சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, October 28, 2011

மன அமைதிக்கு மார்கஸ் அரேலியஸ்


 

அரசாள்பவர்கள் தத்துவஞானிகளாக இருப்பது மிக மிக அபூர்வம். அப்படி வரலாறு பதிவு செய்திருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் சக்கரவர்த்தியாக ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஆண்டவர் என்றால் இரண்டாம் நூற்றாண்டில் (26-4-121 முதல் 17-3-180) வாழ்ந்த ரோமானிய சக்கரவர்த்தியான மார்கஸ் அரேலியஸைத் தவிர வேறு யாரும் பெரிய அரச பதவியுடன் தத்துவ ஞானியாகவும் பிரகாசித்ததில்லை.

ஹெராடியன் (Herodian) என்ற வரலாற்றாசிரியன் கூறுகிறான். “தான் ஒரு ஞானி என்பதை வார்த்தைகளாலும், அறிவுரையாலும் தெரிவித்தது மட்டுமல்லாமல் பண்புகளாலும், வாழ்ந்த முறையாலும் உணர்த்திய மார்கஸ் அரேலியஸ் வரலாறு கண்ட சக்கரவர்த்திகளில் தனித் தன்மை வாய்ந்தவரே 

அகண்ட சாம்ராஜ்ஜியத்தை ஆள்வது எந்தக் காலத்திலும் சுலபமாகவோ, மன நிம்மதிக்குத் தகுந்ததாகவோ இருந்ததில்லை. ரோமானிய சாம்ராஜ்ஜியமும் அதற்கு விதிவிலக்கல்ல. மார்கஸ் அரேலியஸ் நிர்வாகத்தை நடத்த அடுத்தவர்களை விட்டு விடவில்லை. போர் புரிய தளபதிகளை அனுப்பி விட்டு தத்துவ ஞானத்தில் ஆழ்ந்து விடவில்லை. ஆட்சி புரிவதிலும், போர் புரிவதிலும் அவர் நேரடியாகப் பங்கு வகித்தவர். அவருடைய ஒரே மகன் பண்புகளில் அவருக்கு ஏற்ற மகனாக இருக்கவில்லை. ஆட்சி, நிர்வாகம், போர், குடும்பப் பிரச்னைகள் இத்தனைக்கும் நடுவில் அவர் தனக்கு அறிவுரையாக தானே சொல்லிக் கொண்டவை இன்றும் தத்துவஞானத்தில் தலைசிறந்த நூலாக கருதப்படுகிறது.

மன அமைதிக்கான அறிவுரையாகவும், ஆட்சி நலன், ஆன்மீகம் குறித்த உயர் கருத்துகளைக் கொண்டதாகவும் “எனக்கு (To Myself) என்ற தலைப்பில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூறிக்கொண்ட அந்த அறிவுரைகள் அவர் காலத்திற்குப் பின் “தியானங்கள் (Meditations)” என்ற பெயர் மாற்றத்துடன் பிரபலமாக ஆரம்பித்தது. மகா ப்ரெடெரிக் (Frederick the Great) போன்ற மாமன்னர்கள், கதே (Goethe) போன்ற தத்துவ ஞானிகள், மற்றும் பல்வேறு அறிஞர்கள் முதல் பாமரர்கள் வரை பலருக்கும் அறிவு விளக்காக விளங்கிய அந்த நூலில் மன அமைதிக்கு மகத்தான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான அறிவுரைகளை இனி பார்ப்போம்.

வாழ்க்கை முறையில் ஒழுங்கும் அமைதியும் இருந்தால் தானாக மன அமைதி கிடைத்து விடும் என்பது மார்கஸ் அரேலியஸின் முக்கியமான சிந்தனையாக இருந்தது. அவர் கூறுகிறார்:

எல்லா காரியங்களும், எண்ணங்களும் ஒரு தர்மத்திற்குள் அடங்கி நிற்கும்படி செய்து கொள்வாயாக! அதுவே அமைதிக்கு வழி.

மனமொவ்வாத செயலைச் செய்யாதே. சமூக நன்மைக்கு மாறுபாடாகவாவது விவேகக் குறைவாகவாவது மனப் புகைச்சலுடன் நடந்து கொள்ள வேண்டாம். பேச்சுத் திறமையால் உண்மையை மறைக்க வேண்டாம். வீண் பேச்சு பேச வேண்டாம். பிறர் காரியத்தில் பயனின்றி தலையிட வேண்டாம். உனக்குள் உள்ள பரம்பொருளைக் கௌரவிப்பாயாக. எந்த நிமிடமும் உலகத்தை விட்டுப் பிரிய தயாராக இரு. சாட்சியாவது உத்தரவாவது வேண்டப்படாத சத்தியவானாக இரு. உள்ளத்தில் சாந்தத்தை வளர்த்துக் கொள்.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்தும் நம்மால் மாற்ற முடியாத விஷயங்கள் குறித்தும் கவலை கொள்வது சிறிதும் அறிவுடைமை அல்ல என்பதையும் அவற்றை ஏற்றுக் கொள்வது மிக அவசியம் என்றும் அவர் சில இடங்களில் அழகாகக் கூறுகிறார்:

விதியால் வந்த சுகமும் விலக்க முடியாத துக்கமும் உலகத்தை நடத்தும் தெய்வம் கொடுத்த வரப்பிரசாதமென்று வணக்கத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எது நேர்ந்தாலும் “இது ஆண்டவன் செயல். இது நெய்யும் வஸ்திரத்தில் ஊடும் பாவு போல உலக வாழ்வின் இயல்பில் நெய்யப்பட்ட ஒரு சம்பவம். இதை நான் ஏன் துக்கமாக பாவிக்க வேண்டும்?என்று கேட்டுக் கொள்.

நமக்கு முன்பும் பின்பும் கணக்கிட முடியாத காலம் இருக்கையில் நீர்க்குமிழி போன்ற இந்த நிலையில்லாத குறுகிய வாழ்க்கைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து கவலை கொள்வது அர்த்தமில்லை என்கிறார் மார்கஸ் அரேலியஸ்.

உலகில் எவ்வளவு விரைவில் எல்லாம் அழிந்து விடும் பார். கழிந்து போன யுகங்கள் கணக்கற்றவை. வருங்காலமும் அளவற்றது. இதற்கிடையில் புகழ் என்றால் என்ன? உன் புகழ் ஒரு சிறு குமிழி போன்ற பொருளில்லாத ஆரவாரமே அல்லவா?

முந்தியும் பிந்தியும் ஆதியந்தமற்ற அகண்ட கால அளவுகள் இருக்க மத்தியில் வரும் இந்த அற்பங்களைப் பொருட்படுத்துவது என்ன அறியாமை!

எதைப் பற்றியாவது மிகக் கவலை கொண்டவர்களையும் பெரிய புகழ் பெற்றவர்களையும் நினைத்துப் பார். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே? அவர்களது பெருமையும் பகைமையும் இப்போது எங்கே? புகையும் சாம்பலுமாகிப் போன கதை தான். அக்கதையைக் கூட ஒரு சிலர் தான் சொல்கிறார்கள். அது கூட விரைவில் மறக்கப்பட்டு விடும்.

அடுத்தவர்களால் மன நிம்மதியை இழப்பது நம் வாழ்வில் அதிகம் நடக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நம் மன நிம்மதியின்மைக்குக் காரணமே அடுத்தவர்கள் தான் என்று நம்பும் அளவில் பெரும்பாலோர் இருக்கிறோம். அப்படிப்பட்டோருக்கு அருமையாக மார்கஸ் அரேலியஸ் சொல்கிறார்.

எவனாவது ஒருவன் வெட்கமின்றி நடந்து கொண்டு அதற்காக நீ கோபம் கொண்டாயானால் உடனே உலகில் வெட்கமின்றி நடப்பாரே இல்லாதிருக்க முடியுமா? என்று கேட்டுக் கொள். இல்லை எனில் ஏன் கவலைப்படுகிறாய்?

அறியாதவன் அறியாதவனைப் போலத் தானே நடப்பான். இதில் என்ன அதிசயம். அதனை எதிர்பாராதது உன் பிழையே.

வெள்ளரிக்காய் கசக்கிறதா தூர எறிந்து விடு. வழியில் முள்ளா விலகிப் போ. அதை விட்டு விட்டு வெள்ளரிக்காய் ஏன் கசக்கிறது, முள் ஏன் தோன்றியது என்ற ஆராய்ச்சியில் இறங்குவது அறிவீனம்.

எல்லாம் எண்ணங்களே என்பதால் எண்ணங்களை சரி செய்தால் எல்லாமே சரியாகி விடும், அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் மார்கஸ் அரேலியஸ்:

ஒரு துன்பம் நேரிடின் அதைப் பற்றி எண்ணுவதை விடு. எண்ணுவதை விட்டால் துன்பம் நேரிட்ட நினைவு போகும். அந்த நினைவு நீங்கிய பின் துன்பம் எங்கே?

இன்பமும் துன்பமும் உள்ளத்தின் ஆதினமே; உள்ளத்தின் எண்ணங்களே அவைகளுக்குக் காரணம் என்ற உண்மையை அறிந்து நடந்தாயானால் கடவுளைக் குறை கூறவோ, மனிதர்களை வெறுக்கவோ மாட்டாய்.

மொத்தத்தில் இயற்கையாகவும் எளிமையாகவும் வாழ முற்படுவது மனிதன் மன நிம்மதியாக இருக்க மிகவும் உதவும் என்கிறார். எனவே இயற்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார்:

மரத்தில் உண்டாகிக் கீழே விழுந்து போகும் பழத்தைப் பார். தன் வாழ்க்கையை எவ்வளவு சந்தோஷமாகவும் லகுவாகவும் நடத்தி மரத்திலிருந்து நழுவி தான் பிறந்த மண்ணில் மறுபடி அடங்கிப் போகிறது. அதைப் பின்பற்றுவாயாக!

இது போன்ற இதயத்தை அமைதிப்படுத்தும் எத்தனையோ எண்ணங்களையும், அதற்கான வழிமுறைகளையும் அவர் தன் தியானங்கள் நூலில் கூறியுள்ளார். மன அமைதி இழந்து தவிக்கும் மனிதர்கள் அவர் நூலை அடிக்கடி படிப்பதும், உணர்வதும், கடைபிடிப்பதும் இழந்த அமைதியை திரும்பப் பெற கண்டிப்பாக உதவும்.


-          என்.கணேசன்
-          நன்றி: ஈழநேசன்

Monday, October 24, 2011

ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 11
ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!

ஒரு நகரத்தில் ஒரு வணிகர் இருந்தார். அவர் படிப்பறிவில்லாதவர். அவர் கடையில் விற்காத பொருள்கள் குறைவு. எல்லாவற்றையும் தன் கடையில் வாங்கி வைத்திருந்து விற்பார். சில பொருட்கள் அவர் கடையில் மட்டுமே கிடைக்கும் என்கிற அளவுக்கு பிரபலமாக இருந்தானர். பல வருடங்களாக வெற்றிகரமாக வியாபாரம் நடத்தி வந்த அவர் உடல்நிலை தளர ஆரம்பித்தது. கண்பார்வை மங்க ஆரம்பித்தது. காதுகளும் சரியாக கேட்காமல் போகவே தன் தொழிலை மகனிடம் ஒப்படைக்க நினைத்தார். மகனை நிறைய படிக்க வைத்திருந்தார். படித்து முடித்து மகன் பெரிய நகரத்தில் வேலையில் இருந்தான்.

அவரது கடை லாபத்தில் பத்து சதவீதத் தொகையைக் கூட சம்பளமாக வாங்காத மகனிடம் அந்த வேலையை விட்டு வந்து கடையைப் பார்த்துக் கொள்ள சொன்னார். மகனும் வந்தான். தந்தை வியாபாரம் நடத்தும் முறையைக் கண்ட மகன் சொன்னான். “அப்பா இப்போது உலகமெங்கும் பொருளாதாரம் சரிவடைய ஆரம்பித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு விட்ட நிலையில் நம் நாடெல்லாம் ஒரு பொருட்டல்ல. வரப் போகும் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லா விட்டால் பிற்காலத்தில் நிறைய கஷ்டப்பட வேண்டியதாகி விடும்

அவர் பயந்து போனார். இப்போதைய உலகப் பொருளாதார நிலையை அவர் அறியாதவர். அமெரிக்கா பணக்கார நாடென்று கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நாடு கூட பொருளாதார சரிவை சந்தித்திருக்கின்றதென்றால் நிலைமை பூதாகரமானதாகத் தான் இருக்க வேண்டும். அவரோ தன் சொந்தத் தொழில் தவிர வேறு எந்த பொது அறிவும் இல்லாதவர். அறிவாளிகளோடு அதிக பழக்கமும் இல்லாதவர். வியாபாரம் ஒன்றே கதி என்றிருந்தவர். மகனோ மெத்தப் படித்தவன். பல டிகிரிகள் வாங்கியவன். உலக நடப்புகள் தெரிந்தவன்.

“மகனே என்ன செய்ய வேண்டும் என்று சொல்

“இப்படி தேவையில்லாமல் கண்ட கண்ட பொருள்கள் எல்லாம் வாங்கி விற்கிற வேலை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் ஆபத்தானது

இத்தனை நாட்கள் அப்படி செய்து தானே மகனே இத்தனை சொத்து சேர்த்திருக்கிறேன்

அப்பா அந்தக் காலத்தில் எப்படியோ என்னவோ செய்து நிறைய சம்பாதித்து விட்டீர்கள். அந்தக் காலம் போல் அல்ல இந்தக் காலம். இப்போது காலம் மாறி விட்டது. காலத்தை அனுசரித்து நாம் மாறா விட்டால் நாம் நஷ்டப்பட வேண்டி வந்து விடும்

பயந்து போன அவர், சரி மகனே நீ எப்படி குறைக்க வேண்டுமோ குறைத்துக் கொள்என்றார்.

தந்தையின் வாணிபத்தில் மகன் தன் அறிவுக்கு எட்டாத, தன் விருப்பத்திற்கு ஒவ்வாத பொருள்களை எல்லாம் வாங்கி விற்பதை நிறுத்தி விட்டான். ஒரு காலத்தில் கிடைத்தபடி எல்லாப் பொருள்களும் இந்தக் கடையில் கிடைக்கும் என்ற நிலை இல்லை என்பதால் பெரும்பாலோர் அந்தக் கடைக்கு வந்து பொருள்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டார்கள். வேறு கடைகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். நாளாவட்டத்தில் வியாபாரம் சரிந்து கொண்டே வந்தது.

மகன் தந்தையிடம் சொன்னான். “அப்பா நான் சொன்னபடி வியாபாரம் குறைய ஆரம்பித்து விட்டது பார்த்தீர்களா? முதலிலேயே நான் எச்சரிக்கை செய்து நாம் ஜாக்கிரதையாக இருந்ததால் பெரிய நஷ்டப்படாமல் தப்பித்தோம். நீங்கள் முன்பு செய்து வந்த மாதிரியே நாம் இப்போதும் வியாபாரம் செய்து வந்திருந்தால் விற்பனை இல்லாமல் பொருள் தேங்கி நாம் நிறைய நஷ்டப்பட்டிருப்போம்.

அந்த வணிகருக்கு ஆமென்று பட்டது. என்ன இருந்தாலும் படித்தவன் படித்தவன் தான் என்று நினைத்துக் கொண்டார்.

மேலே சொன்ன உதாரணத்தில் அந்த வணிகரின் தொழிலின் வெற்றிக்கு ஒரு முக்கியமான அடிப்படைக் காரணம் இருந்தது. மற்ற கடைகளில் கிடைக்காத பொருட்களைக் கூட தன் கடையில் அவர் தருவித்து வைத்திருந்ததால் அவர் கடையைத் தேடி வரும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்கள் அந்த பொருட்களுடன் மற்ற இடங்களில் கிடைக்கும் பொருட்களையும் கூட ஒரே இடத்தில் இதையும் வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்கிச் சென்றதால் வியாபாரம் செழித்தது.

ஆனால் மகன் அதி மேதாவியாய் உலகப் பொருளாதார அளவில் சிந்தித்து அதற்கும் தந்தையின் வாணிபத்திற்கும் முடிச்சு போட்டு அதன் மூலம் ஏதோ ஒரு முடிவெடுத்தது முட்டாள்தனம். அதற்கு பதிலாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எத்தகையவர்கள், அவர்கள் தேவைகள் என்ன, எதனால் மற்ற கடைகளை விட்டு இங்கு வருகிறார்கள் என்ற வியாபார அடிப்படை அறிவில் சிந்தித்திருந்தால் வியாபார விருத்தி ஏற்பட்டிருக்கும். ஒழுங்காக சென்று கொண்டிருந்த வியாபாரத்தைக் கெடுத்ததுமல்லாமல் தான் அதைப் பெரிய நஷ்டத்திலிருந்து காப்பாற்றியதாக மகன் நினைத்ததும், தன் சொந்த அறிவையும் அனுபவத்தையும் விட மகன் அப்படி சொன்னதை அந்த தந்தை நம்ப ஆரம்பித்ததும் தான் வேடிக்கை.

பலரது கல்வி அவர்களுக்கு அதி மேதாவிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிகம் படித்திருந்தால், பெயர் போன கல்விக்கூடங்களில் படித்திருந்தால் அத்தனை அறிவையும் பெற்று விட்டோம் என்ற கர்வத்தையும் தந்து விடுகிறது. அதனால் தான் எண்ணிலடங்கா தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் பலரும் நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இந்த உலகம் அவர்களுக்கு உரிய கௌரவத்தையும், வெற்றியையும் தரத் தவறி விட்டது என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

வாழ்க்கையில் எதற்கு என்ன தேவையோ அதை முக்கியமாக அறிந்திருங்கள். அந்த அறிவு கல்விக்கூடங்களில் கிடைக்கலாம், அதற்கு வெளியிலும் கிடைக்கலாம். அந்த அறிவே அந்த விஷயத்திற்கு உங்களுக்கு உதவும். அதில் வெற்றி பெற்றவர்களுடைய அனுபவத்தை, அவர்களின் செயல் முறையை உற்று கவனியுங்கள். அதன் மூலம் கிடைக்கும் அறிவு ஆயிரம் சான்றிதழ்களாலும் கிடைத்து விடாது. அதை எந்த பள்ளிக்கூடத்திலும் கற்றுக் கொண்டு விட முடியாது.

பாடசாலைகளில் கிடைக்கும் கல்வியறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிலேயே அத்தனை அறிவும் அடங்கி விடுகிறதென்று யாரும் முடிவுகட்டி விடக் கூடாது. ஏட்டில் இல்லாதது, கல்விக்கூடங்களில் கற்க முடியாதது எத்தனையோ இருக்கிறது. கல்வியறிவு சுயமாய் சிந்திக்கும் திறனுக்கு என்றுமே நிகராகி விடாது. உண்மையாகச் சொல்வதானால் கல்வியறிவே சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளும் சமயோசித  அறிவுடன் இணையா விட்டால் வாழ்க்கைக்கு உதவாது.  இதை என்றும் நினைவில் நிறுத்துவது நல்லது.

மேலும் படிப்போம்....

-          என்.கணேசன்
-          நன்றி: வல்லமை

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் நூலாக வெளிவந்து பல பதிப்புகள் கண்டுள்ளது. வாங்க விரும்புபவர்கள் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, October 19, 2011

சுடும் உண்மை; சுடாத அன்பு!


                                         


ருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும் கொடுமையான அனுபவமாக இந்த பயணம் இருக்கப் போகிறது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். போகும் இடத்தில் மகனால் ஒரு புழுவை விடக் கேவலமாக அவள் பார்க்கப்படுவாள், நடத்தப்படுவாள் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால் எத்தனையோ காலமாய் அவள் சுமந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைக்காமல் இறக்க அவளுக்கு மனமில்லை என்பதால் சகல தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு தன் உயிர்த் தோழி வசந்தியையும் உடன் அழைத்துக் கொண்டு அவள் கிளம்பி இருக்கிறாள்.

ஆனால் பெங்களூரில் இருந்து கிளம்பும் போதிருந்த தைரியம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து சென்னை சென்ட்ரலில் வாடகைக் காரில் ஏறி அமர்ந்த போது சுத்தமாகக் கரைந்து போயிருந்தது. வாசலிலிருந்து வீட்டுக்கு உள்ளே போகவாவது அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. ஆனால் அவன் எப்படி நடத்தினாலும் அது அவள் செய்த தவறுக்குக் குறைந்த பட்ச தண்டனையாகக் கூட இருக்க முடியாது என்று நினைத்தாள். கார் மகன் வீட்டை நோக்கி முன்னேற மனமோ பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்து அவளது இளமைக் காலத்தை நெருங்கியது....


டிப்பிலும் அழகிலும் பலரும் பாராட்டும்படி இருந்த நிர்மலாவுக்கு அவள் தந்தை அழகு என்ற சொல்லிற்கு சம்பந்தமே இல்லாத நடேசனைக் கணவனாக தேர்ந்தெடுத்த போது நிர்மலா அதைக் கடுமையாக எதிர்த்தாள். ஆனால் அவள் தந்தை அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. “பையன் குணத்தில் சொக்கத் தங்கம். அரசாங்க உத்தியோகம் இருக்கு. பார்க்க சுமாரா இருந்தா என்ன?என்று அவள் வாயை அடைத்தார். பார்க்க சுமார் என்ற வர்ணனை நடேசனை அநியாயத்திற்கு உயர்த்திச் சொன்னது போல தான். கறுத்து மெலிந்து சோடா புட்டிக் கண்ணாடியும் அணிந்திருந்த அவரை எந்த விதத்திலும் சுமார் என்று ஒத்துக் கொள்ள நிர்மலாவால் முடியவில்லை. இரண்டு நாள் சாப்பிடாமல் கூட இருந்து பார்த்த நிர்மலா குடும்ப நிர்ப்பந்தம் காரணமாக வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டி வந்தது.

ஆனால் அவளுடைய அப்பா சொன்னது போல நடேசன் குணத்தில் சொக்கத் தங்கமாகவே இருந்தார். அன்பான மனிதராக இருந்த அவர் அவள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார். எல்லா விதங்களிலும் அவளுக்கு அனுசரித்துப் போனார். அவளுக்கு அவருடைய குணங்களில் எந்தக் குறையையும் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆனால் வெளியே நான்கு பேர் முன்னால் அவருடன் செல்வது அவளுக்கு அவமானமாக இருந்தது. வேண்டா வெறுப்பாக வீட்டுக்குள் அவருடன் குடும்பம் நடத்தப் பழகிக் கொண்டாள். கல்யாணம் முடிந்து ஆறு மாதத்தில் அவள் கர்ப்பமான போது குழந்தை அவர் போல் பிறந்து விடக் கூடாது என்று அவள் வேண்டாத தெய்வமில்லை. அவள் பிரார்த்தனை வீண் போகவில்லை. அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வாழ்க்கை சிறிது சுலபமாகியது.

அவள் மகன் அருணுக்கு இரண்டு வயதான போது அவள் எதிர் வீட்டுக்கு ஒரு கவர்ச்சியான ஆணழகன் குடி வந்தான். ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அவன் பார்க்க ஒரு சினிமா நடிகன் போல் இருந்தான். ஆரம்பத்தில் அடிக்கடி சிநேகத்துடன் புன்னகைத்தவன் பின் அவளிடம் பேச்சுத் தர ஆரம்பித்தான். அவள் குழந்தையிடம் அதிக அன்பைக் காட்டினான். குழந்தையை அடிக்கடி எடுத்துக் கொண்டு வெளியே சுற்றப் போனான். போகப் போக அவள் உடுத்தும் உடைகளைப் பாராட்டினான். அவள் அழகைப் பாராட்டினான். மெள்ள மெள்ள அவள் மனதில் இடம் பிடித்தான்.

கடைசியில் ஒரு நாள் அவள் சரியென்று சொன்னால் அவளைக் குழந்தையுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொன்னான்.  ஆரம்பத்தில் தன்னுடன் தனியாக வந்து விடும் படியும், அவள் நடேசனிடமிருந்து சட்டப்படி விவாகரத்து வாங்கிய பின் திருமணம் செய்து கொண்டு பின் குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் விடலாம் என்று சொன்னான். ஓரிரண்டு மாதங்களில் இதையெல்லாம் சாதித்து விடலாம் என்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கை ஒரு எல்லையில்லாத சொர்க்கமாக இருக்கும் என்று ஆசை காட்டினான்.

ஒரு பலவீனமான மனநிலையில் அவள் சம்மதித்தாள். ஆனால் அவளுக்குக் குழந்தையை விட்டுப் போவது தான் தயக்கமாக இருந்தது. சில நாட்கள் தானே என்று அவன் அவளை சமாதானப் படுத்தி ஒத்துக் கொள்ள வைத்தான். தன்னை மன்னிக்கும் படி கணவனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு அவள் அவனுடன் ஓடிப்போனாள்.

இருவரும் பெங்களூரில் ஒரு லாட்ஜ் எடுத்துத் தங்கினார்கள். மூன்று நாட்கள் கழித்து அவள் பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டு அவன் காணாமல் போனான். அவளுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு மெள்ள மெள்ள தான் உண்மை உறைத்தது. அவள் உலகம் அன்று அஸ்தமனமாகியது. அந்த லாட்ஜிற்குத் தரக்கூட அவளிடம் பணம் எதுவும் இருக்கவில்லை. நல்ல வேளையாக அவளுடைய நெருங்கிய தோழி வசந்தி பெங்களூரில் வேலையில் இருந்து அவள் வேலை செய்யும் கம்பெனியின் விலாசமும் அவளிடம் இருந்ததால் போன் செய்து அவளை வரவழைத்தாள்.

திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்த வசந்தி வந்து நிர்மலாவை தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனாள். சில நாட்கள் உண்ணாமல், உறங்காமல் பித்துப் பிடித்தது போல் இருந்த தன் தோழியைப் பார்த்து வசந்தி ஆரம்பத்தில் பயந்தே போனாள். அவள் தற்கொலைக்கு முயல்வாளோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. அவள் சந்தேகத்தை ஊகித்தது போல வரண்ட குரலில் நிர்மலா சொன்னாள். “பயப்படாதே வசந்தி. நான் கண்டிப்பாக தற்கொலை செய்துக்க மாட்டேன். நான் செய்த தப்புக்கு நான் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதை முழுசும் அனுபவிக்காமல் நான் சாக விரும்பலை”. சொல்லும் போதே அவள் வார்த்தைகளில் சுய வெறுப்பு பரிபூரணமாகத் தெரிந்தது.

அது காலப்போக்கில் வடிந்து விடும் என்று வசந்தி நினைத்தாள். ஆனால் அது சாசுவதமாக நிர்மலாவிடம் தங்கிப் போனது. ஒரு மாதம் கழித்து வசந்தி கேட்டாள். “நிர்மலா இனி என்ன செய்யப் போகிறாய்?

“எனக்கு இங்கே எதாவது வேலை வாங்கித் தருகிறாயா வசந்தி?

நீ திரும்ப உன் வீட்டுக்குப் போகலையா நிர்மலா?

அந்தக் கேள்வியில் நிர்மலா கூனிக் குறுகி விட்டாள். “மூன்று நாள் நான் சாக்கடையிலே விழுந்திருந்து அழுகிட்டேன். அந்த நல்ல மனுஷனுக்கு மனைவியாகவோ, அவரோட குழந்தைக்கு தாயாகவோ இருக்கிற அருகதையை நான் இழந்துட்டேன் வசந்தி.

“நீ போகலைன்னா நீ அவன் கூட எங்கேயோ வாழ்க்கை நடத்திகிட்டிருக்கிறதா அவங்க நினைச்சுட்டு இருப்பாங்க நிர்மலா. நீ மூணு நாளுக்கு மேல அவன் கூட இருக்கலைன்னு அவங்களுக்கு தெரியாமல் போயிடும்

“கற்பில் கால், அரை, முக்கால்னு எல்லாம் அளவில்லை வசந்தி. இருக்கு, இல்லை என்கிற ரெண்டே அளவுகோல் தான்

வசந்தி வாயடைத்துப் போனாள். ஆனால் பின் எத்தனையோ சொல்லிப் பார்த்தும் நிர்மலாவின் அந்த எண்ணம் கடைசி வரை மாறவில்லை. அந்த மூன்று நாட்கள் வாழ்க்கை பழைய நிர்மலாவை முழுவதுமாக சாகடித்து விட்டதாகவே வசந்திக்குத் தோன்றியது. தொடர்ந்த காலங்களில் அவள் என்றுமே அழுததில்லை. சிரித்ததில்லை. தன்னை அழகுப்படுத்திக் கொண்டதில்லை. ருசியாக சாப்பிட்டதில்லை. டிவி பார்த்ததில்லை. வசந்தியைத் தவிர யாரிடமும் நெருங்கிப் பழகியதுமில்லை. எத்தனையோ இரவுகளில் உறங்காமல் ஜன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த தோழியைப் பார்த்து வசந்தி மனம் வெந்திருக்கிறாள்.

என்ன கொடுமை இது. எத்தனை காலம் இப்படி இருப்பாய் நிர்மலா? ஒரு நாள் தாளமுடியாமல் வசந்தி கேட்டாள்.

நிர்மலா அதற்கு பதில் சொல்லவில்லை.

“இப்படி உள்ளுக்குள்ளே சித்திரவதை அனுபவிக்கிறதுக்கு பதிலா நீ நேரா உன் வீட்டுக்குப் போய் அவங்க பேசறத கேட்டுக்கலாம். கொடுக்கற தண்டனையை ஏத்துக்கலாம். ஒரேயடியாய் அழுது தீர்க்கலாம். அப்படியாவது உன் பாரத்தைக் குறைச்சுக்கலாம்

அதை நிர்மலா ஏற்றுக் கொள்ளவில்லை. அவளுடைய நடைப்பிண வாழ்க்கை தொடர்ந்தது. அடுத்த மாதமே ஒரு வேலையில் வசந்தி அவளை சேர்த்து விட்டாள். நிர்மலா ஒரு நடைப்பிணமாய் அந்த வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். வாங்குகிற சம்பளத்தில் அத்தியாவசிய செலவு போக ஒரு பகுதியை வசந்தியிடமும், மீதியை அனாதை ஆசிரமங்களுக்கும் தந்து விடுவாள்.

அவர்களுடைய தோழி ஒருத்தி மூலமாக நிர்மலாவின் வீட்டு விஷயங்கள் அவ்வப்போது தெரிய வந்தன. கணவர் நடேசன் வேறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை. நிர்மலாவின் பெற்றோர் அருணைத் தாங்கள் வளர்ப்பதற்கு முன் வந்தனர். அதற்கு சம்மதிக்காமல் நடேசன் மகனைத் தானே வளர்த்தார். ஊரில் நிர்மலா பற்றி வம்புப் பேச்சு அதிகமாகவே அவர் சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு மகனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். மகன் அருண் படிப்பில் படுசுட்டியாக இருந்தான். நடேசன் அவனை பி.ஈ படிக்க வைத்தார். அவனுக்கு நல்ல வேலை கிடைத்து இரண்டே மாதங்களில் நடேசன் காலமானார்.

அந்தத் தகவல் கிடைக்கும் வரை பொட்டு மட்டும் வைத்துக் கொண்டிருந்த  நிர்மலா பின் அதையும் நிறுத்தி விட்டாள். அவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்த பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலாவிற்கு மருத்துவ பரிசோதனைகள் செய்த போது தான் கான்சர் முற்றிய நிலையில் இருப்பது தெரிந்தது. அதன் பின் தான் பல நாள் யோசனைக்குப் பின் இறப்பதற்கு முன் ஒருமுறை மகனை நேரடியாக சந்திக்க நிர்மலா முடிவு செய்தாள். 

அவள் தன் முடிவை வசந்தியிடம் சொன்ன போது வசந்திக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. வசந்தி பேச வார்த்தைகள் இல்லாமல் தோழியின் கைகளை ஒரு நிமிடம் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். எத்தனையோ முறை இது பற்றியும் சொல்லியும் கேட்காத நிர்மலா மரணம் அருகில் வந்து விட்டது என்பதை அறிந்தவுடன் மனமாற்றம் அடைந்தது வசந்தி மனதை நெகிழ வைத்தது. குரல் கரகரக்க அவள் சொன்னாள். “துணைக்கு நானும் வர்றேன் நிர்மலா


கார் அருண் வீட்டு முன் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கும் போது நிர்மலாவின் இதயத் துடிப்புகள் சம்மட்டி அடிகளாக மாற ஆரம்பித்தன. வசந்திக்கும் சிறிது பதட்டமாகத் தான் இருந்தது. அருணின் வீடு அழகாகத் தெரிந்தது. வீட்டு முன்னால் நிறைய பூச்செடிகள் இருந்தன. ஒரு காலத்தில் நிர்மலாவிற்கும் பூச்செடிகள் என்றால் உயிர்.

அழைப்பு மணியை வசந்தி அழுத்தினாள். அருண் வந்து கதவைத் திறந்தான். அவனிடம் நிர்மலாவின் அன்றைய சாயல் அப்படியே இருந்தது. அழகான வாலிபனாக இருந்தான். என்ன வேண்டும் என்பது போல அவர்களைப் பார்த்தான்.

அருண்....?வசந்தி கேட்டாள்.

“நான் தான். நீங்கள்...?

“நான் வசந்தி. இது என் சிநேகிதி நிர்மலா. உங்களைத் தான் பார்க்க வந்தோம்

தாயின் பெயர் கேட்டும் அவனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. வசந்திக்கு அவனைத் தவறு சொல்லத் தோன்றவில்லை. அவனுக்கு அவன் தாயின் நினைவு எல்லாம் ஏதாவது பழைய புகைப்படத்தினுடையதாக இருக்கலாம். அந்த அழகு நிர்மலாவிற்கும் இன்றைய நடைப்பிண நிர்மலாவிற்கும் தோற்றத்தில் சிறிது கூட சம்பந்தம் தெரியவில்லை.

“உள்ளே வாங்க அவன் உள்ளே அழைத்தான்.

உள்ளே வரவேற்பறையில் இரண்டு புகைப்படங்கள் சுவரில் தொங்கின. ஒன்றில் நடேசன் மட்டும் இருந்தார். இறப்பதற்கு சில காலம் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் போல இருந்தது. அந்தப் புகைப்படத்திற்கு சந்தன மாலை போடப்பட்டிருந்தது. இன்னொன்றில் நடேசனும், நிர்மலாவும், கைக்குழந்தை அருணும் இருந்தார்கள்.

“உட்காருங்கஎன்றான் அருண்.

இருவரும் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார்கள்.  நிர்மலாவின் கண்கள் நடேசனின் புகைப்படத்தில் நிலைத்து நின்றன. அவள் போன பின்பு இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் மகனைத் தன்னந்தனியே வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைக்கு கொண்டு வந்து கடமையை முடித்த பிறகு இறந்து போன அந்த நல்ல மனிதரை அவள் பார்த்தாள். அவள் கண்கள் லேசாகக் கலங்கின. வசந்தி தன் தோழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருபது வருட காலத்தில் முதல் முறையாக நிர்மலா கண்கலங்குகிறாள்.

நிர்மலாவின் பார்வை நடேசன் படத்தில் நிலைத்ததும் அவள் கண்கலங்கியதும் அவள் பெயர் நிர்மலா என்று கூட வந்த பெண்மணி சொன்னதும் எல்லாம் சேர்ந்த போது அருணிற்கு அவள் யார் என்பது புரிய ஆரம்பித்தது. அவன் முகத்தில் சொல்ல முடியாத உணர்ச்சிகள் தெரிந்தன. அவன் இன்னொரு புகைப்படத்தில் இருந்த தாயின் உருவத்தையும், இப்போது எதிரில் இருக்கும் உருவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தான். ஒற்றுமை சுத்தமாக இல்லை என்றாலும் அவள் தான் தாய் என்பது சொல்லாமலேயே உறுதியாகியது. அவன் அறிந்து கொண்டான் என்பது இருவருக்கும் தெரிந்தது. சிறிது நேரம் அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது.

ஆனால் நிர்மலா பயந்தது போல அவன் அவளை அடித்துத் துரத்தவோ, கேவலமாக நடத்தவோ முனையவில்லை. நிர்மலாவிற்கு நாக்கு வாயிற்குள்ளே ஒட்டிக் கொண்டது போல் இருந்தது. எத்தனையோ சொல்ல இருந்தது, ஆனால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.

அருணாகவே அந்த மவுனத்தைக் கலைத்தான். “நீங்க ஒரு நாள் கண்டிப்பாய் வருவீங்கன்னு அப்பா சாகிற வரை சொல்லிகிட்டே இருந்தார்.

நிர்மலா கண்கள் குளமாயின. “நான்.... நான்....அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.

அருண் சொன்னான். “நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம். அப்பா எல்லாத்தையும் என் கிட்ட சொல்லி இருக்கார். நீங்க அழகு, அவர் அழகில்லைன்னு அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்ததாகவும், உங்களை எப்போதுமே அவர் சந்தேகப்பட்டுகிட்டு இருந்ததாகவும், அடிக்கடி சித்திரவதை செய்ததாகவும் ஒரு நாள் தாங்க முடியாமல் நீங்க வீட்டை விட்டே ஓடிப் போனதாகவும் அவர் சொல்லி இருக்கார்.....

இது என்ன புதுக்கதை என்று வசந்தி திகைத்தாள். அருண் அவளை அடித்துத் துரத்தாமல் இருந்த காரணம் நிர்மலாவிற்குப் புரிந்தது.

அருண் தொடர்ந்தான். “...அவர் சாகிறப்ப கடைசியாய் என்கிட்ட கேட்டுகிட்டது இது தான். ஒரு நாள் நீங்கள் திரும்பி வந்தால் உங்களை நான் பழையதைப் பற்றியெல்லாம் கேட்டு புண்படுத்தாமல் நல்ல மகனாய் உங்களை கடைசி வரைக்கும் பார்த்துக்கணும்னு தான்....

நிர்மலா உடைந்து போனாள். இத்தனை வருடங்கள் சேர்த்து வைத்திருந்த துக்கம் இந்த வார்த்தைகளால் ஒரே கணத்தில் பல மடங்காகப் பெருகி வெடித்து விட்டது. எழுந்து போய் அந்த மனிதர் புகைப்படத்திற்கு அருகே போய் கை கூப்பிக் கொண்டே கீழே சரிந்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
இறக்கும் வரை அவளைப் பற்றி ஒரு தவறு கூட சொல்லாமல், இறக்கும் போதும் அவளுக்காக மகனை வேண்டிக் கொண்ட இப்படிப்பட்ட மனிதரைக் கணவராய் பெற அவள் என்ன தவம் செய்து விட்டாள்! அப்படிப்பட்ட மனிதரை விட்டு ஓடி அவள் என்னவொரு முட்டாள்தனம் செய்து விட்டாள்!

அவளை சமாதானப்படுத்த அருண் முயன்ற போது அவனிடம் வசந்தி மெல்ல முணுமுணுத்தாள். “வேண்டாம் அழட்டும் விட்டு விடு. அவள் இந்த இருபது வருஷமாய் ஒரு தடவை கூட அழவோ, சிரிக்கவோ இல்லை. அழுது குறைய வேண்டிய துக்கம் இது. இது அழுதே குறையட்டும்

வசந்தி சொன்னதை யோசித்துக் கொண்டே அருண் அழும் தாயை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். வசந்தி மானசீகமாக நடேசனுக்கு நன்றி சொன்னாள். மலையாய் நினைத்து பயந்த விஷயத்தை அவர் நல்ல மனதால் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார். அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். 

ஆனால் சிறிது அழுது ஓய்ந்த நிர்மலா மகனைப் பார்த்து உடைந்த குரலில் சொன்னாள். “அவர் சொன்னதெல்லாம் பொய்....

வசந்தியின் நிம்மதி காணாமல் போனது. எல்லாம் நல்லபடியாக வருகிற வேளையில் இவள் ஏன் இப்படி சொல்கிறாள். கண் ஜாடையால் தோழியை பேசுவதை நிறுத்தச் சொன்னாள். ஆனால் நிர்மலா தன் தோழியின் கண்ஜாடையை லட்சியம் செய்யவில்லை.

“... அவர் என்னை சந்தேகப்படலை. என்னை சித்திரவதை செய்யலை... ஏன் என்னிடம் ஒரு தடவை முகம் சுளித்தது கூட இல்லை. அந்த தங்கமான மனுஷனைப் பற்றி நீ தப்பாய் நினைச்சுடக் கூடாது. நான் நல்லவள் இல்லை...எல்லாத் தப்பும் என் மேல் தான்.... என்று ஆரம்பித்தவள் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள். ஒரு நீதிபதி முன்பு குற்றவாளி தன் முழுக் குற்றத்தையும் ஒத்துக் கொள்வது போல ஒத்துக் கொண்டாள். எல்லாம் சொல்லி விட்டு நீ என்னை எப்படி தண்டித்தாலும் நான் ஏற்றுக் கொள்ளத் தயார் என்பது போல அவனைக் கண்ணீர் மல்கப் பார்த்தபடி நின்றாள்.

வசந்தி பரிதாபமாக அருணைப் பார்த்தாள். நிர்மலா சொன்ன எல்லாவற்றையும் கேட்டு விட்டு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அவளையே ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அருண். பின் மெள்ள சொன்னான். “அவர் சொன்னது பொய்ன்னு எனக்கும் தெரியும்....

வசந்தி திகைப்புடன் அவளைப் பார்த்தாள். அவன் தாயைப் பார்த்து தொடர்ந்து சொன்னான். “எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கு அவர் என்ன செய்வார், என்ன செய்ய மாட்டார்னு தெரியாதாம்மா. பெரியவனான பிறகு சில உறவுக்காரங்க மூலமாகவும் எனக்கு உண்மை தெரிஞ்சு போச்சு. ஆனா அப்பா கிட்ட நான் உண்மை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலை. எனக்கு அம்மாவா, அப்பாவா, எல்லாமுமா இருந்த அந்த மனுஷர் என் கிட்ட இது வரைக்கும் வேறு எதையும் கேட்டதில்லை. சாகறதுக்கு முன்னால் அவர் கடைசியா கேட்டுகிட்டது உங்க கிட்ட பழையது எதுவும் கேட்காமல் உங்களை ஏத்துகிட்டு கடைசி வரை நல்லபடியா பார்த்துக்கணும்கிறதை மட்டும் தான். அதனால அதை அப்படியே செய்ய நான் தயாராய் இருந்தேன்னாலும் மனசால் எனக்கு உங்களை மன்னிக்க முடிந்ததில்லை....

நிர்மலா தலை குனிந்தபடி புரிகிறது என்பது போல தலையாட்டினாள். அருண் எழுந்து அவள் அருகில் வந்து தொடர்ந்து சொன்னான். “...நான் நீங்க எவன் கூடவோ வாழ்க்கை நடத்தி வேற குழந்தை குட்டிகளோட இருப்பீங்கன்னு மனசுல நினைச்சுகிட்டு இருந்தேன்மா. ஆனா அப்பாவுக்கு மட்டும் உள்மனசுல நீங்க அப்படி இருக்க மாட்டீங்கன்னு தோணியிருக்கு. அதனால அவருக்கு உங்கள் மேல் கடைசி வரை அன்பு இருந்ததும்மா. நீங்க ஒரு நாள் வருவீங்கன்னும் எதிர்பார்த்தார். நான் அவர் சொல்லியிருந்த பொய்யைச் சொன்னவுடனே அப்படியே நான் நினைச்சுகிட்டு இருக்கட்டும்னு இருக்காமல் நீங்க மறுத்து சத்தியத்தை இவ்வளவு தைரியமா சொன்னதையும், நீங்க அழுத விதத்தையும், இப்ப இருக்கிற கோலத்தையும் பார்க்கிறப்ப உங்க மேல எனக்கு ஒரு மதிப்பு தோணுதும்மா. அப்பா கடைசி வரை உங்கள் மேல் வச்சிருந்த அந்த அன்பு முட்டாள்தனம் இல்லைன்னு தோணுதும்மா

நிர்மலா மகனைத் திகைப்புடன் பார்த்தாள். தாயைத் தோளோடு அணைத்துக் கொண்டு அருண் கண்கலங்க சொன்னான். “இப்ப எனக்கு உங்க மேல கொஞ்சமும் கோபம் இல்லைம்மா. நீங்க அப்போ செஞ்சது தப்பா இருந்தாலும் நீங்க அதுக்கு அனுபவிச்ச தண்டனை ரொம்பவே அதிகம்மா. உங்க கிட்ட நீங்க இவ்வளவு கடுமை காட்டியிருக்க வேண்டி இருக்கலைம்மா. அப்பா இருக்கறப்பவே நீங்க வந்திருக்கலாம்மா. அவர் நிஜமாவே ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.

மகன் தோளில் சாய்ந்து அந்த தாய் மீண்டும் மனமுருக அழ ஆரம்பித்தாள். பார்த்துக் கொண்டிருந்த வசந்தி கண்களில் ஆனந்தக் கண்ணீர் கோர்த்தது.

- என்.கணேசன்

நன்றி: தினமலர்-வாரமலர்
(டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது)


Friday, October 14, 2011

பாவம் செய்யத் தூண்டுவது எது?



கீதை காட்டும் பாதை 13
பாவம் செய்யத் தூண்டுவது எது?

நன்மை எது தீமை எது என்பதை சாதாரண அறிவுள்ள மனிதன் கூட அறிவான். நல்ல செயல்களால் நன்மையும் தீய செயல்களால் தீமையும் விளையும் என்பதையும் அவன் அறிவு அவனுக்கு உணர்த்துகிறது. ஆனால் செயல் என்று வரும் போது தினசரி வாழ்க்கையில் தீய செயல்களில் சர்வ சாதாரணமாக அவன் ஏன் ஈடுபடுகிறான்? அவன் அறிவையும் மீறி அவனைத் தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுவது எது என்ற யதார்த்த கேள்வி அர்ஜுனன் மனதில் எழுகிறது.

அர்ஜுனன் கேட்கிறான். “வார்ஷ்ணேயா (விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ்ணா), மனிதன் தானாக விரும்பாவிட்டாலும் பலாத்காரமாக ஏவப்பட்டவன் போல பாவம் செய்கிறானே! அவனை அப்படி பாவம் செய்யத் தூண்டுவது எது?

இந்தக் கேள்வி நம் மனதிலும் எழாமல் இருக்க முடியாது. கர்ம யோகத்தின் மிக உயர்ந்த கருத்துகளைப் படிக்கும் போது இவையெல்லாம் உண்மை என்ற உணர்வு நம்முள் ஏற்பட்டாலும் அர்ஜுனனைப் போல நம் மனதிலும் குழப்பத்துடன் அந்தக் கேள்வி எழுகிறது. “படிக்க எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. உண்மை என்றும் தோன்றுகிறது. ஆனால் நடைமுறை என்று வருகையில் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லையே. அதற்கு எதிர்மாறாக அல்லவா நாம் பெரும்பாலும் நடந்து கொள்கிறோம். அது எதனால்?

ஸ்ரீகிருஷ்ணர் இதற்குப் பதிலளிக்கிறார்.

 “அது தான் காமமும் கோபமும். அது ரஜோ குணத்திலிருந்து உண்டாவது. அது எல்லோரையும் பாவம் செய்யத் தூண்டுவது. மனிதனின் பரம விரோதி அது தான் என்பதை அறிந்து கொள்.

புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆசை என்னும் காலாக்னியானது ஞானியின் அறிவை சூழ்ந்து கொண்டு அன்றாட விரோதியாக உள்ளது.

புலன்கள், மனம், அறிவு ஆகியவையே காமத்தின் இருப்பிடம். அது ஞானத்தை மறைத்து மனிதனை ஆட்டிப்படைத்து மயக்கத்தில் ஆழ்த்துகின்றது.

காமம் என்ற சொல்லைத் தமிழில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட உணர்விற்கு நாம் பயன்படுத்தினாலும் இங்கு அந்த சொல் ஆசை என்ற விரிவான அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆரம்பம் ஆசையில் இருந்து தான் ஆரம்பமாகிறது. சாங்கிய யோகத்தில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படி சென்று முடிகிறது என்று ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியதைப் பார்த்தோம்.

சரி என்று தோன்றுவதை நடைமுறைப்படுத்த முடியாமல் தவறை நோக்கிச் செல்லும் நம் வாழ்க்கை முறைக்கு ஆசையும் அதன் மூலமாக வரும் கோபமும் தான் காரணம் என்றும், அதனால் அதுவே நம் உண்மையான விரோதி எனவும் ஸ்ரீகிருஷ்ணர் மறுபடியும் கூறுகிறார்.

உண்மையான ஞானம் நம்முள் ஒளிர்கிற போது மிகத் தெளிவாக இருக்கிறோம், எந்தப் பிரச்னையும் இல்லை. ஞானம் மறைந்திருக்கும் போது  தான் ஆசை தலையெடுக்கிறது. ஆசை வந்து விட்டாலோ அதனுடன் அத்தனை பிரச்னைகளும் கூடவே வந்து விடுகின்றன. ஞானத்தை மனிதனின் ஆசாபாசங்கள் மறைத்து விடுகின்றன.

இங்கு புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறதுஎன்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் உதாரணம் ஆழ்ந்த பொருள் கொண்டது. இந்த உதாரணங்கள் முறையே மனிதர்களின் சத்வ, ரஜோ, தாமச குணாதிசயங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்டிருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால் சத்வ குணம் நற்குணங்கள், அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ரஜோ குணம் சுறுசுறுப்பானது என்றாலும் அது ஆசை, பரபரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமோ குணம் அறியாமை, சோம்பல், ஜடத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மூன்று குணங்களுமே ஞானத்தை மறைக்கும் தன்மை உடையவை. இம்மூன்று குணங்களையும் கடந்தால் மட்டுமே ஞானம் சாத்தியம். இந்தக் குணங்கள் இருக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் அவை ஞானத்தை மறைத்துக் கொண்டே இருக்கும்.

புகையினால் நெருப்பு மூடப்பட்டிருப்பது சத்வகுணம் உள்ளவர்களுக்கான உதாரணம். புகை மறைத்தாலும் இடையிடையே தீயின் ஜுவாலைகளும் தெரியாமல் இருப்பதில்லை. இந்த மறைத்தல் அரைகுறையானது. இடையிடயே ஞானமும் ஒளிரும். அதே நேரத்தில் புகையும் மறைக்கும். சத்வ குண ஆசைகள் உயர்ந்தவையாக இருந்தாலும் அவையும் ஞானத்திற்கு அவ்வப்போது ஒரு திரையே.

அழுக்கினால் கண்ணாடி மூடப்பட்டிருப்பது ரஜோ குணத்தவர்களுக்கான உதாரணம். அழுக்கு அதிகமாக கண்ணாடியில் மண்டிக் கிடக்குமானால் உருவம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அது மிக மங்கலாகவும், தெளிவில்லாமலும் இருக்கும். இங்கு ஞானம் சத்வ குணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மறைக்கப்படுகிறது.

கருப்பையினால் கரு மூடப்பட்டிருப்பது தாமச குணத்திற்கான உதாரணம். இங்கு ஞானத்தைக் காண வாய்ப்பே இல்லை. வளர்ச்சி அடையும் வரை ஞானம் மறைந்த நிலையிலேயே இருக்கும்.

காற்று வீசி புகையை விலக்கினாலும், இயல்பாகவே புகை குறைந்தாலும் தீயைப் பார்க்க முடிவது போல சத்வ குணத்தவருக்கு ஞான தரிசனம் எளிதில் கிடைக்கலாம். அழுக்கைத் துடைத்து நீக்கினால் மட்டுமே கண்ணாடியில் தெளிவாகக் காண முடிவது போல முயற்சி எடுத்தால் மட்டுமே ரஜோ குணத்தவருக்கு ஞானத்தைக் காண முடியும். வளர்ச்சி பெற்று கருப்பையிலிருந்து வெளிவரக் காலம் எடுத்துக் கொள்வது போல் தாமச குணத்தவருக்கு மேலும் அதிக காலம் தேவைப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி அடைந்து பக்குவம் பெற்றுத் தயாரான பின்னரே அவர்கள் ஞானமடைய முடியும். 

தீயின் இயல்பு சுடுவது. எல்லாவற்றையும் அறிந்தவனே ஆனாலும் அவன் ஆசை என்னும் தீயினால் சூழப்பட்டால் துன்பம் என்ற சூடுபட்டே ஆக வேண்டும். எனவே அன்றாடம் அவனை சூழக்கூடிய ஆசை என்னும் தீயை விரோதியாக எண்ணி அதனிடம் ஞானி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆசை ஆரம்பத்தில் சேருமிடம் புலன்கள். புலன்களைக் கட்டுப்படுத்தி வைத்திரா விட்டால் அங்கு ஆசைகள் அடைக்கலம் சேரும். புலன்வழிச் செய்திகளில் மனம் மயங்கி நிற்கும் போது ஆசைகள் மனத்தையும் ஆட்கொள்கின்றன. புலனின்பத்தில் ஈடுபட்டு அதன் நினைவுகள் குறித்த சிந்தனைகள் அறிவிலும் அதிகமாகப் பதியுமானால் ஆசைகள் அறிவையும் ஆட்கொள்கின்றன. இப்படி புலனிலிருந்து அறிவு வரை ஆதிக்கம் செய்ய முடியும் போது ஆசைகள் நம் அறிவை மறைத்து விடுகின்றன.  

சரி, இந்த ஆசையின் ஆதிக்கத்திலிருந்து எப்படித் தான் மீள்வது? அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் வழி சொல்கிறார்.

நீ புலன்களைக் கட்டுப்படுத்து. பின்னர் ஞானத்தையும், பகுத்தறிவையும் அழிக்கும் இந்தக் காமம் என்ற பாவியை நீ ஒழித்து விடு.

புலன்கள் நுட்பமானவை தான். ஆனால் அவற்றை விட மனம் நுட்பமானது. மனத்தைக் காட்டிலும் அறிவு மிகவும் நுட்பமானது. அறிவைக் காட்டிலும் ஆன்மா மிக நுட்பமானது.

தோள்வலி மிக்கவனே! அறிவைக் காட்டிலும் மிக நுட்பமான ஆத்மாவை அறிந்து, மனதை ஆத்மசக்தியால் அடக்கி, காமம் என்னும் கொடிய விரோதியை அழித்திடுவாயாக!

ஆசையின் ஆரம்ப நுழைவிடமான புலன்களைக் கட்டுப்படுத்தி கவனமாக இருந்தால் அதுவே ஆசையை ஒழிக்க மிக சுலபமான வழி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

புலன்கள், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் மனிதனிடம் உள்ளன. புலன்களை விட அதிகமாக மனமும், மனதை விட அதிகமாக அறிவும், அறிவை விட அதிகமாக ஆன்மாவும் சக்தியிலும், நுட்பத்திலும் உயர்ந்தவை.

ஐன்ஸ்டீன் மிக அருமையாகக் கூறுவார். “ஒரு பிரச்னையை உருவாக்கிய நிலையில் இருந்து கொண்டே அதனைத் தீர்த்து விட முடியாது”. அது முற்றிலும் உண்மை. அதிலேயே உழன்று கொண்டிருக்கையில் தீர்வும் தெரியாது, தீர்க்கும் சக்தியும் இருக்காது. அதைத் தீர்க்க வேண்டுமானால் அதை விட மேம்பட்ட, அதிக நுட்பமான உணர்வு நிலைக்குச் சென்றால் மட்டுமே தீர்வுக்கு வழி சுலபமாகத் தெரியும், தீர்த்து வைக்கும் சக்தியும் கிடைக்கும்.

எனவே ஆசை புலன்கள், மனம், அறிவு என்ற மூன்றையும் ஆட்கொண்டு நமக்கு விரோதியைப் போல சதா துன்பத்தில் ஆழ்த்தி வருவதால் அந்த விரோதியை அந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஆத்ம ஞானத்தால் மூன்றையும் அடக்கி ஆசையை அழித்து விடச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இத்துடன் கர்மயோகம் நிறைவுறுகிறது. இனி ஞான யோகம் ஆரம்பிக்கிறது.


பாதை நீளும்.....

-          என்.கணேசன்
-          நன்றி: விகடன்

Monday, October 10, 2011

கடவுள் காப்பாற்றுவாரா?


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 10
கடவுள் காப்பாற்றுவாரா?

ஒரு கிராமத்திற்கு வெள்ளம் வரலாம் என்று முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி பக்கத்து நகரத்தில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிராம மக்கள் ஒரே ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர். வெளியேறாமல் இருந்தவன் கடவுளின் பக்தன். அவனுக்குக் கடவுள் மீது அபார நம்பிக்கை. கடவுள் கண்டிப்பாக என்னைக் காப்பாற்றுவார்என்று முழு மனதுடன் நம்பினான்.


வெள்ள நீர் கிராமத்திற்குள் வர ஆரம்பித்தவுடன் ஒரு ஜீப் அவனை அழைத்துப் போக வந்தது. “கடவுள் என்னைக் காப்பாற்றுவார்என்று கூறி அவன் ஜீப்பில் போக மறுத்து விட்டான். வெள்ளம் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்குத் தன் குடிசையினுள்ளே இருக்க முடியவில்லை. கூரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். அடுத்ததாக அவனை அழைத்துக் கொண்டு போக படகொன்று வந்தது. கடவுள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்த அவன் அப்போதும் அந்த படகில் போக மறுத்து விட்டான். வெள்ள நீர் அதிகரித்து கூரையும் மூழ்கியது. அவன் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டான்.

மேலுலகம் போன போது அவனுக்குக் கடவுள் மீது தீராத கோபம். அவன் கடவுளைக் கேட்டான். “உங்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேனே கடவுளே, இப்படி என்னைக் கை விட்டு விட்டீர்களே இது நியாயமா?

கடவுள் கேட்டார். “வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததும், ஜீப் வந்ததும், படகு வந்ததும் யாரால் என்று நீ நினைக்கிறாய்?

இந்த உதாரணக் கதையில் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன கிராமவாசி கடவுள் புஷ்பகவிமானத்தை இறக்கி அதில் அவனை அழைத்துப் போவார் என்று நினைத்தானோ என்னவோ? இது கற்பனைக்கதை என்றாலும் நிஜத்தில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இதை விட வேடிக்கையான முட்டாள்தன மனோபாவம் பலரிடம் இருக்கிறது.

கடவுள் மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். அவன் கற்றுக் கொள்ள எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுத்திருக்கிறார். அவன் கண்முன்னால் எத்தனையோ உதாரணங்கள் கொடுத்திருக்கின்றார். உழைக்கின்ற சக்தியைக் கொடுத்திருக்கிறார். எதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினாலும் அதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் ஏற்படுத்திக் கொள்ளார். மனிதன் அத்தனையையும் முதலில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தி மனிதன் தன் அறிவுக்கும், சக்திக்கும் ஏற்ப அனைத்தையும் செய்து விட்டு பிறகு அதையும் மீறி வரும் பிரச்னைகளில் இருந்து அவனைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது தான் சரி.

எனவே கடவுள் நம்பிக்கை என்பது கடவுள் கொடுத்த அறிவை மழுங்கடித்துக் கொள்வதல்ல.  முயற்சியே எடுக்காமல் முடங்கிக் கிடப்பதல்ல. சோம்பித் திரிய கிடைக்கும் அனுமதியும் இல்லை. பொறுப்பற்று அலட்சியமாக இருந்தாலும் நல்லதே நடக்கும் என்பதற்கு உத்திரவாதமுல்ல. ஆனால் பலரும் கடவுளை வணங்கினால் அது ஒன்று போதும், எல்லாம் தானாக நடந்து விடும், என்று நினைத்து விடுவது தான் வேடிக்கை.

குழந்தை பிறக்கின்ற போது தாயின் மார்பகங்களில் பாலைத் தயாராக வைத்திருக்கும் கருணையுள்ள கடவுள் நம் உண்மையான தேவைகளுக்கு வேண்டியதைக் கண்டிப்பாக மறுக்கப் போவதில்லை. ஆனால் கடவுள் நம் அடியாள் போல இருந்து நம் குறிப்பறிந்து அனைத்தையும் செய்து வந்து நம்மைக் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், அதற்குக் கூலியாக நாம் சும்மா அவரைக் கும்பிட்டுக் கொண்டு இருப்போம் என்ற அபிப்பிராயத்தில் யாரும் வாழ்ந்து விடக் கூடாது.

முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் பிரார்த்தனை இருக்க வேண்டுமே ஒழிய முயற்சிக்குப் பதிலாக பிரார்த்தனையில் ஈடுபடுவது முட்டாள்தனமான செய்கையாகும். கடவுள் அளித்த எத்தனையோ வரப்பிரசாதங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், கடவுளிடம் மீண்டும் மீண்டும் பிரார்த்திப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலே தவிர வேறில்லை.

“கடவுள் நிச்சயம் கரை சேர்ப்பார். ஆனால் வழியில் புயலே வராது என்ற உத்திரவாதம் தர மாட்டார்என்று ஒரு பொருள் பொதிந்த பழமொழி உண்டு.
பல நேரங்களில் பிரச்னைகளும், சிக்கல்களும் நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக இருக்கின்றன. அதை சமாளித்து முடிக்கையில் நாம் அறிவிலும், சக்தியிலும் நாம் மேம்படுகிறோம். வாழ்க்கை என்ன என்பதை அப்போது தான் உண்மையில் பலரும் உணரவே ஆரம்பிக்கிறோம். அதனால் அந்தப் பாடங்களே வேண்டாம் என்று மறுப்பது நம் முன்னேற்றத்தையே மறுப்பது போலத் தான்.  

எனவே அறிய வேண்டியதை அறியவோ, செய்ய வேண்டியதைச் செய்யவோ சோம்பி இருக்காமல் அறிந்து, அறிவார்ந்த முயற்சிகள் எடுத்து உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். ஆனால் எல்லாமே நம் அறிவுக்கும் முயற்சிக்கும் உட்பட்டு நடந்து விடுவதில்லை என்பதும் உண்மையே. அப்படிப் பட்ட நிலையில் செய்ய வேண்டியதைச் செய்து விட்டு, நம்மை மீறிய விஷயங்களுக்கு கடவுளைப் பிரார்த்தியுங்கள். கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.

மேலும் படிப்போம்.

-          என்.கணேசன்
-          நன்றி: வல்லமை


Wednesday, October 5, 2011

பிழைக்கத் தெரியாதவர்...?


ஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த நீலச்சட்டைக்காரரைப் பார்த்த போது சத்யமூர்த்தி போலத் தெரிந்தது. கார் அந்த பஸ் ஸ்டாப்பைக் கடந்து சில அடிகள் முன்னோக்கிச் சென்று விட்டிருந்தாலும் காரை நிறுத்தி ஜெயக்குமார் அந்த மனிதரை உற்றுப் பார்த்தார். சத்யமூர்த்தி தான். மனிதர் வேலையில் இருந்த போது எப்படி இருந்தாரோ பார்க்க அப்படியே தான் இப்போதும் தெரிந்தார். எந்தப் பெரிய முன்னேற்றமும் தெரியவில்லை. ஜெயக்குமார் ஏளனமாக நினைத்துக் கொண்டார். “இப்போது பஸ் பயணம் தானா? இது வரை ஓட்டிக் கொண்டிருந்த பழைய ஸ்கூட்டர் காயலாங்கடைக்குப் போய் விட்டது போல் இருக்கு



அவரும் சத்யமூர்த்தியும் ஒரே அரசுத் துறையில் இன்ஜினியர்களாக பல வருடங்கள் சேர்ந்து வேலை பார்த்தவர்கள், சம வயதினர்கள், ஒரு மாத இடைவெளியில் ஒரே ஆபிசிலிருந்து ரிடையர் ஆனவர்கள்.  அதனால் தானோ என்னவோ தன்னை அடிக்கடி சத்யமூர்த்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் ஜெயக்குமாருக்கு ஏற்பட்டிருந்தது.



இருவரும் பணம் கொழிக்கும் அரசுத்துறையில் அதிகாரிகளாக இருந்தாலும் சத்யமூர்த்தி பிழைக்கத் தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்து விட்டார். அந்தத் துறையில் சம்பளத்தைத் தவிர ஒரு பைசா அதிகமாக சம்பாதிக்காதவர் அனேகமாக அவர் ஒருவர் தான். அந்தத் துறையில் கையை நீட்டவே வேண்டியிருக்கவில்லை. வேலையாக வேண்டியிருந்தவர்கள் தாங்களாகவே பணமாகவும், பொருளாகவும் கொண்டு வந்து கொட்டினார்கள். அந்தத் துறையில் அனைவரும் சம்பாதித்ததில் அளவில்லை என்றாலும் ஜெயக்குமார் தன் தனி சாமர்த்தியத்தால் மற்றவர்களை விட இரட்டிப்பாக சம்பாதித்து விட்டிருந்தார். ஆனால் திறமையாகவும் கச்சிதமாகமாகவும் வேலை செய்தாலும் சத்யமூர்த்தி மட்டும் கடைசி வரை அப்படி வரும் பணத்தையும், பொருளையும் உறுதியாக மறுக்கிறவராகவே இருந்து விட்டார்.



அந்த நேர்மை ஜெயக்குமாருக்கு முட்டாள்தனமாகவே பட்டது. மற்றவர்களும் சத்யமூர்த்தியைப் பிழைக்கத் தெரியாத மனிதர் என்றே அழைத்தார்கள். ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் சத்யமூர்த்தி மீது மிகுந்த மரியாதை இருந்தது. மேல் அதிகாரிகள் கூட அவரிடம் ஒரு தனி மரியாதையோடு நடந்து கொண்டனர். அதைக் கவனிக்கும் போதெல்லாம் பணம் வேண்டுமளவு கிடைத்த போதிலும் அந்தத் தனி மரியாதை தனக்குக் கிடைக்கவில்லையே என்ற பொறாமையில் ஜெயக்குமார் வெந்தார். சத்யமூர்த்தி வாய் விட்டு சொல்லா விட்டாலும் எல்லோரிடமிருந்தும் வித்தியாசப்படுவதாலேயே தன்னை உயர்த்திக் கொள்வது போல் அவருக்குத் தோன்றியது. சத்யமூர்த்தியின் முகத்தில் எப்போதும் தெரியும் ஒரு பெருமிதம் கலந்த நிறைவு ஜெயக்குமாருக்கு சகிக்க முடியாததாக இருந்தது.

சத்யமூர்த்தியின் கடைசி வேலை நாள் மாலை நடந்த பிரிவுபசார விருந்தில் அவர்கள் துறை அமைச்சர் நேரில் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததும் அல்லாமல் அவரை வழியனுப்பி விட்டு மற்றவர்களிடம் சொன்னார். “தங்கமான மனுசன். இந்த மாதிரி ஆளைப் பார்க்கறது கஷ்டம்”. அதை ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்கள் கூட ஒப்புக் கொண்டார்கள்.

ஒரு மனிதனின் பின்னால் கிடைக்கும் பாராட்டு தான் உண்மையான பாராட்டு என்பதை உணர்ந்திருந்த ஜெயக்குமார் அன்று உள்ளூரப் பொருமினார். “என்ன தங்கமான மனுசன்? பிழைக்கத் தெரியாத ஆள் இவன். இத்தனை வருஷம் இங்கே வேலை பார்த்தும் ஒரு கார் கூட வாங்க வக்கில்லாத முட்டாள் இவன். ஒரு ஓட்டை ஸ்கூட்டர்லயே இப்பவும் போறான். என்னவோ இவன் மட்டும் தான் ஒழுங்கு என்கிற மாதிரி நடந்துக்கற ஆளுக்கு ஆமாம்கிற மாதிரி இந்த லூசுங்களும் புகழ் பாடறாங்க.

சத்யமூர்த்திக்கு அடுத்த மாதம் ரிடையரான ஜெயக்குமார் அந்த அமைச்சரை நேரில் போய் பிரிவுபசார விருந்திற்குக் கூப்பிட்டார். வெளியூரில் கட்சிக் கூட்டம் ஒன்றில் முன்பே பேச ஒத்துக் கொண்டிருப்பதால் வர முடியாது என்று மந்திரி சொன்னது அவரைக் குறைத்தது போல் தோன்றியது. பிரிவுபசார விழா முடிந்து வெளியே வந்த போது தனக்குப் பின்னால் யார் என்ன சொல்வார்கள் என்ற கேள்வி எழ அவருக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை. அன்று அவருக்கு மனமே சரியிருக்கவில்லை.

ரிடையரான பின் சொந்தமாய் ஒரு பிசினஸ் ஆரம்பித்து வெற்றிகரமாக வாழ்ந்த அவருக்கு ஏனோ அப்போதும் சத்யமூர்த்தியை அலட்சியப்படுத்த முடியவில்லை. ஒவ்வொன்றிலும் அவ்வப்போது தன்னையும் சத்யமூர்த்தியையும் ஒப்பிட்டுக் கொள்ளாமல் அவருக்கு இருக்க முடியவில்லை. ஒப்பிடும் போதெல்லாம் தான் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை கணக்கிடுகையில் தானே வெற்றியாளன் என்றும், சத்யமூர்த்தி முட்டாள் என்றும் ஜெயக்குமாருக்குத் தோன்றும். ஆனால் சத்யமூர்த்தியோ கடைசி வரை அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. அதை எப்படியாவது அவருக்கு உணர்த்தி, அவர் முகத்தில் தெரியும் பெருமிதம் கலந்த நிறைவை விலக்கி விட வேண்டும் என்று பல முறை ஜெயக்குமாருக்குத் தோன்றி இருக்கிறது.

இன்று பஸ் ஸ்டாப்பில் கூட்டத்தோடு கூட்டமாக பஸ்ஸிற்காக காத்து நிற்கும் சத்யமூர்த்தியைப் பார்க்கும் போது அந்த எண்ணம் வலுப்பட அவர் தன் விலையுயர்ந்த காரைப் பின்னோக்கி செலுத்தி அழைத்தார். சத்யமூர்த்தி

சத்யமூர்த்தி அவரைப் பார்த்து சந்தோஷப்பட்டது போல் தெரிந்தது. காரை நெருங்கியவர் கேட்டார். “ஜெயக்குமார், சௌக்கியமா?

“ஏதோ இருக்கேன். நீங்க எங்கே போக இங்கே நிக்கறீங்க?

“வீட்டுக்குப் போகத்தான். 91 ஆம் நம்பர் பஸ்ஸுக்காக நிற்கறேன். நீங்க?

“நானும் என் வீட்டுக்குத் தான் போய்கிட்டிருக்கேன். நீங்களும் வாங்களேன். பார்த்து பேசி பல காலம் ஆயிடுச்சு.....

“இல்லை.... 91 இப்ப வந்துடுவான்

பக்கத்தில் தான் என் புதிய வீடிருக்கு. வந்து ஒரு அரைமணி நேரம் இருந்துட்டு போங்க.  பிறகு நானே உங்களை வீட்டில் ட்ராப் செய்து விடறேன்

சத்யமூர்த்தி தயங்கினார். ஜெயக்குமார் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்து காரில் அவரை ஏற்றினார். வெளியே கடுமையான வெயில் இருந்ததால் அந்தக் காரில் ஏறி அமர்ந்த சத்யமூர்த்தி காரினுள் இருந்த ஏ.சி காற்றை நிஜமாகவே ரசித்த மாதிரி இருந்தது.

ஜெயக்குமார் மனதினுள் சொல்லிக் கொண்டார். “இப்பவாவது நீ இழந்தது  என்னவெல்லாம் என்று உணர்ந்து கொள் முட்டாளே. என் வீட்டுக்கு வந்து பார்த்தால் இன்னும் எத்தனையோ புரியும்

போகும் வழியில் தங்களுடன் வேலை பார்த்தவர்களைப் பற்றி ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டார்கள். பெரிய பங்களா போல் இருந்த தன் வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கிய போது சத்யமூர்த்தி முகபாவத்தை ஜெயக்குமார் உற்றுப் பார்த்தார். சொந்தமாய் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் மட்டுமே வைத்திருக்கும் சத்யமூர்த்தி முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

ஜெயக்குமார் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் அவர் மனைவி இருக்கவில்லை.  அவளும் என் மூத்த மகனும் ஒரு கல்யாணத்திற்கு பெங்களூர் போயிருக்காங்க. காலைல ஃப்ளைட்ல தான் போனாங்க சின்னவன் இப்ப யூ எஸ்ல எம்பிஏ செய்துகிட்டிருக்கான் என்று தெரிவித்தார். சத்யமூர்த்தி அப்படியா என்பது போல கேட்டுக் கொண்டார்.

“என்ன சாப்பிடறீங்க? காபி, டீ, ஜூஸ்?

“ஜூஸே கொடுங்க

ஒரு பெரிய கண்ணாடி தம்ளரில் ஜூஸும், பெரிய வெள்ளித் தட்டில் முந்திரி பாதாம்களையும் கொண்டு வந்து தந்து விட்டு ஜெயக்குமார் ஏ.சியை ஆன் செய்தார். இப்பவெல்லாம் ஏ.சி இல்லாமல் இருக்கவே முடியறதில்லை

“அதிலேயே இருந்து பழகினதால் தான் அப்படிஎன்று சத்யமூர்த்தி ஜூஸ் குடித்தபடியே பொதுவாகச் சொன்னார். பிறகு இரண்டு முந்திரிகளையும், இரண்டு பாதாம்களையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டவர் வெள்ளித் தட்டை சற்று தள்ளி வைத்தார்.

போன வருஷம் தான் பத்து லட்சம் செலவு செய்து கொஞ்சம் ரெனவேட் செய்தேன். வாங்க வீட்டை சுத்திப் பார்க்கலாம் என்று சொல்லிய ஜெயக்குமார் சத்யமூர்த்திக்குத் தன் பங்களாவை சுற்றிக் காண்பித்தார்.

சினிமாவில் காண்பிக்கப்படுவது போல இருந்தது அவர் பங்களா. ஒவ்வொரு அழகான வேலைப்பாடும் பணம் பணம் என்றது. ஒவ்வொன்றையும் சத்யமூர்த்தி ரசித்தாலும் அவர் முகத்தில் பொறாமை தெரியாததும், இப்போதும் தான் இழந்ததெல்லாம் என்ன என்று உணராததும்  ஜெயக்குமாருக்கு என்னவோ போலிருந்தது. ஏதோ ஒரு பொதுக்கட்டிட அழகை ரசிக்கும் பயணியினுடையதைப் போல இருந்தது அவர் ரசனை. அதனால் நன்றாக இருக்கிறது, அழகாக இருக்கிறதுஎன்று மனமார அவர் சொன்னதில் ஜெயக்குமாருக்குப் பெருமைப்பட முடியவில்லை.

பிறகு ஜெயக்குமார் சத்யமூர்த்தியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். “இப்ப உங்க மகன் என்ன செய்யறான்?

“அவன் சி ஏ முடிச்சுட்டான். தனியா ஆடிட்டிங் ப்ராக்டிஸ் செய்யறான்.

“நீங்க என்ன செய்யறீங்க? எங்கேயாவது வேலைக்குப் போறீங்களா?

“பையன் வேண்டாம்கிறான். இத்தனை நாள் எங்களுக்காக உழைச்சது போதும், இனி சும்மா இருங்கன்னு சொல்றான்....

ஜெயக்குமாருக்கு சுருக்கென்றது. அந்த வார்த்தை அவர் குடும்பத்தினரிடமிருந்து இது வரை வந்ததில்லை.

”....ஆனா எனக்கு சும்மா இருக்க முடியலை. இது நாள் வரைக்கும் குடும்பத்தைத் தவிர வேற யாருக்கும் எதுவும் செய்யாமல் இருந்துட்டேன். இனியாவது நாலு பேருக்காவது உபகாரமாய் இருக்கணும், ஏதாவது செய்யணும்னு இப்ப ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமா டியூசன் எடுக்கறேன்....

சத்யமூர்த்தி உற்சாகமாக அந்த ஏழை மாணவ மாணவிகளின் முன்னேற்றத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போனார்.  அவர் சொல்லிக் கொடுத்த ஒரு ஏழை மாணவன் சென்ற வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் மூன்றாவதாய் வந்ததைச் சொல்கிற போது அவர் குரலில் தெரிந்த பெருமிதம் ஒரு தந்தையினுடையதாக இருந்தது.

ஒரு சிறு இடைவெளி கிடைத்த போது ஜெயக்குமார் கேட்டார். “உங்க ஸ்கூட்டர் என்னாச்சு

“அது ஆறு மாசம் முன்னாடி ரிப்பேர் ஆயிடுச்சு. மெக்கானிக் கிட்ட போனா அவன் இதை சரி செய்ய இதுல எதுவுமே உருப்படியாய் இல்லைன்னு சொல்றான். இவ்வளவு வருஷமா இதை உபயோகிக்கறீங்கன்னு அந்த ஸ்கூட்டர் கம்பெனிக்கு தெரிவிச்சா அவங்க உங்களைக் கூப்பிட்டு கவுரவிச்சாலும் கவுரவிக்கலாம்னு சொல்றான்.என்று சொல்லி விட்டு சத்யமூர்த்தி கலகலவென்று சிரித்தார். 

அதை மறைக்காமல் சிரித்துக் கொண்டே சொன்னது ஜெயக்குமாருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ”ஏன் நீங்க ஒரு கார் வாங்கலாமே

என் மகன் எனக்கு ஒரு கார் வாங்கித் தரணும்னு ரொம்ப நாளா சொல்லிகிட்டே இருந்தான். நான் அவன் கிட்டே சொன்னேன். ‘எனக்கு கார் வேண்டாம்டா. இந்த வயசுக்கு மேல நான் கார்ல எங்கே போகப் போகிறேன். ஸ்டேட் ரேங்க வாங்கின அந்த ஏழைப் பையனைப் படிக்க வைக்க அவன் அப்பாவுக்கு பணமில்லை. பாவம் கூலி வேலை செய்யறவர் அவர். எனக்கு கார் வாங்க செலவு செய்யற பணத்துல அந்தப் பையன் படிக்க உதவி செய். அது போதும்னேன்... இப்ப அந்தப் பையன் என் மகன் உதவியால படிக்கிறான். நல்லாவே படிக்கறான்....

சொல்லிக் கொண்டே போன சத்யமூர்த்தியின் முகத்தில் தெரிந்த நிறைவான மகிழ்ச்சியை ஜெயக்குமாரால் ரசிக்க முடியவில்லை. பேச்சை அதிகமாக வளர்த்தாமல் சீக்கிரமாகவே அவரை அவர் வீட்டில் கொண்டு போய் விட்டார். சத்யமூர்த்தி தன் வீட்டுக்குள்ளே வர அவரை அழைத்தார்.

“நேரமாயிடுச்சு. இன்னொரு நாள் வர்றேன்என்று அவசரமாக அங்கிருந்து ஜெயக்குமார் கிளம்பிய போது அவர் மனதில் ஒரு இனம் புரியாத வெறுமை நிறைந்திருந்தது. சத்யமூர்த்தியிடம் வலியப் போய் பேசாமல் இருந்திருக்கலாம் என்று தோன்ற ஆரம்பித்தது....

- என்.கணேசன்