சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, June 25, 2010

பேச வழிகாட்டுகிறார் வள்ளுவர்!



சொற்கள் மிக மிக வலிமையானவை. அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பெறாத வெற்றிகள் இல்லை. அவற்றை முட்டாள்தனமாகப் பயன்படுத்துபவர்கள் படாத கஷ்டங்கள் இல்லை. பேச்சையே மூலதனமாக வைத்து நாட்டின் ஆட்சியையே பிடித்தவர்களை நாம் அறிவோம். சரியாகப் பேசத் தெரியாமல் இருப்பதெல்லாம் இழந்தவர்களையும் நாம் நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம்.

அந்த அளவு முக்கியமான பேச்சுக் கலை பற்றி வள்ளுவர் பல இடங்களில் விளக்கி உள்ளார். பொதுவாக சில விஷயங்களை அந்தந்த அதிகாரங்களிலேயே விளக்கும் அவர், பேச்சைப் பற்றி பரவலாகப் பல இடங்களில் சொல்கிறார்.

எப்படிப் பேச வேண்டும்?


மிகவும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்

சொல்லுக சொல்லில் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து (645)

(ஒரு சொல்லைச் சொல்லும் போது அதை விடச் சிறந்த பொருத்தமான சொல் இல்லாதவாறு தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்.) வள்ளுவர் சொல்வது போல் பேசும் முன் சொற்களைத் தெளிவாகத் தேர்ந்தெடுக்கப் பழகிக் கொண்டால் பேச்சில் சொற்குற்றமோ, பொருள் குற்றமோ வர வாய்ப்பே இல்லை.

நன்மை தரும் விஷயங்களையே பேச வேண்டும். அதுவே தர்மம் என்கிறார் வள்ளுவர்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இல்லாத சொலல்.
(291)
(ஒருபோதும் சிறிதளவேனும் தீமை இல்லாத சொற்களைச் சொல்வதே வாய்மை எனப்படும்.) மேலும் தீமை இல்லாதபடி பேசுவது, அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதால், அன்பும் நட்பும் கெட்டுவிடாமல் பாதுகாக்கிறது.

அவசியமானதை ரத்தினச் சுருக்கமாகப் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். பேசிக் கொண்டே போவதை அறிவுக் குறைபாடாகக் கருதுகிறார் அவர்.

பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சில சொல்லத் தேறாதவர்
(649)
(குற்றமற்ற சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர் உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.) எனவே அதிகமாகப் பேசும் ஒவ்வொருவரும் தாங்கள் சொல்ல விரும்புவதை இன்னும் சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று அவ்வப்போது ஆராய்ச்சி செய்து கொள்வது நல்லது.

எப்படிப் பேசக் கூடாது?

அடுத்தவர் மனம் புண்படும்படியாக பேசக் கூடாது என்கிறார். ஏனென்றால்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (
130)
(தீயினால் சுட்ட புண் வெளியே வடு தெரிந்தாலும் காலப்போக்கில் உள்ளே ஆறி விடும். ஆனால் நாவினால் கடுமையான சொற்களால் சுட்ட வடு என்றுமே ஆறாது). எத்தனையோ தீராத பகைக்கு முக்கிய காரணமாக இருப்பது புண்படுத்தும் சில அனாவசிய வார்த்தைகளே.

கடுமையான சொற்களைப் பேசுவது கூடாது என்கிறார் வள்ளுவர். அது அர்த்தமற்றது என்றும் முட்டாள்தனமானது என்றும் தன் பாணியில் அழகான உவமைகளுடன் கூறுகிறார் பாருங்கள்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன் கொலொ
வன்சொல் வழங்குவது
(99)
(இனிமையான சொற்கள் இன்பம் தருவதைக் காண்கின்றவன் அதற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயனைக் கருதியோ என்று வள்ளுவரே ஆச்சரியப்படுகிறார்.)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
(100)
(இனிய சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துவது கனிகள் இருக்கையில் காய்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒப்பானது). பல நேரங்களில் கடுமையான சொற்களுக்கு அவசியமே இருப்பதில்லை. சொல்லி விட்ட சொல்லைத் திரும்பப் பெறும் வாய்ப்பும் நமக்கில்லை என்பதால் நமக்கோ அடுத்தவர்க்கோ பலனைத் தராத, துன்பத்தை மட்டுமே தருகிற சுடு சொற்களை நம் பேச்சிலிருந்து நீக்கி விடலாமே.

பயனில்லாத சொற்களைச் சொல்வது தவறு என்றால் அதை விவரித்துச் சொல்வதை இங்கிதமில்லாத தன்மை, அறமில்லாத தன்மை என்று கடுமையாக வள்ளுவர் விமரிசிக்கிறார்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்துரைக்கும் உரை
(193)
(ஒருவன் பயனில்லாத விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுவது அவன் அறம் இல்லாதவன் என்பதைத் தெரிவிக்கும்.)
இதற்கு எத்தனையோ தினசரி உதாரணங்களை நாம் பார்க்க முடியும். தேவையற்ற, யாருக்கும் பலனளிக்காத விஷயங்களை விரிவாகப் பேசுபவன் அதன் மூலம் தன் தரத்தை மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்கிறான்.


எதை எங்கே பேசக் கூடாது?


தெரியாத விஷயங்களைப் பேசக் கூடாது. அதுவும் தெரிந்தவர்கள் முன் பேசவே கூடாது என்கிறார் வள்ளுவர். பேசி முட்டாள் என்பதை நிரூபிப்பதை விட அமைதியாக இருந்து நல்ல பெயரை வாங்கிக் கொள்வது நல்லது என்கிறார்.

கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாதிருக்கப் பெறின்
(403)
(கற்றவர் முன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்களேயானால் கல்லாதவர்களும் நல்லவர்களே ஆவர்). மேலும் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அங்கே உளறிக் கொட்டி அறிவின்மையை பறைசாட்டுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா?


நல்ல பேச்சிற்கு என்ன பலன்?

நன்மை தரும் நல்ல பேச்சு கேட்பவருக்கு தக்க சமயத்தில் தவறி விடாமல் காத்துக் கொள்ள உதவும் என்கிறார் வள்ளுவர்.

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
ஒழுக்கமுடையார் வாய்ச் சொல்.
(415)
(ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள் வழுக்கும் சேற்று நிலத்தில் ஊன்று கோல் போல் தளர்ந்த சமயம் உதவும்.) வாழ்க்கையில் வழுக்கி விழாமல் இருக்க அறிவார்ந்த அனுபவஸ்தர்களின் வார்த்தைகளை விடச் சிறந்த ஊன்றுகோல் கிடையாது. அவை பல இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டும்.

கேட்பவருக்குப் பலன் அதுவென்றால் பேசுபவருக்கு என்ன பலன்? நன்மையான பேச்சுகளை நல்ல விதமாகச் சொல்பவரை உலகமே பின்பற்றி நடக்கும் என்கிறார் வள்ளுவர்.

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
(648)
(கருத்துகளை ஒழுங்காகக் கோர்த்து இனிமையாகச் சொல்ல வல்லவருடைய ஏவலை உலகமே கேட்டு நடக்கும்.) நல்ல கருத்துகளை நல்ல விதமாகச் சொல்லி பலர் வாழ்க்கைப் பாதைகளை நெறிப்படுத்த முடிந்தால் அந்தத் திருப்திக்கு நிகரேது?


மொத்தத்தில் நல்லதை மட்டுமே, சுருக்கமாக, இனிமையாக, மற்றவருக்குப் பயன் தரும் வண்ணம் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். நாம் அப்படிப் பேசப் பழகிக் கொண்டால் அது அடுத்தவர்களுக்கு நல்லது, நமக்கு மிக மிக நல்லது.

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

5 comments:

  1. thiruvalluvar yeppadi sollanumnu... nalla solirukinga...

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷ்-ல் என் பதிவும் வந்துள்ளது
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய என்கனேஷன் அவர்களுக்கு வணக்கம்

    திருக்குறள் பதிவு மிக அருமை. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

    NK.பழனிமணி
    திருச்சி

    ReplyDelete
  3. Love the explanations...keep up the good work..thanks

    ReplyDelete
  4. "சொற்கள் மிக மிக வலிமையானவை". அனுபவமான வார்த்தைகள். தொடர்க நின் சேவை.

    ReplyDelete
  5. சூப்பர் பதிவு.
    குறள் வழி நடந்தால் குறையில்லை வாழ்வில்.

    ReplyDelete