சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 9, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 41


மாரா உடனடியாகப் பதில் எதுவும் சொல்லவில்லை. முளையிலேயே கிள்ளி விட்டால் விருட்சமான பிறகு போராட வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனால் மைத்ரேயனின் கதையை ஒரு கொலையாளியால் முடிக்க முடிந்தால் அதற்கு இந்த ரகசியக்குழு எதற்கு? இத்தனை ஆயத்தங்கள் எதற்கு? இத்தனை காலக் காத்திருப்பு எதற்கு? எல்லாவற்றிற்கும் மேலாக மாரா என்கிற அவன் எதற்கு?.....

கடைசியில் “உன்னால் முடியும் என்று நினைக்கிறாயா?என்று மட்டுமே மாரா கேட்டான்.

அந்தக் கேள்வி எதிர்தரப்பு ஆளை அவமானப்படுத்தியது போல் தெரிந்தது. ஜீரணிக்க சிறிது கஷ்டப்பட்டே அவன் கேட்டான். “ஒரே ஒரு ஆள் பாதுகாப்பில் இருக்கும் ஒரு சிறிய பையனைத் தீர்த்துக் கட்டுவது என்னைப் போன்ற ஒருவனுக்குக் கஷ்டமான காரியம் என்று நினைக்கிறீர்களா?....

மாராவுக்கு ஆயாசம் தோன்றியது. முட்டாள்களைச் சகித்துக் கொள்வது அவனுக்கு அவ்வளவு சுலபமானதல்ல... ஆனால் பொறுமையாக மாரா சொன்னான். “உன்னால் முடிந்தால் நான் சந்தோஷப்படுவேன். வெகுமதியாக நீ இந்த உலகத்தில் என்ன கேட்டாலும் தருவேன். உன்னால் முடியா விட்டாலும் நான் உன்னைக் குறைத்து மதிப்பிட மாட்டேன். ஏனென்றால் நீ இதற்கு முன் எத்தனையோ முறை உன் திறமையை நிரூபித்துக் காட்டி இருக்கிறாய்....

“பின் ஏன் என்னால் முடியுமா என்று கேட்கிறீர்கள். சாகாமல் இருக்கும்படியான ஏதாவது விசேஷ சக்திகள் மைத்ரேயனிடம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

அப்படி ஒரு சக்தி அவனிடமும் இருக்க வாய்ப்பில்லை. அவனிடம் வேறு என்ன சக்திகள் இருக்கின்றன, அவனுடன் இருப்பவனிடம் என்ன சக்திகள் இருக்கின்றன என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள், என்ன கோலத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இருவரைப் பற்றியும் முடிந்த அளவு அதிக தகவல்கள் நீ சேகரித்துத் தர வேண்டும் என்று சொல்லத்தான் முக்கியமாய் நான் உனக்குப் போன் செய்தேன்.....

“தகவல்கள் முக்கியமா, தீர்த்துக் கட்டுவது முக்கியமா? இரண்டில் எது அதிக முக்கியம்?அவன் விடுவதாயில்லை.

மாரா ஒரு கணம் மௌனம் சாதித்தான். இவனால் முடிந்தாலும் முடியா விட்டாலும் மைத்ரேயனும் அந்தப் பாதுகாவலனும் இவனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை வைத்து எத்தனையோ தகவல்களை விவரமாகத் தெரிந்து கொள்ள முடியும்! மெல்ல மாரா சொன்னான். எதிரியைத் தீர்த்துக் கட்டி விட்டால் தகவல்கள் தேவையில்லை. அது முடியாவிட்டால் ஒவ்வொரு தகவலும் நமக்கு மிக முக்கியமாகிறது


க்‌ஷய் மைத்ரேயனுடன் சேர்ந்து சம்யே மடாலயத்தின் பிரதான கோயிலின் முதல் தளத்தில் பிரவேசித்த போது அங்கு சுமார் எண்பது பேர் இருந்தார்கள். கௌதம புத்தரின் பிரதான சன்னிதி முன் பிரார்த்தனை மண்டபத்தில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். ஐரோப்பிய அமெரிக்க நாட்டிலிருந்து வந்த பயணிகள் கூரைச் சுவரிலிருந்த மண்டலங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

சன்னிதியின் நுழைவு வாயிலிலேயே இடது புறம் சம்யே மடாலயம் ஆரம்பத்தில் கட்டப்படக் காரணமான சாந்தரக்‌ஷிதா, பத்மசாம்பவா, திபெத்தியச் சக்கரவர்த்தி ஆகியோரது உருவச்சிலைகள் இருந்தன. அந்த சிலைகளைக் காட்டிக் கொண்டு ஒரு சுற்றுலா வழிகாட்டி, பயணிகளிடம் சம்யே மடாலய வரலாற்றை விளக்கிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டுக் கொண்டே அந்த சிலைகளைப் பார்க்கையில் தானும் ஒரு கணம் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பிரவேசித்தது போல அக்‌ஷய் உணர்ந்தான். இப்போதும் அந்த திபெத்திய சக்ரவர்த்தியும், சாந்தரக்‌ஷிதாவும், பத்மசாம்பவாவும் அந்த மடாலயத்தில் அரூப நிலையில் இருந்து அவர்களைப்  பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

அந்த உருவச்சிலைகளைச் சிறிது நேரம் உணர்வுபூர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவன் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயனும் அந்தச் சிலைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகம் அதிசயமாய்    மென்மையாக மாறி விட்டிருந்தது. மைத்ரேயனும் அவன் உணர்ந்ததையே உணர்ந்திருப்பானோ? ஆனால் அந்த மென்மை தெரிந்தது சில வினாடிகள் தான். இரண்டு நிமிடங்கள் தங்களைச் சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டு விட்டு அவன் மறுபடியும் பார்க்கையில் அந்த முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.

அக்‌ஷய் சுற்றிலும் பார்த்தான். அங்கு இருந்த மின் விளக்குகள் முழு இடத்தையும் ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தி விடவில்லை. புத்தர் சன்னிதி, பிரார்த்தனை மண்டபம் தவிர மற்ற இடங்களில் அரையிருட்டு நிலவிக் கொண்டிருந்தது. சுவர் பகுதிகளிலும் சற்று உள்ளார்ந்த பகுதிகளிலும் பயணிகள் தங்கள் கையிலிருந்த டார்ச் லைட் விளக்கு வெளிச்சத்தில் தான் கலை வேலைப்பாடுகளை நுணுக்கமாக ரசிக்க வேண்டி இருந்தது. இது போன்ற அரையிருட்டு இடங்கள் ஆபத்தானவை என்று அனுபவம் அவனை எச்சரித்தது. உடனேயே அவன் கை தானாக மைத்ரேயனை அவனருகில் இழுத்துக் கொண்டது.



மாராவுடன் பேசி முடித்த ஆளுக்கு உடம்பெல்லாம் முறுக்கேறியது. அவன் திறமைக்கேற்ற வேலை கிடைத்து பல காலமாகிறது.

இந்த ரகசிய இயக்கத்தில் பல வளையங்கள் உண்டு. பல குழுக்கள் உண்டு. இயக்கத்தில் பல நிலைகளில் வேறு வேறு வேலை பார்ப்பவர்கள் மிக அருகில் இருந்தும் ஒருவரை ஒருவர் தங்கள் இயக்கத்து ஆள் என்று கடைசி வரை உணராமல் இருந்து விடுவதுண்டு.  அந்த அளவு ரகசியம் காக்கப்பட்டு வரும் இந்த இயக்கத்தில் அங்கமாக இருப்பவர்கள் தங்கள் செயல்களில் திறமையாகவும், இயக்கத்துக்கு விசுவாசமாகவும், தங்கள் செயல்பாடுகள் குறித்த ரகசியம் வெளியே கசியாமல் பார்த்துக் கொண்டும் இருக்கும் வரையிலும் மிக நல்ல வருமானம் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும். மாராவுடன் பேசிய ஆள் சம்பாதித்துக் கொண்டிருப்பதை ஒரு அரசு உயரதிகாரி கூட சம்பாதிக்க முடியாது. அதில் அவனுக்கு மிகுந்த பெருமிதம் உண்டு.

இதில் அவனுக்குப் பிடிக்காத ஒரே விஷயம் சில சமயங்களில் சிறிதும் சுவாரசியம் இல்லாத சப்பை வேலைகள் செய்ய வேண்டியும் வரும். இந்த சம்யே மடாலயத்தில் அவன் செய்து கொண்டிருக்கும் வேலை அந்த வகை வேலையே. சம்யே மடாலயத்தில் அவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் இரவு சில ரகசிய வழிபாடுகள் செய்து வந்தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும், யாராவது அவர்கள் வழிபாடுகள் செய்யும் போது அந்தப் பகுதிக்கு வந்தால் தெரிவித்து உஷார்ப்படுத்தவும் மாரா அவனை நியமித்து இருந்தான்.

மாராவிடம் இயக்கத்தினர் யாரும் மனம் விட்டு கருத்து தெரிவிக்க முடியும். மிகவும் சக்தி வாய்ந்த ஒரு இயக்கத்தின் தலைவனாக அவன் இருந்த போதும் அவன் யாரிடமிருந்தும் விலகி இருந்ததில்லை. மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில் சலிப்பு காட்டியதுமில்லை. அதனால் மாரா இந்த வேலையை ஒப்படைத்த போது இத்தனை சிறிய வேலைக்கு என்னைப் போன்ற ஒரு ஆள் அவசியமா என்று அவன் நேரடியாகவே கேட்டான்.

மாரா அமைதியாகச் சொன்னான். “வேலைகளில் சிறியது பெரியது என்று இருக்கிறதா என்ன? சம்யே மடாலயம் நம் வரலாற்றில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. அங்கே நாம் நடத்தப் போகும் ரகசிய வழிபாடுகள் மிக மிக முக்கியமானவை. அவை பற்றி வெளியே தெரிந்தாலோ, அந்த வழிபாடுகள் தடைப்பட்டாலோ நமக்கு இழப்புகள் அதிகம். அதனால் சாதாரண ஆட்களை இந்த பாதுகாப்பு வேலைக்கு விட்டால் சரியாகாது

மாராவிடம் தங்கள் கருத்துகளை சொல்ல மட்டும் அவர்களுக்கு உரிமை உண்டு. அதைக் கேட்டு அவன் முடிவாய் எதையும் சொல்லி விட்டால் தர்க்கம் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. அதனால் அதற்குப் பின் அவன் மறுப்பு தெரிவிக்கவில்லை.

புத்தபிக்குகளாய் அந்த மடத்தில் உலவி வரும் அவர்கள் இயக்கத்து ஆட்கள் இருவர் மிக ரகசியமாய் இந்த சம்யே மடாலயத்தில் கோங்காங் சன்னிதி பகுதியில் தங்கள் வழிபாடுகளை இரண்டு மாதங்களாக நடத்திக் கொண்டு வருகிறார்கள். நள்ளிரவு பன்னிரண்டு மணி வாக்கில் நடக்கும் அந்த வழிபாட்டு நேரத்தில் மடாலய ஊழியனாய் வேலைக்குச் சேர்ந்திருந்த அவன் தினமும் காவல் காக்கிறான். அந்த நேரத்தில் பல வித குறட்டை சத்தங்கள் தான் கேட்குமே ஒழிய யாரும் தற்செயலாகக்கூட வந்ததில்லை. அதே போல் எந்தத் தடையும் யார் மூலமாகவும் வந்ததில்லை. அவனுக்கு இந்த வேலையில் இருந்து எப்போது விடுதலை வரும் என்று ஏக்கமாக இருந்த நேரத்தில் தான் மாராவின் போன் வந்தது.

இந்த இயக்கத்தின் பிரதான எதிரியான மைத்ரேயன் வெளிப்பட்டிருப்பதும், அவன் சம்யே மடாலயம் வந்து சேர்ந்திருப்பதும் தன் திறமையை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சந்தர்ப்பம் என்று மாராவின் ஆள் நம்பினான். மைத்ரேயனை சாகடித்தால் வெகுமதியாக இந்த உலகத்தில் என்ன கேட்டாலும் தரத் தயார் என்று மாரா சொன்னது அவன் காதில் மிக இனிமையாக ஒலித்தது. மேலும் அவன் பெயர் நிரந்தரமாக இயக்கத்தின் பொன்னேட்டில் பொறிக்கப்படும்....

பரபரப்புடன் சென்று தன் பொருட்கள் வைத்திருந்த பழைய சூட்கேஸை எடுத்தான். அதில் ரகசியமாய் ஒளித்து வைத்திருக்கும் சின்ன ப்ளாஸ்டிக் பையை எடுத்தான். அதற்குள் கடுமையான விஷம் கொண்ட சிறிய புட்டி இருந்தது. சிறிய காகிதத்தில் மிக மெலிசான நீண்ட ஊசிகள் இருந்தன. ஒரு ஊசியை எடுத்து கவனமாக விஷபுட்டியைத் திறந்தான். அந்த ஊசியை விஷபுட்டிக்குள் விட்டு தோய்த்து எடுத்தான். பின் அதைக் காற்றில் உலர விட்டான். பிறகு ஒரு உலர்ந்த காகிதத்தில் பத்திரமாக அதை வைத்து காகிதத்தை மடித்துக் கொண்டான். பின் முகம் தவிர தலையிலிருந்து கால் வரை மறைக்கும் நீண்ட கோட் போன்ற அங்கியை உடுத்திக் கொண்டான். முகப்பகுதியில் ஆடையை சற்று முன்னால் இழுத்துக் கொண்டால் முகம் கூட சரியாகத் தெரியாது. கடும்பனிக் காலத்தில் அங்கு பலரும் உபயோகிக்கும் ஆடை அது. மற்ற குளிர்காலங்களிலும் அதை உபயோகப்படுத்துவது உண்டு.

அவன் புறப்பட்டான். மைத்ரேயனையும் அவன் பாதுகாவலனையும் கோயிலின் முதல் தளத்தில் கண்டான். அந்தச் சிறுவன் சலனமே இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, பாதுகாவலன் சற்று தள்ளி நிலவிய அரையிருட்டைப் பார்த்து விட்டு அந்தச் சிறுவனைத் தன்னுடன் இழுத்துக் கொள்வதைக் கவனித்தான்.

சில அடிகள் தள்ளி அரையிருட்டில் நின்று கொண்டே மைத்ரேயனை அவன் ஆராய்ந்தான். மாராவைப் போன்ற ஒரு சக்தி வாய்ந்த மனிதனுக்கு இந்தச் சிறுவன் ஒரு பொருட்டே அல்ல என்பது அவனுடைய உடனடி அபிப்பிராயமாய் இருந்தது. மாரா அந்தப் பழைய ஆட்கள் எழுதி வைத்து விட்டுப் போயிருப்பதை வைத்து தேவையில்லாமல் இந்தச் சிறுவனைப் பற்றி பெரிதாக நினைத்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இல்லா விட்டால் இந்தப் பொடியனைக் கொல்ல முடியும் என்று நினைக்கிறாயா என்று அவனிடம் மாரா கேட்டிருக்க மாட்டான்.

அந்த சுற்றுலா வழிகாட்டி தன் பயணிகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். அவர்களுடன் அந்தப் பாதுகாவலன் மைத்ரேயனைத் தனக்கு முன்னால் நடக்க விட்டு பின்னால் நடக்க ஆரம்பித்தான். அவர்களுக்கு முன்னும் பின்னும் ஆட்கள் இருந்தார்கள். மாராவின் ஆள் அதே இடைவெளியை தக்க வைத்துக் கொண்டு தொடர ஆரம்பித்தான்.

அடுத்ததாக கோங்காங் மண்டபத்திற்கு அவர்களை அழைத்துப் போன சுற்றுலா வழிகாட்டி அங்கிருந்த கோரமான துர்த்தேவதைகளின் சிலைகளை எல்லாம் காட்டி விட்டுச் சொன்னான். “இந்த துர்த்தேவதைகளை அடக்கி இந்த சம்யே மடாலயத்தைக் காக்கும் பாதுகாவலர்களாக மாற்றி கோங்காங் என்ற காவல் தெய்வத்தின் கட்டுப்பாட்டில் பத்மசாம்பவா விட்டுச் சென்றிருக்கிறார். இங்கே கோங்காங் சிலை தவிர மற்ற சிலைகளில் கொடூரத்தன்மையை நீங்கள் பார்க்கலாம்....

மாராவின் ஆள் மைத்ரேயனின் பாதுகாவலன் அந்த சிலைகளில் ஒன்றின் முன் தானும் ஒரு சிலையாக நிற்பதைக் கண்டான். அந்த இடத்தில் தான் தினமும் அவர்கள் இயக்கத்தின் ரகசிய வழிபாடுகள் நடந்து வருகின்றன... மைத்ரேயன் அந்த இடத்தில் நிற்காமல் அந்தப் பாதுகாவலனை விட்டு சிறிது விலகித் தள்ளிப் போனான்.

மாராவின் ஆள் இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டான். அந்த விஷ ஊசியால் குத்தினால் ஏதோ சிறு எறும்பு கடித்தது போலத் தான் இருக்கும். ஆனால் ஈர ரத்தத்தில் ஊசியில் உலர்ந்திருந்த கொடிய விஷம் கலந்தால் சில நிமிடங்களில் மரணம் நிச்சயம். எங்கோ பாம்பு கடித்திருக்கிறது என்று தான் எல்லோரும் எண்ணுவார்கள். இந்த மடாலயப்பகுதிகளில் விஷப்பாம்புகள் அதிகம் தான்.....

திருப்தியுடன் மாராவின் ஆள் வேகமாக முன்னேறினான்.

(தொடரும்)
என்.கணேசன்   

  

2 comments:

  1. மதிவதனிApril 9, 2015 at 6:49 PM

    பரபரப்பாக இருக்கிறது. வியாழன் தோறும் நல்ல அறுசுவை விருந்து படைக்கிறீர்கள் கதாசிரியரே. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. கண் முன் நடப்பதை பார்ப்பது போல் இருக்கு. ஒவ்வொருத்தர் மனசிலும் எப்படி எண்ணம் ஓடுதுன்னு உள்ளே போய் பார்க்கிற ஒரு ஃபீல் வருகிறது. பிரமாதம்.

    ReplyDelete