சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 20, 2012

இயக்குவது இறைவனா, ஈகோவா?


கீதை காட்டும் பாதை 19
இயக்குவது இறைவனா, ஈகோவா?

கர்மம் இன்னொரு விதத்திலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பெற்ற ஞானம் உண்மையானது தானா என்று பரிட்சித்துப் பார்க்க உதவும் உரைகல்லாகவும் கர்மம் விளங்குகிறது. செயல் புரியும் போது போது தான் பெற்றிருப்பது ஞானமா இல்லை வெறும் பிரமையா என்று புரியும். ஆசிரமத்திற்கு சென்று தியானம் கற்றுக் கொண்டு அந்த அமைதியான சூழ்நிலையில் தங்கி இருக்கும் போது மனம் அமைதி அடையலாம். அதை வைத்து ஞானம் பெற்று விட்டதாக ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் வெளியுலகிற்கு வந்து செயல்படும் போது தான் வெளியுலக ஆரவாரத்திலும், நிர்ப்பந்தங்களிலும் கூட அந்த அமைதி தங்குகிறதா, இல்லை காணாமல் போகிறதா என்பது புரியும்.

இமயமலையில் இயற்கையின் பேரமைதியில் தியானம் கைகூடுவது பெரிய விஷயமல்ல. அந்த தியானம் ஒரு குழந்தையின் அழுகுரலில் கலைந்து மனதில் எரிச்சல் கிளம்பினால் தியான மார்க்கத்தில் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று அர்த்தம். சத்சங்கத்திலும், எதிர்ப்புகள் அற்ற சூழலிலும் மனம் அமைதியாக இருப்பது பெரிய விஷயமல்ல. கோபத்தோடு ஒருவன் வந்து திட்டினாலோ, சிறுமைப்படுத்தினாலோ மனம் கொதிக்க ஆரம்பித்தால் பெற்ற ஞானம் இன்னும் போதவில்லை என்று அர்த்தம். இது போல கர்மம் புரிகையில் தான், வெளியுலக வாழ்க்கையில் பங்கு கொள்ளும் போது தான், ஞானம் பரிட்சிக்கப்படுகிறது. அதில் குறைபாடு இருந்தால் அது சுட்டிக் காட்டப்படுகிறது. எனவே இந்த வகையிலும் ஞான மார்க்கத்திற்கு கர்மம் உதவுகின்றது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

கர்மயோகத்தைக் கடைபிடித்து ஆத்மசுத்தியை அடைந்து மனத்தையும், மற்ற புலன்களையும் வெற்றி கொண்டு அனைத்து உயிர்களிலும் உள்ள ஆத்மாவைத் தன் ஆத்மாக உணர்கிறவன் கர்மங்களைச் செய்தாலும் அவைகளில் ஒட்டுவதில்லை.

உண்மையை உணர்ந்த யோகி பார்த்தாலும், கேட்டாலும், தொட்டாலும்,  முகர்ந்தாலும், சாப்பிட்டாலும், நடந்தாலும், தூங்கினாலும், மூச்சு விட்டாலும் புலன்கள் தங்களுக்குரிய விஷயங்களில் இருக்கின்றன என்பதையும், செயல்புரிவது தானல்ல என்பதையும் அறிவான்.

கர்மயோகத்தினால் மனம் தூய்மையாகும். மனம் தூய்மையாகும் போது ஆத்ம ஞானம் சுலபமாகக் கைகூடும். புலன்கள் ராஜாங்கம் செய்யாமல் பார்த்துக் கொள்வது எளிதாகும். நான்என்ற ஈகோ அழிந்து போகும். அதன் பின் அனைத்து உயிர்களிலும் தன்னிடம் உள்ள ஆத்மாவையே ஒருவனால் காண முடியும். இது தான் ஞானம்.

இன்று “நான் கடவுள்என்று சொல்லிக் கொள்ளும் துறவிகள் அதிகமாகி விட்டார்கள். சிலர் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் கிட்டத்தட்ட கடவுள் போலவே காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் கடவுள் தன்மை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் அது தன்னிடம் மட்டும் உள்ள தனித்தன்மை என்று நினைப்பது அஞ்ஞானமே. “நான் கடவுள்என்று சொல்லிக் கொள்பவர்களில் 99% பேர் அந்த இரு சொற்களில் கடவுளைக் காட்டிலும் “நானிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அஞ்ஞானிகளே. தன்னிடம் உள்ள கடவுளை அடுத்தவனிடம் காண முடியாத அஞ்ஞானக் குருடர்களே. சாதாரண மனிதர்களிடம் உள்ள ஈகோவை விட, அறியாமையை விட இவர்களின் ஈகோவும், அறியாமையும் பல மடங்கானவை என்றே சொல்ல வேண்டும்.

உண்மையான கர்மயோகி ஞானத்தையும் இயல்பாகவே பெற்று விடுவதால் அவன் செய்யும் செயல்களில் “நான்என்ற அகந்தை இருப்பதில்லை. செயல்கள் செய்யும் போது அதைத் தான் செய்வதாக நினைப்பதில்லை. செயல்களில் “நான்பின்னிப் பிணைந்திருக்காததால் அதன் விளைவுகளாலும் அவன் அலைக்கழிக்கப்படுவதில்லை. எல்லாம் அவன் செயல் என்று வார்த்தைகளால் மட்டுமல்லாமல் நிஜமாகவே உணர்ந்து அமைதியாக அவனால் வாழ முடிகிறது.

கனவில் வரும் நிகழ்வுகள் பாதிப்பது விழிப்படைந்தவுடன் நின்று விடுகின்றது. அதே போல அறியாமை உறக்கத்திலிருந்து விழிப்படைந்த நிலையில் உள்ளவனை அவன் பங்கு பெறும் உலகவாழ்க்கை பாதிப்பது நின்று விடுகிறது. 

கர்மயோகத்தின் சிறப்பைச் சொல்லி சலிக்காத ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார்.

யார் தனது கர்மங்களை எல்லாம் பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்து, பற்றின்றி செயல் புரிகிறானோ அவன் தாமரை இலையிலுள்ள தண்ணீர் போல பாவத்தால் களங்கப்படுவதில்லை.

சரீரத்தாலும், மனத்தாலும், புத்தியினாலும், புலன்களாலும், பற்றுதலில்லாமல் ஆத்ம சுத்திக்காகவே யோகிகள் கர்மத்தை மேற்கொள்கிறார்கள்.

கர்மயோகி கர்மபலனைத் துறந்து நிலையான சாந்தியை அடைகிறான். அப்படி இல்லாதவன் ஆசையால் தூண்டப்பட்டு பலனில் பற்று கொண்டு கர்மங்களால் கட்டுப்படுகிறான்.

ஒரு நீர்நிலையில் உள்ள நீரின் அளவு எந்த அளவில் இருந்தாலும் கூட அந்த நீரால் தாமரை இலையை ஈரப்படுத்தி விட முடிவதில்லை. தண்ணீரிலேயே இருந்தாலும் அதில் பாதிக்கப்படாமல் இருக்கும் தாமரை இலை போல உலக வாழ்க்கையிலேயே இருந்தாலும் கூட கர்மயோகி பாதிக்கப்படுவதில்லை. காரணம் அவன் எந்த செயலையும் தன் தனிப்பட்ட லாப நஷ்டக் கணக்கை வைத்துக் கொண்டு செய்வதில்லை. செய்பவன் இறைவன், தான் ஒரு கருவி மாத்திரமே என்ற எண்ணத்தில் அத்தனையையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பற்றில்லாமல் செயல்படுகிறான்.

உடல், மனம், அறிவு, புலன்கள் இவை எல்லாமே சும்மா இருக்க முடியாதவை. ஏதாவது வகையில் செயல்படத் துடிப்பவை. எதற்காகப் பிறந்தோம் என்பதை உணர்ந்து அதற்கான செயல்களாக அவை இருக்கும்படி பார்த்துக் கொள்பவன் தான் கர்மயோகி. அப்படி செயல்படும் போது செய்கின்ற எல்லாமே இறைவன் ஏற்படுத்தித் தந்தவை, செய்பவன் இறைவனே, விளைவுகள் இறைவனின் திருவுள்ளத்தின் படியே ஏற்படுகின்றன என்கிற மனப்பக்குவம் வந்து விடுகிறது. சந்தோஷப்படவோ, துக்கப்படவோ “நான்என்ற ஈகோவிற்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. அதனால் தான் அவன் நிலையான சாந்தியை அடைகிறான்.

கர்ம யோகம் பிடிபடவில்லையானால், ஒருவன் செயல்களில் “நான்என்ற ஈகோ புகுந்து விட்டால் அதனுடன் விருப்பு, வெறுப்பு முதலான அனைத்து இரட்டை நிலைகளும் புகுந்து விடுகின்றன. அலைக்கழித்தல் ஆரம்பமாகி விடுகின்றது. நினைத்தபடி நடக்கிற போது கர்வத்தோடு கூடிய ஆர்ப்பரிப்பு, எதிர்மாறாக நடக்கும் போது துக்கத்தோடு கூடிய அழுகை என்று மாறி மாறி மனிதன் அலைக்கழிக்கப்பட ஆரம்பிக்கிறான். விளைவுகளால் அவன் கட்டுப்பட நேரிடுகிறது. ஒரு கணமும் நிம்மதியாக இருக்க அவனை அந்த “நான்அனுமதிப்பதில்லை. சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது போல ஆசையிலிருந்து அழிவு வரை மனிதன் பெருவெள்ளத்தில் சிக்கிய துரும்பாக பயணிக்க நேர்ந்து விடுகிறது.

நான்என்ற அகந்தைக்கு எல்லாமே அறிந்தது போலவும், எல்லாமே தன்னால் முடியும் என்பது போலவும், எல்லாவற்றிற்கும் தன்னிடம் பதில் இருப்பது போலவும் அபிப்பிராயம் இருக்கும். எதுவும் எப்படி நடக்க வேண்டும் என்ற முடிவான அபிப்பிராயமும் இருக்கும். அதனாலேயே அதன் செயல்பாட்டில் இறைவனைக் கூட அனுமதிக்க அதனால் முடிவதில்லைமுழுவதுமாக அந்த நானின் கட்டுப்பாட்டில் நடக்கும் செயல்கள் எத்தனை தான் துக்கத்தைக் கொடுக்கும் விதமாக அமைந்தாலும் அதனால் விலக முடிவதில்லை. இந்த விலக முடியாத தன்மையிலேயே அத்தனை பிரச்சினைகளும் இருக்கிறது என்பதை அது உணர்வதில்லை.

மெத்தப்படித்த ஒரு பண்டிதர் ஒரு ஞானியைப் பார்க்கச் சென்றார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பண்டிதர் தான் அறிந்ததையெல்லாம் கர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். உலகில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவரிடம் பதில் இருந்தது. எது எது எப்படிச் செய்ய வேண்டும், எப்படி நடைபெற வேண்டும் என்று எல்லாம் பல மேற்கோள்கள் காட்டி ஞானிக்கு விளக்கினார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஞானி சொன்னார். “நீங்கள் பிறப்பதற்கு முன் இறைவன் எப்படி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருந்தான் என்பது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது

பாதை நீளும்.....

- என்.கணேசன்




5 comments:

  1. //ஆனால் வெளியுலகிற்கு வந்து செயல்படும் போது தான் வெளியுலக ஆரவாரத்திலும், நிர்ப்பந்தங்களிலும் கூட அந்த அமைதி தங்குகிறதா, இல்லை காணாமல் போகிறதா என்பது புரியும்.//

    மிகவும் உண்மை!

    ReplyDelete
  2. உதாரணத்துடன் விளக்கங்கள் மிகவும் அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. மிகவும் அருமை.நன்றியுடன்,

    ReplyDelete
  4. நீங்கள் பிறப்பதற்கு முன் இறைவன் எப்படி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருந்தான் என்பது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது”//

    அருமையான கேள்வி.

    ReplyDelete
  5. ஆசிரமத்திற்கு சென்று தியானம் கற்றுக் கொண்டு அந்த அமைதியான சூழ்நிலையில் தங்கி இருக்கும் போது மனம் அமைதி அடையலாம். அதை வைத்து ஞானம் பெற்று விட்டதாக ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் வெளியுலகிற்கு வந்து செயல்படும் போது தான் வெளியுலக ஆரவாரத்திலும், நிர்ப்பந்தங்களிலும் கூட அந்த அமைதி தங்குகிறதா, இல்லை காணாமல் போகிறதா என்பது புரியும். Verymuch True sir

    ReplyDelete