சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 26, 2013

எது சிறந்தது – இல்லறமா, துறவறமா?




அறிவார்ந்த ஆன்மிகம் - 16

ல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என்ற கேள்வி பலர் மனதிலும் எழுவதுண்டு. இது ஆண்டாண்டு காலமாகக் கேட்கப்படும் கேள்வியும் கூட.

மேற்போக்காகப் பார்க்கையில் பலருக்கும் துறவறம் தான் இறைவனுக்கு நெருக்கமானது, அது தான் வணங்கத்தக்க நிலை, அதுவே ஆன்மிக வழி என்றெல்லாம் தோன்றலாம். அதனாலேயே அதையே சிறந்ததாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அது தானா என்பதை மகாபாரதத்தில் ஒரு அற்புதமான கிளைக்கதை மூலமாகப் பார்க்கலாம்.

கௌசிகன் என்ற அந்தணன் பிரம்மச்சரியத்துடன் கூடிய துறவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். ஒரு நாள் ஒரு மரத்தடியில் அமர்ந்து அவன் வேதம் ஓதிக் கொண்டிருந்த போது மரத்தின் மீது அமர்ந்திருந்த கொக்கு ஒன்று அவன் மீது எச்சம் இட்டது. கௌசிகன் கோபமடைந்து அந்தக் கொக்கைப் பார்க்க அந்தப் பார்வையிலேயே இறந்து அப்படியே கீழே விழுந்தது. முறைப்படி வாழும் துறவு வாழ்க்கைக்கு அத்தனை சக்தி இருக்கிறது.

கோபத்தால் தான் எண்ணிய எண்ணம் இப்படி கொக்குக்கு எமனாக முடிந்ததில் வருத்தமடைந்த கௌசிகன் வழக்கம் போல் பிட்சைக்குப் புறப்பட்டான். 

ஒரு வீட்டின் முன் பிட்சைக்காக கௌசிகன் நின்ற போது அந்த வீட்டுப் பெண்மணி பாத்திரங்கள் கழுவிக் கொண்டு இருந்தாள். அந்த வேலையை முடித்து விட்டு அவள் தனக்குப் பிட்சை இடுவாள் என்று கௌசிகன் காத்துக் கொண்டிருக்கையில்  அந்தப் பெண்மணியின் கணவன் வேலை முடித்துக் கொண்டு சாப்பாட்டிற்கு வந்தான். அந்தப் பெண்மணி கௌசிகனைக் கவனிக்காமல் கணவனுக்கு ஆகாரம் தந்து உபசரிக்க ஆரம்பித்தாள். கணவன் சாப்பிட்டு முடித்த பின்பு தான் கௌசிகனுக்கு பிட்சை எடுத்துக் கொண்டு வந்தாள்.

கோபத்தில் நெருப்பென ஜொலித்த கௌசிகன் தன்னை அலட்சியப் படுத்தியதற்கு அவளைக் கோபித்துக் கொண்டான். அவள் அமைதியாகச் சொன்னாள். “ஐயா, கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டு இருந்த பெண்ணை உங்கள் கோபம் எதுவும் செய்து விட முடியாது. நான் கொக்கல்ல

கௌசிகனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சிறுது நேரத்திற்கு முன் வேறிடத்தில் நடந்த கொக்கு சம்பவம் இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தான்.

அந்தப் பெண்மணி சொன்னாள். “ஐயா உமக்கு தர்மத்தின் ரகசியம் தெரியவில்லை. மனிதனுக்குக் கோபம் உடம்பின் உள்ளே இருக்கும் பெரும் பகையாகும். எனது குற்றத்தை மன்னித்து நீங்கள் மிதிலைக்குச் சென்று தர்மவியாதனிடம் உபதேசம் பெறுவீராக

வியப்படைந்து கோபம் தணிந்த கௌசிகன் அவளை ஆசிர்வதித்து விட்டு தர்மவியாதனைத் தேடி மிதிலைக்குச் சென்றான். தனக்கு உபதேசிக்கத் தகுந்தவராகச் சொல்லப்பட்ட தர்மவியாதன் ஒரு முனிவராக, ஆசிரமத்தில் வசிப்பவராக இருப்பார் என்ற எண்ணத்தில் மிதிலையை அடைந்த கௌசிகன் தர்மவியான் வசிப்பிடம் பற்றி அங்கிருந்த மக்களிடம் விசாரிக்க மக்கள் ஒரு கசாப்புக்காரனிடம் கௌசிகனை அழைத்துப் போய் விட்டனர்.

“இவர் தான் தர்மவியாதன்என்று அவர்கள் சொல்ல கௌசிகனுக்கு சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை. போயும் போயும் ஒரு கசாப்புக்கடைக்காரனா தனக்கு உபதேசிக்கத் தக்கவன் என்று சற்று தள்ளியே முகம் சுளித்து நின்றான்.

தர்மவியாதன் என்ற அந்தக் கசாப்புக்கடைக்காரன் அவனை அன்புடன் வணங்கி வரவேற்றான். “ஐயா வாருங்கள். தங்களை அந்தப் பதிவிரதைப் பெண்மணி இங்கு அனுப்பினாளா?என்று கேட்டான்.

இவனுக்கு எப்படி அந்தப் பதிவிரதை அனுப்பியது தெரியும் என்று கௌசிகன் வியந்தான். தர்மவியாதன் தனது வீட்டிற்கு முதலில் கௌசிகனை அழைத்துச் சென்றான். தர்மவியாதன் அங்கு தன் வயதான நோய்வாய்ப்பட்டிருந்த  பெற்றோருக்கு அன்புடனும், பொறுமையுடனும் பணிவிடை செய்வதைக் கௌசிகன் பார்த்தான். பிறகு தர்மவியாதன் தன் கசாப்புக்கடைக்கு கௌசிகனை அழைத்துச் சென்றான். அங்கும் தர்மவியாதன் மிக நேர்மையாகவும் நேர்த்தியாகவும் தன் தொழிலைச் செய்வதைக் கண்டான். பெரியவர், அறிந்தவர் அவன் கடைக்கு மாமிசம் வாங்க வந்த போதும், சிறியவர், அறியாதவர் அவன் கடைக்கு வந்த போதும் தர்மவியாதனின் தராசு ஒரே போல் மிகச்சரியாக இருந்து அவன் விற்பனை செய்வதைக் கண்டான்.

அங்கேயே தங்கி தர்மவியாதனிடம் மனித வாழ்க்கையைப் பற்றியும், தொழில் தர்மத்தைப் பற்றியும், மனிதனின் கடமைகள் பற்றியும் உபதேசம் பெற்ற கௌசிகன் மறுபடி ஊர் திரும்பிய போது மாறி விட்டிருந்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

இந்த மகாபாரதக் கதையில் பிரம்மச்சரிய விரதம் உட்பட துறவு நிலைக்கு வேண்டிய பல அறநெறிகள்படி வாழ்ந்ததால் தான் கௌசிகனுக்குப் பார்வையாலேயே கொக்கை அழிக்கும் சக்தி வந்திருந்தது. ஆனால் அவனுக்கு அந்த துறவுக்கு நிலைக்குத் தேவையான பொறுமை என்ற குணம் இருக்கவில்லை. அதனால் தான் கொக்கின் இயற்கையான செயலுக்கு முன்னதாகக் கோபம் பின்னதாக பச்சாதாபம் வந்தது.

அதே போல அந்த இல்லத்தரசி தன் கடமைகளைச் செய்து முடிக்கும் வரை காத்திருக்கும் பொறுமை அவனிடத்தில் இருக்கவில்லை. அங்கும் கோபம் வந்ததால் தான் அந்தப் பெண்மணியிடமும், தர்மவியாதனிடமும் உபதேசம் கேட்டுப் பெற வேண்டிய நிலை வந்தது. அந்தப் பெண்மணியும் சரி, தர்மவியாதனும் சரி அவர்களுக்கு வகுக்கப்பட்ட கடமைகளை செவ்வனே செய்து வாழ்ந்து வந்ததால் தூரத்தில் நடந்த நிகழ்வுகளை அறியும் அளவுக்கு சக்தி பெற்றிருந்தார்கள் என்றும், கௌசிகனுக்கே உபதேசம் செய்யும் தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் மகாபாரதம் சுட்டிக் காட்டுகிறது.  

அறம் என்பதை விதித்தன செய்தல்,  விலக்கியன ஒழிதல் என்று சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கினார் பரிமேலழகர் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்தல் வேண்டும். எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி இருப்பது தான் அறநிலை.  இல்லறமோ, துறவறமோ இரண்டும் சிறப்பே. ஒருவர் அததற்கு விதிக்கப்பட்ட நெறிப்படி வாழ்கிறார்களா என்பது தான் அடிப்படைக் கேள்வி.  இல்லறமோ, துறவறமோ அதில் அறம் இல்லா விட்டால், உண்மை இல்லா விட்டால் அது நடிப்பே, அது குறைபாடே என்பதால், அதை எந்த விதத்திலும் சிறப்பாகக் கருத முடியாது.

அவரவர்க்கு விதிக்கப்பட்ட நெறிகளின் படி வாழ்ந்தால் இல்லறமும் நல்லறமே, துறவறமும் சிறந்ததே. இல்லறத்தில் அவரவர் கடமைகளைத் தட்டிக் கழிக்காமல் நேர்த்தியாகச் செய்து அன்புடன் வாழ்ந்தால் அது மிகச் சிறந்ததே. துறவறத்திலும் போலித்தனம் இன்றி, வெளிப்பார்வைக்கு மட்டுமல்லாமல் உண்மையாகவே துறவு மனப்பான்மையுடன் அருளுடன் வாழ்ந்தால் அதுவும் மிகச் சிறந்ததே.

இரண்டிலும் ஒன்று உயர்வு இன்னொன்று தாழ்வு என்பது தவறான அபிப்பிராயங்களே. இரண்டில் ஒவ்வொருவரின் தன்மைக்கும், சக்திக்கும், தகுதிக்கும் எது முடிகிறது என்பது தான் கேள்வி. முடிந்ததில் முழுமையாக நிற்க முடிந்தால் அதுவே ஒருவருக்கு உயர்வும் சிறப்பும்.  சரி தானே?

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 25-06-2013


6 comments:

  1. உண்மை உண்மை , நண்பரே ...!!! அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகச் சரி! மிக நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இரண்டிலும் உண்மை இருந்தாலும் துறவை விட இல்லறத்தில் அதிகமாக பாதை விலகி போக நேரிடும் எனவே அசாதரனமான்வர்களுக்கு மட்டும் இல்லரத்தின் இடையிலும் அறத்தை பேனமுடியும் இறைவ்ழி பாதையில் வெற்றி பெறமுடியும் என்பது என் கருத்து.

    ReplyDelete