சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 19, 2011

உபதேசம் தவிர்ப்போம்....உதாரணமாக இருப்போம்!


கீதை காட்டும் பாதை 12

உபதேசம் தவிர்ப்போம்....உதாரணமாக இருப்போம்!

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

பாரதா பாமரன் பற்றுதலுடன் எல்லாச் செயல்களையும் செய்வது போல் பண்டிதன் மனிதகுல நலனிற்காக பற்றின்றி செயல் புரிய வேண்டும்.

கர்மத்தில் பற்றுள்ள பாமரனின் மனதை பண்டிதன் குழப்பி விடக்கூடாது. அதற்கு மாறாக பண்டிதன் பற்றின்றி எல்லாக் கர்மங்களையும் செய்ய வேண்டும். பாமரனையும் அவ்விதமே செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.

ஞானி கூட அவனது இயல்பின் படியே நடக்கின்றான். எல்லா உயிர்களும் அவற்றின் குணங்களையே பின்பற்றுகின்றன. அப்படி இருக்கையில் நிர்ப்பந்தப் படுத்துவதால் என்ன பயன்?

இந்த இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாமரனின் மனோதத்துவத்திற்கேற்ப தன் உபதேசத்தைத் தொடர்கிறார். பாமரன் தன் சுயநலத்திற்காக ஒரு செயலை மிகுந்த அக்கறையுடன் செய்கிறான். கர்மயோகி அதே அக்கறையுடன் அந்த செயலை மனிதகுல மேம்பாட்டிற்காகச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். பொதுச் செயல் என்று வந்து விட்டாலே பலருக்கும் ஒரு அலட்சிய மனோபாவம் வந்து விடுகிறது. அந்த அலட்சியத்தைத் தவிர்த்து தனக்காகவும், தான் நேசிக்கின்ற மனிதர்களுக்காகவும் செய்கின்ற போது ஒரு காரியத்தை எப்படி ஆத்மார்த்தமாகச் செய்வோமோ அதே போல் ஆத்மார்த்தமாக அந்த காரியத்தைப் பொதுநலனுக்காகச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

எல்லோரும் அவரவர் இயல்பின் படியே நடக்கின்றனர். ஞானியானாலும் சரி, பாமரனானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி அவரவர் இயல்பின்படி நடப்பதே இயற்கையாக இருக்கிறது. அப்படி இருக்கையில் எத்தனை உயரிய தத்துவமானாலும் கேட்பவர் அறிவுக்கே எட்டாத தத்துவமானால் அதை அவரிடம் உபதேசிப்பது வீண் தான். அறிவுக்கெட்டும் போதே அதை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வருவது எப்படிப்பட்ட பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது என்பதை ஆன்மிகப் பாதையில் சிறிது தூரம் சென்றவர்களுக்குக் கூடத் தெரியும். அப்படி இருக்கையில் ஒருவனது அறிவுக்கே எட்டாத விஷயத்தை அவனுக்கு உபதேசிப்பதும், அவனை அந்த வழியின் படி நடக்க நிர்ப்பந்திப்பதும் பயனில்லாத செயல் அல்லவா? ஏதோ தனக்கிருக்கும் சில்லறை அறிவுக்கேற்ப வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் அவன் வாழ்க்கை ஓட்டத்தை, அறிந்தவன் அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி முடக்கி விடக் கூடாது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

நிர்ப்பந்தத்தால் யாரும் எந்த நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. தானாகக் கனிவதற்கும், தடியால் அடித்துக் கனிய வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் கனியின் ருசியில் கண்டிப்பாகத் தெரிந்து விடும். எனவே உண்மையான ஞானிகள் எதையும் யாரிடமும் கட்டாயப்படுத்துவதில்லை. நிர்ப்பந்தங்கள் இருக்கையில் வேஷங்களும், நடிப்புகளும் அதிகமாகி மனிதன் உண்மையை விட்டு விலகி ஒரு பொய் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான். எனவே கட்டாயமும் ஆன்மிக மார்க்கத்தில் எதிர்விளைவுகளையே விளைவிக்கும்.

அப்படியானால் அறியாதவர்களை அப்படியே விட்டு விடுவதா? அறிவுக்கு எட்டாததை விளக்கவும் கூடாது, கட்டாயப்படுத்தவும் கூடாதென்றால் அறிந்தவர்கள் அவர்களை எப்படித்தான் உயர்த்துவது? இந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் கூறுகிறார்- நல்ல முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி அவனையும் அப்படியே வாழ உற்சாகப்படுத்து என்கிறார். பல சித்தாந்தங்களையும், வேதாந்தங்களையும் விட அதிகமாக கண்முன் இருக்கும் உதாரணம் ஒருவனை மேல்நிலைக்கு மாற்ற வல்லது. எனவே புரியாதவனிடம் பிரசங்கம் செய்யாமல் நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டி புரிய வை என்கிறார்.

இரண்டாம் உலகப் போரும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்க பத்திரிக்கையாளர் இருவர் கண் முன்னால் இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை அப்போது அறிவித்திருந்தார். உடனே மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. ஆனாலும் அவர் காட்டிய வழியில் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய சிப்பாய்களை ஓரிடத்தில் எதிர் கொள்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒரு குழு முன்னே செல்கிறது. ஆங்கில சிப்பாய்கள் தடியால் அடித்து காயப்படுத்துகிறார்கள். ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் கூட திருப்பி அந்த சிப்பாய்களைத் தாக்க முற்படவில்லை. அடிபட்டு ஒரு குழு வீழ்கிறது. அடுத்த குழு சிப்பாய்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது. அதுவும் அப்படியே அடிபட்டு வீழ்கிறது. அந்தக் குழுவினரிலும் ஒருவர் கூடத் திரும்ப ஆங்கிலேயர்களைத் தாக்க முனையவில்லை. மூன்றாவது குழு முன்னேறுகிறது. ஆங்கிலேய சிப்பாய்கள் அவர்களை அடிக்க முடியாமல் விக்கித்து நிற்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!

இந்த நிகழ்ச்சியை மெய்சிலிர்க்கப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் அதைப் புகைப்படம் எடுத்து ஒரு அதிசய செய்தியாக தங்கள் நாட்டில் வெளியிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி உலகின் எந்த மூலையிலும் நடந்ததில்லை என்றும் சத்யாகிரகம் முன் அடக்குமுறை பலமிழந்து போனதைத் தங்கள் கண்களால் காண முடிந்தது என்றும் எழுதினார்கள். அத்தனை பெரிய கூட்டத்தினர் சாத்வீக முறையில் போராடிய விதத்தை நேரில் கண்டிரா விட்டால் தங்களாலேயே இந்தச் செய்தியை நம்ப முடிந்திருக்காது என்று எழுதினார்கள்.

வெறுமனே அந்த செய்தியைப் படிக்காமல் அந்த வீரர்கள் நிலையில் நம்மை இருத்திப் பார்த்தால் தான் அந்த நிகழ்வின் மகத்துவம் புரியும். பல அடிகள் வாங்கி காயமடைந்த பின்னும் அங்கிருந்து ஓடாமல், திருப்பித் தாக்கவும் முற்படாத அத்தனை போராட்ட வீரர்களும் மகாத்மா காந்தியின் சத்யாகிரகத்தைப் படித்தோ, பிரசங்கங்களைக் கேட்டோ அப்படி உருவானவர்கள் அல்ல. மகாத்மா காந்தியின் நிஜ வாழ்க்கையில் சத்யாகிரகத்தைக் கடைபிடித்ததை முன்னுதாரணமாக நேரில் கண்டு உருவானவர்கள் அவர்கள். அதனால் தான் அறிவுபூர்வமாக அவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, இதயபூர்வமாக அவர்களால் அதை ஏற்று பின்பற்ற முடிந்திருக்கிறது. அறிவுபூர்வமாக மட்டும் புரிந்திருந்தால் வாங்கிய முதல் அடியிலேயே புரிந்தது காணாமல் போய் ஓட்டமோ, பதில் தாக்குதலோ நடந்திருக்கும். கலவரம் வெடித்திருக்கும்.

எனவே பாமரனிடம் பக்கம் பக்கமாகப் பேசாமல் வாழ்ந்து காட்டு, புரிந்து கொள்வான் என்கிற இந்த வகை உபதேசம் மிகவும் பொருள் பொதிந்தது. இன்றைய அரசியல், ஆன்மிக, சமூகத் தலைவர்களுக்கு எட்ட வேண்டிய உபதேசம் இது. இன்று வாய் கிழியப் பேசும் தலைவர்களும், அறிவுஜீவிகளும் பெருகி விட்டார்கள். முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டும் மனிதர்களைப் பார்ப்பது தான் அரிதாக இருக்கிறது.

அப்படி கஷ்டமான காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டால் உடனே ஏற்படுவது ஆத்ம திருப்தி. ஆனால் சிறிது ஏமாந்தால் கூட இன்னொன்றும் கூடவே தலையைத் தூக்கி நிற்கும். அது தான் கர்வம். என்னால் தானே இப்படி முடிந்தது என்கிற எண்ணம் வந்து விட்டால் பின் கர்மயோகம் அங்கு காணாமல் போய் விடும். நான்என்கிற அகங்காரத்தை மேலும் வளர்க்கும் எண்ணம் தான் மேலோங்கும். பொது நலன் அமுங்கி விடும். எனவே தான் உடனடியாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் எல்லா தொழில்களும் நடைபெறுகின்றன. ஆணவத்தால் மதி மயங்கியவனே தான் செய்ததாக நினைக்கின்றான்.

தோள்வலி படைத்தவனே! இயற்கையின் குணத்தையும் அதில் தன் செய்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவனே எல்லாம் இயற்கையின் இயக்கமே என்று பற்றில்லாமல் இருப்பான்.

எல்லாமே இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் நடக்கின்றன. எந்த ஒரு உயர்ந்த காரியத்திற்கும் இயற்கை எதிராக இருந்தால் அது கண்டிப்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு பெருங்காரியத்தையும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிலையிலும் இறைவனின் ஆசிர்வாதம் அதற்கு இருந்திருப்பதை உணரலாம். எத்தனையோ அனுகூலமான விஷயங்கள் பல பாகங்களில் இருந்தும் வந்திருப்பது புரிய வரும். எதிரான விஷயங்கள் பலமிழந்து போக வைக்கப் பட்டிருப்பதையும் உணரலாம். எனவே தான் மகான்கள் “எல்லாம் அவன் செயல்என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டார்கள்.

அடுத்த ஒரு சுலோகத்தில் கர்மயோகத்தை அடக்கிச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்: உள்ளே இருக்கும் ஆன்மாவிடம் மனத்தை நிலை நிறுத்தி உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு. பலனைப் பற்றிய கவலை இல்லாமலும் “எனதுஎன்ற உணர்வின்றியும் மன வேதனையை உதறித் தள்ளி போர் செய்

செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்ற தைரியம் தானாக வந்து விடும். பலனைக் குறித்த கவலையோ, கலக்கமோ, வேதனையோ தானாக விலகி விடும். செய்கின்ற ஒவ்வொன்றையும் அப்படி அர்ப்பணிக்க முடிந்தவன் எல்லா அலைகளாலும் தொட முடியாத உறுதியான உயரமான பாறையிலே நிற்பவனைப் போன்றவன் ஆகிறான்.

இதே கருத்து குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது. “யாராக இருந்தாலும் நல்ல காரியத்தைச் செய்கையில் தனது நோக்கத்தை அல்லாவிடம் அர்ப்பணம் செய்து விட வேண்டும். அவ்விதம் செய்பவன் அல்லாவின் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டவனாகிறான்.” (குரான் 31.22)

எல்லா மதங்களிலும் இது போன்ற கருத்துகளை நாம் காண முடியும். இப்படி பற்றில்லாமலும், கர்வம் இல்லாமலும், இறைவனுக்கு அர்ப்பணித்துச் செய்கின்ற உயர்ந்த செயல்களாலேயே மனிதகுல மேம்பாடு சாத்தியமாகும்.

பாதை நீளும்....

என்.கணேசன்

நன்றி: விகடன்

6 comments:

  1. அருமையான விளக்கும் முறை. எளிமையான நடை. மற்ற மதங்களில் உள்ள கருத்துகளையும் இணைக்கும் பாங்கு. பாராட்ட வார்த்தை இல்லை. வாழ்க. நும்பணி தொடர்க.

    ReplyDelete
  2. Meaningful title and nice post. thanks a lot for posting such blogs...
    S. Ganesh Ram

    ReplyDelete
  3. எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டிய செய்தியை அழகாகத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. சொல்லும் வண்ணம் வாழ்ந்து காட்டினால்தான் ஒருவர் நம்பிக்கையுடன் பின்பற்றுவர்.சத்தியாகிரக காட்சி மிகவும் மனதை தொட்டது. கடினமான கருத்துக்களை மிக எளிமையாக கொடுத்திருக்கிறார். நன்றி.
    வேணுகோபால்

    ReplyDelete
  5. Kindly post the remaining chapters of Karma Yogam Adhyayam. Your blogs are quite informative and practical. Hats off to you Ganeshan. All the very best. --Raman

    ReplyDelete