சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, July 15, 2011

ஒரு மாபெரும் வெற்றிக்கதை


கொடுமையான வறுமையில் வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பெரும் பணக்காரராக முன்னேறுவது அரசியலில் ஈடுபடாத ஒரு மனிதருக்கு அவ்வளவு சுலபமானதல்ல. ஆனாலும் மன உறுதியும், கூர்மையான அறிவும், புத்திசாலித்தனமான உழைப்பும் இருந்து விதியும் அனுகூலமாக இருந்து அப்படி சாதனை படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதெல்லாம் வெற்றிக் கதைகளே. ஆனால் அந்த வெற்றியின் பலனை தான் முழுமையாக அனுபவித்து மீதியைத் தன் சந்ததிக்கு விட்டுப் போவதாகவே அந்த வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதைகள் இருந்திருக்கின்றன. தர்ம காரியங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையைத் தந்தவர்கள் அதிலும் உண்டு. ஆனால் வாழ்க்கையில் பெருமளவு செல்வம் சேர்த்து ஒரு கட்டத்தில் தன் வியாபாரத்தை நிறுத்தி விட்டு சேர்த்த செல்வத்தை எல்லாம் பொது நலத்திற்காக செலவு செய்வதற்காக மீதமுள்ள வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாமனிதர் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார் என்றால் அது ஒருவராகத் தான் இருக்க முடியும். அவர் தான் ஆண்ட்ரூ கார்னீஜி (1835-1919).

ஒரு ஏழை கைத்தறி நெசவாளரின் மூத்த மகனாக ஸ்காட்லாந்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னீஜி. தொழிற்சாலைகள் பெருகிய பின் கைத்தறிக்கு வேலை இல்லாத போது கைத்தறிகளை விற்று விட்டு பிழைப்பதற்காக அமெரிக்கா சென்றது அவரது குடும்பம். அப்போது ஆண்ட்ரூ கார்னீஜிக்கு வயது பன்னிரண்டு. அவருடைய தந்தை ஆரம்பத்தில் அமெரிக்காவிலும் தனக்குத் தெரிந்த நெசவு வேலையையும் பின் மேசை விரிப்புத் துணி விற்பனையாளராகவும் வேலை செய்ய, அவர் தாயோ செருப்புத் தைக்கும் வேலையைச் செய்தாள். ஆனாலும் இருவர் சம்பாத்தியமும் அமெரிக்காவில் அவர்கள் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருக்கவில்லை. படிப்பதில் மிகவும் ஆர்வம் இருந்த ஆண்ட்ரூ கார்னீஜியை படிக்க வைக்க அந்தப் பெற்றோர் எவ்வளவோ விரும்பிய போதிலும் அவர்கள் நிதி நிலைமை அமெரிக்காவில் அவர் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை. ஆண்ட்ரூ கார்னீஜியைப் பஞ்சாலையில் வாரக்கூலி ஒரு டாலர் 20 செண்ட்ஸ்களுக்கு வேலைக்குச் சேர்த்தார்கள்.

படிக்கத் திறமையும், ஆர்வமும் அதிகமாக இருந்த போதிலும் விளையாட்டுப் பருவத்தில் வேலைக்குப் போக நேர்ந்த அவலத்தை நினைத்து அவர் வருத்தத்தில் ஆழ்ந்து விடவில்லை. புன்முறுவலுடன் அதிகாலைக் குளிரில் எழுந்து காலை ஆறு மணிக்கு வேலைக்குப் போவார். எந்த நிலையிலும் புலம்பிக் கொண்டே இருக்காத நல்ல வேலைக்காரனிற்கு அதற்கு மேலான வேலை விரைவாகவே கிடைக்கும் என்ற அனுபவ உரைக்கு ஏற்ப சிறிது காலத்திலேயே அவருக்குத் தந்தி நிலையத்தில் வேலை கிடைத்தது. வாரம் ஒன்றிற்கு இரண்டரை டாலர் சம்பளத்தில் ஆண்ட்ரூ கார்னீஜிக்கு வேலை கிடைத்த போது அவருடைய பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

தந்திப் பையனின் கையாளாக வேலைக்குச் சென்ற ஆண்ட்ரூ கார்னீஜி தன் சுறுசுறுப்பாலும், கடின உழைப்பாலும், தனக்கு விதிக்கப்பட்ட வேலை தவிர மற்ற வேலைகளை அறிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தாலும் படிப்படியாக முன்னேறினார். தந்தியை இயக்குவோனாக மாதம் ஒன்றிற்கு 25 டாலர் சம்பாதிக்க ஆரம்பித்த போது அவருக்கு வயது பதினாறு. வேலைப் பளுவின் நடுவிலும் நூல்களைப் படித்தல், கட்டுரை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புதல் சொற்பொழிவாற்றுதல் போன்றவற்றில் ஈடுபடவும் செய்தார்.

இவரது சுறுசுறுப்பாலும், திறமைகளாலும் கவரப்பட்டு பென்சில்வேனியா புகைவண்டிச் சாலை செயலாளராக இருந்த ஸ்காட் என்பவர் தங்கள் புகை வண்டிச்சாலையில் தந்தி இயக்கும் வேலைக்கு மாதம் 35 டாலர் ஊதியம் தருவதாகச் சொல்லி அழைத்தார். ஆண்ட்ரூ கார்னீஜி அதை ஏற்றுக் கொண்டு புகைவண்டிச் சாலையில் பணிக்குச் சென்றார். அங்கும் அவர் சிறப்பாகப் பணியாற்றினார்.

ஒரு சமயம் விபத்தொன்றின் காரணமாக எல்லாப் பாதைகளிலும் புகைவண்டிகள் ஓடாது நிற்பதாகச் செய்தி வந்தது. அந்தப் புகைவண்டிகள் எல்லாம் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று உத்தரவிட வேண்டிய பொறுப்புடைய ஸ்காட் அவர்களோ அந்த சமயத்தில் அங்கு இல்லை. அவர் வர கால தாமதமானதால் எல்லா புகைவண்டிகளும் முடங்கி அங்கங்கே அப்படியே நின்றிருந்தன. புத்தி கூர்மையால் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்திருந்தாலும் ஸ்காட்டின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு உத்தரவிடுவது தவறு என்பது ஒருபுறம், ஏதாவது சிக்கலாகி புகைவண்டிகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டால் பெரும்பழி வருவதோடு வேலையும் போய் விடும் என்பதும் ஒருபுறமாக அவர் மனதில் சிந்தனைகள் எழுந்தன. ஆனால் ஆளுமைத் திறம் படைத்த கார்னீஜி ஆனது ஆகட்டும் என்று ஸ்காட் அவர்களின் பெயரில் அப்படிச் செய்யுங்கள், இப்படிச் செய்யுங்கள் என்று கற்றை கற்றையாக தந்திகள் அனுப்பி வேலையைத் துவக்கி விட்டார்.

ஸ்காட் அலுவலகத்திற்கு வந்தவுடன் தயக்கத்துடன் நடந்ததைக் கூறினார். ஒன்றும் சொல்லாமல் ஸ்காட் அவர் அனுப்பிய தந்திகளை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தார். எல்லாமே அறிவு பூர்வமானதாகவும், சமயோசித முடிவுகளாகவும் இருந்தன. பாராட்டிய ஸ்காட் பின்னர் தன் விடுமுறை நாட்களில் ஆண்ட்ரூ கார்னீஜியிடமே தன் பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்ல ஆரம்பித்தார். கூடிய சீக்கிரமே ஆண்ட்ரூ கார்னீஜி அந்த புகைவண்டிச் சாலையின் உதவித் தலைவரானார். வருமானமும் பல மடங்கு அதிகரித்தது. பணத்தைக் கவனமாக சேமித்து அதைக் கொண்டு இலாபம் அதிகம் தரும் பங்குகளை அவர் வாங்கி வருமானத்தை மேலும் அதிகமாக்கிக் கொண்டார்.

அக்காலத்தில் பெரும்பாலும் மரப்பாலங்களே அதிகம் இருந்தன. இன்னும் சில ஆண்டுகளில் மரப்பாலங்கள் எல்லாம் நீக்கப்பட்டு அவை இருந்த இடங்களில் இரும்புப் பாலங்கள் போடப்படும் என்பதைத் தன் தொலைநோக்கறிவால் உணர்ந்த ஆண்ட்ரூ கார்னீஜி தன் முப்பதாவது வயதில் பென்சில்வேனியா புகைவண்டிச்சாலையில் இருந்து விலகி சில கூட்டாளிகளுடன் சேர்ந்து இரும்புத் தொழிலில் ஈடுபட்டார். அவருக்கு 33 வயதான போது இரும்புத் தொழிலில் இருந்தும் மற்ற பங்குகளில் இருந்தும் சேர்ந்து ஆண்டொன்றிற்கு ஐம்பதாயிரம் டாலர்கள் வருமானம் வர ஆரம்பித்தது.

அப்போது இரும்பிலிருந்து எஃகு செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு உடைந்து விடும் போது எஃகு உறுதியானதாகவும், வளையக் கூடிய தன்மை உடையதாகவும் இருந்தது. உடனே எதிர்காலம் இனி எஃகில் தான் இருக்கிறது என்று உணர்ந்த ஆண்ட்ரூ கார்னிஜி எஃகுத் தொழிலில் ஈடுபட எண்ணினார். நல்ல வருமானம் தந்து கொண்டிருந்த இரும்புத் தொழிலை விட்டு புதிய எஃகுத் தொழிலில் ஈடுபட அவருடைய பங்காளிகள் விரும்பவில்லை. ஆனால் ஆண்ட்ரூ கார்னிஜி வேறு கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு தைரியமாக எஃகுத் தொழிலில் இறங்கினார். எத்தொழிலைத் தொடங்கினாலும் அந்த முழுவேகத்தோடு ஈடுபட்ட அவர் திறமை வாய்ந்த ஊழியர்களுக்குக் கை நிறைய சம்பளமும், பெரிய பதவியும் தந்து அவர்களைத் திருப்தியாக வைத்துக் கொண்டார். சிலருக்கு தன் தொழில் லாபத்தில் பங்கும் தந்து உற்சாகப்படுத்தினார். உயர்வான சரக்கு, மலிவான விலை, அதிகமான உற்பத்திஎன்பது அவரது தாரக மந்திரமாக இருந்தது. வெற்றி மேல் வெற்றியைக் குவித்த அவர் உலகப் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை விரைவிலேயே பெற்றார்.

பணம் ஒரு போதை வஸ்து. அதை சுவைத்தவன் பெரும்பாலும் அதற்கு அடிமையாகி விடாமல் இருக்க முடிவதில்லை. அதை மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே போவதில் சலித்துப் போவதில்லை. அனுபவித்ததில் திருப்தியும் அடைந்து விடுவதில்லை. ஆனால் ஆண்ட்ரூ கார்னிஜியின் வெற்றிக் கதையில் பெரிய திருப்பமே அவரால் தொழிலிற்கு தன் 65 ஆம் வயதில் முழுக்குப் போட முடிந்தது தான். யாரும் எதிர்பாராத வண்ணம் தன் தொழிலை நல்ல தொகைக்கு விற்று விட்டார். மீதமுள்ள வாழ்க்கையில் சேர்த்த செல்வத்தை பொது நலனுக்காக அறப்பணிகளில் செலவிட ஆரம்பித்தார். நல்ல காரியங்களுக்கு தன் செல்வத்தை வாரி வாரி வளங்கினார். ஆனால் தன் தனிப்பட்ட செலவுகளிலோ கடைசி வரை சிக்கனமாகவே இருந்தார். பத்தில் ஒன்பது பகுதி சொத்தைப் பொது நலனுக்காகவே செலவிட்டு மகிழ்ந்த அவர் தன் 84ம் வயதில் உலகை விட்டுப் பிரிந்தார். அவர் இறந்து விட்ட போதிலும் அவர் ஆரம்பித்து வைத்த அறப்பணிகள் இன்றும் செவ்வனே நடந்து வருகின்றன.

அவருடைய மரணத்திற்குப் பின் அவருடைய உடைமைகளை எடுத்துப் பார்த்த போது அவர் தன் 33 ஆம் வயதில் எழுதியிருந்த ஒரு குறிப்பு இருந்தது. அதில் தம்முடைய தேவைக்கு மேற்பட்ட பொருள்களை எல்லாம் பொதுநலனுக்காக செலவிடுவதாக உறுதி கூறி தன்னுடைய கையொப்பத்தை இட்டிருந்தார். ஆனால் வாழ்ந்த நாள் வரை அந்தக் குறிப்பை அவர் யாருக்கும் காட்டியதே இல்லை. இப்படிப்பட்ட மகத்தான உறுதிமொழியை இளமையிலேயே எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின்படி கடைசி வரை வாழ்ந்தே காட்டினார் என்பது தான் அவர் அடைந்த வெற்றிகளின் சிகரமாக இருந்தது.

- என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

12 comments:

  1. Inspirational life story with good morality… I need to find another word to praise you instead of simply telling “thanks for posting such a nice post” again and again… :-)

    Regards,
    S.Ganesh Ram.
    http://sganeshram.blogspot.com/

    ReplyDelete
  2. உங்கள் புண்ணியத்தில் ஒரு அறிய மனிதரின் கதையை அறிந்து கொண்டேன். எவ்வளவோ முறை அண்ட்ரூ கார்னெகி பெயரை கேள்விபட்டிருந்தாலும் அவர் கதையை உங்கள் மூலம் அறியும் வாய்ப்பு கிடைத்தது!

    ReplyDelete
  3. ஆண்ட்ரூ கார்னீஜின் வெற்றிக்கதை அறியும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி

    ReplyDelete
  4. he is Good personality and able human-being

    ReplyDelete
  5. ஆண்ட்ரூ கார்னீஜி..பற்றி நன்றாக சொன்னீர்கள் ..பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. excellent sir excellent!

    ReplyDelete
  7. அற்புதமான பதிவு .

    இத்தனை அவரசமான வாழ்க்கை முறைகளுக்கு மத்தியிலும்
    எப்படிதான் உங்களால்
    நிறைய படித்து நிறைய எழுதமுடிகிறதோ !

    அபாரம் , அபாரம்

    ReplyDelete
  8. எடுத்துக் கொண்ட உறுதிமொழியின்படி கடைசி வரை வாழ்ந்தே காட்டினார் என்பது தான் அவர் அடைந்த வெற்றிகளின் சிகரமாக இருந்தது//
    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_19.html

    அன்பின் நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

    நன்றி.

    ReplyDelete