சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 28, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 83


க்‌ஷய் திரும்பி வந்த போது மைத்ரேயன் ஆழ்ந்த தியானத்தில் லயித்திருந்தான். அவன் முகத்தில் பேரமைதி தெரிந்தது. உதடுகள் லேசாக விரிந்து ஏதோ ஒரு தெய்வீகக் காட்சியை அவன் மானசீகமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. அவனருகே அந்த இரண்டு ஆடுகளும் கூட அமைதியாக அமர்ந்திருந்தன. அவை இரண்டும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. அக்‌ஷய்க்கு அந்த இடமே ஏதோ தெய்வீக அலைகளில் திளைப்பது போலத் தெரிந்தது. மைத்ரேயனை நெருங்க நெருங்க அவனுள்ளும் அந்த அலைகள் பரவியது போலத் தோன்றியது. மனமே லேசானதாக அவன் உணர்ந்தான்.

அக்‌ஷயின் வருகையை உணர்ந்தவனாய் மைத்ரேயன் திரும்பினான். ஏதோ ஒரு இழை விடுபட்டது போல அக்‌ஷய் உணர்ந்தான். அப்படி உணர்ந்தது அவன் மட்டுமல்ல போலிருந்தது. ஆடுகள் மெல்ல எழுந்து மேயக்கிளம்பின. மைத்ரேயனின் நட்பு மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆடுகளைக் கட்டிப் போட்டுத் தான் தங்களுடனேயே தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்று அக்‌ஷய் நினைத்தான்.

மைத்ரேயனை நெருங்கியவுடன் அக்‌ஷய் சொன்னான். “இனி நம் முக்கிய வேலை நாளை அதிகாலையில் தான். நீ சிறிது நேரம் தூங்குவதானால் தூங்கலாம்....”

மைத்ரேயன் சொன்னான். “எனக்கு தூக்கம் வரவில்லை. நீங்கள் உங்கள் சின்ன மகன் கௌதம் பற்றிச் சொல்லுங்கள்...”

அவனருகே அமர்ந்தபடி அக்‌ஷய் சொன்னான். “அது தான் சொன்னேனே. எப்போது பார்த்தாலும் விளையாட்டில் தான் ஆர்வமாக இருப்பான்.”

அவன் மீது சாய்ந்து கொண்டபடியே மைத்ரேயன் ஆர்வத்துடன் கேட்டான். “என்னவெல்லாம் விளையாடுவான்”

“வெளியே விளையாடினால் கிரிக்கெட்.... வீட்டுக்குள்ளே கேரம் போர்டு, செஸ், வீடியோ கேம்ஸ்......”

“அவனுடன் விளையாட அங்கே யாரெல்லாம் இருக்கிறார்கள்....”

“அந்த வீதியிலேயே நாலைந்து பையன்கள் இருக்கிறார்கள். பக்கத்து வீதியில் இருந்தும் ஐந்தாறு பேர் வருவார்கள்....”

“நீங்கள் அங்கு என்ன மொழி பேசுவீர்கள்?”

“தமிழ்”

“எனக்கும் தமிழ் பேசச் சொல்லித் தருகிறீர்களா?”

”எப்போது?”

“இப்போது தான்”

அக்‌ஷய் சிரித்து விட்டான். உயிருக்கே ஆபத்து என்கிற சூழ்நிலையில் மைத்ரேயனால் தியானம் செய்ய முடிந்தது மட்டுமல்ல, தியானம் முடிந்தவுடன் புதிய மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்ளவும் முடிகிறது. அக்‌ஷய் புன்னகையோடு கேட்டான். “நாம் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறோம், தெரியுமா?”


“எந்த சூழ்நிலையும் புதியதாக ஒன்றை கற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை அல்ல” மைத்ரேயன் சளைக்காமல் சொன்னான்.

அந்த பதிலை அக்‌ஷய் ரசித்தான். நன்றாகப் பேசத் தெரிகிறது. ஆனால் சமயங்களில் எதுவுமே புரியாதவன் போல் மந்தபுத்திக்காரன் போல் பேசாமல் விழிக்கவும் தெரிகிறது என்று நினத்தபடியே மெல்ல சொன்னான். “காகிதம் பென்சில் பேனா எதுவுமே இங்கில்லையே”

”எனக்கு தமிழ் பேச மட்டும் சொல்லிக் கொடுங்கள். எழுதப்படிக்க சொல்லித்தர வேண்டியதில்லை...”

அக்‌ஷய் சரியென்றான். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று அவன் யோசிப்பதற்குள் மைத்ரேயனே தான் அறிந்து கொள்ள நினைக்கும் வாசகங்களைக் கேட்க ஆரம்பித்து விட்டான். “நாம் விளையாடலாமா?”, ”என்ன விளையாடலாம்?” , “இந்த விளையாட்டை விளையாடுவது எப்படி?” , “இதை நீ எனக்குக் கற்றுத் தருகிறாயா?”.....


அக்‌ஷய் சற்று திகைத்து தான் போனான். ஏதோ ஒரு மடாலயத்தில் புத்தரின் அவதாரமாக நுழையப் போகும் மைத்ரேயன் அறிய வேண்டியதல்ல அவை எதுவும். ஆனாலும் தன் திகைப்பை வெளியே காட்டாமல் அந்த வாசகங்களைத் தமிழில் சொல்லித் தந்தான். அவன் சொல்லும் போது மிகவும் கூர்மையாக கவனித்துக் கொண்ட மைத்ரேயன் கச்சிதமாக அதே உச்சரிப்பில் சொல்ல வரும் வரை சலிக்காமல் திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

விளையாட்டு சம்பந்தமானவை முடிந்தவுடன் “எனக்குப் பசிக்கிறது”, “போதும்”, “வேண்டும்”, “தேவையில்லை” போன்ற வார்த்தைகளைத் தமிழில் கற்றுக் கொண்ட மைத்ரேயன் “கவலைப்படாதே”, “கோபப்படாதே”, ”மன்னித்து விடு”, ”சந்தோஷமாக இரு” என்ற வார்த்தைகளுக்கு வந்தான். ஒருமையில் பேசுவது எப்படி, பன்மையில் பேசுவது எப்படி என்பதையும் சேர்ந்தே அவன் கேட்டுத் தெரிந்து கொண்டான். வேகமாக கற்றுக் கொண்ட போதும் மைத்ரேயனிடம் அவசரம் என்பதே துளியும் இருக்கவில்லை. ஒன்றை சரியாக அறிந்து, பேசவும் முடிந்த திருப்தி வராத வரை அடுத்ததற்கு அவன் செல்லவில்லை.

சுமார் இருபது வாசகங்கள், வார்த்தைகள் முடிந்த பிறகு நிறுத்தி “இது வரை சொல்லிக் கொடுத்தவற்றில் ஏதாவது கேளுங்கள். சரியாகச் சொல்கிறேனா என்று பாருங்கள்” என்று அவனாகவே தன்னைச் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டான். அப்படி அக்‌ஷய் சோதித்துப் பார்த்த போது அபூர்வமாகத்தான் மைத்ரேயன் தவறு செய்தான்.

மதியம் வரை கற்றுக் கொள்வது தொடர்ந்தது. பின் அவன் கற்றுக் கொள்ள அந்த ஆடுகள் அவனை விடவில்லை. அவனை வந்து முட்டி விளையாட அழைத்தன. அவற்றோடு அவன் விளையாடப் போனான். அக்‌ஷய் அவன் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் அவனது தியானம், பின் தமிழில் கற்ற விதம், தற்போது ஆடுகளுடன் ஆனந்தமாக விளையாடும் விதம் மூன்று வித்தியாசமான செயல்பாடுகளிலும் அவன் முழுமையாக ஈடுபட்டதை அக்‌ஷயால் கவனிக்க முடிந்தது. ஒன்றைச் செய்யும் போது அதைத் தவிர உலகில் வேறெதுவும் இல்லை என்பது போல அவன் இருந்தான். அது எத்தனை கஷ்டமான விஷயம் என்பதை அறிந்திருந்த அக்‌ஷயால் மைத்ரேயனை மெச்சாமல் இருக்க முடியவில்லை.


அக்‌ஷய் இடையிடையே பைனாகுலரில் எதிரே இருந்த மலையையும் கண்காணித்தான். நேபாள வீரர்களின் காவல் அதே இராணுவ ஒழுங்குடன் தான் இருந்தது. அவர்கள் அந்தப் பகுதிக்கு வருவதில் அதிகபட்சமாய் ஒரு நிமிடம் 40 வினாடிகளுக்கு மேல் வித்தியாசம் இருக்கவில்லை.

மறுநாள் அதிகாலை விடிவதற்கும் முன்பே கிளம்பிய அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொன்னான். “நாம் இனி அந்த மலைக்குப் போகப் போகிறோம். யார் கண்ணிலாவது நாம் பட்டு அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் நீ வாயையே திறக்காதே. நானே பேசி சமாளித்துக் கொள்கிறேன்....”

மைத்ரேயன் சரியெனத் தலையசைத்தான். ஆனால் நாம் எப்படி இந்த மலையிலிருந்து அந்த மலைக்குப் போகப் போகிறோம் என்கிற கேள்வி அவனிடமிருந்து வரவில்லை. தமிழ் கற்கும் ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட தப்பிப்பது எப்படி என்பதில் அவனுக்கு இல்லை....!

அந்த சாறை உடல் முழுவதும் பூசிக் கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள். மேல் நோக்கிச் செல்லும் வழியில் வழுக்கும் இடம் ஆரம்பித்தவுடன் மைத்ரேயனை அக்‌ஷய் தூக்கிக் கொண்டான். எத்தனையோ கடுமையாக ஒரு காலத்தில் செய்திருந்த பயிற்சிகளைப் பிற்காலத்திலும் அவன் முழுமையாக அலட்சியப்படுத்தி விடாமல் தொடர்ந்து செய்து வந்தது இன்றும் அவனுக்கு மைத்ரேயனைச் சுமந்து கொண்டு நடக்கும் போதும் வழுக்கி விடாமல் காத்தது. அவன் தனக்கு பயிற்சிகள் அளித்த ஆசிரியர்களுக்கு இந்தக் கணத்தில் மானசீகமாக நன்றி சொல்லத் தோன்றியது. ஆடுகள் இரண்டும் அனாயாசமாக அவர்களைப் பின் தொடர்ந்தன.

அந்தத் துவாரத்தை அடைந்தார்கள். அக்‌ஷய் மைத்ரேயனின் முதுகிலும், கைகளின் பின்பகுதிகளிலும் கூடுதல் துணிகள் வைத்துக் கட்டினான். “இந்த சுரங்கப்பாதையின் கீழ்பக்கம் மட்டும் தான் கரடுமுரடாக இல்லாமல் வழுவழுவென்று இருக்கும். மேல் பாகம் அப்படி இருக்காது. அதனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கையையோ காலையோ மேலே தூக்காதே”

மைத்ரேயன் தலையசைத்தான். அக்‌ஷய் அந்த ஆடுகளுக்குப் பிடித்த புல்கட்டில் இருந்து சிறிது எடுத்து மைத்ரேயன் கையில் தந்தான். ஆடுகள் அவர்களைத் தொடர்ந்து வரும் என்று நினைத்தாலும் கூட அவை தயங்கி மேலேயே நின்று விடும் வாய்ப்பு இருப்பதால் அவன் அதற்கு வழி வகுக்க விரும்பவில்லை.

“முதலில் நான் போகிறேன். இந்தப் புல்கட்டையும் பிடித்துக் கொண்டு என் பின்னாலேயே நீயும் வா.....”

அக்‌ஷய் முதலில் சுரங்கத்தில் சறுக்க ஆரம்பிக்க மைத்ரேயன் பின் தொடர்ந்தான். பெரிய ஆடு அவன் கையில் இருந்த புல்லை ருசித்தபடியே பின் தொடர்ந்தது. அவர்களைப் போல் அது சறுக்கவில்லை. குட்டி பின் தொடர அது கவனமாக நடந்தது. சில இடங்களில் குழிகளும் இருந்தன. அந்த இடங்களில் ஏதாவது ஒரு கல்லில் காலை நிறுத்தி மைத்ரேயன் அந்தக் குழியைத் தாண்ட உதவி விட்டு மறுபடி அக்‌ஷய் சறுக்க ஆரம்பித்தான். சீக்கிரமாகவே அவர்கள் கீழே வந்து சேர்ந்தார்கள்.

அக்‌ஷயின் கை கால்களில் சின்ன சிராய்ப்புகள் இருந்தாலும் அவன் அதை பொருட்படுத்தவில்லை. மைத்ரேயன் எந்த பாதிப்பும் இல்லாமல் வந்ததில் திருப்தி அடைந்த அவன் அங்கிருந்த ஒரு புதரின் பின் மைத்ரேயனுடன் ஒதுங்கினான். அவன் கையில் கடிகாரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தான். இன்னும் ஐந்து அல்லது ஆறு நிமிடங்களில் மலை உச்சியில் நேபாள எல்லைப்படை வீரன் வருவான். பெரும்பாலும் அந்த வீரன் பக்கத்து மலையின் மேல் பகுதியைப் பார்ப்பானே ஒழிய மலை அடிவாரத்தை எட்டிப் பார்ப்பதில்லை. என்றாலும் அக்‌ஷய் கவனக்குறைவாக இருக்க விரும்பவில்லை.

அந்தக் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் அவர்கள் கிளம்பினார்கள். குளிரின் கடுமையை அவர்கள் நன்றாகவே உணர்ந்தார்கள். அந்த ஓடையில் தண்ணீர் சில இடங்களில் ஐஸ்கட்டியாக ஆரம்பித்திருந்தது. மைத்ரேயனைத் தூக்கியபடியே தாவிக் குதித்துக் கடக்க முடிந்ததை விட ஓடையின் அகலம் அதிகம் இருந்தது.


அக்‌ஷய் மைத்ரேயனைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு ஓடையை நடந்து கடந்தான். அவன் இடுப்பு வரை தண்ணீர் இருந்தது. இடுப்பில் இருந்து கால் வரை சில்லிட்டுப் போனது. ஆனாலும் அவன் வேகமாகக் கடந்தான். ஆடுகள் ஒரே தாவலில் ஓடையைக் கடந்தன. அந்த மலையில் பயணிக்க ஆரம்பித்தார்கள். மூன்று முறை நேரம் பார்த்து மரம், புதர், பாறை ஆகியவற்றின் பின் அவர்கள் ஒதுங்க வேண்டி வந்தது.

விடிய ஆரம்பிக்கின்ற வேளையில் அவர்கள் மலை உச்சியில் இருந்த கம்பி வேலியை அடைந்தார்கள். மைத்ரேயனை ஓரிடத்தில் மறைவில் நிறுத்தி விட்டு அக்‌ஷய் வேலியோரம் நடந்தபடியே அந்த வேலியை ஆராய்ந்தான். ஓரிடத்தில் குறுக்குக் கம்பி அறுபட்டு இருந்தது. அந்தக் கம்பியை மேலே இழுத்து விலக்கி நிறுத்திய போது ஏற்பட்ட அகலம் அவர்கள் போக முடிந்த அளவு தாராளமாகவே இருந்தது. அதை முன்பு போலவே இருத்தி விட்டு அக்‌ஷய் மைத்ரேயனை நிறுத்தி இருந்த மறைவிடத்திற்குப் போனான்.

மணி ஏழானவுடன் அங்கிருந்து கிளம்பி வேகமாக அவர்கள் இயங்கினார்கள். அந்த அறுபட்ட கம்பியை வளைத்து விலக்கி மைத்ரேயனை முதலில் உள்ளே போக விட்டு அக்‌ஷய் பின் தானும் நுழைந்தான். தான் உள்ளே போன பிறகு ஆடுகளை ஒவ்வொன்றாக உள்ளே தூக்கி வைத்தான். உள்ளே நுழைந்தவுடன் முதல் வேலையாக அந்த அறுந்த கம்பியை நீட்டி முந்தைய நிலையிலேயே அக்‌ஷய் நிறுத்தி வைத்தான். பின் வேகமாக அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.


அந்த நேரத்தில் தான் வேறொரு காலடி ஓசை கேட்டது. இராணுவ வீரனின் பூட்ஸ் காலடி ஓசை. எதிர்பார்த்த குறைந்த பட்ச நேரத்தையும் விட சுமார் இரண்டு நிமிடங்கள் முன்பாகவே அந்த வீரன் வந்திருக்கிறான். ஒளியக் கூட அருகே தகுந்த இடமில்லை.... அவன் பார்வையில் படாமல் இருக்க வாய்ப்பே இல்லை....


(தொடரும்)

என்.கணேசன்

Monday, January 25, 2016

சமாதி நிலையும் சதாசிவ பிரம்மேந்திரரும்!

48. மகாசக்தி மனிதர்கள்

மாதி நிலை என்பது யோக நிலைகளில் உச்ச நிலை. இறையுணர்வோடு இரண்டறக் கலந்து இவ்வுலகைப் பூரணமாக மறந்து லயிக்கக்கூடிய நிலை. அது சாதாரண மனிதர்களுக்கு எட்ட முடியாத உன்னத நிலை. உடலாகவே தன்னைப் பாவித்து வாழும் அடிமட்ட நிலையிலிருந்து, அந்த உடலையே மறந்து தன் ஆத்மாவின் இயல்பு நிலையான இறையுணர்வோடு சிறிது காலமாகவாவது கலந்து இருக்க ஒரு யோகியால் மட்டும் முடியும். அப்படி சமாதி நிலையில் மிக நீண்ட காலங்களில் இருந்த ஒரு மகத்தான யோகி தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவ பிரம்மேந்திரர் அல்லது சதாசிவப் பிரம்மம்.

கி.பி.1680 ஆம் ஆண்டு திருவிசைநல்லூரில் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த மோக்‌ஷம் சோமசுந்தர அவதானி-பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர் சிவராம கிருஷ்ணன். அவர் பிறவியில் இருந்தே மெய்ஞானத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தந்தையைச் சிறு வயதிலேயே இழந்திருந்த அவர் இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாமல் இருந்தார். தாயார் மகனுக்குத் திருமணம் செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்.

திருமண வாழ்வைத் துவங்குவதற்கு முன் ஒரு நாள் மாமியார் வீட்டுக்குச் சென்ற சிவராம கிருஷ்ணனுக்குக் கடுமையான பசி. சமையலறைக்கு வெளியே நின்று கொண்டு ”எனக்குப் பசிக்கிறது. உணவு பரிமாறுகிறீர்களா?” என்று கேட்டார்.

மாமியார் “கொஞ்சம் பொறு” என்றார்.

”எனக்குக் கடுமையாய் பசிக்கிறது. தயாரானதைத் தாருங்கள்” என்றார் சிவராமகிருஷ்ணன். “நிறைய காக்க வேண்டி இருக்காது. அங்கேயே இரு. உள்ளே வராதே” என்றார் மாமியார்.

சாதாரண வார்த்தைகள் தான். ஆனால் துறவுக்குத் தயாராக இருந்த மனநிலையில் அவருக்கு அந்த வார்த்தைகள் திடீரென்று வேறு அர்த்தம் தந்தன. ”சம்சாரத்திற்குள் நுழையாதே. அங்கேயே இரு. நீ அடைய வேண்டிய நிலைக்கு இனி நிறைய காக்க வேண்டி இராது” என்ற உபதேசம் வந்ததாக அவர் உள்ளுணர்வில் உணர்ந்தார். அங்கிருந்து அந்தக் கணமே வேகமாக வெளியேறிய சிவராம கிருஷ்ணன் பின் இல்வாழ்க்கைக்குத் திரும்பவில்லை.

துறவியாக நதிக்கரைகளிலும், காடுகளிலும் சுற்றிக் கொண்டிருந்த சிவராம கிருஷணன் அக்காலத்தில் இறைவனையே சிந்தித்து பல ராகங்களில் பல கீர்த்தனைகள் பாடினார். அந்தப் பாடல்கள் பலவும் இன்றும் கர்னாடக சங்கீதத்தில் பாடப்பட்டு வருகின்றன. அவரது பாடல்களில் பக்தி ரசமும், தத்துவ ஞானக் கருத்துகளும் நிறைந்திருக்கும். உதாரணத்திற்கு ’சிவமானசீக பூஜா’ என்ற கீர்த்தனையில் பாடுகிறார். “ஹே மகாதேவனே. எங்கெங்கும் நிறைந்திருக்கும் உன்னை நான் எங்கென்று தொழுவேன். உன் கரங்களும், பாதங்களும் உலகமெல்லாம் விரிந்திருக்கையில் நான் எப்படி உனக்குப் பாத பூஜை செய்வேன். ஆகாயமே உனக்கு ஆடையாக இருக்கையில் நான் எப்படி உனக்கு ஆடை அணிவிப்பேன். நீயே ஒரு ஒப்பில்லாத நடனக்கலைஞனாக இருக்கையில் நான் எப்படி உன் முன்னால் ஆடுவேன். என்னால் உன்னை மானசீகமாக மனதில் இருத்தி அங்கேயே பூஜிக்க மட்டுமே அல்லவா முடியும்!” மானச சஞ்சரரே என்ற பிரபல கீர்த்தனையும் அவரால் பாடப்பட்டது தான்.

இப்படி இறைவனைப் பாடித் திரிந்து கொண்டிருந்த சிவராம கிருஷ்ணனுக்கு காஞ்சி காமகோடி பீடத்தின் பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் குருவாக வாய்த்தார். அவர் சிவராம கிருஷ்ணனுக்கு “சதாசிவ பிரம்மேந்திரர்” என்ற பெயரைச் சூட்டினார். அவரிடம் கற்றுத் தேர்ந்த சதாசிவ பிரம்மேந்திரர் பல அத்வைத நூல்களை இயற்றினார். பிரம்ம சூத்திரம், பதஞ்சலியின் யோக சூத்திரங்கள், பகவத் கீதை ஆகியவற்றிற்கு அருமையான உரைகளும் எழுதினார்.

எல்லா ஞானமும் பெற்று தர்க்கங்களிலும் வல்லுனராக இருந்த அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. பலர் அவரிடம் தோற்றுப் போய் அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அவர் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டார்கள். குரு சதாசிவ பிரம்மேந்திரரை அழைத்து “பேசாமல் இருக்க மாட்டாயா?” என்று கடிந்து கொண்டார். அந்த வார்த்தையையே தனக்கு உபதேசிக்கப்பட்ட மகா மந்திரமாக எடுத்துக் கொண்ட சதாசிவ பிரம்மேந்திரர் அன்றிலிருந்து மௌன விரதம் இருக்க ஆரம்பித்தார். இறக்கும் வரை ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

வாய்ப்பேச்சு குறைய ஆரம்பிக்கும் போது மனதின் உள்ளே ஓடும் சிந்தனைகள் ஆழப்படுகின்றன. அவை உயர்ந்த சிந்தனைகளாக இருக்கும் போது வாழ்க்கையே மாற ஆரம்பிக்கின்றது. சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கையும் அப்படி மாற ஆரம்பித்தது. ஆத்ம ஞானத்திலேயே மூழ்கி இருந்த அவர் நீண்ட காலம் சமாதி நிலைகளில் லயிக்க ஆரம்பித்தார். அவருக்கு அதன் மூலம் பல உயர்ந்த யோக சக்திகள் கிடைக்க ஆரம்பித்தன. சில சம்பவங்களைப் பார்ப்போம்.

ஒரு நாள் காவேரிக்கரையில் அவர் நடந்து கொண்டிருந்த போது சில சிறுவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவர்களுக்கு மதுரையில் அந்த சமயத்தில் நடந்து கொண்டிருந்த திருவிழாவுக்குப் போக ஆசையாக இருந்தது. சதாசிவ பிரம்மேந்திரரைப் பார்த்த சிறுவர்கள் “நீங்கள் மதுரைக்கா போய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்களையும் அழைத்துப் போவீர்களா” என்று மன்றாடிக் கேட்டார்கள். அடுத்த கணம் அந்தச் சிறுவர்கள் மதுரையில் திருவிழாவின் நடுவில் இருந்தார்கள். அந்தத் திருவிழாவைக் கண்டு களித்து விளையாடி அவர்கள் திருப்தி அடைந்த பின் அடுத்த கணம் பழைய இடத்திற்கே வந்து சேர்ந்தார்கள். சிறுவர்கள் தங்கள் அனுபவத்தை பிரமிப்புடன் வீட்டாரிடம் சொல்ல காவிரிக்கரை கிராமங்களில் அவர் பற்றிய பேச்சாகவே இருந்தது. நூறு மைல் தொலைவில் இருந்த மதுரைக்கு அவர் யோகசக்தியாலேயே அந்தச் சிறுவர்களை அழைத்துச் சென்றது அனைவருக்கும் பிரமிப்பாக இருந்தது இயல்பேயல்லவா?

அந்தக் கதையைக் கேட்ட ஒரு அதிகப்பிரசங்கிக்கு அதில் நம்பிக்கை இருக்கவில்லை. இது என்ன கட்டுக்கதை என்று நினைத்த அவன் சதாசிவ பிரம்மேந்திரரைப் பரிசோதித்து அவர் பொய்யர் என்று நிரூபிக்க எண்ணினான். அவரிடம் போய் தன்னையும் மதுரையில் நடக்கும் திருவிழாவிற்கு அழைத்துப் போக முடியுமா என்று கேட்டான். அடுத்த கணம் அவன் தொலைவிலிருக்கும் வேறெதோ ஊரில் இருந்தான். அது மதுரையும் அல்ல. சதாசிவ பிரம்மேந்திரர் அவர் கண்ணுக்குக் காணப்படவேயில்லை. அங்கிருந்து அவன் மிகுந்த சிரமத்துடன் நடந்தே தன் ஊருக்குத் திரும்பி வர வேண்டி இருந்தது.

ஒரு நாள் அவர் காவிரிக்கரையில் தியானத்தில் அமர்ந்தவர் சீக்கிரமாகவே சமாதி நிலையை அடைந்தார். புற உலகை மறந்தார். திடீரென்று பெருமழை பெய்ய ஆரம்பித்தது. வெள்ளம் ஏற்படும் அபாய நிலையும் தெரிந்ததால் தங்கள் வீடுகளுக்கு விரைய ஆரம்பித்த மக்கள் சதாசிவ பிரம்மேந்திரரையும் அங்கிருந்து போய் விடச் சொல்லிக் கத்தினார்கள். ஆனால் அவர்கள் கத்தியதும், பெருமழை பெய்ய ஆரம்பித்ததும், அவர் காதுகளை எட்டவில்லை. வெள்ளம் வந்து அவர் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளம் வடிந்த பின் அவரைக் காணவில்லை. அவர் இறந்து விட்டார் என்று எண்ணிய ஊர் மக்கள் வருத்தம் அடைந்தனர்.

சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஆற்று மணலை வண்டியில் அள்ளிச் செல்ல ஒரு குடியானவன் வந்தான். அவன் மண்வெட்டியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கையில் அவன் மணலிலும், மண்வெட்டியிலும் ரத்தக் கறை தெரியவே அவன் பயந்து போனான். அவன் மிகவும் கவனமாகக் கையால் மணலைத் தள்ளிப் பார்த்த போது சதாசிவ பிரம்மேந்திரரின் தலை தெரிந்தது. அதிர்ந்து போன அவன் ஓடிப்போய் ஊர்ப் பெரியவர்களை அழைத்து வந்தான். எல்லோரும் மண்ணை அப்புறப்படுத்தி சதாசிவ பிரம்மேந்திரரின் உடலை வெளியே எடுத்தார்கள். அப்போதும் அவர் உயிர்த்துடிப்பு இருந்தது அவர்களுக்குப் பேரதிசயமாக இருந்தது.


சதாசிவ பிரம்மேந்திரர் கண்விழித்துப் பார்த்தார். குடியானவன் அவர் காலில் விழுந்து அவரைக் காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டான். ஆனால் அவர் கோபமோ, வருத்தமோ இல்லாமல் உறக்கத்தில் விழித்துக் கொண்டு கிளம்புபவர் போல எழுந்து போய் விட்டார். இதுவல்லவா யோக சக்தி, இதுவல்லவா அலட்டலோ, பகட்டோ இல்லாத மெய்ஞான நிலை?


(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி: 17.07.2015


Thursday, January 21, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 82

க்‌ஷய் கண்விழித்த போது மைத்ரேயன் பைனாகுலரில் கவனமாகவே கண்காணித்துக் கொண்டிருந்தான். அந்தக் கடுங்குளிரில் அக்‌ஷய் அவனுக்குப் போர்த்தி விட்டிருந்த கம்பளி இப்போது அவன் உடலில் இல்லை. திரும்பிப் பார்த்த போது அந்தக் கம்பளியை மைத்ரேயன் இரண்டு ஆடுகளுக்கும் போர்த்தி விட்டிருப்பது தெரிந்தது. அக்‌ஷய் புன்னகைத்தபடி எழுந்து உட்கார்ந்தான்.

“உனக்குக் குளிரவில்லையா? அந்தக் கம்பளியை ஆடுகளுக்குப் போர்த்தி இருக்கிறாய்?”

மைத்ரேயன் அக்‌ஷயைத் திரும்பிப் பார்த்தான். ”பாவம் இரண்டும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவை நமக்காகத் தான் இந்த அதிகக் குளிரிலும் இங்கே இருக்கின்றன. இல்லா விட்டால் இரவு நேரத்தில் குறைவான குளிர் தேடி மலையின் கீழ்ப்பகுதிக்குப் போயிருக்கும். கம்பளியைப் போர்த்திய பிறகு தான் நிம்மதியாகத் தூங்கின....”

அவன் தனக்குக் குளிர்வதைப் பற்றிப் பேசாததை அக்‌ஷய் கவனிக்கத் தவறவில்லை. விடிய ஆரம்பித்திருந்தது. அக்‌ஷய் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஆறரை. மைத்ரேயன் தான் கண்காணித்து குறித்து வைத்திருந்ததைத் தெரிவித்தான். முந்தைய கால அளவுகளில் பெரிய வித்தியாசம் இல்லை.


இராணுவ வேலை ஆபத்துக் காலங்களில் மட்டுமே வீரர்களை திடீர் திடீர் மாறுதல்களுக்குத் தயார்ப்படுத்தி வைக்கிறது. மற்ற சாதாரண சமயங்களில் இராணுவ ஒழுங்குடன், அதாவது மாறாத இயந்திரத்தனத்துடன் தான் எல்லா வேலைகளும் சீராக நடக்கும். அதை இது வரை நடந்த கண்காணிப்பு உறுதிப்படுத்தி விட்டது. அக்‌ஷய் திருப்தி அடைந்தான்.

காலை ஏழு மணிக்கு புதிய வீரர்கள் வந்து பழைய வீரர்கள் செல்லும் நேரத்தில் மட்டும் சில நிமிட இடைவெளி அதிகமாக இருந்தது. அந்த நேரம் தான் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் என்று அக்‌ஷய் முடிவெடுத்தான்.

பின் மைத்ரேயனிடம் சொன்னான். ”நீ இங்கேயே இரு. நான் சிறிது தூரம் போய் நம் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார்ப்படுத்த வேண்டும். ஏதாவது ஆபத்து வந்தால் குரல் கொடு”. மைத்ரேயன் தலையசைத்தான்.


நீலக்கரடிகளுக்குப் பிடிக்காத நெடி உடைய சாறை மீண்டும் தன் உடலில் பூசிக் கொண்டு அக்‌ஷய் மலையில் இன்னும் மேலே ஏற ஆரம்பித்தான். மேலே ஏறுவது இது வரை இருந்தது போல சுலபமாக இருக்கவில்லை. இது வரை மனிதர்கள் அடிக்கடி நடந்த தடமாவது இருந்தது. இப்போது அவன் போகும் பாதையில் தடத்தின் தடயம் கூடத் தெரியவில்லை. காலை ஆகியிருந்த போதும் கடுங்குளிரின் தாக்கம் போகின்ற வழியில் அதிகமாகவே அவனுக்குத் தெரிந்தது. சில இடங்களில் வழுக்கியது. சுதாரித்துக் கொண்டு கவனமாக நடந்தான். மைத்ரேயனை இங்கு அழைத்து வரும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டவன் அந்த இடங்களை மனதில் குறித்துக் கொண்டான். அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் அவன் ஒரு இடத்தை அடைந்தான். மலையில் சற்றே பள்ளமான இடம் என்பதைத் தவிர வேறெந்த வித்தியாசமும் பார்ப்பவர்களுக்கு அங்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அது தான் அவன் தேடி வந்த வித்தியாசமான இடம். அந்த இடம் தானா என்பதை அவன் ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டான். சுமார் பதினைந்து ஆண்டுகளில் அந்த இடம் பெரிய மாற்றத்தைச் சந்தித்து விடவில்லை.....


சுமார் 25 அடிகள் தள்ளி இருந்த மலைப்பாறையில் அமர்ந்து தான் அவன் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கோடை காலத்தில் தியானம் செய்ய வந்திருந்தான். அந்த இடம் அந்த மலையின் கிட்டத்தட்ட மையப்பகுதியில் இருந்தது. அப்போது அதையும் தாண்டிப் போக முயற்சித்தும் அவனால் முடியவில்லை. அதனால் தன்னால் போக முடிந்த அதிகபட்ச உயரமான அந்த இடத்திலேயே தியானம் செய்ய முடிவு செய்து அங்கே இரண்டு நாள்கள் அவன் அந்த சமயத்தில் தங்கி இருந்தான்.

இரண்டாவது நாள் தான் அந்த அதிசய நிகழ்வு நடந்தது. அப்போது அவன் தியானத்தில் இருக்கவில்லை. தன் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய குரு என்னவெல்லாம் கேள்விகள் கேட்கலாம் என்று எதிர்பார்த்து அந்தக் கேள்விகளுக்கான பதில்களை மனதில் சேகரித்துக் கொண்டிருந்தான். எத்தனையோ விஷயங்கள் கவனம் அதிகமாய் தர தரத்தான் விளங்க ஆரம்பிக்கின்றன என்பதை அவன் அந்த குருவிடம் வந்த பிறகு தான் சிலாகிக்க ஆரம்பித்திருந்தான். உலகில் எத்தனையோ அதிசயங்களை கவனிக்காமலேயே மனிதன் தன் கவனக்குறைவால் கடந்து போய் விடுகிறான் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தான் ஒரு ஆடு சற்று தள்ளி பாறைகள் பெரிய பெரிய கற்களாய் உடைந்து போயிருந்த பகுதிக்கு வந்தது.

அந்த ஆடு சற்று தள்ளி பெரிய பாறை ஒன்றில் அமர்ந்திருந்த அவனைக் கூர்ந்து பார்த்தது. அவன் நண்பனா, பகைவனா என்று அது எடை போட்டுக் கொண்டிருந்தது போல அவனுக்குத் தோன்றியது. தியானத்தில் இருந்தவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி அமைதி அலைகளையே பரப்புபவர்கள் என்பதால் அந்த அலைகளை அந்த ஆடும் உணர்ந்திருக்க வேண்டும். அதன் பிறகு அந்த ஆடு அவனை லட்சியம் செய்யவில்லை. கற்களின் இடையில் இருந்த புற்களை மேய ஆரம்பித்தது. அப்படியே சற்று நகர்ந்து சற்று பள்ளமான பகுதிக்கு வந்த ஆடு பள்ளத்தில் படர்ந்திருந்த ஒரு செடியின் இலைகளை சாப்பிட ஆரம்பித்தது. ஒரு பக்கத்து இலைகளைச் சாப்பிட்டு விட்டு மறுபக்கத்து இலைகளை சாப்பிட யத்தனித்த போது கால் தடுக்கி தடுமாறி விழுந்த ஆடு அடுத்த கணம் காணவில்லை. சின்னதாய் ஒரு சறுக்கல் சத்தம் மட்டுமே அவனுக்கே கேட்டது.

மலை ஆடுகள் தடுக்கி விழுவது அபூர்வம். அதன் கால்கள் மற்றும் பாதங்களின் அமைப்பு சமவெளி ஆடுகளிடம் இருந்து பெரிதும் வித்தியாசப்படுபவை. அப்படியே தடுக்கி விழுந்தாலும் சுதாரித்து பாறைகளைப் பற்றிக் கொண்டு விடுபவை. அதனால் அது அப்படி சுதாரித்து வந்து விடும் என்று கணக்குப் போட்ட அக்‌ஷய்க்கு அது உடனடியாக அப்படி வராதது ஆச்சரியமாய் இருந்தது. ஏதாவது பாறை இடுக்கில் சிக்கி இருக்குமோ என்று சந்தேகப்பட்டு அதைக் காப்பாற்ற எண்ணி அவன் பாறையின் மீது எழுந்து நின்று கிளம்ப யத்தனித்த போது மலையின் அந்தப் பக்கத்து அடிவாரத்தில் ஆடு நிலைகுலைந்து விழுந்து தடுமாறி எழுந்து நிற்பது தெரிந்தது. அது வேறு ஆடாக இருக்குமோ என்று ஆரம்பத்தில் அவன் சந்தேகப்பட்டான். ஆனால் அல்ல என்பது கூர்ந்து பார்த்த போது அவனுக்குத் தெரிந்தது.

திகைத்துப் போன அக்‌ஷய் மெள்ள கவனமாக வந்து ஆடு சறுக்கிய இடத்தை ஆராய்ந்தான். மெள்ள ஆடு சாப்பிட்டுக் கொண்டிருந்த செடியின் கொடிகளை விலக்கிப் பார்த்த போது அங்கே சுமார் மூன்றரை அடி அகலத்தில் பெரியதாய் ஒரு துவாரம் தெரிந்தது. பார்க்க ஒரு குகையின் துவாரம் போலத் தெரிந்தாலும் அது குகையல்ல, மலையடிவாரம் வரை செல்லும் இயற்கைத் துவாரம் என்பது புரிந்தது. அதனால் தான் அதில் தடுமாறி விழுந்த ஆடு அடித்தளம் வரை போயிருக்கிறது. கவனமாக மேலும் அந்த துவாரத்தை ஆராய்ந்தான். அதன் அடிப்பகுதி கரடுமுரடாய் இல்லாமல் வழுவழுவென்று இருந்தது. மேலும் ஆராய்ந்து சிந்தித்த போது விளங்கியது. மலையின் பனிப்பகுதி உருகும் போது நீர் பள்ளப்பகுதியில் இருக்கும் அந்த துவாரத்தின் வழியாகவே சென்று சென்று காலப்போக்கில் அந்த அடிப்பகுதி மென்மையாகி விட்டிருக்க வேண்டும். இயற்கையாக ஏற்படுத்தி இருக்கும் ஒரு அபூர்வ சுரங்கப் பாதை....

மேலே இருந்து அந்த ஆட்டைக் கவனித்தான். ஆடு மேலே செங்குத்தாய் தெரிந்த மலையில் மீண்டும் ஏறவில்லை. சறுக்கிய பாதையில் மீண்டும் மேலே ஏறி வருவதும் அதற்கு முடிகிற விஷயமில்லை. ஆடு மேலும் கீழே பயணித்து குறுக்கே ஓடிக் கொண்டிருந்த ஒரு ஓடையை ஒரே எட்டில் கடந்து நேபாளப் பகுதியில் இருக்கும் மலையில் ஏற ஆரம்பித்தது. அரை மணி நேரத்தில் நேபாள எல்லை வேலியைத் தாண்டி உள்ளே சென்றது. அன்று அக்‌ஷய் அந்தக் காட்சியை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் தன் குருவிடம் திரும்பிச் சென்ற போது அந்த சம்பவம் பற்றிய ஏதாவது ஒரு கேள்வியை அவரிடமிருந்து எதிர்பார்த்தான். வேறுபல கேள்விகளைக் கேட்டாரே ஒழிய இது பற்றிக் கேட்கவில்லை. அவரிடம் அவனாகவே அந்த சம்பவத்தைச் சொன்னான். அவர் அவனை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சொன்னார். “எதுவுமே உலகில் தற்செயலாக நடப்பதில்லை....!”

அது அவர் அடிக்கடி சொல்லும் வாசகம் என்பதால் அவன் அதற்கு தனி அர்த்தம் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நிகழ்காலத்தில் வாங் சாவொவின் தீவிரத் தேடுதல் ஆரம்பித்தவுடன், எல்லா எல்லைப் பகுதிகளும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது தெரிந்தவுடன், அவனுக்கு அன்று அவன் குரு சொன்ன வாசகத்தின் உள்ளர்த்தம் தெரிய ஆரம்பித்தது.

குருவுக்கு இன்று மானசீகமாக வணக்கம் தெரிவித்த அக்‌ஷய் அந்தப் பள்ளப்பகுதியில் மிகவும் எச்சரிக்கையாக அந்த துவாரத்தைத் தேட ஆரம்பித்தான். அந்த ஆட்டைப் போல தடுமாறி சறுக்கி இப்போது கீழே போய் விடக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான். சறுக்கி கீழே போவது சுலபம். அத்தனை உயரத்திற்கு அந்த வழியில் மேலே வருவது அவனுக்கே கூடச் சுலபமல்ல. இன்றும் அந்த துவாரத்தைப் பல தாவரங்கள் மறைத்திருந்தன. அந்தத் தாவரங்களை அப்புறப்படுத்தி ஒரு வழியாக துவாரத்தைக் கண்டுபிடித்தான். ஒரு பெரிய கல்லைத் தூக்கி அந்த துவாரத்தில் வீசினான். உடனடியாக தள்ளி இருந்த பாறை ஏறி அந்தப் பக்கத்து அடிவாரத்தைக் கவனித்தான். சிறிது நேரத்தில் அந்தக் கல் கீழே சென்று விழுந்தது சின்னதாகத் தெரிந்தது. துவாரத்தில் எந்த அடைப்பும் இல்லை.

திருப்தி அடைந்த அக்‌ஷய் திரும்பினான். சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டு ஒரு நீலக்கரடி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தது அவன் நடக்க ஆரம்பித்தவுடன் அது அந்த நெடி தாளாமல் ஓடிப் போனது.

கீழே இறங்க ஆரம்பித்த அக்‌ஷய் மனதில் பிரதானமாய் இப்போது இருந்தது பக்கத்து மலையில் இருந்த நேபாள எல்லை வீரர்கள்.....!


மாரா எல்லா அலுவல்களையும் ஒதுக்கி வைத்து விட்டு கடுமையான தொடர் பூஜையில் இருந்தான். அவன் இந்த கடந்த 12 மணி நேரமாக தண்ணீர் குடிக்கவில்லை, எதுவும் சாப்பிடவில்லை, யாரிடமும் பேசவில்லை. பூஜை முடிந்த பின்னும் அரை மணி நேரம் கண்களை மூடியபடி தன் சக்திகளைக் குவித்து யோசித்து விட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் சம்யே மடாலயத்தில் இருக்கும் தன் ஆளுக்குப் போன் செய்து கேட்டான்.

“சம்யே மடாலயத்தில் மைத்ரேயன் உபயோகித்த பொருள் எதாவது இன்னமும் அங்கே இருக்கிறதா?”

“தலைமை பிக்கு தனதறையில் புத்தனின் சிலையருகே ஒரு காவியுடையை மடித்து வைத்திருக்கிறார். அதற்கும் பூஜை செய்கிறார். அது மைத்ரேயன் உடுத்திய உடையாகத் தான் இருக்க வேண்டும்.....”

“உடுத்திய உடையாக இருந்தால் மிக நல்லது.....” என்று மெல்ல சொன்ன மாராவின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. 'மைத்ரேயன் தவறு செய்து விட்டான்.....!'

(தொடரும்)

என்.கணேசன்



Monday, January 18, 2016

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 13


·         நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.


·         கழைக்கூத்து ஆடிய பின் காசுக்கு கீழே தான் இறங்க வேண்டும்.


·         குப்பையிலே கிடந்தாலும் குந்துமணி மங்காது.


·         கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது.


·         உலோபி (கஞ்சன்) என்றுமே ஏழை.


·         விளையும் போதே சோறாய் இருந்தால் விறகும், வரட்டியும் தேவை இல்லை.


·         தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.


·         பொக்கை வாயன் மெச்சினானாம் பொரி மாவை.


·         கூப்பாட்டால் சாப்பாடாகுமா?


·         இடம் வலம் தெரியாதவனுடன் இணக்கம் பண்ணக்கூடாது.


·         திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியும்.


·         ஆசிர்வாதமும், சாபமும் அறவோர்க்கு இல்லை.



தொகுப்பு: என்.கணேசன்



Thursday, January 14, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 81


க்‌ஷய்க்கு மைத்ரேயன் புதிராய் பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியது. மைத்ரேயனின் வலது பாதத்தில் பொன்னிறத்தில் ஒளிர்ந்து சுழன்றதை சம்யே மடாலயத்தில் கண்கூடாகப் பார்த்தவன் அவன். அவன் புத்தரின் அவதாரமாகவே இருக்க வேண்டும் என்பதை அக்‌ஷயின் உள்மனம் இப்போது நம்ப ஆரம்பித்திருந்தது. அப்படிப்பட்ட மைத்ரேயன் ஒரு சாதாரண சிறுவன் போல உங்கள் மகனுடன் விளையாட வேண்டும் என்று சொல்வது பொருத்தமாகத் தோன்றவில்லை.... ‘இந்தச் சிறுவன் ஏன் திடீர் திடீர் என்று நேர் எதிர்மாறாக மாறுகிறான். ஏன் முரணாக நடந்து கொள்கிறான்’ என்று நினைத்தவனாய் அக்‌ஷய் மைத்ரேயனையே கூர்ந்து பார்த்தான்.

“ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று மைத்ரேயன் புன்னகையுடன் கேட்டான்.

அக்‌ஷய் புன்னகைத்தபடி சொன்னான். “உன்னை ஆசானும், தலாய் லாமாவும் புத்தரின் அவதாரம் என்கிறார்கள். அப்படிப்பட்ட நீ என் மகனுடன் விளையாட வேண்டும் என்கிறாய். முரண்பாடாக இருக்கிறதே”


“என்னை யார் என்னவாக நினைக்கிறார்கள் என்பது எனக்கு அனாவசியம். என் வயதுப் பையன் விளையாட நினைப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது...”

அக்‌ஷய்க்கு அதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் சொல்வது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும் தான். ஆனால் அவதார புருஷர்கள், தெய்வீகப்பிறவிகள்.....! இது போன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளைக் கடந்தவர்கள் அல்லவா அவர்கள்?

அக்‌ஷயின் மனதில் ஓடிய எண்ணங்களுக்குப் பதில் சொல்வது போல் மைத்ரேயன் புன்னகை மாறாமல் சொன்னான். “இந்த உலகத்திற்குள் நுழையும் போது எதையும் எடுத்து வர நமக்கு அனுமதியில்லை. இங்கிருந்து போகும் போது எதையும் எடுத்துச் செல்லவும் கூட நமக்கு அனுமதியில்லை. இப்படி எல்லாக்கணக்குமே பூஜ்ஜியமாகத் தான் முடியும் என்கிற போது இங்கு இருக்கிற காலத்தில் எல்லாவற்றையுமே விளையாட்டாய் எடுத்துக் கொள்வதல்லவா புத்திசாலித்தனம்”

அக்‌ஷய் அசந்து போனான். அவன் மனம் மைத்ரேயன் சொன்னதை அசைபோட்டது. இவ்வளவு ஆழமாகப் போக முடிந்தவன் சமயங்களில் மந்தமான சிறுவனைப் போன்ற முகமூடியைப் போட்டுக் கொள்வது தன்னை மற்றவர்களிடமிருந்து மறைத்துக் கொள்ளத் தான் போலிருக்கிறது.... அக்‌ஷய்க்கு அவனை சீண்டத் தோன்றியது. மெல்லக் கேட்டான். “நம் உயிருக்கே எந்த நேரமும் ஆபத்து இப்போது காத்திருக்கிறதே. இதை எப்படி விளையாட்டாய் எடுத்துக் கொள்வது?”

“வாழ்க்கை விளையாட்டு எந்த நேரமும் முடியலாம் என்று நன்றாகத் தெரிந்திருக்கும் போது, அதற்கு நாம் எப்போதுமே தயாராகவும் இருக்கிற போது கவலைப்பட என்ன இருக்கிறது. நீங்களே என்னைக் காப்பாற்ற ஒத்துக் கொண்டது அந்த மனநிலையுடன் தானே....”

”அது எப்படி உனக்குத் தெரியும்?” அக்‌ஷய் உடனடியாகக் கேட்டான்.

“யூகம் தான்” என்று மைத்ரேயன் அமைதியாகச் சொன்ன போது வாய் விட்டுச் சிரித்த அக்‌ஷய் அவனைச் செல்லமாய் அடிக்க கை ஓங்க, மைத்ரேயன் சற்று பின்னுக்கு நகர்ந்து புன்னகைத்தான்.

அக்‌ஷய் மறுபடி பைனாகுலரில் தன் கண்காணிப்பைத் தொடர ஆரம்பிக்க, மைத்ரேயனும் உறங்க ஆரம்பித்தான். குளிர் கடுமையாக மாற ஆரம்பித்தைப் பொருட்படுத்தாமல் அக்‌ஷய் எதிர் மலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்திரத்தனமான துல்லியத்துடன் நடப்பதை கவனித்தான். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இரவு நேரத்தில் நேபாள எல்லை வீரர்கள், அக்‌ஷய் பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து போனார்கள். முதல் முறை வந்தவன் மறுபடி நான்காவது முறை வந்தான். இரண்டாவது முறை வந்தவன் ஐந்தாவது முறை வந்தான். இப்படி மூன்று ஆட்கள் மாறி மாறி வந்தார்கள். இந்தக் கண்காணிப்பு இரவு பத்து மணி வரை இருபது நிமிட இடைவெளி- நான்கு வீரர்கள் என்கிற அளவில் இருந்தது. இந்த அளவீடுகள் சில சமயங்களில் அதிக பட்சமாய் இரண்டு நிமிட அளவுக்குள் வித்தியாசப்பட்டன.  பெரும்பாலான சமயங்களில் எதிர் மலை வீரர்களின் கவனம் இந்த மலையின் உச்சியிலேயே இருந்தன. அங்கே நடமாடிக் கொண்டிருந்த நீலக்கரடிகளை அவர்கள் சுவாரசியத்துடன் கவனித்தது தெரிந்தது. அவர்கள் இந்த மலையில் ஆட்களை எதிர்பார்க்கவும் இல்லை. ஒருவேளை ஆட்கள் இருந்தால் கூட அவர்கள் இந்த மலையைத் தாண்டி அந்த மலைக்கு வர வாய்ப்பிருப்பதாய் அந்த வீரர்கள் நினைக்கவில்லை என்பது அவர்கள் கண்காணிக்கும் விதத்திலேயே தெரிந்தது....

சுமார் நான்கு மணிக்கு மைத்ரேயன் விழித்துக் கொண்டான். எழுந்து அமர்ந்தவன் அந்தக் கடுங்குளிரில் நடுங்கியபடியே அக்‌ஷயிடம் சொன்னான். “இனி நீங்கள் சிறிது தூங்குங்கள். நான் பார்க்கிறேன்....”

அக்‌ஷய் தயங்கினான். மைத்ரேயன் நிறுத்தி நிதானமாகச் சொன்னான். “என்ன பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும், எதையெல்லாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள். நான் கவனமாகவே கண்காணிப்பேன்....” சொல்லி விட்டு பைனாகுலருக்காக கையை நீட்டினான்.

அக்‌ஷய்க்கு உறக்கம் தேவையாக இருந்தது. இன்னொரு தடித்த கம்பளியை மைத்ரேயனுக்கு போர்த்தி விட்டு, பைனாகுலரை அவனிடம் தந்த அக்‌ஷய் எப்படிக் கண்காணிக்க வேண்டும் என்பதை விளக்கினான். கடைசியில் சொன்னான். “ஏதாவது ஆபத்து என்று தோன்றினால் வாய் விட்டு சத்தமாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. என்னை நீ லேசாகத் தொட்டால் போதும். நான் எழுந்து கொள்வேன்.....”

மைத்ரேயன் புன்னகையுடன் தலையசைத்தான். மைத்ரேயன் இரவு நேரக் கண்காணிப்பைத் தொடர அக்‌ஷய் உறங்க ஆரம்பித்தான்.



ந்த நேரத்தில் தான் லீ க்யாங் விழித்தான். அவன் உறங்கி மூன்று மணி நேரம் தான் ஆகி இருந்தது. 
இந்த மைத்ரேயன் விஷயம் சுமுகமாகக் கையாளப்பட்டு முடியும் வரை நிம்மதியான முழு உறக்கம் முடியாத காரியம் என்றே அவனுக்கு ஆகி இருந்தது. மைத்ரேயன் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த ஒற்றர்கள், அதிகாரிகளின் அலைபேசி அழைப்புகள் வரும் போதெல்லாம் மைத்ரேயனும், அவனது பாதுகாவலனும் பிடிபட்டார்கள் என்ற செய்தியை அவன் எதிர்பார்த்தான். அப்படி எதுவும் நடந்து விடவில்லை. சந்தேகத்தின் பேரில் சிக்கிம் அருகே நாதுலா கணவாயிலும், நேபாள நட்பு நெடுஞ்சாலையிலும் பிடிபட்டிருந்த இரண்டிரண்டு நபர்களும் தந்தை-மகன் யாத்திரீகர்கள் ஆக இருந்தது பின்பு தான் தெரிந்தது.....

லீ க்யாங் மறுபடி திபெத் இந்திய நேபாள எல்லைப் பகுதிகளை ஆராய்ந்தான். கடைசியாக அவன் பார்வை வாங் சாவொ சொன்ன சைத்தான் மலையில் நிலைத்தது. இந்த மலையில் இது வரை அவர்கள் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தவில்லை. மலை அமைப்பும், நீலக்கரடிகளுமே அவர்கள் வேலையைச் செய்வதால் அதற்கான அவசியமும் இது வரை வந்ததில்லை...

ஆனாலும் எந்த அஜாக்கிரதையும் எதிலும் இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வால் உந்தப்பட்டவனாய் லீ க்யாங் நேபாள உளவுத்துறைத் தலைவனை உடனடியாக அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

நல்ல உறக்கத்தில் இருந்த நேபாள உளவுத்துறைத் தலைவன் எரிச்சலோடு அலைபேசியைப் பார்த்தான். லீ க்யாங்கின் அலைபேசி எண் என்பதைக் கண்டவன் மனதில் அங்கலாய்த்தான். ‘இந்த ஆளுக்குத் தூக்கமே கிடையாதா? நேபாளம் போன்ற மிகச்சிறிய நாட்டின் உளவுத்துறை தலைவனான அவன் அண்டையில் இருக்கும் பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவின் உளவுத்துறைகளிடம் பல விஷயங்களுக்கு உதவி கேட்க வேண்டி இருப்பதால் அந்தப் பக்கங்களில் இருந்து வரும் அபூர்வமான ஓரிரு உதவிகளை உடனடியாகச் செய்து அவர்கள் நல்லபிப்பிராயத்தில் இருக்க வேண்டி வருகிறது. அதனால் பலவந்தமாக குரலில் இனிமையையும் மரியாதையையும் வரவழைத்துக் கொண்டு பேசினான். “ஹலோ

லீ க்யாங் திபெத்தில் இருக்கும் அந்த சைத்தான் மலையைத் தாண்டி யார் நேபாள எல்லைக்குள் நுழைந்தாலும் அவர்களைக் கைது செய்து பிடித்து வைக்கும்படியும், தன் அனுமதி இல்லாமல் அவர்களை விடுவிக்கக் கூடாதென்றும் சொன்னான். நுழையும் ஆட்கள் குறித்த தோற்றக்குறிப்புகள் கூட அவன் எடுத்துரைக்கவில்லை. எவன் அந்த வழியாக நுழைந்தாலும் அவன் மைத்ரேயன் சம்பந்தப்பட்டவனாகத் தான் இருக்க வேண்டும் என்று லீ க்யாங் நினைத்தான்.

சைத்தான் மலையைத் தாண்டி ஒருவன் நேபாள எல்லைக்கு வந்தால் என்றதற்கே நேபாள உளவுத்துறைத் தலைவன் வாய் விட்டுச் சிரித்தான். “என் இத்தனை கால அனுபவத்தில் அந்த மலையைத் தாண்டி அபூர்வமாய் ஓரிரு நீலக்கரடிகளும், ஆடுகளும் வந்திருக்கின்றனவே தவிர மனிதர்கள் யாரும் வந்ததில்லை.... எங்கள் எல்லை வீரர்கள் அங்கு நிற்பதே மற்ற பகுதிகளில் இருந்து மலை அடிவாரம் வந்து எங்கள் எல்லைக்குள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும், நீலக்கரடிகள் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான்.

“தெரியும். ஆனாலும் கூட எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது தானே?

அது சரி தான். ஆனால் அந்த மலை தாண்டி யாரும் அமானுஷ்யர்களாக இருந்தால் மட்டுமே வரமுடியும்....

ஆங்கிலத்தில் பேசிய நேபாள உளவுத்துறைத் தலைவன் அமானுஷ்யர்கள் என்ற சொல்லை மட்டும் அப்படியே சொன்னது லீ க்யாங்கின் மூளையில் பொறிதட்ட வைத்தது. என்ன வார்த்தை சொன்னீர்கள்?

“அமானுஷ்யர்கள்

“அப்படி என்றால் என்ன அர்த்தம்?

“மனித சக்திக்கு மீறிய சக்தி உடையவர்கள் என்று அர்த்தம்.... அது சம்ஸ்கிருதச் சொல்....

“சரி நான் சொன்னது நினைவிருக்கட்டும். அந்த எல்லைப்பகுதியில் கூட அலட்சியம் வேண்டாம்.என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்ட லீ க்யாங் சிந்தனையில் ஆழ்ந்தான். வித்தியாசமான பெயருடைய ஒருவன் உதவியைத் தான் தலாய்லாமா இந்தியாவில் கேட்டிருந்தார். அந்த வித்தியாசமான பெயர் அமானுஷ்யர் என்பதாக இருக்கலாமோ?

லீ க்யாங் உடனடியாக இன்னொரு எண்ணைத் தொடர்பு கொண்டான்....

(தொடரும்)

என்.கணேசன்

வாசக அன்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Monday, January 11, 2016

தத் வாலே பாபாவின் மற்ற சக்திகள்!


47 மகாசக்தி மனிதர்கள்

ராட்சஸ நாகத்துடன் வாழ்ந்த தத் வாலே பாபாவின் காலம் முடிந்த பிறகும் அந்தக் குகைக்கு நாகங்கள் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றன என்று அந்தக் குகையில் தற்போது வாழும் அவரது சீடர் சுவாமி சங்கரதாஸ்ஜீ, வின்செண்ட் ஜே டேக்சின்கி (Vincent J. Daczynski) என்ற ஆன்மிக எழுத்தாளரிடம் கூறுகின்றார். அந்த எழுத்தாளர் எழுதிய யோக குரு ஸ்ரீ தத் வாலே பாபா-இமாலயத் துறவி (YOGA GURU SRI TAT WALE BABA - RISHI OF THE HIMALAYAS) என்ற நூலில் சுவாமி சங்கரதாஸ்ஜீ மூலமாக அறிந்து கொண்ட பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

வின்செண்ட் ஜே டேக்சின்கி யோகாவை அமெரிக்காவில் பிரபலப்படுத்திய மகரிஷி மகேஷ் யோகி இந்தியாவில் கங்கைக்கரையில் ஒரு ஆசிரமத்தில் இருந்து கொண்டு யோகாவைக் கற்றுக்கொடுத்த காலத்தில் யோகாவை 1969 ஆம் ஆண்டு கற்றவர். அப்போது அந்த ஆசிரமத்திற்கு தத் வாலே பாபா வருகை புரிந்த போது அவருடைய தியானம் குறித்த உரையைக் கேட்டு ரசித்தவர். அவர் இருபது வருடங்கள் கழித்து இந்தியா வந்த போது தத் வாலே பாபா உயிரோடு இல்லை. ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் தத் வாலே பாபா சக்திகள் பற்றி பலர் மூலமாக கேள்விப்பட்டிருந்ததால் அவர் வாழ்ந்த குகைக்கு வருகை புரிந்த போது தான் தத் வாலே பாபாவின் சீடர் சுவாமி சங்கரதாஸ்ஜீயைக் கண்டு பேசி இருக்கிறார்.

சுவாமி சங்கரதாஸ்ஜி தன் குருவின் காலத்திற்குப் பின்னும் அந்தக் குகைக்கு நாகங்கள் வருகை தரும் என்றும் தன் குரு அளவுக்கு அந்த நாகங்களை ரசிக்க முடிந்ததில்லை என்றும் வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கிறார். நான் தியானத்தில் மூழ்கி இருந்து விட்டு கண் விழிக்கையில் ஒன்று அல்லது இரண்டு நாகங்கள் என் காலடியில் கிடந்ததைக் கண்டு நான் கதிகலங்கிப் போயிருக்கிறேன். குருவின் அருளால் அவை நம்மை துன்புறுத்துவதில்லை என்றாலும் அவை நம்முடன் இருப்பது அசௌகரியமாகவே இருக்கின்றது

சுவாமி சங்கரதாஸ்ஜீயிடம் அவர் குருநாதரின் அபூர்வ சக்திகளைப் பற்றிக் கேட்ட போது தன் சொந்த அனுபவத்தையே அவர் சொன்னார்.
ஒரு முறை நான் கடுமையான தலைவலியால் பீடிக்கப்பட்டேன். இரவு நேரத்தில் தலையின் இருமருங்கிலும் இரண்டு ஈட்டிகளால் குத்துவது போலத் தாங்க முடியாத வலி. உடலெல்லாம் எரிவது போல் ஒரு உணர்வு. தலையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்த எனக்கு எழுந்து கழிப்பறைக்குச் செல்லக்கூட முடியவில்லை. படுக்கையிலேயே அசுத்தம் செய்து கொண்டேன். என்ன ஆகிறது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாய்க் கழிந்து கொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி இருக்கும். அந்த வேளையில் திடீரென்று என் அறைக்கு என் குரு தத் வாலே பாபா வந்தார். தாளிட்டு இருந்த அறைக்குள் அவர் எப்படி வந்தார் என்று நான் அந்தக் கணத்திலும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் தலைவலி உயிர் போவது போல இருந்ததால் அதைப்பற்றி நான் அதிகம் யோசிக்க முடியவில்லை

“என் குருநாதர் ஒரு கிண்ணத்தை எடுத்து என் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைத்தார். உடனே பாலைப் போன்ற வெண்ணிற திரவம் என் தலையிலிருந்து அந்தக் கிண்ணத்தில் விழ ஆரம்பித்தது. அது என்ன, எப்படி விழுகிறது என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை. அந்தக் கிண்ணம் நிரம்பியவுடன் அந்தக் கிண்ணத்தை அவர் அருகில் இருந்த ஒரு நபரிடம் என் குருநாதர் தந்தார். அவருடன் இன்னொருவர் எப்படி வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த இன்னொருவர் குருநாதரின் ஒரு சீடராக இருக்க வேண்டும். அந்த சீடர் அந்தக் கிண்ணத்தைக் காலி செய்து விட்டு கிண்ணத்தை மறுபடியும் தந்தார். அந்தக் கிண்ணத்தை மறுபடி என் புருவங்களின்  மத்தியில் நெற்றியில் என் குருநாதர் வைத்தார். மறுபடி என் தலையிலிருந்து வெண்ணிற திரவம் அந்தக் கிண்ணத்தில் விழ ஆரம்பித்தது. அது நிரம்பியவுடன் குருநாதர் அதைப் பழையபடி அந்தச் சீடரிடம் கொடுத்தார். சீடர் அதைக்காலி செய்து தர மறுபடி என் நெற்றியில் என் குருநாதர் வைத்தார். இப்படி நான்கு முறை அந்தக் கிண்ணத்தில் வெண்ணிற திரவம் விழுந்து அது காலி செய்யப்பட்டது.

“அந்த செய்கையால் என் அனைத்து கர்மங்களும் பாவங்களும் என்னிடமிருந்து எடுத்துவிடப் பட்டது போல நான் லேசாக உணர்ந்தேன். பிறகு என் நெற்றியை என் குருநாதர் லேசாக அழுத்தி விட்டார். அத்துடன் என் தலைவலி முற்றிலுமாக நீங்கி விட்டது. அதற்குப்பின் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.  இப்போது என் தலைவலி முற்றிலும் நீங்கி விட்டிருந்தபடியால் அவர் தாளிட்ட கதவு வழியாகவே செல்வதை நான் பார்க்க முடிந்தது.

சுவாமி சங்கரதாஸ்ஜீ சிலிர்ப்புடன் சொன்னார். “அவர் எப்படி வந்து போனார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் நான் இன்று வரை என்றும் நோய்வாய்ப்பட்டதில்லை.

இந்த வெண்ணிற திரவத்தைத் தலையில் இருந்து கிண்ணத்தில் எடுக்கும் நிகழ்ச்சி இது வரை வேறு யாரும் பயன்படுத்திய ஒரு யுக்தியாக நாம் இது வரை படித்ததோ கேட்டதோ இல்லை. யோகிகளின் வழிகளை யாரே அறிவார்? ஆனால் அந்த நிகழ்வுக்குப் பின் உடனடியாக சுவாமி சங்கரதாஸ்ஜீயின் தலைவலி நிவாரணம் அடைந்தது மட்டுமல்லாமல் அதன் பிறகு ஒரு முறை கூட நோய்வாய்ப்பட்டதில்லை என்ற நிஜம் நம்மை மேலும் ஆச்சரியப்படுத்துகிறது.

காலப்போக்கில் தத் வாலே பாபாவின் புகழ் இமயம் தாண்டி இந்தியா முழுவதும் பரவியதும் அல்லாமல் வெளிநாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. அவரைப் பற்றிப் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்த ஒரு புத்தகத்தை ஒரு கனடா நாட்டுக் காரர் படித்திருக்கிறார். அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயம் அது. அந்த வயிற்று வலி எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாமல் போய் தத் வாலே பாபா பற்றி நினைத்தபடியே உறங்கி இருக்கிறார். அவர் கனவில் தத் வாலே பாபா வந்து ஒரு குறிப்பிட்ட மருந்தை வாங்கிச் சாப்பிடும்படி சொல்லி இருக்கிறார். ஆச்சரியப்பட்டு விழித்த அந்தக் கனடா நாட்டுக்காரர் அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டு முற்றிலுமாக வயிற்று வலியிலிருந்து குணமடைந்திருக்கிறார். அவர் சில ஆண்டுகள் கழித்து இந்தியா வருகையில் தத் வாலே பாபாவின் குகையைத் தேடிக்கண்டுபிடித்து வந்திருக்கிறார். அப்போது தத் வாலே பாபா உயிருடன் இல்லா விட்டாலும் குகையில் ஒரு மாத காலம் தங்கி விட்டுப் போயிருக்கிறார். அங்கு தினமும் தியானம் செய்கையில் ஒரு நாள் தத் வாலே பாபாவின் திவ்ய தரிசனமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இவ்வளவு சக்தி வாய்ந்த தத் வாலே பாபா கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பது தான் திடுக்கிட வைக்கும் செய்தி. அவர் குகைக்கு சற்றுத் தள்ளி இருந்த காட்டில் ஒரு போலி துறவி ஆசிரமம் வைத்துத் தங்கி இருந்திருக்கிறான். தத் வாலே பாபாவைத் தேடி உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆட்கள் வந்த போதும் அவன் ஆசிரமத்திற்கு அதிகம் ஆட்கள் வராததும், வந்தாலும் கூட அதிக நாட்கள் தங்காததும் பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அவன் அவரை 1974 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி சுட்டுக் கொன்றிருக்கிறான். இந்த வகை மரணமே தனக்கு வரும் என்று சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பே தன் குருநாதர் சொன்னதாக சுவாமி சங்கரதாஸ்ஜீ குறிப்பிடுகிறார். ஆனால் எவருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத தன் குருநாதரைச் சுட்டுக் கொல்ல என்ன காரணம் யாருக்கும் கிடைக்க முடியும் என்று எண்ணி அதை அலட்சியம் செய்து விட்டதாக சுவாமி சங்கரதாஸ்ஜீ சொல்கிறார்.

மரணம் இயற்கை, அது எந்த வகையில் வந்தால் என்ன என்று அந்த யோகி எண்ணி இருக்கக்கூடும். ஒவ்வொரு வருடமும் அவர் இறந்த டிசம்பர் இரண்டாம் தேதி வெளிநாட்டு, உள்நாட்டு பக்தர்கள் இமயமலையில் இருக்கும் அவருடைய குகைக்கு வந்து விட்டுப் போவது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.

அடுத்த வாரம் இன்னொரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போம்.    

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 10.7.2015

(சென்னை YMCA ராயப்பேட்டை மைதானத்தில் 13.01.2016 முதல் 24.01.2016 வரை நடக்கவிருக்கும் புத்தகக்கண்காட்சியில் என் நூல்கள் அரங்கு எண் 104ல் கிடைக்கும்.   - என்.கணேசன்)
  

Thursday, January 7, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 80


திடீரென்று மறைவில் இருந்து வந்து எதிரில் நின்று தன் பெயரை ஒரு ஆள் அழைத்ததும் வருண் திடுக்கிட்டான். ஆள் முகம் அரையிருட்டில் சரியாகத் தெரியவில்லை. குரல் மட்டும் பரிச்சயமான குரலாய் தோன்றியது. ஒரு காலத்தில் அதிகமாய் கேட்டுக் கொண்டிருந்த குரல்.....

“யாரது?” வருண் இதயம் படபடத்தது.

“அப்பா....டா” என்று சொன்னபடியே சேகர் மேலும் அதிக வெளிச்சத்திற்கு வந்தான்.

வருணின் இதயம் ஒரு கணம் ஸ்தம்பித்தது. பேய் இல்லை என்று அறிவியல் பேசிக் கொண்டிருந்தவன் இப்படி ’அந்த ஆளின்’ ஆவியை ஒரு நாள் நேரில் பார்க்க வேண்டி வரும் என்று கற்பனை கூடக் கண்டிருக்கவில்லை. பாட்டி அவனது சிறுவயதில் அடிக்கடி சொல்வாள். ’கந்தர் சஷ்டி கவசம் சொன்னால் எந்தப்பேய் பிசாசும் நெருங்காது’. அது நினைவுக்கு வர மனம் தானாகச் சொல்ல ஆரம்பித்தது. “துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்....”

வருண் அங்கிருந்து ஓடிப்போக நினைத்தான். ஆனால் கால்கள் நகர மறுத்தன. சத்தமாகவே அவன் கந்தர் ச்ஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தான். “சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்....”

சேகருக்கு மகன் தன்னைப் பேய் என்று நினைத்துக் கொண்டு விட்டான் என்பது அப்போது தான் புரிந்தது.

பிள்ளையை தைரியமான ஆண்மகனாக வளர்ப்பதை விட்டு விட்டு பயந்தாங்கொல்லியாய் வளர்த்திருக்கிறாள் சஹானா என்று மனதிற்குள் நகைத்துக் கொண்ட அவன் வாய் விட்டு மகனுக்குத் தைரியம் சொன்னான். “வருண். நான் பேய் அல்ல. உயிரோடிருக்கும் அப்பா தான். நான் சாகவில்லை”

வருண் சப்தநாடியும் ஒடுங்கிப் போய் ஒரு கணம் அதிர்ச்சியுடன் சேகரைப் பார்த்தான். இந்த ஆள் உயிரோடிருப்பதற்குப் பதில் அந்த ஆவியே பரவாயில்லை என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. எதிரே இருந்த ஆளை மிகவும் கூர்மையாகப் பார்த்தான். தலைமுடி குறைந்து வழுக்கை விழ ஆரம்பித்ததைத் தவிர தோற்றத்தில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. அப்படி என்றால் இந்த ஆள் மருத்துவமனையில் நடந்த தீவிபத்தில் கருகிச் சாகவில்லையா?... இவன் மூலமாகத் தான் வந்தனாவுக்கு அந்தப் புகைப்படம் கிடைத்திருக்க வேண்டும்.... அவன் பயம் குறைய ஆரம்பித்து ஆத்திரம் அதிகமாகியது. அக்‌ஷய் தான் அவனுடைய அப்பா.... அந்த இடத்திற்கு இந்தப் பொருத்தமில்லாத ஆள் என்றுமே வர முடியாது. வருண் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அத்தனை ஆத்திரத்தையும் குவித்து “ஏன் சாகவில்லை?” வருண் என்று அலட்சியமாகக் கேட்டான்.

சேகருக்குத் தன் காதில் விழுந்தது சரியாக இருக்காது என்று தோன்றியது. யாரும் இப்படிக் கேட்க மாட்டார்கள். வருண் அதிர்ச்சியில் ஏதோ கேட்க நினைத்து எதையோ கேட்கிறான். சிரித்துக் கொண்டே சேகர் கேட்டான். “என்ன கேட்டாய்?”

சிரிக்காமல் வருண் தன் கேள்வியை மறுபடி கேட்டான். “ஏன் சாகவில்லை.”

”அன்று தீ விபத்தில் சாகாமல் எப்படி தப்பித்தீர்கள் என்று தானே கேட்கிறாய்” என்று கேட்ட சேகர் சாமர்த்தியமாகச் சொன்னான். “அது ஒரு பெரிய கதை.....” அந்த ரகசியத்தை அவன் இப்போது மகனிடம் சொல்ல விரும்பவில்லை.

வருண் சொன்னான். “கதை எல்லாம் எனக்கு வேண்டாம். என்றாவது போலீஸ் உன்னைத் தேடி வரும் போது அவர்களே விவரமாய் கேட்டுக் கொள்வார்கள். அன்றைக்கு ஏன் போனாய்? இன்றைக்கு ஏன் வந்திருக்கிறாய்? அதை மட்டும் சுருக்கமாய் சொல் போதும்....”

’கிராதகி மகனையும் தன்னைப் போலவே அகங்காரமாய் வளர்த்திருக்கிறாள். போலீஸ் தேடி வரும் என்று பயமுறுத்தி ஒருமையில் கறாராய் வேறு பேசுகிறானே...’ என்று மனதினுள் சஹானாவையும் மகனையும் சேர்ந்து கரித்துக் கொட்டிய சேகர் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொன்னான். “உனக்கு நம்பக் கஷ்டமாக இருக்கலாம். அன்றைக்கு உன் அம்மாவின் சித்திரவதை தாங்க முடியாமல் போனேன். ஆனால் உன்னை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை. பாசம் இழுத்ததால் உன்னைத் தேடி அலைந்து இன்றைக்கு வந்திருக்கிறேன்....”

“என் அம்மாவா, சித்திரவதையா?....” வருணின் குரலில் உஷ்ணம் தெரிந்தது.

சேகர் மிகவும் பொறுமையுடன் புரிய வைக்க முயலும் தொனியில் சொன்னான். “உன் அம்மா உன்னிடம் காட்டும் முகம் வேறு, என்னிடம் காட்டி இருந்த முகம் வேறு.... அந்தக் கேவலங்களை எல்லாம் சொல்ல எனக்கே வாய் கூசுகிறது.”

வாய் கூசுகிறது என்று சொல்லிக் கொண்டே கூசாமல் பேசுகிற அந்த ஆளைப் பார்க்கவே வருணுக்கு அருவருப்பாக இருந்தது. வார்த்தைகளை வளர்த்து விவாதித்துக் கொண்டிருக்காமல் இந்த ஆளை சீக்கிரமாய் கத்தரித்து விலகி விட வேண்டும் என்று எண்ணிய அவன் “சரி என்ன வேண்டும் சொல். பணம் ஏதாவது வேண்டுமா?”

சேகருக்கு அவன் அப்படிக் கேட்டது பெருத்த அவமானமாக இருந்தது. எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான். ”வருண். பணம் என்னிடம் லட்சக்கணக்கில் இருக்கிறது. உன் வளர்ப்பு அப்பன் வாங்கிக் கொடுத்திருக்கும் பழைய பைக்கை நீ ஓட்டிச் செல்வதைப் பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. உனக்குப் புதிய மாடல் கார்களில் எதை வேண்டுமானாலும் வாங்கித் தர என்னால் முடியும். எந்தக் கார் வேண்டும் கேள்......!”

“எனக்கு எதுவும் வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் என்று இப்படி வந்து தொந்தரவு செய்கிறாய் அதைச் சொல்....”

“மகனே எனக்கு நீ மட்டும் தான் வேண்டும்....” சேகர் முன்பே ஒத்திகை பார்த்து வைத்திருந்த உடைந்த குரலில் சோகமாகச் சொன்னான்.

வருண் உடல் கோப மிகுதியில் லேசாக நடுங்கியது. கடும் வெறுப்புடன் சொன்னான். “எங்களுக்கு உன்னிடம் நல்லதாக நினைக்க இருந்த ஒரே விஷயம் நீ செத்தது தான். இப்போது அதுவும் பொய் என்றாகி விட்டது... நாங்கள் என்றைக்கோ உனக்குத் தலைமுழுகியாகி விட்டது. இப்போது உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. என் அப்பா ஊரில் இருந்து வருவதற்கு முன் ஓடிப் போய் விடு.... அவர் கையில் நீ சிக்கினால் சாவே பரவாயில்லை என்று நினைக்க வேண்டி வரும்.... சத்தியமாய் தான் சொல்கிறேன்....

சொன்னவன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. அங்கிருந்து வீடு நோக்கி ஓட ஆரம்பித்தான். சேகர் முகம் சிவக்க அவனை வன்மத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்.... வருண் எவனோ ஒருவனை என் அப்பா என்று பெருமையுடன் அவனிடமே சொன்னது தான் அவனுக்கு எல்லாவற்றையும் விட அதிக அவமானத்தைத் தந்தது. அந்தக் குடும்பத்திற்கே பெரிதாக வலிக்கிற மாதிரி ஏதாவது செய்யாமல் கோயமுத்தூரை விட்டுப் போக மாட்டேன் என்று அவன் உறுதி பூண்டான்.


ன்று பிற்பகல் தொடங்கி நள்ளிரவு வரையும் அக்‌ஷய் பைனாகுலர் வழியாக பக்கத்து மலையான நேபாள எல்லையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.  அந்த மலை உச்சி எல்லையில் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. சரியாக இருபது நிமிடத்திற்கு ஒரு முறை துப்பாக்கி ஏந்திய எல்லைக்காவல் படை வீரர்களில் ஒருவன், அக்‌ஷய் குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து கண்காணித்து விட்டுப் போனான். இரவு பத்து மணிக்கு மேல் கண்காணிப்பு வீரன் வருவது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாக மாறியது.   

பகலில் அவன் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கையில் சிறிது நேரம் தியானத்திலும், சிறிது நேரம் ஆட்டுக்குட்டிகளுடன் ஆன விளையாட்டிலும் கழித்த மைத்ரேயன் பின் அக்‌ஷயிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

“உங்கள் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்.?

அக்‌ஷயை அவன் திடீர்க் கேள்வி ஆச்சரியப்படுத்தியது. முன்பு கௌதம்  பற்றி அவன் கேட்ட போது அக்‌ஷய் பிடிகொடுத்து எதையும் தெரிவித்திருக்கவில்லை. அதன் பின் இப்போது மறுபடியும் மைத்ரேயன் அவன் குடும்பம் பற்றிக் கேட்கிறான். பைனாகுலரில் இருந்து கண்ணை எடுக்காமலேயே பதில் சொன்னான். “என் பெரியம்மா, என் மனைவி, என் இரண்டு மகன்கள்...

உங்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள்?

பெரியவன் மருத்துவப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான். சிறியவன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

“உங்கள் பிள்ளைகள் பெயர்கள் என்ன?

“பெரியவன் வருண். சின்னவன் கௌதம்....

உங்கள் சின்னப் பையன் எப்படி?

அக்‌ஷய்க்கு மகனின் நினைவு சின்ன புன்முறுவலை வரவழைத்தது. “என்னேரமும் விளையாட்டு.... விளையாட்டு.... விளையாட்டு....! விளையாடும் நேரங்களில் அவனுக்குப் பசியே தெரியாது. படிக்க ஆரம்பிக்கிற நேரங்களில் தான் அவனுக்கு அடிக்கடி பசிக்க ஆரம்பிக்கும். ஏதாவது சாப்பிடக் கேட்டுக் கொண்டே இருப்பான்.....

சொல்லி விட்டு பார்வையை பைனாகுலரிலிருந்து திருப்பி மைத்ரேயனை அக்‌ஷய் பார்த்தான். மைத்ரேயன் அவன் சொன்னதை வைத்து மனதில் கற்பனை செய்து கௌதமைப் பார்க்கிறானா, இல்லை நேராகவே ஞான திருஷ்டியில்  அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று தெரியவில்லை. ஆனால் மைத்ரேயன் முகத்தில் அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே புன்னகை தவழ்ந்தது.  

“அங்கு போனவுடன் எனக்கு அவனுடன் விளையாட வேண்டும்என்று மைத்ரேயன் சொன்ன போது அக்‌ஷய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இவனை அவன் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக நினைத்து விட்டானா என்ன?

“உன்னை என் வீட்டுக்கு அழைத்துப் போக ஆசான் விட மாட்டார்....என்று அக்‌ஷய் மெல்லச் சொன்னான். மைத்ரேயனை எந்த மடாலயத்துக்கு அழைத்துப் போக ஆசான் நிச்சயித்திருக்கிறாரோ?

மைத்ரேயன் சொன்னான். “யார் எங்கு எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் நிச்சயிப்பதில்லை....



ம்யே மடாலயம்.

ஓட்டமும் நடையுமாய் வந்து தன்னை எழுப்பிய பிரதான சீடனை தலைமை பிக்கு தூக்கக்கலக்கத்துடனும் கேள்விக்குறியுடனும் பார்த்தார்.

பிரதான சீடன் சொன்னான். “கோங்காங் மண்டபத்தில் இன்று இரவுக் கண்காணிப்பு இல்லை....  முக்காடு போட்டுக் கொண்டு இரண்டு பேர் மண்டபத்திற்குள்  நுழைவதை இப்போது தான் பார்த்தேன்.....

தலைமை பிக்கு கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டே கால். லீ க்யாங் எதிரியானாலும் கோங்காங் மண்டபத்தை இரவு வேளையில் வேவு பார்க்க ஏற்பாடு செய்திருந்தது பெரிய உபகாரமாகவே அவர்களுக்கு இருந்தது. ஆனால் அந்த கண்காணிப்பு இல்லாமல் போனது தீய சக்திகளின் பிடி இறுக ஆரம்பிப்பதற்கு அறிகுறி தான் என்பதை உணர்ந்த அவர் பெருமூச்சு விட்டார். ‘அவர்கள் எந்தப் பயமும் இல்லாமல் இயங்க ஆரம்பித்து விட்டார்கள்!

 (தொடரும்)
என்.கணேசன்


Monday, January 4, 2016

ராட்சஸ நாகத்துடன் வாழ்ந்த யோகி!


46 மகாசக்தி மனிதர்கள்

மயமலை எத்தனையோ யோகிகளுடைய புகலிடமாக இருந்திருக்கிறது, இருந்து கொண்டும் இருக்கிறது. ஆன்மிக ஈர்ப்பின் காரணமாக இமயத்தில் அடைக்கலம் புகுந்தவர்கள் ஏராளம். அந்த வகையைச் சேர்ந்தவன் தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பஞ்சாபில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த கட்டுமஸ்தான ஒரு இளைஞன். பெற்றோருடன் அடிக்கடி இமயமலையில் ரிஷிகேஷில் இருக்கும் ஸ்வர்க்காஸ்ரமம் என்ற ஆசிரமத்திற்குச் சென்று கொண்டிருந்த அவனுக்கு இமயமலையின் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்து கொண்டே வந்தது.

விவசாய வேலையில் பெற்றோருக்கு உதவியாக இருந்த நேரம் போக மற்ற வேளைகளில் தியானத்தில் ஆழ்ந்து விடும் பழக்கம் கிட்டத்தட்ட எட்டாவது வயதில் இருந்தே அவனுக்கு உண்டு. அந்தம் பழக்கம் இளைஞனான பிறகும் தொடர்ந்தது. அவன் உடல்வாகைப் பார்த்து நண்பர்கள் பலரும் நீ இராணுவத்தில் சேர்ந்து கொள்ளலாம்என்று ஆலோசனை கூறினார்கள். ஆன்மிக வேட்கையும், இமயமலைக்குப் போகிற ஆசையும் அதிகமாக இருந்த போதும் இராணுவத்தையும் முயன்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அந்த இளைஞன் இராணுவத்தில் சேர்ந்தான். இரண்டே மாதங்களில் இராணுவ வேலை கசந்தது. தியானத்தில் காலம் கழிக்க விரும்பும் ஒருவனுக்கு இராணுவம் பிடிக்குமா?

இராணுவ வேலையை ராஜினாமா செய்து விட்டு ஒரு நல்ல குருவைத் தேடிப் போனான் அந்த இளைஞன். அயோத்தியாவில் ஸ்ரீ ஜகன்னாத தாஸ்ஜி என்ற குரு கிடைத்தார். ராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்து தீட்சையும் தந்த அந்த குரு அந்த இளைஞனுக்கு ஸ்ரீ கேசவ்தாஸ்ஜி என்ற பெயரிட்டார். ஆனால் அந்தப் பெயர் அந்த இளைஞனுக்கு நிலைக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் சணலான ஆடையையே இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞனை தத் வாலே பாபா என்ற பெயரில் பொதுமக்கள் அழைக்க ஆரம்பித்து அந்தப் பெயரே நிலைத்து விட்டது. தத் வாலே பாபா என்றால் சணலை உடுத்தும் சாது என்று பொருள்.

அயோத்தியின் ஆசிரமத்தில் சீடர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அந்த ஆசிரமத்தில் பசுக்களும் அதிகம் இருந்தன. சீடர்கள் சத்தமாகப் பேசிக் கொண்டும், ஆரவாரத்துடன் பாலைக் கறந்து கொண்டும், அங்குமிங்கும் போய் வந்து கொண்டும் இருந்தது தத் வாலே பாபாவின் தியானத்திற்கு அனுகூலமாக இருக்கவில்லை. அங்கிருந்து மூன்று மாதங்களில் கிளம்பிய தத் வாலே பாபா சிறு வயதில் இருந்தே தன்னை ஈர்த்த இமயத்திற்கே வந்தார்.

இமயமலையிலும் சிறு வயதில் அடிக்கடி சென்றிருந்த ஸ்வர்க்காஸ்ரமம் உட்பட பல இடங்களில் சுற்றினாலும் அவருக்குத் தியானத்தில் மனம் லயிக்க உகந்த சூழ்நிலைகளில் அந்த இடங்கள் இருக்கவில்லை. தியானத்தில் மனம் லயிக்க ஒருவர் பழகி விட்டால் அதில் அவர் நல்ல முன்னேற்றமும் அடைந்து விட்டால் பின் எங்கே சென்றாலும் அவரால் தியானம் செய்ய முடியும். சந்தையிலும், ஜன சந்தடியிலும் கூட தியானம் அப்படிப்பட்டவருக்குக் கைகூடும். ஆனால் அந்த நிலை ஆரம்பத்திலேயே ஒருவருக்கு வந்து விடுவதில்லை. அதனால் அயோத்தியிலிருந்து இமயம் வரை பல இடங்களுக்குச் சென்றும் தங்குமிடத்தில் அவர் திருப்தி அடையவில்லை.

ஒரு நாள் கங்கைக் கரையில் அமர்ந்து அவர் தனக்குச் சரியான தங்குமிடம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த போது திடீர் என்று உள்ளுணர்வு அவரை அருகில் இருந்த மணிகுட் மலைக்குச் செல்லுமாறு உந்தியது. மணிகுட்  மலை இமயமலைச்சாரலின் ஒரு பகுதியே. தத் வாலே பாபா உள்ளுணர்வின் உந்துதல்படியே மணிகுட் மலையில் நடந்தார். ஒரு பழமையான குகையில் நீண்ட தலைமுடியும் தாடியும் வைத்துக்கொண்டிருந்த மிக வயதான யோகி ஒருவர் தியானத்தில் இருக்கக் கண்டார். அத்தனை முதிய வயதில் மிக பலவீனமான உடல் இருந்த போதும் மிக அமைதியாக தியானம் செய்ய முடிந்த அந்த மனிதரைப் பேராச்சரியத்துடன் தத் வாலே பாபா பார்த்தார்.

மிக திடகாத்திரமாகவும், இளமையாகவும் இருக்கும் தனக்கு முடியாத அந்த ஆழமான தியானநிலை இவருக்குக் கிடைக்கிறதே என்ற பெருவியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த முதிய யோகி கண்விழித்தார். தத் வாலே பாபாவைப் பார்த்து தன் குகைக்குள் வருமாறு கூறினார். இமயமலையில் தியானத்தில் லயித்திருக்கும் யோகிகளை விவரமறிந்தவர்கள் தொந்திரவு செய்வதில்லை. அப்படி தியானத்தைக் கலைக்கும் மனிதர்கள் யோகியின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி விடும் அபாயம் இருப்பதால் அவர்கள் முடிந்த அளவு விலகியே இருக்கிறார்கள், அல்லது தியானம் கலையும் வரை காத்திருக்கிறார்கள்.

அந்த யோகியாகவே கண் விழித்துத் தன்னை உள்ளே அழைத்தவுடன் பயபக்தியுடன் உள்ளே போனார். இருவரும் சிறிது நேரம் ஆன்மிக விஷயங்களயும், தியானம் சம்பந்தமான விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் முடிவில் தத் வாலே பாபா தனக்கு தியானம் செய்ய இப்படி ஒரு இடம் கிடைத்தால் தேவலை என்று சொல்ல அந்த முதிய யோகி உடனே எழுந்தார். “இந்த குகையிலேயே தங்கிக் கொள். எனக்கு இந்த உடலை விட்டுப் பிரியும் காலம் வந்து விட்டது. இந்த இமயத்தில் தகுந்த இடத்தில் நான் மகாசமாதி அடைந்து கொள்கிறேன்.அந்த முதிய யோகி அப்படிச் சொன்னது மட்டுமல்லாமல் அங்கிருந்து கிளம்பியும் சென்று விட்டார்.

தத் வாலே பாபாவுக்காகவே அவர் காத்திருந்தது போல இருந்தது அவர் சொல்லும் செயலும். தத் வாலே பாபாவுக்கு தியானத்திற்கு உகந்த இடம் அளித்ததுடன் இந்த பூமியில் தனக்கிருந்த அனைத்துக் கடமைகளும் முடிந்து விட்டது போல அந்த முதிய யோகி போய் விட்டார். அதன் பிறகு அந்த முதிய யோகியை தத் வாலே பாபா பார்க்கவில்லை. மற்றவர்கள் பார்த்ததாக அவருக்குத் தகவலும் இல்லை.

உண்மையான ஆன்மிகத் தேடலுடன் இமயத்திற்குச் செல்பவர்கள் அங்கிருக்கும் ஆன்மிக அலைகளால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி நல்ல உதாரணம். அந்த குகையின் அருகிலேயே ஒரு நீரூற்று இருந்தது. அந்தக் குகையின் வாயிலை ஒரு கல்லால உள்ளே இருந்து மூடிக் கொண்டால் அந்தப் பகுதியில் நடப்பவர்கள் அப்படி ஒரு குகை அங்கிருக்கிறது என்று சிறிதும் கண்டுபிடிக்க முடியாத வசதியும் இருந்தது. இது தியானத்தில் நீண்ட நேரம் கழிக்க விரும்பிய தத் வாலே பாபாவின் தேடலுக்கு மிக வசதியாக இருந்தது. தன் விருப்பப்படியே மிக ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். ஆழ்நிலை தியானம் அவருக்குக் கைகூட ஆரம்பித்தது.

காலம் செல்லச் செல்ல அவர் தினசரி வாழ்க்கை ஒரு அட்டவணைப்படி நடக்க ஆரம்பித்தது. நள்ளிரவு 2.00 மணி முதல் காலை பத்து மணி வரை தியானம், பின் உணவு உண்டு சிறிது ஓய்வு, மதியம் முதல் 4.00 மணி வரை மறுபடி தியானம் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி முதல் யோகாசனங்கள், உடற்பயிற்சி, நடைபயிற்சி, இருட்ட ஆரம்பித்தவுடன் குகைக்குத் திரும்பி ஓய்வு, உறக்கம். மாலை உடற்பயிற்சி நேரத்தில் குகையை விரிவுபடுத்தும் வேலையிலும் ஈடுபட்டார். நீண்ட நடைபயிற்சியின் போது விறகு பொறுக்கிக் கொண்டு வருவதும் செய்வார்.

மாலை நேரங்களில் அப்படி அவர் வெளியே செல்கையில் அவரிடம் இருந்து வெளிப்பட்ட ஆன்மிக அலைகள் அங்கேயும் பல ஆன்மிக அன்பர்களை ஈர்த்தது. ஆனால் ஆன்மிகத்திலும், தியானத்திலும் நிறைய முன்னேறி இருந்த அவருக்கு இப்போது ஆன்மிக  வேட்கையுடன் வரும் அன்பர்கள் இடைஞ்சலாகத் தோன்றவில்லை. தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை உணர்ந்த அவர் காலை மணி 10.00 முதல் மதியம் வரையும், மாலை 4.00 முதல் 6.00 மணிவரை ஆன்மிக அன்பர்களுக்கு ஒதுக்க ஆரம்பித்தார்.  உடற்பயிற்சிக்கு மற்ற நேரங்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்திக் கொண்டார்.

அந்தக் குகையில் அவர் மட்டுமல்லாமல் ஒரு ராட்சஸ நாகமும் வர ஆரம்பித்தது தான் ஆச்சரியம். சுமார் 12 அடி நீளமும், அரையடி அகலமும் கொண்ட அந்த ராட்சஸ நாகம் அவர் தரும் பாலைப் பருகி விட்டுச் செல்லும். சில சமயங்களில் அவர் தியானம் செய்யும் நேரங்களில் இருக்கும். சில சமயங்களில் அவர் போன பின்னும் வந்து அந்த தியான அலைகளில் தானும் இருந்து விட்டுப் போகும்.  தத் வாலே பாபா போன்ற யோகிக்கு நாகத்திடம் எந்தப் பயமும் இல்லாமல் இருந்தது ஆச்சரியம் இல்லை. ஆனால் அங்கு வரும் ஆன்மிக அன்பர்கள் அந்த ராட்சஸ நாகத்தைப் பார்த்து நடுநடுங்கிப் போனார்கள். அதனால் அந்த அன்பர்கள் வரும் போது அந்த நாகம் வரும் ஓட்டையை அடைத்து விடுவார் தத் வாலே பாபா.

அந்த ராட்சஸ நாகம் அந்த அன்பர்களையும் அந்தப் பகுதி ஆட்களையும் துன்பறுத்தியதேயில்லை என்பது தான் ஆச்சரியம். அவர் அந்த நாகத்திடம் அந்தப் பகுதியில் யாரையும் துன்பறுத்தக்கூடாது என்று சத்தியம் வாங்கி இருந்தார் என்று கூறுகிறார்கள் அவருடைய பக்தர்கள்.

(தொடரும்) 
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 3.7.2015

.