சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 26, 2012

அம்மா உனக்கு நமஸ்காரம்!


திசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன்  துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவியாகவோ ஆதிசங்கரருக்கு சம்மதமில்லை.

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை ஒரு பற்றிக் கொண்டது. ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார். “அம்மா என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் சன்னியாசி ஆக நீ அனுமதி தந்தாயானால் அது என்னை விட்டு விடும்”.

ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒத்துக் கொண்டார். ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)  

கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹிஎன்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும். முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார்.

உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ‘உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்

ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார். ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார்.

அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே. ஒரு ஜகத்குரு ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப்  பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -

ம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே!

நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம்  நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன்.

எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே.

அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே.

தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவா, கிருஷ்ணா, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? அம்மா உனக்கு நமஸ்காரம்.

-          என்.கணேசன்

  

11 comments:

  1. உங்களின் தலைப்பும் பதிவும் அருமை

    ReplyDelete
  2. மாத்ரு பஞ்சகம் அருமை...

    பட்டினத்தார் பாடலும் ஞாபகம் வந்தது...

    நன்றி...

    ReplyDelete
  3. Azhudhuvitten ...... Miga nalla article

    ReplyDelete
  4. /*“அம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே!*/

    true for all beings..

    ReplyDelete
  5. அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி கணேசன்...

    ReplyDelete
  6. Dear Ganesan,
    Can I share this in my blogspot, njlravi.blogspot.com

    ReplyDelete
  7. There cannot be a payback for a mothers love and affection.

    ReplyDelete
  8. A fitting tribute to an affectionate mother by Sri Adhi Sankarar explained very well by you.So far it is not known to me.Thanks for ur posting.

    ReplyDelete
  9. I recently lost my mom, This blog makes tears roll down from my eyes. The greatest mahan also have the emotion of mother affection!. how come others can escape. amma unnukku kodi namaskaram Thank you Amma

    ReplyDelete