சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 11, 2015

அந்தரத்தில் படுத்த யோகி!


22. மகாசக்தி மனிதர்கள்

ரு யோகியால் இயற்கையின் பல விதிகளைத் தன்வசப்படுத்தி ஜெயிக்க முடியும். அதற்கான எத்தனையோ உதாரணங்களை இது வரை பார்த்து விட்டோம். இனி புவி ஈர்ப்பு விசையை வென்று அந்தரத்தில் மிதக்க முடிந்த யோக சக்தியைப் பார்ப்போம்.

அந்தரத்தில் மிதப்பது இந்திய யோகிகளுக்கு மட்டும் முடிந்த சக்தி அல்ல. அந்த சக்தி கொண்டவர்களைப் பற்றிய உதாரணங்களை ஐரோப்பா, ஆசியா கண்ட நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களில் நம்மால் பார்க்க முடியும். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் அவிலாவைச் சேர்ந்த புனித தெரசா ஆழ்ந்த இறை நிலை அனுபவங்களின் போது தரையில் இருந்து சுமார் ஒன்றரை அடி மேலே அந்தரத்தில் மிதப்பார் என்றும் அப்படியே சுமார் அரை மணி நேரம் அந்தரத்தில் இருப்பார் என்றும் கண்டவர்கள் கூறியிருக்கிறார்கள். அதே போல பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த திபெத்திய குரு மிலாரெப்பாவும் அந்தரத்தில் மிதக்கவும் நடக்கவும் முடிந்தவர் என்று சொல்கிறார்கள். சீன ஷாவொலின் பிக்குகளில் சிலரும் குறுகிய காலத்திற்கு புவி ஈர்ப்பு சக்தியை வெல்ல வல்லவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த குறிப்பிட்ட சக்தி பரவலாக உலகின் பல பகுதிகளில் குறிப்பிட்ட சிலரிடம் இருந்திருக்கிறது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் ஒரு யோகி, அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு யோகி இந்த மகாசக்தியைப் பெற்றிருந்தார். அவர் பலர் முன்னிலையில் அந்தரத்தில் படுத்த காட்சியை ஒரு ஆங்கிலேயர் புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்துடன் செய்தி ஒரு பிரபல இங்கிலாந்துப் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கிறது. அந்த சுவாரசியமான நிகழ்ச்சியை இனி பார்ப்போம்.

அந்த யோகியின் பெயர் சுப்பையா புலவர். (அவரைப் புகைப்படம் எடுத்த ஆங்கிலேயர் அவரை சுப்பையா புல்லவர் (Subbayah Pullavar) என்று குறிப்பிட்டதால் அப்படியே அந்தப் பெயரையே ஆங்கிலப் பத்திரிக்கையும் பயன்படுத்தி இருக்கிறது. தமிழ் யோகி என்பதால் சுப்பையா புலவர் என்பதே அவரது சரியான பெயராக இருக்கலாம் என்று நமக்குத் தோன்றுகிறது).

யோகி சுப்பையா புலவர் அந்தரத்தில் சிறிது நேரம் இருக்க முடிந்தவர் என்றும் அவர் அப்படி 1936 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி ஒரு பொது இடத்தில் இருந்து காட்டுவார் என்றும் கேள்விப்பட்ட போது பி.டி.ப்ளங்கெட்ட் (P. T. Plunkett) என்ற பிரிட்டிஷ் தேயிலைத் தோட்டக்காரருக்கு ஆச்சரியமும் சந்தேகமும் ஒருசேர ஏற்பட்டன.  மிகுந்த ஆர்வத்துடன் காமிரா சகிதம் அந்த நாள் அந்த இடத்தை அடைந்தார்.

அந்த இடத்தில் சுமார் 150 பேர் நிகழ்ச்சியைக் காண நண்பகல் வேளையில் குழுமி இருந்தனர். மேகங்கள் இல்லாமல் ஆகாயம் தெளிவாக இருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏமாற்றுவேலை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை பி.டி.ப்ளங்கெட்ட் கண்டார். சுப்பையா புலவரின் சீடர்கள் முதலில் அந்த இடத்தில் ஒரு கூடாரம் எழுப்பினார்கள். பின் கூடாரத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்தார்கள். தண்ணீர் தெளித்த இடத்தைத் தாண்டி செருப்புக் காலோடு உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்தார்கள்.

சற்று நேரத்தில் சுப்பையா புலவர் வந்தார். அவர் கருத்த நிறத்தோடு உயரமாகவும் மெலிந்த உடல்வாகோடும் இருந்தார். எல்லோரும் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் சுப்பையா புலவர் கூடாரத்திற்குள் நுழைந்து சில நிமிடங்கள் மறைவாக இருந்தார். அதன் பிறகு அவரது சீடர்கள் கூடாரத்தை அவிழ்த்து விட்டார்கள். சுப்பையா புலவர் பூமியிலிருந்து சில அடிகள் உயரத்தில் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்தார். ஒரு கையில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த அவர் மறு கையை ஒரு கம்பின் நுனியில் வெறுமனே வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் கம்பில் அவர் எந்த பலமும் பிரயோகிக்காமல் இருந்தது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கம்பை துணி சுற்றி மூடி இருந்தார்கள்.

பி.டி.ப்ளங்கெட்டும் மற்ற பார்வையாளர்களும் பிரமித்துப் போனார்கள். பி.டி.ப்ளங்கெட்ட் உட்பட அனைவரும் சுப்பையா புலவர் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்த காட்சியைக் கூர்ந்து கவனித்தார்கள். அனைவரும் படுத்துக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பல கோணங்களில் பார்த்தார்கள். எந்த தில்லுமுல்லும் அவர்களுக்குப் புலப்படவில்லை. சுப்பையா புலவரைத் தாங்கிப் பிடிக்க கண்ணுக்குத் தெரியாத மறை பொருள்கள் எதுவும் கூட இல்லை. அப்படி ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய அங்கிருந்தவர்களுக்கு அனுமதி தரப்பட்டது. பரபரப்புடன் பி.டி.ப்ளங்கெட்டும் மற்றவர்களும் அருகில் சென்றே மேலேயும் கீழேயும் கூர்ந்து பார்த்தார்கள். கம்பின் மீது அவர் வைத்திருந்த கையையும் ஆராய்ந்தார்கள். அந்தக் கம்பில் சுப்பையா புலவர் சிறிதாவது பலத்தைப் பிரயோகித்திருந்தால் அருகிலிருந்து பார்க்கும் அவர்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. அப்படி பலம் பிரயோகித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பலத்தில் குறுக்கே நீண்ட நேரம் படுப்பதும் சாத்தியமில்லை. பி.டி.ப்ளங்கெட்ட் அவரைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார்.   

நான்கு நிமிடங்கள் அப்படியே இருந்து அனைவரையும் சுப்பையா புலவர் ஆச்சரியத்தில் மூழ்க வைத்த பின் அந்த அனைவரையும் அந்த வட்டத்திற்கு வெளியே போகச் சொன்னார்கள். அனைவரும் தங்கள் பழைய இடங்களுக்குச் சென்று அமர்ந்து கொள்ள சுப்பையா புலவரின் சீடர்கள் பழையபடி சுப்பையா புலவரைச் சுற்றி கூடாரத்தை எழுப்பினார்கள். கூடாரத்தின் உள்ளே சுப்பையா புலவர் அந்தரத்திலேயே ஊசலாட ஆரம்பித்த்து சூரிய வெளிச்சத்தின் உதவியால் கூடாரத்துணி வழியாக பி.டி.ப்ளங்கெட்டுக்கு மங்கலாகத் தெரிந்தது. கடைசியில் அப்படியே சுப்பையா புலவர் தரையில் சரிந்தார்.  பழையபடி கூடாரம் கலைக்கப்பட்டது. சுப்பையா புலவர் கட்டையைப் போல ஒருவித ஆழ்தியான நிலையில் படுத்திருந்தார்.

அவரது கைகால்களை மடக்க முயன்ற சீடர்களுக்கு அது எளிதில் முடியாமல் போக அவர்கள் பார்வையாளர்களை உதவிக்கு அழைத்தார்கள். பார்வையாளர்கள் முயன்றும் கட்டை போல் விறைத்திருந்த அவரது கைகால்களை மடக்க முடியவில்லை. கடைசியில் சுப்பையா புலவரின் முகத்தில் சீடர்கள்  நீரைத் தெளித்தார்கள். பின் அவர் கை கால்களைத் தேய்த்து சூடாக்கிய பின் அவர் பழைய நிலைக்குத் திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியை The Illustrated London News என்ற இங்கிலாந்துப் பத்திரிக்கை பி.டி.ப்ளங்கெட்டின் புகைப்படங்களுடன் பிரசுரித்தது. அமானுஷ்ய நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள பலரையும் அந்தச் செய்தி ஈர்த்தது. அந்தத் தெளிவான புகைப்படங்கள் அந்த நிகழ்ச்சியில் தில்லு முல்லு எதுவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. காரணம் 1936 ஆம் ஆண்டு காலத்தில் எல்லாம் புகைப்படம் எடுப்பதே அரிதானதாக இருந்ததால் புகைப்படங்களில் போலியான மாற்றங்கள் செய்யும் நவீன நுட்ப வித்தைகள் ஆரம்பித்திருக்கவில்லை.

சொல்லப்போனால் புகைப்படங்கள் மூலமாகத் தான் சில போலி தந்திரங்களை அடையாளம் கண்டார்கள். உதாரணத்திற்கு கயிறு வித்தை (Rope Trick) என்ற அக்காலத்தில் பிரபலமான வித்தையைச் சொல்லலாம். இந்த வித்தையில் கயிறு ஒன்றை வித்தை காட்டுபவர் எல்லோரிடமும் காட்டி அது கயிறுதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளச் சொல்வார். பிறகு கயிறை உதறி கம்பு போல் நிற்க வைத்து வித்தை காட்டுபவர் கம்பில் மேலேறி நுனிக்குச் செல்வார். இது பார்ப்பவர்களை நம்ப வைக்கும் ஒரு வகை ஹிப்னாடிச வித்தை. இந்தக் காட்சியைப் படமெடுத்துப் பார்த்தால் கயிறு தரையிலேயே விழுந்து கிடக்கும். வித்தை காட்டுபவர் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பார். இதைப் பலர் படமெடுத்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் புகைப்படங்கள் எடுத்த பின்னும் காட்சிகள் பார்த்தபடியே பதிவாகி இருந்தது அனைவரையும் நம்ப வைத்தது.

துரதிர்ஷ்டவசமாக பி.டி.ப்ளங்கெட்ட் மூலம் அந்தப் பத்திரிக்கையில் வந்த செய்தி தவிர சுப்பையா புலவர் பற்றிய வேறு எந்தத் தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை.  இனி அடுத்த வாரம் இன்னொரு பிரமிக்க வைத்த யோகியைப் பார்ப்போமா?

-என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி 13-02-2015

2 comments:

  1. இதே போன்ற நிகழ்வை 1980-ல் நான் பார்த்திருக்கிறேன். செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில், ஒரு ஜோடி ஆண் +பெண் (தம்பதிகளா எனத் தெரியாது).25-30 வயதுக்குள் இருக்கும். ஆனால் எந்த வித திரையும் இன்றி,, அவர் அந்தப்பெண்ணை நின்ற நிலையிலேயே விறைக்க செய்தார். பின் அப்படியெ தூக்கி, பாட்மின்டன் கோர்ட் கம்பத்தின் மீது, ஒரு கை மட்டும் தாங்கி நிற்க,சமதளமாக அந்தரத்தில்படுக்க வைத்தார். சில நிமிடங்களுக்குப்பிறகு,கீழே இறக்கிய பின்னும்,அந்தப் பெண், சுய நினைவற்ற நிலையிலேயே இருந்தார். பின் முகத்தில் நீர் தெளித்து தெளிவாக்கினார். இது போன்ற விஷயங்களை, "களை கூத்தாடி" என்போரும் செய்வதுண்டு.

    ReplyDelete
  2. சுப்பையா புலவர் எனது பூட்டன் அவரின் ஜீவ சமாது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் விருசம்பட்டி கிராமத்தில் உள்ளது ஆனால் மேற்படி நிகழ்வு நான் அறியேன்

    ReplyDelete