகஜமாகப் பார்க்கிறோம். கடவுள் எத்தனையோ கொடுத்திருந்தாலும் கொடுக்காத ஒன்றைக் காரணம் காட்டியே 'கடவுள் எங்கே இருக்கார்? இருந்தால் எனக்கு இப்படி செய்வாரா?' என்று புலம்புவதைக் கேட்கிறோம்.

இதில் பெரிய தமாஷ் என்னவென்றால் பிறரிடம் பெற்ற உதவிகளை உடனுக்குடன் மறக்கும் மனிதனுக்கு, தான் அடுத்தவருக்குச் செய்யும் கடுகளவு உதவிகளும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருப்பது தான்.

இது ஒரு பெரிய மனப்பற்றாக்குறையே. நன்றி என்ற உணர்வு உயர்ந்த உள்ளங்களில் மட்டுமே உருவாகக் கூடியது. பெருகின்ற உதவியின் அருமை தெரிந்தவன் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பான். அது இல்லாமல் இருப்பது உள்ளம் இன்னும் உயரவில்லை அல்லது உள்ளம் மரத்து விட்டது என்பதையே சுட்டிக் காட்டுவதாக இருக்கும். அந்த விதத்தில் நம் மன வளர்ச்சியை அளக்கும் அளவுகோல் தான் நன்றியுணர்வு.

மேலும் நன்றியுணர்வு இல்லாதவன் எதையும் பெறத் தகுதியில்லாதவனாகிறான். எனவே இயற்கையின் விதி அவனுக்குத் தானாகக் கொடுப்பதைக் குறைத்து விடுகிறது. (அப்படி குறைக்கா விட்டாலும் அவன் பெற்றதை யாருக்காக சேர்த்து வைக்கிறானோ அவர்கள் அவனிடம் நன்றி காட்டாதபடி பார்த்துக் கொள்கிறது.) எனவே பெறும் எதற்கும் மனதார நன்றி தெரிவியுங்கள். நன்றியுடனிருங்கள். பெறுவது பெருகும். நல்ல விதத்தில் பலனும் தரும்.

- என்.கணேசன்

Friday, July 10, 2009

மதங்களைக் கடந்த மனிதர்கள்


ஒரு சஹஸ்ர சண்டிகா யாகம் நடக்கும் வேள்விக் குண்டத்தில் இரண்டு கறுப்பு பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் நெய் ஊற்றும் காட்சியைக் கண்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் ஒரு சண்டிகா யாகத்தின் நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த முஸ்லீம் பெண்கள் யாகத்தில் நெய் வார்ப்பதைக் கண்ட காட்சி அந்த வீடியோவில் வரக் கண்ட எனக்கும் அப்படியே அதிர்ச்சியாக இருந்தது.

அவரிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள் சுவாரசியமாக இருந்தன. கேரளாவில் காஞ்சன்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் என் நண்பர். காஞ்சன்காட்டில் சில தலைமுறைகளுக்கு முன்னால் ஓரிடத்தில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தினரால் வனதுர்க்கை பூஜிக்கப்பட்டு வந்ததிருக்கின்றது. பின் அந்த நம்பூதிரி குடும்பத்தில் ஒரு ஆண் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினர் எதிர்ப்பால் அங்கிருந்து அந்த தம்பதிகள் அங்கிருந்து போய் விட பின்னர் அந்த நம்பூதிரிக் குடும்பத்தினரும் அங்கிருந்து போய் விட்டிருந்திருக்கிறார்கள். வனதுர்க்கை பூஜையும் நின்று போயிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அந்தப்பகுதியில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க இந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ள அந்த ஊர் மக்கள் ஆழமாக ஆராயப்போக இந்தப் பழைய கதை தெரிய வந்திருக்கிறது. இந்துக்கள் அந்த இடத்தில் ஒரு பெரிய வனதுர்க்கை ஆலயத்தை நிர்மாணித்து பண்டிதர்களின் கருத்துக்கிணங்க அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும், சுபிட்சத்திற்காகவும் சஹஸ்ரசண்டிகா யாகம் ஒன்று நடத்தவும் தீர்மானித்தனர். அதற்கு முஸ்லீம் மக்களும் பெரும் தொகையைத் தந்து உதவியிருக்கிறார்கள். அந்த வனதுர்கா கோயிலின் டிரஸ்டியில் ஒருவர் முஸ்லீம். அது மட்டுமல்லாமல் பல முஸ்லீம் சகோதர சகோதரியர் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் என்பதை என் நண்பர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 2006ஆம் வருடம் ஏப்ரல் 30ல் இருந்து மே 4ஆம் தேதி வரை நடந்த அந்த யாக நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

மதம் என்ற பெயரில் துவேஷத்தை வளர்த்துப் பிரபலமாகும் இந்தக் காலத்தில் மதங்களைக் கடந்து பரஸ்பரம் அன்புடன் சேர்ந்து கொள்வதும், அடுத்த மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு தாராள மனத்துடன் உதவுவதும் இந்தக் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது என்பது ஒரு நிறைவான விஷயமல்லவா? இரு மதத்தினர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டால் அது பெரிய செய்தியாகிறது. அறிக்கைகள், கருத்துக்கள், விவாதங்கள், சண்டைகள், கலவரங்கள் என்று நீண்டு பல நாட்கள் செய்திகள் தொடர்கின்றன. இது போல் நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளும், மதவாதிகளும் அதை அறிந்ததாகக் காட்டிக் கொள்வது கூட இல்லை.

கர்னாடகாவில் மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் பப்பநாடு என்ற இடத்தில் ஒரு துர்காபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு முஸ்லீம் மீனவருக்குக் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர் அந்தப்பகுதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த இடத்தில் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் கோயில் திருவிழாவின் ஆரம்பத்தில் முதல் பிரசாதமும், முதல் மரியாதையும் அந்த விக்கிரகத்தைக் கொடுத்த முஸ்லீம் குடும்பத்தினரின் மூத்தவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.

இன்றும் குழந்தைகளுக்கு மந்திரிக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லும் இந்துக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி கோயிலுக்கும் சென்று வழிபடும் இந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம். நாக தோஷத்திற்குப் பரிகாரம் செய்ய என்று கர்னாடகாவில் சுப்பிரமணியா என்ற கோயிலில் வழிபாடு செய்ய அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மதத்தவரும் அதிகம் வருகின்றனர். தன் மகளுக்கு சனி தோஷம் உள்ளதாக அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண்மணி மகளுக்காக ஒரு சிவன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சென்று நவக்கிரகத்தை வலம் வருவதை நானே பார்த்துள்ளேன். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி மதங்களைக் கடந்து தங்கள் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப வழிபடும் மனிதர்கள் நம் தேசத்தில் நிறைய இருக்கிறார்கள். அப்படி வழிபடாவிட்டாலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பு ஒருசில விதிவிலக்குகளைத் தவிர இந்த தேசத்து மற்றெல்லா மக்களுக்கும் அதிகம் உண்டு. உண்மையில் இந்த தேசத்துப் பொதுமக்களில் 99% பேருக்கு மதம் ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்குக் கவலைப்பட வேறு எத்தனையோ கஷ்டங்களும், பிரச்சினைகளும் என்றுமே இருக்கின்றன. அதோடு மதத்தையும் சேர்த்து பிரச்சினையாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மதத்தினருடனும் மதத்தைக் கடந்த மனிதர்களால் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும். அவரவர் வழி அவரவருக்கு. வழிகளை வைத்து சண்டை போட அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, மனமும் இருப்பதில்லை.

அரசியல்வாதிகளும், மதவாதிகள் எனப்படும் மதவியாதிகளும் ஒவ்வொரு சிறு சண்டை சச்சரவையும் ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முனைந்தாலும் இந்த தேசத்தில் திரும்பத் திரும்ப அமைதி திரும்புவது இந்த பரந்த மனமுள்ள மதத்தைக் கடந்த மனிதர்களாலேயே. செய்தித்தாள்களில் தினமும் இவர்கள் செய்தியாக வராவிட்டாலும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.

-என்.கணேசன்

நன்றி:விகடன்

Monday, July 6, 2009

பார்வைக்கேற்ப படிப்பினைகள்.....


தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்யும் தந்தையைப் பார்த்தே அந்த இரண்டு சகோதரர்களும் வளர்ந்தார்கள். குடித்ததில் செலவானது போக மீதமிருந்தது தான் குடும்பச்செலவுக்கு. அது போதவில்லை என்பதால் தாயும் வேலைக்குப் போய் தன்னால் முடிந்ததை சம்பாதித்து வீட்டுக்குக் கொண்டு வந்து குடும்பத்தை சமாளித்தாள். சில சமயம் அவள் சம்பாதித்ததையும் அவள் கணவர் பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வருவதுண்டு. வீட்டில் தினமும் சண்டை, தகராறு, அடி, உதை, அழுகை....

அந்த நிம்மதியற்ற சூழ்நிலையில் வளர்ந்த ஒரு சிறுவன் பிற்காலத்தில் தந்தையைப் போலவே குடிகாரனாக மாறி விட்டான். இப்படி ஆனது ஏன் என்று அவனைக் கேட்ட போது அவன் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் வருத்தத்துடன் சொன்னான். "தினமும் நான் பார்த்து வளர்ந்த அந்த சூழ்நிலை என்னையும் இப்படி ஆக்கி விட்டது"

இன்னொரு சிறுவன் ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதித்து பணம் சேர்த்து அதை வைத்து தொழில் ஆரம்பித்து பிற்காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபரானான். அவன் வெற்றிக்குக் காரணம் கேட்ட போது அவனும் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் சொன்னான். "எப்படியெல்லாம் இருந்து விடக் கூடாது என்பதற்கான உதாரணமாக அந்த சூழ்நிலைகள் இருந்தன. அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆழமாக இருந்தது...."

ஒரே விதமான அனுபவத்திலிருந்து இருவரும் இருவேறு படிப்பினைகள் பெற்றதைப் பாருங்கள். எதுவும் நாம் பார்க்கும் விதத்திற்கேற்ப மாறுகிறது. அதைப் பொறுத்தே அதனால் பலனடைகிறோம் அல்லது பாதிக்கப்படுகிறோம்.

ஆங்கிலத்தில் படித்த ஒரு அழகான கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

"Two men looked out from prison bars
One saw mud, the other saw the stars"


சிறைக்கம்பிகளின் வழியே வெளியே பார்த்தனர் இரு கைதிகள். ஒருவன் சேற்றைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான். இருந்த இடம் ஒன்று தான். ஆனால் பார்வைகள் போன இடங்கள் வேறு. எதைப் பார்க்கிறோம் என்பதை இருக்கும் இடமும், சூழ்நிலையும் தீர்மானிப்பதில்லை. நாமே தீர்மானிக்கிறோம்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாசிகளிடம் சிக்கி பலவித சித்திரவதைகளை அனுபவித்து உயிர் பிழைத்த எத்தனையோ பேர் போர் முடிவுக்கு வந்த பின்னும் அந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் மன நோயாளிகளாக மாறி விட்டனர். சகஜ நிலைக்கு வர பலருக்கு கவுன்சலிங், மருந்துகள் தேவைப்பட்டனர். ஆனால் அதே சித்திரவதைகளை அனுபவித்த ஒரு சிலருக்கு அவை ஒரு பாடமாக அமைந்தன. சுதந்திர வாழ்க்கையே மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதையும் அதில் தேவையில்லாமல் கவலைகளில் மூழ்கி வாழ்வை அனுபவிக்க மறப்பது முட்டாள்தனம் என்பதையும் உணர்ந்தார்கள். அந்த நாட்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் பின் எந்த நாளும் நல்ல நாளே என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். சிலர் தங்கள் அனுபவங்களைப் புத்தகமாக எழுதி பெரும் பணம் சம்பாதித்தார்கள். ஒரே விதமான அனுபவங்கள் எத்தனை விதமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள்.

எனவே நான் இப்படியாக மாற மற்றவர்கள் தான் காரணம், சூழ்நிலைகள் தான் காரணம் என்பது மிகப் பெரிய பொய். முன்பு சொன்ன குடிகாரத் தந்தையின் இரு மகன்கள் எதிர்மாறான இருவேறு நிலைகளை அடைய வைத்தது அவரவர் பண்புகளே. இரண்டாம் உலகப் போர்க்கைதிகளில் பலர் மன நோயாளிகளாக மாற, சிலர் பக்குவப்பட்டு மகிழ்ச்சியான மனிதர்களாக மாறியதும், சிலர் அதைப் பற்றி எழுதிப் பணம் பார்த்ததும் அந்த அனுபவங்களை அவர்கள் எடுத்துக் கொண்ட விதத்தினாலேயே. அவர்களை மட்டுமல்ல எவரையும் எதுவாகவும் ஆக்குவது அவரவர் பார்வைகளே.

நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

- என்.கணேசன்

Wednesday, July 1, 2009

மனதோடு போராடாதீர்கள்!

உங்களுக்கு ஒரு சவால். இனி அரை மணி நேரத்திற்கு உங்களால் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காமல் இருக்க முடியுமா?

முயற்சி செய்து பாருங்கள். ஆண்டுக் கணக்கில் நீங்கள் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காதவராய் இருக்கலாம். ஆனால் இனி அரை மணி நேரத்திற்கு அதை நினைக்காமல் இருப்பது சுலபமான விஷயமல்ல.

மனம் விசித்திரமானது. எதையும் நினைக்க வேண்டாம் என்றோ, மறந்து விடு என்றோ கட்டளையிட்டு சாதித்துக் கொள்வது சுலபமான விஷயம் அல்ல. கட்டளைகளை மதித்து அப்படியே பின்பற்றும் பழக்கம் மனதிற்குக் கிடையாது.

நிறைவேறாத காதலுக்குப் பிறகு காதலியை அல்லது காதலரை மறக்க முனையும் காதலர்களுக்கு அது தெரியும். ஒரு பலவீனமான பழக்கத்தைப் பழகிக் கொண்ட பின் விட்டொழிக்க முடிவு செய்யும் மனிதர்களுக்கு அது தெரியும். குணம் என்னும் குன்றேறி நின்ற பெரியோர்கள் கூட சமயங்களில் மனத்தை அடக்கப் போராடியிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன், ஸ்ரீராமனே கூட யோக வாசிஷ்டத்தில் வசிஷ்டரிடம் புலம்புகிறான். "அலைகடலை அடக்கிக் குடித்து விடலாம்; மேரு மலையை பெயர்த்து எறிந்து விடலாம்; சுட்டெரிக்கும் கனலை விழுங்கி விடலாம்; ஆனால் மனத்தை அடக்குதல் எளிதல்ல."

அப்படியானால் இந்த மனதை எப்படித் தான் வெல்வது? ஆன்மீக சித்தாந்தங்களுக்குப் போகாமல், நடைமுறைப்படுத்தக் கூடிய எளிய வழி ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறது. முதல் அறிவுரை மனதோடு போராடாதீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தோற்றுப் போவீர்கள். அதனுடன் போராடப் போராட பலம் பெறுவது மனமே; தளர்ச்சியடைவது நீங்களே.

போராடுவதற்குப் பதிலாக உங்கள் மனதிற்குப் பற்றிக் கொள்ள வேறொன்று கொடுங்கள். குழந்தை கையில் இருந்து ஒரு பொம்மையை வாங்கி அது அழ ஆரம்பிக்கும் முன் இன்னொரு பொம்மையைத் தருகிறோம் அல்லவா? அதைப் போல் தான். அந்த இன்னொரு பொம்மையும் ஏதோ ஒன்றாக இருக்காமல் குழந்தை ரசிக்கும்படியான பொம்மையாக இருக்க வேண்டும். குழந்தையின் கவனம் அதில் திரும்பும். குழந்தையின் தொந்திரவு இருக்காது.

மனதைக் காலியாக வைத்திருக்க ஞானிகளுக்கு முடியலாம். சாதாரண மனிதர்களுக்கு அது மிகக் கடினமே. ஒரு தேவையில்லாத எண்ணத்தை மனதிலிருந்து எடுத்து விட வேண்டுமானால் அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல எண்ணத்தை நீங்கள் மனதிற்குக் கொடுங்கள். தானாக அந்த வேண்டாத எண்ணம் உங்களுக்குள் வலு இழக்கும். இருட்டைத் துரத்த முயற்சிக்காதீர்கள். ஒரு தீபத்தை ஏற்றினால் இருட்டு தானாகப் போய் விடும்.

இன்னொரு அறிவுரை மனதோடு வாக்குவாதமும் செய்யாதீர்கள். மனம் ஜெயித்து விடும். என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செயல்படுத்துங்கள். உதாரணத்திற்கு குடிப்பழக்கம் போன்ற ஒரு தீய பழக்கத்தை வெற்றி கொள்ள எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வழக்கமாய் ஒரு வீதியில் ஒரு கடையில் மதுவை வாங்குவீர்களேயானால் அந்த வீதியில் அந்தக் கடை வரும் போது உங்களை உந்த மனம் ஆயிரத்தெட்டு காரணங்களை வைத்திருக்கும். நீங்கள் செய்யக் கூடிய புத்திசாலித்தனமான செயல் என்ன தெரியுமா? மனம் என்ன சொல்லிக் கொண்டிருந்தாலும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து அந்தக் கடையைக் கடப்பது தான். மனதின் பேச்சுக்கு கொஞ்சம் காது கொடுத்தீர்களானால், லேசாகத் தயக்கம் காட்டினீர்களானால் நீங்கள் தர்க்கிக்க முடியாத பல வாதங்களை உங்கள் முன் வைத்து மதுவை வாங்க வைத்து தான் மறு வேலை பார்க்கும். மனம் நீங்கள் கடையைக் கடந்து விட்டால் கூட திரும்பி வரச் சொல்லும். நீங்கள் திரும்பி வர முடியாத தூரத்திற்குச் சென்று விடும் போது தான் மனம் தன் முயற்சியைக் கைவிடும்.

எனவே மனதோடு போராடாதீர்கள். தர்க்கம் செய்யாதீர்கள். எது நல்லது என்பதை மட்டும் உறுதியாக அறிந்திருங்கள். தீய எண்ணமானால் நல்ல எண்ணத்திற்கு உடனடியாக மாறுங்கள். தீய செயலுக்குத் தூண்டுதலானால் உடனடியாக அந்த சூழ்நிலையை விட்டு நகருங்கள். மனதைப் பொருட்படுத்தாமல், அதனுடன் வாதிட்டு நிற்காமல், நேரம் தாழ்த்தாமல், தயக்கமில்லாமல் அந்த நல்லதை செயல்படுத்துங்கள். மனதின் அபஸ்வரம் ஒலிக்க ஆரம்பிக்கும் அந்த முதல் வினாடியிலேயே நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். காலம் தாழ்த்தினால் தோல்வியும் நிச்சயம்.

-என்.கணேசன்

நன்றி: விகடன்