சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Sunday, March 30, 2014

தினமலரில் “பரம(ன்) இரகசியம்” மதிப்புரை

தினமலரில்  பரம(ன்) இரகசியம் மதிப்புரை வெளியாகி உள்ளது. 

“இது தமிழ் படைப்புலகம் இது வரை கண்டிராத மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட நாவல். இணைய தளத்தில் தொடராக வெளியான போது பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நாவல் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது...... ... .....”


நன்றி தினமலர் 25-03-2014 (வேலூர் பதிப்பு) 

Thursday, March 27, 2014

பரம(ன்) ரகசியம் – 90


பாபுஜியின் இடத்தை அவர்கள் அடைந்த போது மணி 11.10. பௌர்ணமி திதி 11.42க்கு முடிகிறது என்றும், அதற்குள் அவர்கள் செயல்பட்டாக வேண்டும் என்றும் ஈஸ்வர் அறிந்திருக்கவில்லை. இந்த இரவு முடிவதற்குள் ஏதாவது செய்து முடித்து விட வேண்டும் என்று தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் இந்த கடைசி சில நிமிடங்களில் மேலும் தெரிந்த மாற்றம் பார்த்தசாரதியை வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அவன் முகத்தில் தெரிந்த பேரமைதி அவருக்கு இப்போதும் புத்தரை நினைவுபடுத்தியது. ஆனால் இன்றைய பேரமைதி முன்பெல்லாம் தெரிந்ததை விட மும்மடங்கு பொலிவுடன் இருந்ததாக அவருக்குப் பட்டது.  போதி மரத்தடியில் மகாநிர்வாணம் அடைந்த போது புத்தர் இப்படியே இருந்திருப்பார் என்று ஏனோ அவருக்குத் தோன்றியது. இயல்பாகவே அழகான அவன் இப்போதைய பொலிவில் ஒரு கந்தர்வனைப் போல ஜொலித்தான்.  
  
உண்மையில் அங்கே நெருங்க நெருங்க அவனிடம் ஏற்பட்டிருந்த எண்ண ஓட்டங்கள் தான் அந்த மாற்றத்திற்குக் காரணமாய் இருந்தன. அவன் சாதாரணனாகத் தோன்றலாம். ஆனால் அவன் மூலம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்று பசுபதி, சித்தர் போன்றவர்கள் முடிவு செய்தால் அவன் எப்படி சாதாரணமானவனாக இருக்க முடியும். சுமக்க முடியாத சுமைகள் தரப்படுவதில்லை என்று சித்தர் சொன்னாரே. ஒன்று நடக்க வேண்டும் என்று தெய்வ சித்தம் இருக்குமானால் அதை நடத்தும் போது அந்தத் தெய்வமும் கூட இருக்கிறது என்றல்லவா பொருள். சிந்தனை இந்தப் போக்கில் போன போது அவன் ஒரு பேரமைதியோடு கூடிய அசுரபலத்தை தன்னுள் உணர்ந்தான்.

பார்த்தசாரதி போலீஸ் ஐடி கார்டைக் காட்டியதும் செக்யூரிட்டு ஆட்கள் பாபுஜிக்குப் போனில் தெரிவிக்க முயன்றார்கள். ஆனால் பாபுஜி அவர்களுக்குப் பேசக் கிடைக்கவில்லை. செக்யூரிட்டி ஆட்கள் போன் செய்கிறார்கள் என்றவுடனேயே பாபுஜி விஷயத்தை ஊகித்து நம்பீசனிடம் சொன்னார். அவங்க வந்துட்டாங்க. என்ன செய்யப் போறீங்க....

“அவங்களை வரவேற்க இவங்களை தயார் பண்ணிட்டேன்என்று சொன்ன நம்பீசன் ஹோமகுண்டத்தில் உக்கிரமாய் எரிந்து கொண்டிருந்த தீயைக்  காட்டினார். அருகில் வந்து அதில் தோன்றிய உருவங்களைப் பார்த்த நம்பீசனுக்கும், ஜான்சனுக்கும் கிலி ஏற்பட்டது. முழுவதும் ஆட்களும் அல்லாமல், விலங்குகளும் அல்லாமல், பறவைகளும் அல்லாமல், மூன்றின் எலும்புக்கூடுகளும் கலந்த விசித்திர உருவங்கள் விகாரமாய் தோன்றின.

“என்ன இது?என்று கேட்க பாபுஜி நினைத்தார். ஆனால் நாக்கு மேல் எழும்பவில்லை.... ஜான்சன் உடனடியாக முகத்தைத் திருப்பிக் கொண்டார். மாய மந்திரங்கள் அவருடைய ஆராய்ச்சியில் இருந்திருக்கின்றன என்றாலும் இது போன்ற கோர உருவங்களை அவரும் எதிர்கொண்டதில்லை.  

செக்யூரிட்டி ஆட்கள் பாபுஜியிடம் இருந்து தகவல் வராமல் போகவே, போலீஸ்காரர்களைத் தடுக்க வழியில்லாமல் மெயின் கேட்டைத் திறந்தார்கள்.

உள்ளே நுழைவதற்கு முன் ஈஸ்வர் அமைதி மாறாமல் பார்த்தசாரதியிடம் கேட்டான். “சார் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்லையா?

பார்த்தசாரதி சொன்னார். இருக்கு ஈஸ்வர். நீங்க சிவலிங்கத்தைக் கவனியிங்க. மீதி எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம்...

அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். மனித-மிருக-பறவைகளின் எலும்புக்கூடுகளின் கலவை உருவங்கள் அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தன. சில உருவங்கள் ஓடி வந்தன. சில உருவங்கள் பறந்து வந்தன. சில உருவங்கள் நடந்து வந்தன. சில உருவங்கள் தீயைக் கக்கின. சில உருவங்கள் விசித்திர ஓசைகளையும், ஓலங்களையும் எழுப்பின.

பார்த்தசாரதியும் அவருடன் வந்த இரண்டு போலீஸ்காரர்களும் பேய் ஆவி சினிமாக்களில் வரும் சில காட்சிகளுக்குத் தயாராக இருந்தார்களே ஒழிய இப்படி இரத்தம் உறைய வைக்கும் உருவங்களுக்குத் தயாராக இருக்கவில்லை. பார்த்தசாரதிக்கு உடனே திருவரங்கத்தான் நினைவு வரவில்லை. மரணம் தான் நினைவுக்கு வந்தது. உடனே மனைவி மக்கள் நினைவுக்கு வந்தார்கள். அவருடன் வந்த போலீஸ்காரர்கள் தலைதெறிக்க திரும்ப வெளியே ஓடினார்கள். அவர்கள் மிகவும் தைரியசாலிகள் தான்.  ஆனால் அவர்கள் தைரியம் இந்த சூழ்நிலைக்குப் போதவில்லை.

அந்த நிலையிலும் பார்த்தசாரதிக்கு ஈஸ்வரை விட்டு விட்டு தனியாக ஓட மனம் கேட்கவில்லை. இதயம் இப்படியே துடித்தால் உடைந்தே சிதறி விடும் என்று தோன்ற ஈஸ்வர் என்ன செய்கிறான் என்று பீதியுடன் பார்த்தார். ஏன் என்றால் கிட்டத்தட்ட எல்லா பேய்களும்(?) அவனையே தான் குறி பார்த்து நெருங்கின. ஆனால் அவன் அந்தக் கோர உருவங்களைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. புத்தனாகவே மாறி அவன் அங்கு ஒரு சிறு பரபரப்பைக் கூடக் காட்டாமல் நடந்தான். 

பறந்து வந்த ஒரு குள்ள மனித எலும்புக்கூடு விசித்திரமாய் நரி போல் ஊளை இட்டுக் கொண்டே அவரை நெருங்கிய போது அதை ஈஸ்வர் சொன்னது போல் குழந்தைகளின் பூச்சாண்டியாக பார்த்தசாரதியால் நினைக்க முடியவில்லை. முகத்தில் மட்டும் முகமூடி போட்டுப் பயம் காட்டும் குழந்தைகள் எங்கே, தத்ரூபமாய் ரத்தத்தைக் குடிப்பது போல் வரும் இந்த அமானுஷ்யப் பேய்கள் எங்கே? அந்த உருவம் அவர் உடம்புக்குள் புகுந்து கொண்டது போல் இருந்தது. அவரை மிக்ஸியில் போட்டு அது அரைப்பது போல் அவர் உணர்ந்தார். தலை மட்டும் அப்படியே இருக்க உடம்பெல்லாம் பம்பரமாகச் சுற்றுவது போல் இருந்தது. என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியவில்லை.

ஒன்று உள்ளே புகுந்ததற்கே இந்தப்பாடு என்றால் அத்தனையும் அவனுள் புகுந்து கொள்ளப் பார்க்கின்றனவே அவன் நிலைமை என்ன ஆகும் என்று அந்தப் பயங்கர நிலையிலும் அவனைப் பார்த்தார். அவனைப் பல கோர உருவங்கள் சுற்றிக் கொண்டு பயமுறுத்திக் கொண்டிருந்த போதும் அவன் நடையை அவை தடை செய்யவில்லை. அவற்றிற்கு அவனுக்குள்ளே நுழைய முடியவில்லை. அமைதி மாறாமல் ஓம்என்ற ஓங்கார த்வனி கேட்கும் திசை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். அந்த உருவங்கள் காதைக் கிழிக்கிறது போல் கூச்சல் இட்டுக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் அவற்றை எல்லாம் ஊடுருவிச் சென்று அந்த ஓமில் லயித்தது.

பார்த்தசாரதிக்கு அவன் இதெல்லாம் உடனடியா நமக்கு இயல்பா வந்துடாது. மனசுல பயிற்சி செய்துக்கறது நல்லது....என்று எச்சரித்தது நினைவுக்கு வந்தது. என்ன தான் பயிற்சி செய்திருந்தாலும் இதைச் சமாளிக்க தன்னால் முடிந்திருக்காது என்று தோன்றியது. அவரால் மட்டுமல்ல சாதாரணமாய் யாராலும் சமாளிக்க முடிந்திருக்காது... அவன் சித்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன், அதனால் அவன் பக்கம் சித்தர்கள் நின்று அவனைக் காக்கிறார்கள் என்று தோன்றியது.

உயிர்பிரியும் நேரத்தில் இறைவனை நினைத்தால் கூட நேராக கைலாயத்திற்கோ, வைகுண்டத்திற்கோ போய் விடலாம் என்று சொல்வதை அவர் கேட்டிருக்கிறார். அப்போதெல்லாம் இதென்ன அபத்தம் என்று தோன்றும். வாழும் காலமெல்லாம் எப்படி எல்லாமோ இருந்து விட்டு கடைசி  நேரத்தில் இறைவனை நினைத்தாலும் அப்படி போக முடியும் என்றால் முதலில் இருந்தே நினைக்கும் அவசியமே இல்லையே என்று தோன்றி இருக்கிறது. ஆனால் இப்போது ஒரு குறிப்பிட்ட கணத்தில் இறைவனை நினைக்க முடிவது அவ்வளவு சுலபமல்ல என்பது புரிந்தது. அதற்கு முன்பே பல காலமாக, ஏன் பல ஜென்மங்களாகவே கூட மனதில் பதியப்பட்டு இருந்தால் தான் அது நிகழ முடியும் என்பது புரிந்தது….
  
நம்பீசன் தன் கண்களை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் ஈஸ்வரைப் பார்த்தார். அவர் இது போன்ற ஒருவனை இதுவரை பார்த்ததில்லை. அனுபவம் மிக்க ராஜ யோகிகளும் சித்தர்களும் மட்டுமே சிக்காத சித்து விளையாட்டு இது. மனதில் சிறிது சலனமோ, பயமோ இருந்தாலும் அவர் அனுப்பிய சக்திகள் அவனுக்குள்ளே புகுந்து நரகம் என்ன என்பதைக் காட்டியிருக்கும். மாறாக அந்த சக்திகள் அவன் நடையின் வேகத்தைக் கூட அதிகப்படுத்தவில்லை. ராணுவ வீரர்கள் அணிவகுப்பின் போது தான் அப்படி ஒரு சீரான அவசரமில்லாத நடையை அவர் பார்த்திருக்கிறார்.

பாபுஜி அவரைப் பார்த்துப் பைத்தியம் பிடித்தது போல கத்தினார். “யோவ். காசை வாங்கிட்டு என்ன வேடிக்கை பார்க்கிறே. அவனை எதாவது செய்யிய்யா....

நம்பீசன் கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி 11.32. இன்னும் பத்து நிமிடங்கள் தாக்குப் பிடித்தால் போதும்.... “பத்தே பத்து நிமிஷம் ஏதாவது செஞ்சு அவனைத் தடுத்து நிறுத்துங்க. அவன் அந்த சிவலிங்கத்தை நெருங்காம பார்த்துக்குங்க. அவன் நெருங்கிட்டா அந்த சிவலிங்கத்தை நீங்க எப்பவுமே இனி பார்க்க முடியாதுன்னு ப்ரஸ்னம் சொல்லுது... மந்திரத்தால இனி செய்ய முடிஞ்சது எதுவும் இல்லை....

லட்சக்கணக்கில் பணம் வாங்கி விட்டு கடைசியில் அவரிடமே எதாவது செய்யச் சொல்லும் நம்பீசனைப் பார்க்கும் போது பாபுஜிக்கு ரத்தம் கொதித்தது. ஆனால் கோபப்படவும் நேரமில்லை. பத்து நிமிடம் தான் இருக்கின்றது என்ற அந்தத் தகவலையாவது சொல்கிறானே இந்தப் படுபாவி என்று வயிறெரிந்த அவர் துப்பாக்கியை எடுக்க தனதறைக்கு ஓடினார். ஓடும் போது ஜான்சனைப் பார்த்துக் கத்தினார். “ஜான்சன். எதையாவது செஞ்சு அவனை நிறுத்துங்க

ஜான்சன் ஆராய்ச்சியாளரே ஒழிய குண்டரல்ல. அவர் நகரவில்லை. அவர் ஈஸ்வரைப் பார்த்து பிரமித்தபடி நின்றிருந்தார். இவன் மனிதன் தானா? இந்த மாதிரியான ஒரு நிலைமையில் இப்படி ஒரு கட்டுப்பாட்டுடன் அமைதியாக இயங்குவதை  ஒரு மனிதனிடம் அவர் முதல் முறையாகப் பார்க்கிறார்....

ஈஸ்வர் தியான மண்டபத்திற்குள் நுழைந்தான். அவனைப் பின் தொடர்ந்த அந்த கோர உருவங்கள் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. அவை பின் வாங்க ஆரம்பித்தன. ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். விசேஷ மானஸ லிங்கம் அவன் வருகைக்காகக் காத்திருந்து மகிழ்ந்தது போல ஜொலிக்க ஆரம்பித்தது. அந்த ஜொலிப்பில் கூட ஓங்காரத்திற்கேற்ற சக்தியின் நடனம் இருப்பது போல் ஈஸ்வருக்குத் தோன்றியது. அவன் சிலை போல அமர்ந்திருந்த ஹரிராமையும், சிவனுக்குப் பக்கத்திலேயே படுத்துக் கொண்டிருந்த கணபதியையும் பார்த்தான். இரண்டுமே இயல்பாய் இல்லை. இது நம்பீசனின் திருவிளையாடல் தான்.....

உடனடியாக சிவலிங்கத்தில் கவனத்தைக் குவித்து அதன் சக்தியில் லயித்த அவன் ஹரிராமையும் கணபதியையும் அந்த சக்தி அலைகளிற்கு இழுத்தான். நம்பீசனின் மந்திரக்கட்டு அவிழ்ந்து போனது. ஹரிராம் விடுபட்ட அந்தக் கணத்தில் தான் பாபுஜி ஓடி வந்து தியான மண்டப வாசலில் நின்று தன் துப்பாக்கியை ஈஸ்வருக்குக் குறி வைத்தார். ஒரு நிமிடம் தாமதித்தாலும் ஈஸ்வரின் மரணம் நிச்சயம் என்று ஹரிராமிற்குப் புரிந்தது.

அந்த மந்திரக்கட்டு அவரைப் பிணைத்திருந்த காலத்தில் ஆல்ஃபா அலைகளிற்குப் போய் அந்த மந்திரக்கட்டின் தன்மைகளை அவர் ஆராய்ந்து கொண்டு இருந்தார். தன்னிடம் தரப்பட்ட பொம்மையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு குழந்தையைப் போல முழு கவனத்தையும் அதில் செலுத்தி அதன் சூட்சுமங்களை அறிந்து வைத்திருந்தார். அபூர்வ சக்திகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவருக்கு அதை முழுமையாகப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை. அதனால் தன்னிடமிருந்து விலகிய மந்திரக்கட்டை பாபுஜி மீது சூட்சுமமான ஒரு மாற்றம் செய்து மின்னல் வேகத்தில் ஹரிராம் ஏவினார்.

அடுத்த கணம் துப்பாக்கி நீட்டிய கையோடு பாபுஜி அப்படியே சிலையாக சமைந்தார்.  துப்பாக்கி  விசையை அழுத்தக் கூட முடியவில்லை. இப்போதும் ஈஸ்வர் அவர் குறியிலேயே தான் இருக்கிறான். அவர் கையில் இருக்கும் துப்பாக்கி சக்தி வாய்ந்தது. விசையை அழுத்தினால் போதும் அவன் கதை முடியும். அவர் கதை உயரும். ஆனால் அந்தச் சின்ன சுலபமான செயலைச் செய்யக்கூட அவரால் முடியவில்லை. வாங்கின காசிற்கு அதையாவது நம்பீசன் செய்து தரக் கூடாதா? இதற்கும் ஒரு பத்து லட்சம் சேர்த்துத் தரச் சொன்னாலும் பாபுஜி தரத்தயாராக இருந்தார்.  ஆனால் நம்பீசன் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய இயங்கும் நிலையில் இல்லை. பாபுஜி “யோவ் ஏதாவது செய்யிய்யா. நான் எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்என்று சொல்ல வாய் திறக்கப் பார்த்தார். வாயைக் கூடத் திறக்க முடியவில்லை.

ஈஸ்வர் ஹரிராமிடம் தியான மண்டபத்திற்கு வெளியே இருக்கும் பார்த்தசாரதியையும் நம்பீசனின் ஏவலில் இருந்து விடுவிக்கச் சொன்னான். அவனை விசேஷ மானஸ லிங்கம் தன்னருகே அழைப்பது போல் இருந்தது. அவன் உள்ளே நுழைந்த கணத்தில் கியோமி, அலெக்ஸி இருவரின் தியானம் தடைப்பட்டு அவர்கள் எழுந்து நின்றார்கள். கியோமிக்கு அந்தக்கணத்தில் ஈஸ்வர் ஒரு போதிசத்துவராகவே தெரிந்தான். அவள் அவனை பரவசத்துடன் வணங்கி நின்றாள்.

ஹரிராம் வேகமாக வெளியே வந்து நம்பீசன் ஏவி இருந்த அத்தனை உருவங்களையும் திரும்ப அவருக்கே ஏவி விட்டார். அதிர்ச்சியுடன் நின்றிருந்த நம்பீசன் அதற்குத் தயாராக இருக்கவில்லை. தயாராக இருந்திருந்தால் விஷயம் தெரிந்த அவருக்கு தன்னைத் தற்காத்துக் கொள்வது சுலபமாக இருந்திருக்கும்... அவரும் அவர் உதவியாளர்களும் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். அந்த உருவங்கள் விசித்திர ஓலிகளுடன் அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடின.

நம்பீசனும், அவர் உதவியாளர்களும், அவர்களைத் தொடர்ந்து அந்த விசித்திர உருவங்களும் ஓடிய பிறகு சிறிது நேரம் கழித்து தான் போலீசார் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் குறை சொல்ல பார்த்தசாரதிக்குத் தோன்றவில்லை. அவருக்கே உள்ளே புகுந்து ஆட்டிப்படைத்த அந்த உருவம் வெளியேறிய பிறகு தான்  ஆசுவாசம் ஏற்பட்டது . உடம்பில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு சேதாரம் எதுவும் இல்லாமல் சரியாக இருக்கவே மேலும் நிம்மதி அடைந்தார். வேகமாக தியான மண்டபத்திற்குள் நுழைந்தவர் ஜொலிக்கும் விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்து கைகூப்பி நின்றார்.

ஜான்சனுக்கு ஏதோ மாயாஜால உலகில் இருப்பது போல் தோன்றியது. ஒரே நேரத்தில் பல ஆராய்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அறுவரும் அவரை நோக்கி கைகளை ஆட்டினார்கள். நம்பீசன் சொல்லி இருந்த 11.42 கெடுவுக்குள் ஈஸ்வரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் துடித்தார்கள். மணி அப்போது 11.40. கடிகாரத்தைக் காட்டி ஈஸ்வரைக் காட்டினார்கள். ஆனால் ஜான்சன் நகரவில்லை. ஒரு மிக இக்கட்டான தருணத்தில் மிகக் கச்சிதமாக இயங்க முடிந்த ஈஸ்வரையே அவர் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தத் தருணத்தில் இப்படி இயங்க அவன் எத்தனை ஜென்மங்களாகத் தன்னைத் தயார் செய்திருக்கிறானோ என்று தோன்றியது.... பேரமைதியுடன் அவன் விசேஷ மானஸ லிங்கத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.   
 
கணபதி உறக்கத்திலிருந்து மீண்டு தன்னையே திட்டிக் கொண்டான். ‘என்ன எப்பப் பாரு தூக்கம்? நல்லாவா இருக்கு?கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்த போது சற்று தள்ளி ஈஸ்வர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. “அட நம்ம ஈஸ்வர் அண்ணன்....”  பெருமையாய் சிவலிங்கத்திற்கு ஈஸ்வரை அறிமுகம் செய்து வைத்தான். “நீ உடுத்தி இருக்கற பட்டு வேட்டியை வாங்கிக் குடுத்தது இந்த அண்ணன் தான்.... ஆமா நீ என்ன இப்படி ஜொலிக்கிறே? இப்ப நீ ரொம்ப அழகா இருக்கே... என் கண்ணே பட்டுடும் போல இருக்கு...

அக்னி நேத்ர சித்தர் திடீர் என்று விசேஷ மானஸ லிங்கத்தின் பின்னால் காட்சி அளித்தார். உதயன் சுவாமி ஏற்படுத்தி இருந்த மந்திரத்தடை நம்பீசன் அந்த இடத்தின் உள்ளே வரவழைத்திருந்த துஷ்ட சக்திகளால் அறுபட்டுப் போயிருந்தது. அங்கு நின்ற அவர் ஹரிராமையும் ஈஸ்வருடன் வரும்படி சைகை செய்தார். ஈஸ்வரை நோக்கி ஓட யத்தனித்த கணபதியை அவர் தடுத்து நிறுத்தினார். கணபதிக்கு அவரைப் பார்த்தவுடன் அவர் ஒருமுறை கொண்டு வந்திருந்த அபூர்வ பூக்கள் ஞாபகம் வந்தது.  அவர் இப்போதும் கொண்டு வந்திருக்கிறாரா என்று அவர் கையைப் பார்த்தான். பூக்கூடையோ, பூக்களோ இல்லை. கொண்டு வந்திருந்தால் சிவனுக்கு வைத்திருக்கலாம்...

அக்னி நேத்ர சித்தரை அங்கே பார்த்த ஈஸ்வர் கைகளைக் கூப்பி தலை தாழ்த்தி வணங்கினான். ஹரிராமும் வணங்கினார். இதைப் பார்த்து கணபதியும் அப்படியே வணங்கினான். அக்னி நேத்ர சித்தர் மூவரையும் உடனடியாக விசேஷ மானஸ லிங்கத்தைத் தொடச் சொன்னார். மூவரும் தொட்டார்கள். கடிகார முள் 11.41ல் இருந்து விலகி 11.42ல் நின்றது. மூவர் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அவர்களின் உடலில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு மகாசக்தி ஊடுருவிப் படர்ந்தது. உடல் லேசாகி காற்றில் மிதப்பது போல் அவர்கள் உணர்ந்தார்கள்.

அந்தக் கணத்தில் அந்த இடத்தில் அக்னி நேத்ர சித்தர் மட்டுமல்லாமல் மற்ற பல சித்தர்களும் கூடி இருந்தார்கள். விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கிய கணத்தில் இருந்து இன்று வரை அதைப் பூஜித்து வந்த சித்தர்கள் அவர்கள். உடலோடு இருந்த சித்தர்கள் குறைவு. மற்றவர்கள் சக்தி ஸ்வரூபமாக அங்கு இருந்தார்கள். ஆனால் விசேஷ மானஸ லிங்கத்தைத் தொட்டபடி நின்றிருந்த மூவருக்கும் அவர்களைப் பார்க்க முடிந்தது. எல்லோருக்கும் முன்னால் சக்தி ஸ்வரூபமாக நின்றிருந்த ஒருவர் தலைக்கு மேல் நாகமும் தெரிந்தது. அவர் பதஞ்சலி மகரிஷியோ என்று ஹரிராம் வியந்தார். ஈஸ்வர் அந்த சித்தர்களை வணக்கத்துடன் பார்த்தான். கணபதி அவர்களை வேடிக்கை பார்த்தான்... “என்ன இது இத்தனை பேர் வந்திருக்காங்க!

ஜொலித்துக் கொண்டிருந்த விசேஷ மானஸ லிங்கம் வளர்ந்து பெரிதாக ஆரம்பித்தது.  எல்லோரும் பிரமிப்புடன் அதைப் பார்த்தார்கள்.  தியான மண்டபத்தின் மேல் சுவர் வரை சென்று முட்டிக் கொண்டு நின்ற விசேஷ மானஸ லிங்கம் அந்தக் கூரையையும் ஊடுருவிக் கொண்டு வளர்ந்ததாகத் தோன்றியது.  பார்த்தசாரதியும், அலெக்ஸியும், கியோமியும், ஜான்சனும் வெளியே ஓடிப் போய் பார்த்தார்கள். விசேஷ மானஸ லிங்கத்தின் மேல்பகுதி கூரையைத் தாண்டியும் வளர்ந்து கொண்டிருந்தது. அலெக்ஸிக்கு அவர் பார்த்த பழைய காட்சி நினைவுக்கு வந்தது. அன்று கண்டது கற்பனை அல்ல, நிஜம் தானோ? அப்படியானால் எங்கே சமுத்திரம்?

11.45க்கு வானையே தொட்டு நின்ற விசேஷ மானஸ லிங்கம் 11.46 க்கு நெருப்பு ஜூவாலையாக ஜொலித்து விட்டு மறைந்தே போனது. விசேஷ மானஸ லிங்கத்தின் அணுக்கள் பிரிந்து காற்றோடு கலந்து மறைந்தது போல் தோன்றியது. அக்னி நேத்ர சித்தரைத் தவிர மற்ற சித்தர்களும் மறைந்து போனார்கள். அவர்கள் உருவாக்கி பூஜித்த விசேஷ மானஸ லிங்கத்தை அவர்களே எடுத்துக் கொண்டு போனது போல இருந்தது. இப்போது ஹரிராம், ஈஸ்வர், கணபதி ஆகியோரின் கைகள் வெட்ட வெளியைத் தொட்டபடி இருந்தன. இப்போதும் அவர்கள் காற்றில் மிதப்பது போல் தான் உணர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் திகைப்போடு அக்னி நேத்ர சித்தரைப் பார்த்தார்கள்.


அக்னி நேத்ர சித்தர் புன்னகையுடன் சொன்னார். “இந்த விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கினதும், ஆயிரம் வருஷங்களுக்கும் மேலாய் சக்திகளை எல்லாம் ஆவாகனம் செய்து பூஜை செய்து புனிதம் குறையாமல் பாதுகாத்தும் வந்தது இந்தக் காலத்திற்காகத் தான். உலகம் எல்லா விதங்களிலும் சீரழிவின் அடிமட்டத்தில் போய் விடும் போது அதை அழிவில் இருந்து காப்பாற்றி மீட்கும் ஆத்மபலத்தை தகுதி வாய்ந்த மனிதர்களுக்குத் தரத்தான்.  ஆனால் அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை விட அதோட சக்திகளோட பிரம்மாண்டம் தான் பலரைக் கவர்ந்தது. அது இருக்கும் இடம் தெரிய ஆரம்பித்தவுடன் அதை தங்கள் வசமாக்க எந்தக் கீழ்மட்டத்திற்கும் இறங்க சிலர் தயாராகி விட்டார்கள். இனியும் அது தனி வடிவத்தோடு இருந்தால் அதுவே பேரழிவைக் கொண்டு வந்து விடும். எங்கள் நோக்கத்திற்கு எதிர்மாறான விளைவை நாங்களே பார்க்க வேண்டி வரும். அதனால் விசேஷ மானஸ லிங்கத்தோட உருவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் சாரத்தை தகுதி வாய்ந்த ஒவ்வொரு மனிதன் மனதிலும் தங்குகிற மாதிரி விட்டுப் போகிறோம். விசேஷ மானஸ லிங்கம் எங்கேயும் போய் விடவில்லை... உங்கள் மனதிலேயே தான் இருக்கிறது பாருங்கள்

ஹரிராமும், கணபதியும், ஈஸ்வரும் அவர் சொன்ன பிறகு தான் தங்கள் மனதிலேயே விசேஷ  மானஸ லிங்கம் ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார்கள். ஹரிராமும், ஈஸ்வரும் பிரமிப்புடன் பார்க்க, கணபதி மட்டும் செல்லமாக மனதில் அதனுடன் பேசினான். “நீ என்னை விட்டுப் போயிடலையா.. என் மனசுக்குள்ளே தான் இருக்கியா, சமத்து..

தியான மண்டப வாசலில் எல்லோருக்கும் பின்னால் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மொட்டைத் தலை முதிய துறவியும் தன் மனதில் விசேஷ மானஸ லிங்கம் ஜொலித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். எல்லா நேரங்களிலும் விசேஷ மானஸ லிங்கத்தோடு உரையாடும் அவரை வார்த்தைகளுக்கெட்டாத ஆனந்தம் ஆட்கொண்டது. கண்களில் பேரருவியாய் நீர் வழிய அவர் மற்றவர்கள் பார்த்து விசாரிக்கும் முன் அங்கிருந்து வேகமாக நடக்க ஆரம்பித்தார்...  

அக்னிநேத்ர சித்தர் தொடர்ந்தார். “இனி இந்த விசேஷ மானஸ லிங்கத்தை யாரும் திருட முடியாது. மறக்கலாம். மறுக்கலாம். ஆனால் இழக்க முடியாது இனி இந்த விசேஷ மானஸ லிங்கத்திற்கு வெளியே இருந்து ஆபத்து இல்லை. என்ன ஆபத்தானாலும் அது இனி உங்களுக்கு உள்ளே இருந்து தான் வர முடியும். மனிதன் தனக்கு வெளியே உள்ளதைத் தேடி பாடுபட்டு அடைவதில் காட்டும் வேகம் தனக்கு உள்ளே இருப்பதைக் கண்டுபிடித்து பயன்படுத்துவதில் காட்டுவதில்லை. தன்னிடம் இருக்கிறது என்பதாலேயே ஒன்றின் மதிப்பை குறைத்து மதிப்பிடும் மனிதனுக்கு அதுவே எல்லோரிடமும் இருக்கிறது என்று தெரிந்தாலோ மதிப்பும் போய் அதில் சுவாரசியமும் போய் விடலாம். அந்த அலட்சியம் தான் அவனுக்கு உண்மையான ஆபத்தாக இருக்க முடியும்...

அக்னி நேத்ர சித்தர் இவர்கள் மூலமாக மனிதகுலத்திற்கே செய்தி விடுப்பதாக பார்த்தசாரதிக்குத் தோன்றியது. அக்னி நேத்ர சித்தர் அந்த மூவரையும் ஊடுருவிப் பார்த்தபடி அந்த செய்யுள் வரிகளைக் கணீர் குரலில் பாடினார். 
தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம் மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்
மனிதனுக்கு உள்ளேயே இருந்தாலும் இந்த விசேஷ மானஸ லிங்கம் சுலபமாய் அவனுக்கு பயன்படுத்தக் கிடைத்து விடாது. தூய்மையான மனதோடும், அறிவோடும் சேர்ந்து முயற்சி செய்து உண்மையான ஞானம் பெற்ற பிறகு தான் அது அவனுக்குப் பயன்படுத்தக் கிடைக்கும். அது சாதாரண முயற்சிகளிலோ, அரைகுறை ஆர்வத்திலோ கிடைத்து விடாது. கிடைத்து விட்டால் அதற்குப் பின் அது அற்புதங்களை நிகழ்த்தும். மனிதனை சிகரங்களுக்கு உயர்த்தும். அப்போது தான் அவன் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். மனம் மாசுபட்டால் அறிவும் தீமைக்குத் தான் உதவும். அந்த நேரத்தில் அவன் ஞானமாய் நினைப்பது கூட விஷமாய் அழிவுக்குத் தான் பயன்படும்.

கடைசியாக அக்னி நேத்ர சித்தர் ஒரு எச்சரிக்கை விடுத்தார். “காலம் இனியும் மோசமாகும். மனிதம் இனியும் மங்கிப் போகும். தீமை தான் ஜெயிக்கிற மாதிரி இருக்கும். அதுவே ஆட்சி செய்யும். நன்மை பலவீனமாக நினைக்கப்படும் அதற்கு மதிப்பு மறுக்கப்படும். கேளிக்கைகள் பெருகும். மகிழ்ச்சிகள் குறையும். உண்மையான அன்பு அபூர்வமாகும். வெறுப்போ வளர்ந்து கொண்டே போகும். இது இந்த கலிகாலத்தின் லட்சணங்கள். இதை மாற்ற அவதாரங்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்களே அவதாரமாக மாறுங்கள். அதற்கு உதவ நாங்கள் உருவாக்கிக் கொடுத்து விட்டுப் போகும் இந்த விசேஷ மானஸ லிங்கம் உங்களுக்குள் காத்திருக்கும்...!

சொல்லி முடித்த அக்னி நேத்ர சித்தர் மறைந்து போனார். அந்த வார்த்தைகள் தியான மண்டபத்திற்குள் இருந்த ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாய் பதிந்தன. மொழி புரியாதவர்களுக்குக் கூட அக்னிநேத்ர சித்தர் அர்த்தத்தை மனதில் பதிய வைத்து விட்டுப் போனார். அவர் சொல்லி விட்டுப் போன செய்தியை மற்றவர்களுக்கு வார்த்தையாலும் வாழ்க்கையாலும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக அனைவருமே உணர்ந்தார்கள்.  அத்தனை பேரும் உள்முகமாக நமஸ்கரித்தார்கள். தியான மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த மெல்லிய ஓங்கார ஒலி அவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது.

*******

கடைசி தகவல்கள்
·         * அந்தக் கார்த்திகை தீப பௌர்ணமி நாளில் நள்ளிரவு வானில் பெரும் ஜோதியைப் பார்த்ததாகச் சிலரும், எரிநட்சத்திரம் பார்த்ததாகச் சிலரும், அடுத்த கிரகத்திலிருந்து வந்த விண்கலத்தைப் பார்த்ததாகச் சிலரும் சொல்ல மறுநாள் செய்தித்தாள்களில் அந்த செய்திகளே நிறைந்திருந்தன. பார்த்தது என்னவாக இருந்திருக்கும் என்ற விவாதங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒரு நாள் முழுவதும் தொடர்ந்தது.  பலரும் தங்களுக்குப் பிடித்த முடிவுகளுக்கு வந்து அதுவே சரி என்று வாதித்து மகிழ்ந்தனர்.
 
·         * பார்த்தசாரதி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த வழக்கை மூடி விட்டார். இந்த வழக்கில் முக்கிய பாத்திரமான விசேஷ மானஸ லிங்கம் மறைந்து போனது உள்பட பல விஷயங்களை அவரால் சட்டத்திற்கு விளக்க முடியாமல் போனது தான் அதற்கு முக்கிய காரணம். ஒரு சாதாரண வக்கீல் உடைத்து விடும்படியான பலவீனமான வழக்கைத் தொடர்ந்து கோர்ட்டில் கோமாளியாக அவர் விரும்பவில்லை. 

·         * குருஜி எங்கே போனார், என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவரது தீவிர பக்தர்கள் அவர் எங்காவது ஜீவசமாதி அடைந்திருப்பார் என்று நம்பினார்கள். அவர் இப்படி திடீர் என்று மறைந்து போனது ஆன்மிக உலகிற்குப் பேரிழப்பு என்று எல்லோரும் நினைத்தார்கள்.

·         * பார்த்தசாரதி வழக்கு தொடராததால் பசுபதி மரணத்தில் மகேஷ், தென்னரசு இருவரின் பங்கு வெளிவரவில்லை. அதனால் ஈஸ்வரின் குடும்ப நிம்மதி நிலைத்தது. ஆனால் ஆனந்தவல்லி மட்டும் தன் மகனைக் கொன்ற கூட்டத்தைக் கண்டுபிடித்தாகி விட்டதா என்று மறக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள். ஈஸ்வருக்கு அவள் அப்படிக் கேட்கும் போதெல்லாம் மனம் வலிக்கும்.

 * ஈஸ்வரின் திருமணத்திற்கு வந்த பார்த்தசாரதி அவள் கண்ணில் படாமல் இருக்க மறைந்து ஒதுங்கி இருக்க வேண்டியதாயிற்று. அன்று அதில் அவருக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. ஏனென்றால் அந்தத் திருமணத்தின் போது அவள் ஈஸ்வர் மீது வைத்த கண்களை அதிகம் திருப்பவில்லை. அவள் கணவர் நினைவும், அவள் திருமண நாள் நினைவும் வந்து அவள் அந்த நாட்களை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தாள்.


·         * கணபதிக்கு ஊருக்குப் போனவுடன் பிள்ளையாரிடம் சொல்ல நிறைய இருந்தது. சீடை சபலம் உட்பட ஒன்று விடாமல் சொன்னவன் கடைசியில் அக்னி நேத்ர சித்தர் சொன்ன தத்துவங்களை மட்டும் அப்படியே சொல்ல முடியாமல் தவித்து பிறகு சுருக்கமாய் சொன்னான். “அவரு எல்லாரையும் நல்லவங்களா இருங்க, நல்லது செய்யுங்க, சிவன் உங்களுக்கு வழிகாட்டுவார்னு சொன்னாரு... அவர் கிட்ட அந்த அபூர்வமான பூ கிடைச்சா எங்க பிள்ளையாருக்கும் குடுங்கன்னு கேட்க நினைச்சேன். ஆனா கேட்கறதுக்குள்ளே மறைஞ்சுட்டாரு.... எப்பவாவது மறுபடியும் வருவாருன்னு நினைக்கிறேன். வந்தால் அந்தப்பூ வாங்கி உனக்கு மாலை கட்டிப் போடறேன் சரியா?

குருஜி தன் சொத்துக்களை அவன் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார் என்று தெரிய வந்த போது கணபதி அழுதான். ‘அவருக்குத் தான் என் மேல் எவ்வளவு பாசம்’.  அவன் குருஜி திரும்ப வராமல் போகவே அவர் புகைப்படத்தை தன் வீட்டில் மாட்டி தினமும் வணங்கினான்.


·         * ஜான்சனுக்கு பண ரீதியாகப் பலன்கள் நினைத்த அளவு கிடைக்கவில்லை என்றாலும் மன ரீதியாக நிறையவே பாடங்கள் கிடைத்தன. அந்தத் திருப்தியில் அவர் தன் நாடு திரும்பினார். கியோமி ஜென் பௌத்தத்தின் ஆத்மாவையே இந்தியாவில் பார்த்து விட்டதாக குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் சொன்னாள். ரஷ்யாவிற்குத் திரும்பிய போது அலெக்ஸியும் ஆன்மிக மார்க்கத்திற்கு மாறி இருந்தார்.

·         * மகேஷிடம் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த அவன், தாயின் நச்சரிப்பு தாங்காமல் கடைசியில் ஈஸ்வர் விஷாலி இருவரும் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சம்மதித்தான். பரமேஸ்வரனுக்குத் தன் பேரன்கள் மிக நெருக்கமாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.


·        *  ஈஸ்வர் – விஷாலி வாழ்க்கைப் பயணம் இன்பமயமாக இருந்தது. சீக்கிரமாய் குழந்தை பெற்றுத் தரச் சொல்லி ஆனந்தவல்லி செய்து கொண்டிருக்கும் நச்சரிப்பைத் தவிர அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. 

·         * பாபுஜி ஹரிராமின் மந்திரக்கட்டில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் மன உளைச்சலில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அவர் மும்பையின் மிகப் பெரிய மனநல மருத்துவரிடம் ரகசியமாய் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரது வெளிநாட்டு நண்பர்களும் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்து இப்போது குணமாகி வருகின்றனர்.

·        *  ஹரிராம் காஷ்மீரத்திற்கே திரும்பிப்போனார். ஈஸ்வரும் அவரும் முடிந்த வரை நன்மைகளை உலகத்தில் பரப்புவது என்று முடிவெடுத்திருந்தார்கள். நல்ல விதைகளைத் தூவி வைப்போம். அதில் சிலதாவது விருட்சமாகும். அந்த விருட்சங்கள் நிறைய விதைகளை உருவாக்கும்.... அந்த விதைகள் பல விருட்சங்களை உருவாக்கும்... இப்படித் தான் நன்மைகளை உலகில் பெருக்கியாக வேண்டும் என்று நம்பினார்கள். அதற்கு விசேஷ மானஸ லிங்கம் தங்களுக்கு உதவும் என்று நம்பினார்கள்.

அதற்கு ஆரம்பமாக “மனிதனுக்குள் மகாசக்திகள்என்ற நீண்ட உளவியல்-ஆழ்மனசக்தி ஆராய்ச்சிக் கட்டுரையை ஈஸ்வர் வெளியிட்டான். மனிதனின் மனதில் அனைத்தையும் உருவாக்கவும், காக்கவும், அழிக்கவும் முடிந்த மகாசக்திகள் உறைந்திருப்பதாக எழுதிய அவன் அவை எப்படி வேலை செய்கின்றன என்றும் விவரித்திருந்தான். அது மனோதத்துவ அறிஞர்களால் “மனோதத்துவ விஞ்ஞானத்தின் மைல்கல்என்று சிலாகிக்கப் பட்டது. உளவியல் துறைக்கும் நோபல் பரிசு இருக்குமானால் கண்டிப்பாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஈஸ்வருக்கு வாங்கித் தந்திருக்கும் என்று அவர்கள் கருதினார்கள். பல தத்துவஞானிகள் அதை உயர்ந்த தத்துவ ஞானத்தின் மனோ தத்துவப் பிரதிபலிப்பு என்றார்கள். உலகெங்கிலும் பெரும் வரவேற்பு பெற்ற அந்த ஆராய்ச்சிக் கட்டுரை சிந்திக்கப்படவும், பேசப்படவும் ஆரம்பித்தது. ஒரு ஞானப் பேரலை ஆரம்பிக்கப்பட்டது....  


·      *   பாபுஜியின் தந்தை மகனுக்குப் புத்தி சொல்லி கட்டாயப்படுத்தி அந்த தியான மண்டபத்தில் விசேஷ மானஸ லிங்கம் இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதைக் கோயிலாக மாற்றி விட்டார்.  அங்கு ஒவ்வொரு கார்த்திகை தீப பௌர்ணமி நாளிலும் விசேஷ பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். ஹரிராம், ஈஸ்வர், கணபதி மூவரும் அந்த ஒரு நாளில் கண்டிப்பாக வந்து பூஜைகளில் பங்கெடுக்க வேண்டும் என்று அவர்களிடம் தனித்தனியாக வேண்டிக் கொண்டார். அவர்களும் சம்மதித்தார்கள். விசேஷ மானஸ லிங்கம் தன் தனியுருவை விட்டு, பல மகாசித்தர்களின் முன்னிலையில், மனிதனின் மனதில் பிரதிஷ்டையான அந்த மகத்தான நாளில் சக்தி வாய்ந்த அலைகள் அங்கு உலவுவதைப் பலர் உணர்ந்தார்கள். அதை உணர முடிந்தவர்களுக்கு தங்கள் மனதில் உள்ள விசேஷ மானஸ லிங்கத்தையும் அடையாளம் காண முடிந்தது.

அப்படி உணர முடிந்தவர்களுக்கு அதனுடன் சேர்ந்தே அக்னிநேத்ர சித்தர் விடுத்த எச்சரிக்கையையும் நம்பிக்கையையும் கூட உணர முடிந்தது. “காலம் இனியும் மோசமாகும். மனிதம் இனியும் மங்கிப் போகும். தீமை தான் ஜெயிக்கிற மாதிரி இருக்கும். அதுவே ஆட்சி செய்யும். நன்மை பலவீனமாக நினைக்கப்படும் அதற்கு மதிப்பு மறுக்கப்படும். கேளிக்கைகள் பெருகும். மகிழ்ச்சிகள் குறையும். உண்மையான அன்பு அபூர்வமாகும். வெறுப்போ வளர்ந்து கொண்டே போகும். இது இந்த கலிகாலத்தின் லட்சணங்கள். இதை மாற்ற அவதாரங்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்களே அவதாரமாக மாறுங்கள். அதற்கு உதவ நாங்கள் உருவாக்கிக் கொடுத்து விட்டுப் போகும் இந்த விசேஷ மானஸ லிங்கம் உங்களுக்குள் காத்திருக்கும்...!

·         பல புதிய பாதைகளும், விழிப்புணர்வுகளும் அங்கு உதயமாக ஆரம்பித்தன...!



(முற்றும்)

ஒவ்வொரு வாரமும் காத்திருந்து இந்த நாவலைப் படித்துப் பாராட்டி ஆதரவு தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் பல. பரம(ன்) இரகசியம் நாவல் அச்சில் வெளி வந்தும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 2016 ஜூன் மாதம் இரண்டாம் பதிப்பும் வெளியாகி விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. இந்த நாவலை புத்தக வடிவில் கையில் வைத்து படித்து மகிழ விரும்புவோர் 9600123146 எண்ணில் அல்லது blakholemedia@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். 

என்.கணேசன்

Monday, March 24, 2014

மாயையைக் கடப்பது எப்படி?


கீதை காட்டும் பாதை 30

முன்பே சத்துவ ராஜஸ தாமஸ குணங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்திருக்கிறோம். மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்ள பார்ப்போம்.

நம் வேதாந்திகள் மனோதத்துவ சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள். அவர்கள் மனிதனின் மனநிலைகளை இந்த மூன்று பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள்.

சத்துவ குணம் சாந்தமயமானது. நற்குணங்களை உடையது. ஆன்மீகம் மற்றும் மேலான விஷயங்களில் ஆர்வம் உள்ளது.

ரஜோ குணம் ஆசை மயமானது. அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தேவையான துடிப்பும், வேகமும், உழைப்பும் கொண்டது. இங்கு நன்மை தீமைகளின் கணக்குகள் இல்லை. விருப்பு வெறுப்புகளின் அடிப்படையாகக் கொண்ட துடிப்பான மனநிலையே இங்கு பிரதானம். 

தாமஸ குணம் சோம்பல் மயமானது. ஆசைகள் இருந்தாலும் துடிப்போ வேகமோ இல்லாதது. தானாக எல்லாம் நடந்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது.  எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டே சும்மா இருந்து கொள்வதே சுகம் என்று இருப்பது.

நாம் யாரேயானாலும் அந்த மூன்றில் ஏதாவது ஒரு பிரிவில் நிரந்தரமாய் இருந்து விடுவது மிக அபூர்வம். ஆனால் மூன்று குணங்களிலும் மாறி மாறி சஞ்சரித்துக் கொண்டே இருப்போம். ஒரு சமயம் சத்துவ குணத்தில் இருக்கின்ற நாம், முக்கிய உலகியல் தேவைகள் ஏற்படும் போது சடாரென்று ரஜோ குணத்திற்கு மாறிவிடக் கூடும். வேறொரு சமயம் சோம்பலின் பிடியில் சிக்கி தமோ குணத்தில் தங்கி, செயல்புரியவும் மனமில்லாமல் இருக்கக் கூடும். சூழ்நிலைகள் மாறுகையில் மறுபடி மாறவும் கூடும்.

இப்படி இந்த மூன்று வகை குணங்களில் தான் இறைவன் தன் மாயையின் வலையைப் இவ்வுலகில் பின்னி இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதைப் பார்ப்போம்.

சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடமிருந்தே பிறந்தன.  அவை என்னுள் இருக்கின்றன. ஆனால் நான் அவற்றுள் இல்லை.

இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய் இருக்கின்றது.  இம்முக்குணங்களுக்கு மேற்பட்டவனும், அழியாத இயல்பும் கொண்ட என்னை உணராதிருக்கிறது.

எதுவும் நமக்குள்ளே இருப்பதற்கும், அதற்குள்ளே நாம் இருப்பதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் நாம் எஜமானனாக இருக்கிறோம். கட்டுப்பாடு நம்மிடம் இருக்கிறது. பின்னதில் நாம் அடிமையாகி விடுகிறோம்.  அது நம்மைக் கட்டுப்படுத்தி வைத்து விடுகிறது. இந்த நுணுக்கமான விஷயத்தைப் புரிந்து கொண்டால் நிறைய பிரச்னைகளில் இருந்து நாம் நீங்கி விடுகிறோம். இங்கு ஸ்ரீகிருஷ்ணரும் சூட்சுமமாக அதைப் புரிய வைத்து விடுகிறார்.

உலகமென்னும் நாடக மேடையில் வேஷம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நாம் இந்த முக்குணங்களின் பிடியில் மயங்கிக் கொண்டிருக்கிறோம். சிரிப்பு, சந்தோஷம், தேடல், ஓட்டம், துடிப்பு, வெறுப்பு, துக்கம், ஆசை, விரக்தி, சோம்பல் என பலப்பல உணர்வுகளில் மாறி மாறி சஞ்சரித்து அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறோம். எதிலும் நிரந்தரமில்லை. எதிலுமே திருப்தியுமில்லை. பல நேரங்களில் எல்லாமே போதும் போதும் என்றாகி விடுகிறது. இதிலிருந்து மீளத்தான் என்ன வழி?

ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

இந்த முக்குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யார் எல்லாம் சரணடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

இது இறைவனுடைய மாயை. இந்த மாயப் பெருங்கடலைக் கடக்க வேண்டுமென்றால் இறைவனைச் சரணடைவது தான் ஒரே வழி. இதையே தான் திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார்:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இதையே வினோபாவும் அழகாகச் சொல்கிறார். “பிரஹதாரண்யக உபநிடதத்தில் பேரிகை உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரே பேரிகையில் இருந்து வெவ்வேறு நாதங்கள் எழுகின்றன. சிலவற்றைக் கேட்க நடுக்கமாய் இருக்கிறது. சிலவற்றைக் கேட்டதுமே துள்ளி குதிக்கத் தோன்றுகிறது. இந்த எல்லா பாவங்களையும் வெல்ல வேண்டுமானால் நாம் பேரிகை வாசிப்பவனைக் கையில் போட்டுக் கொள்ள வேண்டும். அவன் நம் வசமானதும் எல்லா நாதங்களும் நமக்குக் கட்டுப்பட்டு விடும். அதைத் தான் பகவான் ‘என்னைச் சரணடைபவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்என்று சொல்கின்றார்.

மெய்ஞானம் என்பது மனதைக் கடந்தது. மனதைக் கடக்காத வரையில் மெய்ஞானம் சாத்தியமில்லை. எண்ணங்கள் நின்று போகும் அற்புத கணத்தை ஒரு கண நேரமாவது உணர்ந்தவர்களுக்கு அது புரியும். அந்த ஒரு கண நேரத்தில் நமக்குக் சத்திய தரிசனம், ஒரு பேரின்ப அனுபவம் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதது. மனமும் மௌனமாகும் அற்புத தருணம் அது. அதுவே பிரபஞ்சத்துடன், இறைவனுடன் நேரும் சந்திப்பு.

ஒரு கண நேர அனுபவமே இந்த அளவு சிறப்பு என்றால் பின் ஏன் நாம் அதைத் தொடர்வதில்லை. மறுபடியும் மாயை தன் குணங்கள் என்னும் வலையில் நம்மைப் பிடித்து இழுத்துக் கொள்வதால் தான். நான் என்ற ஈகோ போகும் வரை இந்த முக்குணங்களின் கைதிகள் தான். நான் என்ற ஈகோ போய் இறைவனை சரணடையும் போது தான் முக்குணங்களின் பிடி விலகி அந்த இறைசக்தியுடன் நாம் ஒன்றுபடுகிறோம்.   

அப்படி சரணடைய விடாமல், இறைசக்தியுடன் ஒன்றுபட விடாமல் தடுப்பது எது? அறியாமை தான். அடுத்ததாக அதையும் விளக்குகிறார்:
மாயையினால் அறிவிழந்தவர்களும், அசுரத் தன்மை உடையவர்களும், மனிதர்களில் தாழ்ந்தவர்களும், இழிவான செயல்களைச் செய்பவர்களுமான அறிவிலிகள் என்னை சரணடைவதில்லை.

மாயையின் உயிர்நாடியே அறியாமை தான். முழுமையான சிந்தனையும், அப்படி சிந்தித்து முடிவுக்கு வருதலும் மாயையில் இல்லை. அரைகுறை சிந்தனைகள், அரைவேக்காட்டு முடிவுகள் இருந்து அதையே முழுமை என்று நம்ப வைத்து தன் நாடகத்தை மாயை நடத்தும்.

சரணடையாதவர்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் அடையாளம் காட்டும் மனிதர்கள் எல்லாரும் அவரே சொல்கிற மாதிரி அறிவிலிகள் தான். அசுரத்தன்மை உருவாவதும், தரம் தாழ்ந்து நடப்பதும், இழிவான செயல்களைப் புரிவதும் எல்லாமே மாயையின் செயலால் சரியான அறிவின் வழிகாட்டுதல் இல்லாமல் போவதால் தான். அது தன் இருள் மிகுந்த வழிகளிலேயே ஒருவரை பயணிக்க வைக்கும். எத்தனை தான் கஷ்டப்பட்டாலும் அதிலிருந்து விலகி ஒளி உள்ள பாதைக்கு வர விடாது. இருட்டில் கற்பனைகளுக்கு இடம் உண்டு, பொய்யான முடிவுகளுக்கும் வழியுண்டு. ஒளியிலோ எல்லாம் தெள்ளத் தெளிவாகத் தெரியும் போது கற்பனைக்கு இடமேது. தவறான முடிவுகளுக்கு வாய்ப்பேது?

ஒளிமயமான இறைவனை அண்டி, மாயையின் பிடியில் இருந்து விலகி நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வோமா?

பாதை நீளும்....

-          என்.கணேசன்

  

Thursday, March 20, 2014

பரம(ன்) ரகசியம் – 89


தற்கு மேல் ஈஸ்வர் தாமதிக்கவில்லை. ஹரிராம் தனக்கு அனுப்பியதாய் தோன்றிய ஆபத்து செய்தியையும், தனக்கு இப்போது தெரிந்த காட்சியையும் அவன் பார்த்தசாரதியிடம் தெரிவித்தான். பார்த்தசாரதிக்கு விசேஷ மானஸ லிங்கத்தின் மீதும், அந்த சித்தர் மீதும் கோபம் வந்தது. இப்படி காட்சி காண்பித்து மற்றவர்களைத் திகிலில் ஆழ்த்துவதை விட தாங்களே செய்ய வேண்டியதைச் செய்து விடலாமே....

உடனே பாபுஜியின் இடத்திற்குப் போவது என்ற முடிவெடுத்தவுடன் பார்த்தசாரதி தனக்கு இந்த வழக்கில் உதவும் இரண்டு திறமையான போலீஸ்காரர்களையும் ஆலோசனைக்கு அழைத்தார். நால்வரும் சேர்ந்து ஆலோசித்தார்கள். 

மகேஷ் அந்த இடத்தில் மெயின் கேட்டில் இரண்டு செக்யூரிட்டிகள் தவிர வேறு காவல் இல்லை என்று சொல்லி இருந்தான்.  காவலுக்கு ஆட்களை அதிகம் கூட்டிக் கொண்டே போனால் இந்த விசேஷ மானஸ லிங்கம் பற்றிய விவரங்கள் வெளியே கசிந்து விடும் என்று அவர்கள் பயந்ததாக மகேஷ் தெரிவித்திருந்தான். தாங்கள் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை என்று அவர்கள் நம்பினார்கள் என்றான். ஆட்களுக்குப் பதிலாக வலிமையான நாய்களைத் தருவிக்கலாம் என்று நாய்ப்பிரியரான பாபுஜி ஆசைப்பட்ட போது குருஜி நாய்கள் குரைப்பது தியானத்தைக் குலைக்கும், ஆராய்ச்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று தடுத்து விட்டதாகவும் மகேஷ் சொன்னான். அந்த இடத்தில் பாபுஜி, ஜான்சன், அலெக்ஸி, கியோமி, ஹரிராம், கணபதி ஆகியோருடன் வேறு மூன்று வேலையாட்கள் மட்டும் தான் இருக்கிறார்கள், பாபுஜி ஒருவரிடம் தான் துப்பாக்கி உள்ளது, அங்குள்ள காம்பவுண்ட் சுவர் சுமார் எட்டு அடிகள் இருக்கும், பாபுஜி வெளியில் இருந்து தங்களுக்கு வரும் ஆபத்துக்கள் பற்றிய தகவல்கள் சொல்லவும் மற்ற பல வேலைகளுக்கும் தனியார் துப்பறியும் நிபுணர்களைப் பயன்படுத்துகிறார் முதலான தகவல்களை மகேஷ் தெரிவித்திருந்தான்...

ஆலோசித்து கடைசியில் போலீஸ்காரர்கள் ஆறு பேர் தங்களுடன் வந்தால் போதும் என்று பார்த்தசாரதி முடிவெடுத்தார்.

ஈஸ்வர் கேட்டான். “அங்கே பாபுஜியின் ஆள்கள் தான் குறைவே ஒழிய அவர் சொன்னதைச் செய்ய ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஆள்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர் ஒரு போன் செய்தால் போதும் அவர்கள் வந்து விடுவார்கள் என்று மகேஷ் சொன்னானே. நம் ஆட்கள் ஆறு பேர் போதுமா?

பார்த்தசாரதி சொன்னார். “அந்த ஆள்கள் மறைமுகமா அவருக்கு என்ன உதவி வேணும்னாலும் செய்யலாம். ஆனா போலீஸோட நேரடியா மோத வர மாட்டாங்க. அப்படி செஞ்சா அவங்க லைசென்ஸ் கேன்சல் ஆயிடும். அதுக்கப்புறம் அவங்க அந்த தொழிலே செய்ய முடியாது. அதனால அவங்கள பத்தி கவலைப்பட வேண்டியதில்லை.  நம்ம ரெண்டு பேர் கூட ரெண்டு போலீஸ்காரங்க உள்ளே வரட்டும். மத்த நாலு பேர் வெளியே யாரும் தப்பிச்சுடாமல் பார்த்துகிட்டு காவலுக்கு நிக்கட்டும். நமக்கு ஏதாவது பிரச்சினைன்னா மட்டும் அவங்கள்ல ஒன்னு ரெண்டு பேரை உள்ளே கூப்பிட்டுக்கலாம்....

அந்த அவசரத்திலும் ஈஸ்வர் கிளம்பும் முன்னால் நம்பீசன் பற்றிய தகவல்கள் ஏதாவது இருக்கிறதா என்று இண்டர்நெட்டில் சிறிது பார்த்துக் கொண்டு போவது நல்லது என்று நினைத்தான். இப்போதைய ஆபத்து நம்பீசனால் வந்திருப்பதாக இருந்தால் அவரைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்று அவன் உள்ளுணர்வு அவனை எச்சரித்தது.  இணையத்தில் நம்பீசன் பற்றிய தகவல்களைத் தேடினான்.

நவீன காலத்து மந்திரவாதியாக அவர் இணையத்தில் பிரபலமாக இருந்தார். பணத்தில் குறியாக இருப்பவர் என்றாலும் ஏற்றுக் கொண்ட காரியத்தைச் சிறப்பாகச் செய்து கொடுப்பவர் என்ற பெயரையும் அவர் எடுத்திருந்தார். நம்பீசனை சக்தி வாய்ந்த மந்திரவாதி என்று பலரும் சொன்னாலும் சில சில்லறை அபூர்வ சக்திகளை தன் வசப்படுத்திக் கொண்டவர் என்பது மட்டும் ஈஸ்வருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் எந்த மாதிரி இயங்கக் கூடியவர், அவர் சிறப்பு சக்திகள் என்னென்ன, அவரைப் பற்றி மற்றவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டான். அவர் திறமையை நேரில் பார்த்தவர்கள் அவர் என்ன செய்தார் எப்படி செய்தார் என்று வர்ணித்ததை ஈஸ்வர் கவனமாகப் படித்தான். நம்பீசன் பயன்படுத்தும் யுக்திகள் ஈஸ்வருக்குத் தெளிவாகவே புரிந்தன.

அவன் தன் லாப்டாப்பில் நம்பீசனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கையில் பார்த்தசாரதி தன்னுடன் இருந்த போலீஸ்காரர்களில் ஒருவரைத் தனியாக அழைத்துச் சென்று தாங்கள் போன பிறகு மகேஷை ரகசியமாய் கண்காணிக்க ஏற்பாடு செய்யச் சொன்னார்.

அவர்கள் ஒரு போலீஸ் ஜீப், இரண்டு கார்களில் சரியாக இரவு 10.13 மணிக்குக் கிளம்பினார்கள். மூன்று போலீஸ்காரர்களுடன் ஒரு கார் முன்பும், மூன்று போலீஸ்காரர்களுடன் போலீஸ் ஜீப் பின்னாலும் வர நடுவில் சென்ற காரில் பார்த்தசாரதியும் ஈஸ்வரும் இருந்தார்கள். 

மகேஷ் இருந்த ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பிய அவர்கள் தோட்ட வீட்டை நோக்கிச் செல்லாமல் அதற்கு நேரெதிர் திசையில் போக ஆரம்பித்தவுடன் எங்கு செல்கிறார்கள் என்பதை பாபுஜி நியமித்திருந்த துப்பறியும் ஆட்கள் ஊகித்தார்கள். ஒரு மணி நேரத்திற்குள் போலீஸ் அங்கு போய்ச் சேர்ந்து விடலாம் என்பதைத் தெரிவிக்க அவருக்குப் போன் செய்தார்கள். எத்தனை முறை அவர்கள் முயற்சித்தும் “ஸ்விட்ச்டு ஆஃப்”  தகவல் தான் வந்து கொண்டிருந்தது. 


போகும் போது பார்த்தசாரதி தன் சந்தேகத்தை ஈஸ்வரிடம் கேட்டார். “அந்த சிவலிங்கம் சக்தி வாய்ந்த்துன்னு சொல்றீங்க. அப்படி இருக்கறப்ப அது இருக்கிற இடத்துல இந்த நம்பீசன் மாதிரி ஆள்களோட மந்திரவாதம் எல்லாம் எப்படி பலிக்கும்

ஈஸ்வர் சொன்னான். “நேராக மோதாத வரை ஒரு மகாசக்தி அதுக்கு கீழான சக்திகளுக்கு எதிரானதல்ல. பெரும்பாலும் நம்பீசன் தன்னோட மந்திரவாத வேலையை எல்லாம் விசேஷ மானஸ லிங்கம் முன்னாடி உட்கார்ந்து செய்ய மாட்டார். அதுக்கு எதிராகவும் எதுவும் செய்ய மாட்டார்...

இந்த சக்திகள் விஷயத்தில் ஈஸ்வருக்குத் தெளிவான அபிப்பிராயங்கள் இருப்பதாக பார்த்தசாரதிக்குத் தோன்றியது. ஆனால் அவருக்கு அவை நிறையவே குழப்பத்தைத் தந்தன. சரி... ஹரிராமும் சக்தி வாய்ந்தவர்னு சொல்றீங்க. அவர் இப்ப அந்த சிவலிங்கத்துக்கு சம்பந்தப்பட்டவர் போலவும் தோணறார். அப்படி இருக்கிறப்ப அவரையும் மீறி எப்படி நம்பீசனால் ஆபத்தை ஏற்படுத்த முடியும்?

ஈஸ்வர் சொன்னான். “ஒரு மனிதனுக்கு எவ்வளவு சக்தி இருந்தாலும் அவன் அதைப் பயன்படுத்தும் தயார்நிலையில் இருந்தால் தான் அது அவனுக்கு உதவும். அவர் அப்படி தயார்நிலையில் இல்லாமல் கொஞ்சம் அசந்திருக்கலாம். அந்த நேரமாய் பார்த்து நம்பீசன் அவர் மேல் எதாவது சக்திப்பிரயோகம் செய்திருக்கலாம். அப்படி சக்திப்பிரயோகம் மட்டுமல்ல,  எத்தனையோ பலவீனங்கள் நம்மை ஆக்கிரமிப்பதே கூட நாம அசந்திருக்கும் போது தான்.... ஒரு விதையாய் மனசில் விழுந்து மளமளன்னு மரமாய் வளர்ந்து நம்மைப் பாடாய் படுத்தறதெல்லாம் அப்படித் தான். அதனால தான் நம் முன்னோர்கள் ‘முழுமையான விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்காங்க. புத்தமதம், தாவோ மதம் எல்லாத்துக்கும் அது தான் அஸ்திவாரமே!....

பார்த்தசாரதிக்கு ஏதோ புரிகிற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. நம்பீசன் சக்திப்பிரயோகம் செய்திருக்கலாம்னு சொல்றீங்களே அதுல இருந்து ஹரிராம் தன்னை விடுவிச்சுக்கவே முடியாதா?

நம்பீசன் மாதிரி ஆள்களால செய்ய முடிஞ்ச சக்திப் பிரயோகம் குறுகிய காலத்துக்கு தான் சக்தி வாய்ந்ததாய் இருக்கும். சில மணி நேரங்கள்ல இருந்து அதிகபட்சமாய் ஒன்னு ரெண்டு நாள் வரை அந்த சக்தி வேலை செய்யலாம். வேறொரு சக்தி வாய்ந்த ஆளால் அவங்களை விடுவிக்க முடியும். இல்லைன்னா அந்த குறிப்பிட்ட காலம் முடிஞ்சு அது தானாவே அவிழ்ந்துடும். இதுவே உதயன் சுவாமி மாதிரி அதீத சக்தி படைச்ச ஆள்களால ஏவப்படற சக்திப்பிரயோகமாய் இருந்தால் விடுவிச்சிக்கறது சிரமம் தான்....

உதயன் சுவாமியைப் பற்றி ஈஸ்வர் சொன்னவுடன் பார்த்தசாரதிக்கு அந்த பனிமூட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது. ரிஷிகேசத்தில் இருந்து கொண்டு தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பனிமூட்டத்தை ஏற்படுத்தியது அவர் தான் என்று மகேஷ் சொன்னதாக ஈஸ்வர் அவருக்குத் தெரிவித்திருந்தான். எப்படிப்பட்ட சக்திகளை எல்லாம் நம்மவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று பிரமிப்பாக இருந்தது. அந்த உதயன் சுவாமி குருஜியின் நண்பராம்.... குருஜி மட்டும் மனம் மாறாமல் இருந்திருந்தால் விசேஷ மானஸ லிங்கம் எதிரிகள் வசமாகி இருக்கும் என்று ஈஸ்வர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரை மனம் மாற வைத்தது கணபதியா, மனசாட்சியா, சேர்த்து வைத்திருந்த ஞானமா இல்லை விசேஷ மானஸ லிங்கமே தானா?..... அவர் எங்கே போய் விட்டார்?

ஸ்வரையும் மந்திரசக்தியால் கட்டிப்போட முயற்சி செய்து கொண்டிருந்த நம்பீசன் அந்த சக்தி போதவில்லை என்பதை உணர்ந்தார். அவர் ஆரம்பத்தில் அவனைப் பார்த்த போது மிகவும் தளர்ச்சியோடு தெரிந்ததால் அதற்கேற்றாற் போல குறைவான சக்தியையே அவர் பிரயோகித்திருந்தார். ஆனால் அந்த சக்தி அவனை சேர்வதற்குள் அவன் சுதாரித்து விட்டிருந்தான். இப்போதோ  ஹோமகுண்டலத்தில் தெரிந்த அந்த வெளி மனிதனின் உருவம் நெருங்க ஆரம்பித்திருப்பதை உணர்ந்தார். அதை பாபுஜியிடம் சொல்லலாம் என்று திரும்பினால் பாபுஜி காணவில்லை.

பாபுஜியை அந்த அறுவரும் பேசச் சொல்லி நச்சரித்து சைகை காட்டிக் கொண்டிருந்ததால் அவர் நம்பீசனைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் தனதறைக்குச் சென்று  அவர்களிடம் சுருக்கமாகப் பேசிவரச் சென்றிருந்தார். அப்படிப் பேசிய போது தான் எகிப்தியர் ஒரு நல்ல செய்தியைச் சொன்னார். அவர்கள் ஆதரிக்கும் அந்த எகிப்திய அரசியல்வாதிக்கு எதிராக தினம் பேசிக் கொண்டிருந்த வேறொரு செல்வாக்கான அரசியல்வாதி இப்போது ஆதரவாகப் பேச ஆரம்பித்து விட்டாராம். இரண்டே பேர் தான் இப்போது இந்த ஆராய்ச்சியில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் முயற்சி ஓரளவு பலனளிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை அறிந்த போது பாபுஜிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

ஜான்சன் தியான மண்டபத்திற்கும், நம்பீசன் ஹோமம் நடத்தும் இடத்திற்குமாக அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தார். கியோமி, அலெக்ஸி இருவரும் ஆல்ஃபா எட்டு ஒன்பது சிபிஎஸ்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிராம் செயலற்றுப் போயிருந்தாலும், விசேஷ மானஸ லிங்கத்தில் லயிக்க முடியாமல் போயிருந்தாலும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு ஆல்ஃபா ஒன்பதிற்கு வந்து தனிப்பட்ட தியானத்தில் லயிக்க ஆரம்பித்திருந்தார். அவர் மறுபடி ஆழமாக தீட்டா அலைகளுக்கே போனாலும் இந்த ஆராய்ச்சிக்கு எதிராக செயல்பட முடியாது என்பதில் ஜான்சனுக்கு சந்தேகமே இல்லை.

தூரத்தில் வந்து கொண்டிருந்த ஜான்சனைப் பார்த்தாலும் அவரை அழைத்து ஆங்கிலத்தில் தகவல் தெரிவிக்கும் அளவுக்கு நம்பீசனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. அதனால் அவரிடம் சொல்ல முயற்சிக்காமல் அந்த வெளி மனிதனை செயலற்றுப் போக வைக்க அதிக சக்தியைப் பிரயோகிக்க ஆரம்பித்தார். பாபுஜி வந்தால் தன் மந்திர சக்தியால் அந்த வெளிமனிதனை இங்கேயே வரவழைத்திருப்பதாகச் சொல்லி அதற்கும் ஒரு தொகை வசூலித்து விடலாம் என்ற எண்ணம் வந்த போது அவரை அறியாமல் அவர் ஹோம குண்டத்தைப் பார்த்துப் புன்னகைத்தார்.

திடீர் என்று ஏதோ ஒரு அன்னிய சக்தி தன்னைத் தீண்ட வருவது போல் ஈஸ்வர் உணர்ந்தான். இந்த ஒரு கணம் கண்டிப்பாக வரும் என்று அவன் முன்பே எதிர்பார்த்திருந்தான். அப்படி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஆழ்மனதில் முன்பே ஒரு ப்ரோகிராமும் (program) போட்டிருந்தான். எந்த துஷ்ட சக்தி அவனை நெருங்கினாலும் விசேஷ மானஸ லிங்கத்தின் அருளால் அவனைச் சுற்றி உள்ள ஆரா (aura) மண்டல நிலையிலேயே அது தடுக்கப்பட வேண்டும் என்று வேண்டி அப்படி நடக்க சக்தி வாய்ந்த கற்பனைக் காட்சிகளையும் உருவகப்படுத்தி தோட்ட வீட்டின் பூஜை அறையிலேயே பயிற்சி மேற்கொண்டிருந்தான்.   அந்த ப்ரோகிராம் வேலை செய்தது. அந்த அன்னிய சக்தி அங்கேயே நின்று பலமிழந்து காற்றில் கரைந்தது.

ஈஸ்வர் அருகில் இருந்த பார்த்தசாரதியைக் கூர்ந்து பார்த்தான். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அவருக்கு எதிராக எந்தப் பிரயோகமும் நடக்கவில்லை.... நடந்திருந்தால் அவர் முகத்திலேயே சின்ன வித்தியாசமாவது தெரிய ஆரம்பித்திருக்கும்.

அவரையும் எச்சரித்து வைப்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை அங்கே சென்று விட்ட பிறகு ஏதாவது நெருங்கினாலும் அவர் சுதாரிப்பார்.... இப்படி மகேஷ் மூலம் விஷயம் தெரிந்து அந்த இடத்துக்கு நேரில் போக வேண்டி இருக்கும் என்பது எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வு ஆனதால் அவருக்குத் தற்காப்பு ஏற்படுத்த எதாவது செய்ய வேண்டி வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. குறுகிய காலத்தில் எந்த அளவு அவரால் கற்றுத் தேற முடியும் என்பது அவனுக்கு நிச்சயமில்லை....

மெள்ள சொன்னான். “சார், அந்த நம்பீசன் ஏதாவது மந்திரஜாலத்தை நம் கிட்டே கூட காண்பிக்கலாம்....

“என்ன செய்வான்?

“திடீர்னு நம்மைக் கட்டிப் போட ஒரு மந்திரப் பிரயோகம் செய்யலாம். இல்லாட்டி ஏதோ ஒரு துஷ்ட சக்தியை ஏவி நம்மள பயமுறுத்தப் பார்க்கலாம்....

பார்த்தசாரதிக்கு ஆரம்பத்தில் இதில் எல்லாம் நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் இந்த வழக்கிற்கு வந்த பின் எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்று அவருக்குப் புரியவில்லை. “சரி... அப்படி ஏவி விட்டால் நாம என்ன செய்யணும்?

“முதல்ல பயப்படாமல் இருக்கணும். எந்த துஷ்ட சக்தியும் நம்மை ஆட்டிப்படைக்க நாம அனுமதிக்கறதே நம்ம பயத்தாலயும் அது மேல வைக்கிற நம்பிக்கையாலயும் தான். நம்ம பயமும், அந்த நம்பிக்கையும் தான் உண்மையில் அதோட சக்தியாய் மாறிடுது. அது நம்மள ஆட்டி வைக்கிற சக்தியை ஏற்படுத்திக் கொடுத்துடுது... அது மேல இருக்கிற நம்பிக்கையை விட அதிக நம்பிக்கை நம்ம மேலயோ, நாம் நம்பற கடவுள் மேலயோ அதிகமாய் இருக்கணும். அதனால நீங்க சக்தி வாய்ந்ததா நினைக்கிற சாமி உங்களைக் காப்பாற்ற கூடவே இருக்கிறதா நினைச்சு அந்த சாமி பேரை ஜபிக்கலாம்.... ஏதாவது விசித்திரமான, பயங்கரமான உருவமோ, சக்தியோ நம்மை அணுகற மாதிரி இருந்தா அதுக்கு பெரிய முக்கியத்துவம் தந்துடக் கூடாது. குழந்தைகள் பூச்சாண்டி முகமூடி போட்டுகிட்டு நம்மள பயமுறுத்த வர்ற மாதிரி நினைச்சுகிட்டு கண்டுக்காமல் போய்கிட்டே இருக்கணும்...

பார்த்தசாரதி தலையசைத்தார். சொல்கிற விஷயங்களை இவனுக்கு எளிமையாகச் சொல்லத் தெரிகிறது. நிறைய அறிவாளிகளுக்கு இப்படி எளிமையாகச் சொல்லத் தெரிவதில்லை. புரியாதபடி பெரிய பெரிய வார்த்தைகளைக் கொட்டி தங்கள் அறிவின் ஆழத்தைக் காண்பிக்க முயற்சிப்பார்களே ஒழிய அடுத்தவனுக்குப் புரிய வேண்டும் என்று நினைப்பதில்லை. புரிந்து விட்டால் சொல்பவன் அறிவைப் பார்த்து பிரமிக்க மாட்டார்கள் என்ற எண்ணமும் அதன் பின்னால் இருக்கலாம்....

ஈஸ்வர் சொன்னான். இதெல்லாம் உடனடியா நமக்கு இயல்பா வந்துடாது. மனசுல பயிற்சி செய்துக்கறது நல்லது.... எதுக்கும் நம்ம கூட உள்ளே வர்ற உங்க ஆள்கள் கிட்டயும் சொல்லிடுங்க....

பார்த்தசாரதிக்கு அவன் நல்ல எண்ணத்திலேயே சொல்கிறான் என்பது புரிந்தாலும் தன்னையோ தன் ஆட்களையோ யாரும் எதுவும் பயமுறுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் அவன் சொல்லச் சொன்னதை அப்படியே தங்களுடன் உள்ளே வரவிருக்கும் தங்கள் ஆட்களிடமும் போனில் சொல்லி விட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று தன் இஷ்ட தெய்வமான திருவரங்கத்தானை அவர் சிறிது நேரம் ஜபித்தார்.  அவனைப் பார்த்த போது அவன் முகத்தில் அமைதியும் அசாத்திய உறுதியும் தெரிந்தது. ஒன்றரை மணி நேரத்திற்கு முன் குமுறிக் குமுறி அழுதவனா இவன்? இப்போது அந்த துக்கங்களின் சாயல் கூட இல்லையே என்று அவர் வியந்தார்.

உண்மையில் ஈஸ்வர் தன் மனதில் இருந்த அத்தனை துக்கங்களையும், அத்தனை கவலைகளையும், சந்திக்க வேண்டி உள்ள மற்ற பிரச்சினைகளையும் அந்தக் கணத்தில் ஒதுக்கி வைத்திருந்தான். அவற்றை எல்லாம் அவன் மறுக்கவில்லை. ஆனால் இந்த அதிமுக்கியமான நேரத்தில் அசை போட வேண்டிய விஷயங்கள் அல்ல அவை. சிதறுகின்ற மனம் பலவீனமான மனம். அது அவனுக்கு எதிரியாக மாறி விடும்... அமைதியாக காரின் ஜன்னல் வழியே அவர்களுடனேயே பயணம் வந்து கொண்டிருந்த அழகான முழுநிலவை ரசித்துப் பார்த்தான். விஷாலி நினைவுக்கு வந்தாள். மற்ற சந்தர்ப்பங்களாக இருந்திருந்தால் அவள் நினைவை அவன் தொடர்ந்திருப்பான். இப்போது அவளையும் ஒதுக்கி விட்டு இன்று ஆக வேண்டிய செயல்களில் கவனம் செலுத்தினான்...

இந்த பௌர்ணமி இரவு மிக முக்கியமாக இருக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. அவனுக்குத் தோன்றிய காட்சி அதைத் தான் தெரிவித்திருக்கிறது. முன்பு ஒரு முறை வந்த காட்சியில் கணபதியும், சிவலிங்கமும், விழுவது போலத் தான் தெரிந்தது. இந்த முறை ஹரிராமும் சேர்ந்திருக்கிறார். அவன் சிறிது சோர்ந்தாலும் அவனும் அந்த வீழ்ச்சியில் சேர்ந்து விட வேண்டி இருக்கும். ஏனென்றால் அவன் அந்த விசேஷ மானஸ லிங்கத்துடனும், மற்ற இருவருடனும் சம்பந்தப்பட்டவன்..... இதற்கு முன் தெரிந்த காட்சியில் காலம் காட்டப்படவில்லை. ஆனால் இன்று தெரிந்த காட்சியில் காலம் காட்டப்பட்டுள்ளது. பௌர்ணமி அன்று அது நடைபெறப் போகிறது, முந்திக் கொள், ஏதாவது செய், உன் சொந்தக் கவலைகளில் மூழ்கி செயலற்றுப் போய் விடாதே என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அவன் சித்தரையும், பசுபதியையும் மனதார வணங்கினான். அந்த விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கி தொழுத அத்தனை முகம் தெரியாத சித்தர்களையும் வணங்கினான். கடைசியில் விசேஷ மானஸ லிங்கத்தை மனதில் நிறுத்தி வணங்க ஆரம்பித்தான்....

ம்பீசனின் புதிய ஹோம குண்டத்தில் அக்னி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. ஹோமத்தை ஆரம்பிக்கும் போது தளர்ச்சியாக இருந்த அந்த வெளியாள் பிறகு நன்றாகவே சுதாரித்து விட்டான். அவருடைய ஆரம்ப அஸ்திரத்திற்கு அவன் அசையவில்லை. தற்போது அதிக பலமும் பெற்று வருவதாகத் தோன்றியது. அவர் மணியைப் பார்த்தார். மணி 11.00. இன்னும் சரியாக 42 நிமிடங்கள் கழிந்தால் பௌர்ணமியும் கழிந்து விடும். அவன் சக்தியும் வடிந்து விடும். அது வரை தாக்குப் பிடித்தால் போதும். அவர் பின்னால் திரும்பிப் பார்த்த போது பாபுஜி நின்றிருந்தார். அவரிடம் நம்பீசன் தற்போதைய நிலவரத்தைச் சொன்னார்.

ஈஸ்வரின் வருகை பற்றித் தெரிந்தவுடன் பாபுஜி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார். நம்பீசன் நம்பிக்கையோடு சொன்னார். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போடலை. அவனை அழிக்கிற பெரிய அஸ்திரம் என் கிட்ட இருக்கு....

பாபுஜி அலறினார். “ஐயோ அவன் தனி ஆளாய் வர மாட்டான். கூட போலீஸும் வரும்

நம்பீசன் சொன்னார். “போலீஸ் அல்ல ராணுவமே வந்தாலும் அவங்களை அலறி ஓட வைக்கிற அஸ்திரம் என் கிட்ட இருக்கு. அதுக்கு கொஞ்சம் பணம் செலவாகும்....

“எத்தனை?

“பத்து லட்சம் குடுங்க போதும்....என்று சொல்லி அவரையே நம்பீசன் பார்க்க பாபுஜி அழாத குறையாகச் சொன்னார். “அந்தப் பணத்தை இப்பவே அனுப்ப ஏற்பாடு செய்யறேன். பணம் வந்து சேர்ந்த தகவலுக்காக காத்திருக்காமல் உடனடியாய் நடக்க வேண்டியதைப் பாருங்கள். ப்ளீஸ்...

சொல்லி விட்டு அவர் நம்பீசனுக்குப் பணம் அனுப்ப கட்டளை பிறப்பிக்க நம்பீசன் செல்போனை எடுத்த போது தான் துப்பறியும் ஆட்களின் மிஸ்டு கால்களைப் பார்த்தார். ஈஸ்வர் வருகிறான் என்பதைத் தெரிவிக்கத் தான் போன் செய்திருப்பார்கள். பாபுஜி அவர்களிடம் போனில் பேசினார்.

ஈஸ்வர் பார்த்தசாரதியுடன் ஆறு போலீஸ்காரர்கள் வருகிறார்கள் என்பது தெரிந்தது. ஆனால் ராணுவமே வந்தாலும் கவலை இல்லை என்று சொன்ன நம்பீசனை அவர் மலை போல் நம்பினார். உடனடியாக அவருக்குப் பணம் அனுப்பக் கட்டளை இட்டு விட்டு பாபுஜி பரபரப்புடன் காத்திருந்தார். கூடவே  இந்த நம்பீசனையே முழுவதும் நம்பி இருக்காமல் வேறு சில கறுப்புப் பூனைகளையும் துணைக்கு அழைத்திருக்கலாமோ என்றும் தோன்ற ஆரம்பித்தது. ஆனால் அதற்கு இப்போது நேரமும் இல்லை.... “பாவி மகேஷ்... அவனை உயிரோடு வெளியே விட்டே இருக்கக்கூடாது....


அதே நேரத்தில் நம்பீசன் சில கோர சக்திகளை  உதவிக்கு அழைக்க ஆரம்பித்தார். அந்தத் தீயில் விபரீத உருவங்கள் தெரிய ஆரம்பித்தன.

(தொடரும்)

என்.கணேசன்