சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, July 10, 2009

மதங்களைக் கடந்த மனிதர்கள்


ஒரு சஹஸ்ர சண்டிகா யாகம் நடக்கும் வேள்விக் குண்டத்தில் இரண்டு கறுப்பு பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் நெய் ஊற்றும் காட்சியைக் கண்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் ஒரு சண்டிகா யாகத்தின் நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த முஸ்லீம் பெண்கள் யாகத்தில் நெய் வார்ப்பதைக் கண்ட காட்சி அந்த வீடியோவில் வரக் கண்ட எனக்கும் அப்படியே அதிர்ச்சியாக இருந்தது.

அவரிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள் சுவாரசியமாக இருந்தன. கேரளாவில் காஞ்சன்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் என் நண்பர். காஞ்சன்காட்டில் சில தலைமுறைகளுக்கு முன்னால் ஓரிடத்தில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தினரால் வனதுர்க்கை பூஜிக்கப்பட்டு வந்ததிருக்கின்றது. பின் அந்த நம்பூதிரி குடும்பத்தில் ஒரு ஆண் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினர் எதிர்ப்பால் அங்கிருந்து அந்த தம்பதிகள் அங்கிருந்து போய் விட பின்னர் அந்த நம்பூதிரிக் குடும்பத்தினரும் அங்கிருந்து போய் விட்டிருந்திருக்கிறார்கள். வனதுர்க்கை பூஜையும் நின்று போயிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அந்தப்பகுதியில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க இந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ள அந்த ஊர் மக்கள் ஆழமாக ஆராயப்போக இந்தப் பழைய கதை தெரிய வந்திருக்கிறது. இந்துக்கள் அந்த இடத்தில் ஒரு பெரிய வனதுர்க்கை ஆலயத்தை நிர்மாணித்து பண்டிதர்களின் கருத்துக்கிணங்க அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும், சுபிட்சத்திற்காகவும் சஹஸ்ரசண்டிகா யாகம் ஒன்று நடத்தவும் தீர்மானித்தனர். அதற்கு முஸ்லீம் மக்களும் பெரும் தொகையைத் தந்து உதவியிருக்கிறார்கள். அந்த வனதுர்கா கோயிலின் டிரஸ்டியில் ஒருவர் முஸ்லீம். அது மட்டுமல்லாமல் பல முஸ்லீம் சகோதர சகோதரியர் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் என்பதை என் நண்பர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 2006ஆம் வருடம் ஏப்ரல் 30ல் இருந்து மே 4ஆம் தேதி வரை நடந்த அந்த யாக நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

மதம் என்ற பெயரில் துவேஷத்தை வளர்த்துப் பிரபலமாகும் இந்தக் காலத்தில் மதங்களைக் கடந்து பரஸ்பரம் அன்புடன் சேர்ந்து கொள்வதும், அடுத்த மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு தாராள மனத்துடன் உதவுவதும் இந்தக் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது என்பது ஒரு நிறைவான விஷயமல்லவா? இரு மதத்தினர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டால் அது பெரிய செய்தியாகிறது. அறிக்கைகள், கருத்துக்கள், விவாதங்கள், சண்டைகள், கலவரங்கள் என்று நீண்டு பல நாட்கள் செய்திகள் தொடர்கின்றன. இது போல் நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளும், மதவாதிகளும் அதை அறிந்ததாகக் காட்டிக் கொள்வது கூட இல்லை.

கர்னாடகாவில் மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் பப்பநாடு என்ற இடத்தில் ஒரு துர்காபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு முஸ்லீம் மீனவருக்குக் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர் அந்தப்பகுதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த இடத்தில் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் கோயில் திருவிழாவின் ஆரம்பத்தில் முதல் பிரசாதமும், முதல் மரியாதையும் அந்த விக்கிரகத்தைக் கொடுத்த முஸ்லீம் குடும்பத்தினரின் மூத்தவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.

இன்றும் குழந்தைகளுக்கு மந்திரிக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லும் இந்துக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி கோயிலுக்கும் சென்று வழிபடும் இந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம். நாக தோஷத்திற்குப் பரிகாரம் செய்ய என்று கர்னாடகாவில் சுப்பிரமணியா என்ற கோயிலில் வழிபாடு செய்ய அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மதத்தவரும் அதிகம் வருகின்றனர். தன் மகளுக்கு சனி தோஷம் உள்ளதாக அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண்மணி மகளுக்காக ஒரு சிவன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சென்று நவக்கிரகத்தை வலம் வருவதை நானே பார்த்துள்ளேன். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி மதங்களைக் கடந்து தங்கள் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப வழிபடும் மனிதர்கள் நம் தேசத்தில் நிறைய இருக்கிறார்கள். அப்படி வழிபடாவிட்டாலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பு ஒருசில விதிவிலக்குகளைத் தவிர இந்த தேசத்து மற்றெல்லா மக்களுக்கும் அதிகம் உண்டு. உண்மையில் இந்த தேசத்துப் பொதுமக்களில் 99% பேருக்கு மதம் ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்குக் கவலைப்பட வேறு எத்தனையோ கஷ்டங்களும், பிரச்சினைகளும் என்றுமே இருக்கின்றன. அதோடு மதத்தையும் சேர்த்து பிரச்சினையாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மதத்தினருடனும் மதத்தைக் கடந்த மனிதர்களால் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும். அவரவர் வழி அவரவருக்கு. வழிகளை வைத்து சண்டை போட அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, மனமும் இருப்பதில்லை.

அரசியல்வாதிகளும், மதவாதிகள் எனப்படும் மதவியாதிகளும் ஒவ்வொரு சிறு சண்டை சச்சரவையும் ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முனைந்தாலும் இந்த தேசத்தில் திரும்பத் திரும்ப அமைதி திரும்புவது இந்த பரந்த மனமுள்ள மதத்தைக் கடந்த மனிதர்களாலேயே. செய்தித்தாள்களில் தினமும் இவர்கள் செய்தியாக வராவிட்டாலும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.

-என்.கணேசன்

நன்றி:விகடன்

10 comments:

  1. Very Nice...Story with Real Time Examples...

    ReplyDelete
  2. ஆந்திரமானிலம் சித்தூர், காஜூர் பகுதியில் ஒரு முஸ்லீம் பெண்மணி தனது சொந்தப்பணத்தில் ஒரு கோவிலையே கட்டி பராமரித்து வருகிறார்.

    ReplyDelete
  3. well said. An eye opener

    ReplyDelete
  4. எல்லா கடவுளும் மனிதனையும் மற்றைய ஜீவராசிகளையும் ரட்சிக்கவே மனித மனத்தால் உருவாக்கப்பட்டது.ஒரு மதத்தை சார்ந்தவர் இன்னொரு மதக்கடவுளை வணங்கினால் அந்த தெய்வம் அவனை ஒதுக்கப்போவதில்லை.கடவுளை எப்பொழுதும் நம்மை ரட்சிக்கும் கடவுளாக மட்டும் பார்ப்போம்.எல்லா இறைவனும் எமக்கு சம்மதமே.

    ReplyDelete
  5. Nalla pathivu.Inga Maduraila Vaihaasi visahathula Muslim perusu Hindukkalukku Santhanam poosi viduvaar.

    ReplyDelete
  6. அந்த கோவிலின் வருமானம் அவரை ரச்சிக்கிறது

    பிழைக்கதெரிந்தவர்?

    ReplyDelete
  7. Dear friends,

    Heartening to know about people who work outside their religious restrictions. BUT.....

    Why no muslim appreciate such gestures, and only hindus support and feel elated seeing such good works?

    I will be happy to find one such a case.

    ReplyDelete
  8. In this article itself I mentioned about the gesture of muslim people also. I think you have overlooked.

    ReplyDelete
  9. Well. I have written in urgency.

    What I wanted to ask was why no muslims project their such good deeds in the media.

    Atleast in the bloggers world I do not see any.

    Thanks.

    ReplyDelete
  10. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

    கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


    **** ஆதாமின்டே மகன் அபு *****


    .

    ReplyDelete