சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 30, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 105


ருட்டிய பிறகு ஒரு மாலுமியும், மைத்ரேயனும் செஸ் விளையாடிக் கொண்டிருக்க கௌதமும், மற்ற மாலுமிகளும் சூழ்ந்து அமர்ந்து சுவாரசியத்துடன் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். திபெத் பையன் மாயக்காரன் என்று நம்பிய கேப்டன் மைத்ரேயனை நெருங்குவது கூட ஆபத்து என்று தூரத்திலேயே இருந்தான். தேவ் அவ்வப்போது கூட இருந்து ஆட்டத்தை சிறிது நேரம் பார்த்தான். அந்த மாலுமி மிகச்சிறந்த ஆட்டக்காரன் என்பது தெரிந்தது. மைத்ரேயன் அவனுக்கு ஈடு கொடுத்து ஆடியதுடன் சமயங்களில் மாலுமியை ஆழ்ந்து யோசிக்கவும் வைத்தான்....

தேவ் மற்ற நேரங்களில் கேப்டனுடன் இருந்து கொண்டிருந்தான். நடுக்கடலில் கப்பல் எவ்வளவு வேகமாகச் சென்றாலும் வேகமே வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை. தேவுக்கு இந்த மூன்று நாட்களை சகிப்பது எளிதாகத் தோன்றவில்லை. மயக்க மருந்திலும் மயங்காத, எண்ணிய எண்ணங்களைப் படிக்க முடிந்த அந்தச் சிறுவன் ஆட்களைத் தன் வசப்படுத்துவதிலும் கெட்டிக்காரனாக இருப்பது அவனுக்கு நெருடலாக இருந்தது. அவனுக்கே கூட அந்தச் சிறுவர்களைப் பிடிக்க ஆரம்பித்திருந்தது....

அவன் மீண்டும் போய் அவர்கள் ஆடுவதைப் பார்த்தான். இப்போது மைத்ரேயன் வெற்றி பெறும் சூழலில் இருந்தான். ஆனால் சிறிது நேரம் மாலுமி தாக்குப்பிடிப்பான் போல் இருந்தது. மைத்ரேயன் கண்கள் கடிகாரத்தைப் பார்த்தன. அடுத்தபடியாக வேண்டுமென்றே காயைத் தவறாக நகர்த்தி அந்த மாலுமியை வெற்றிபெற வைத்து ஆட்டத்தை அவன் முடித்துக் கொண்டான். மாலுமிகள் ஆரவாரம் செய்து தங்கள் சகாவின் வெற்றியைக் கொண்டாடினார்கள். கௌதமுக்கு தான் தன் நண்பனின் தோல்வி ஏமாற்றமாக இருந்தது.

அந்த மாலுமி அன்புடன் மைத்ரேயனிடம் சொன்னான். “நீ குதிரையை அப்படி நகர்த்தியிருக்காமல் இருந்தால் நான் ஜெயித்திருக்க முடியாது....”

மைத்ரேயன் பின் தான் உணர்ந்தது போலக் காட்டிக் கொண்டான். அறைக்கு வந்தவுடன் கௌதம் களைப்புடன் உறங்க, மைத்ரேயன் பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். அப்போது தான் தேவுக்கு விளங்கியது. அவனுடைய தியான நேரம் நெருங்கியவுடன் தான் அந்த விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறான். வயதானவர்களுக்கே கூட அந்த உச்சக்கட்டத்தில் ஆட்டத்தில் இருந்து விலகுவது முடிகிற காரியம் அல்ல. இந்தச் சிறுவனுக்கு விளையாட்டு விளையாட்டு மாத்திரமே.... தேவுக்கு அவனைப் பார்த்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.


க்‌ஷய் வீட்டில் வந்தனாவின் குடும்பம் இருந்தது. அக்‌ஷய் வெளியே போயிருந்தான். ஆசான் மைத்ரேயன் படுத்த கட்டிலில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

ஜானகி சஹானாவிடம் மனமார மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள். “அந்த நாசமாய் போன நாய் அப்படி பொய் சொல்லி, வந்தனா கேட்டதற்கு வருணும் சரியாகப் பதில் சொல்லாததால் நான் தப்பாக நினைத்துக் கொண்டு விட்டேன். அப்போதே இவர் சொன்னார். ஓடி ஒளியற ஆளை நம்பாதேன்னு. என் மூளைக்கு எட்டவில்லை..... அவன் எப்படி அழுதான் தெரியுமா? இப்போது தான் எனக்கு விளங்குகிறது. அந்த நாய் ஜண்டு பாமையோ, அமிர்தாஞ்சனையோ கண்ணில் தடவி அழுதிருக்கிறது என்று. அந்த மணமும் வந்தது. அது கூட அப்போது விளங்கவில்லை.....”

சஹானா சொன்னாள். “உங்கள் நிலைமையில் யார் இருந்தாலும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள்.... உங்கள் மேல் தப்பில்லை....”

”உங்கள் மாமியார் வந்து அவனிடம் பேசின பிறகு தான் எல்லாம் புரிந்தது. உங்களுக்கு அவனைப் பார்த்து நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்குவது போல கேட்கணும்னு தோன்றவில்லையா....”

“எனக்கு அவனைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.....” என்று சஹானா அருவருப்புடன் சொன்னாள்.

திடீரென்று ஜானகிக்கு மரகதம் முன்பு அவள் மகனை நாய் என்பது சரியில்லை என்று தோன்றியது. என்ன இருந்தாலும் தாய் தாய் தானே!”

அவள் மெல்ல மரகதத்தைக் கேட்டாள். “உங்களுக்கு அவனை நாய் என்றதில் வருத்தமா?”

மரகதம் சொன்னாள். “எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஆனால் நாய் கேட்டால் கண்டிப்பாய் வருத்தப்படும்....”


ந்த நாயின் இருப்பிடத்தில் தான் அந்த சமயத்தில் அக்‌ஷய் இருந்தான். உளவுத்துறை கண்டுபிடித்து நெருக்கியதில் சேகரின் நண்பனே அவனைக் காட்டிக் கொடுத்து விட்டான். உளவுத்துறையைப் பகைத்துக் கொண்டு அவன் அந்தத் தொழிலில் நிறைய காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் திருப்பூரில் சேகர்  தங்கி இருந்த லாட்ஜின் விலாசத்தை அந்த சகா சொல்லி விட்டான்.

அழைப்பு மணி அடித்த போது வந்திருப்பது அக்‌ஷய் என்று சேகர் எதிர்பார்த்திருக்கவில்லை. கதவைத் திறந்தவுடன் திகைத்து பின் மெல்ல சுதாரித்துக் கொண்டு வெறுப்போடும் திமிரோடும் என்ன என்பது போலப் பார்த்தான். இப்போது அவன் தலையாய எதிரி இவன் தான் என்று அவனுக்குத் தோன்றியது. இவன் அவனது மனைவியை மனைவியாக்கிக் கொண்டு, அவனது மகனை மகனாக்கிக் கொண்டதும் அல்லாமல், அவனுடைய தாயையும் தாயாக்கிக் கொண்டவன்...

அக்‌ஷய் அமைதியாக உள்ளே நுழைந்து தாளிட்டது மட்டுமே சேகர் பார்த்தான். கண் இமைக்கும் நேரத்தில் கழுத்து திருகி வலி தாங்காமல் துடித்தபடி தரையில் விழுந்த போது அவனுக்கு எதுவுமே விளங்கவில்லை. என்ன நடந்தது? இவன் எப்படி என் அருகே வந்தான்?

“எனக்கு உன்னைப் போல் ஒரு ஈனப்பிறவியிடம் கதை பேச நேரமில்லை. இந்தக் கடத்தல் நாடகத்தில் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் சொல் பார்க்கலாம்....”

கழுத்து வலி உயிர் போக அவனை சேகர் அதிர்ச்சியுடன் பார்த்தான். அந்த நேரத்தில் அவன் எமன் போலவே தெரிந்தான். முகத்தில் கோபமோ, வெறுப்போ இல்லை என்றாலும் அந்த அமைதியில் பேராபத்தை சேகர் உணர்ந்தான்... இந்த வலியில் எப்படிச் சொல்வது என்று அவன் சைகை காட்டினான். அக்‌ஷய் கை அவன் கழுத்தின் அருகே சென்றது. கழுத்து சரியாகி வலி போய் விட்டது. உடல் எல்லாம் வியர்த்தொழுக தட்டுத் தடுமாறி எழுந்து படுக்கையில் உட்கார்ந்த சேகருக்கு இவனிடம் நேரடியாக மோத முடியாது என்பது தெரிந்து விட்டது. இவனைப் பின்னால் பழிவாங்கிக் கொள்ளலாம். இப்போது நடந்தது எல்லாவற்றையும் சொல்லி விடுவதே நல்லது என்று தோன்றியது. சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு அக்‌ஷய் கையைத் தூக்கியதை மட்டும் தான் சேகர் பார்த்தான். அடுத்த கணம் அப்படியே சேகர் கீழே சரிந்தான். இப்போது கழுத்து திருகவில்லை. ஆனால் கை கால்களை அசைக்க முடியவில்லை. “உன்னை நல்லபடியாக விட்டுப் போனாலும் நீ ஒழுங்காய் போய் விட மாட்டாய். திரும்பித் தேடி வருவாய். ஏதாவது செய்வாய். உன்னுடன் எதிர்காலத்தில் சம்பந்தப்பட எங்கள் யாருக்கும் விருப்பமில்லை. இனி உன்னால் நகர முடியாது. ஆனால் யோசிக்க முடியும். எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம் என்று யோசி. சாகும் வரை யோசிக்கலாம்....”

பீதியடைந்த சேகர் கண்களினால் கெஞ்ச ஆரம்பித்தான். அகஷய் அதைப் பார்க்கக்கூட இல்லை. வெளியே போய் விட்டிருந்தான்.


ந்த மூன்று நட்சத்திர ஓட்டலின் கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை வரவழைத்து அவர்கள் பார்த்தார்கள். தேவும், சேகர் உட்பட அவனைப் பார்க்க வந்தவர்களும் பதிவாகி இருந்தார்கள். அந்தப் பதிவுகள் அவர்கள் பற்றிக் கூடுதல் விவரங்கள் அறிய புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டன.

மைத்ரேயனையும் கௌதமையும் இன்னமும் அவர்களால் கண்டுபிடிக்கவில்லை. அக்‌ஷய் தன் உள்ளுணர்வைச் சொன்னான். “எனக்கென்னவோ அவர்கள் நம் எல்லையைத் தாண்டி இருப்பார்கள் என்றே தோன்றுகிறது”

ஒரு உளவுத்துறை அதிகாரி சொன்னார். “எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் நம் சோதனை தீவிரமாகவே இருக்கிறது....”

அக்‌ஷய் இந்திய வரைபடத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென்று கேட்டான். ”கடத்தப்பட்ட நாள் அல்லது மறு நாளில் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஏதாவது வெளிநாட்டுக் கப்பல் கிளம்பி இருக்கிறதா? ஏனென்றால் கோயமுத்தூரிலிருந்து கொச்சி துறைமுகம் அதிக தூரமில்லை”

உடனே அந்த அதிகாரி ஒரு எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அந்தக் கேள்வியைக் கேட்டார்.

”இல்லை சார்.... ஆனால் நம் எல்லையைத் தொடாமல் சீனக்கப்பல் அன்று இரவு இப்பகுதியை  கடந்தது. அது ஷாங்காயிலிருந்து கராச்சி செல்லும் சரக்குக் கப்பல். தரைவழி, ஆகாய வழியாக, சீனாவும், பாகிஸ்தானும் பக்கமாக இருந்தாலும் கடல் வழியாகப் போவதானால் நம் நாட்டைச் சுற்றித் தான் போக வேண்டும்....அது மாதம் ஒரு முறை வழக்கமாய் செல்லும் கப்பல் தான்.” என்ற பதில் வந்தது.

அக்‌ஷய் உறுதியாகச் சொன்னான். “அந்தக் கப்பலில் தான் நம் பையன்கள் இருக்கிறார்கள்.”

எல்லோரும் அவனையே யோசனையுடன் பார்த்தார்கள். அவன் சொன்னான். “அது நம் கரைக்கு வராமல் இருக்கலாம். ஆனால் நம் கரையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் அந்தக் கப்பலுக்குப் போகலாம் அல்லவா?”

உளவுத்துறையின் மூத்த அதிகாரி சொன்னார். “இருக்கலாம். ஆனால் நம் எல்லைக்கே வராத ஒரு வெளிநாட்டுக் கப்பலை நாம் எதுவுமே செய்ய முடியாது. நடுக்கடலில் நமக்கு சோதனையிடும் அதிகாரம்  இல்லை. அவர்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.... அது போய்ச் சேரும் நாட்டுக்கு நம் சந்தேகத்தை வேண்டுமானால் தெரியப்படுத்தி உதவி கேட்கலாம்.... அவர்கள் சோதித்துப் பார்த்து விட்டோம், இல்லை என்று சொன்னால் கேட்டுக் கொண்டு சும்மா தான் இருக்க வேண்டும்....”

அக்‌ஷய் ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டான்.

அந்த மூத்த அதிகாரி மெல்ல சொன்னார். “ஒன்று வேண்டுமானால் செய்யலாம். நம் நாட்டு உளவாளிகள் பாகிஸ்தானிலும் உண்டு. அந்தக் கப்பலில் கராச்சி துறைமுகத்தில் நம் பையன்கள் போய் சேர்கிறார்களா, சேர்ந்தால் அங்கிருந்து எங்கே அழைத்துப் போகப்படுகிறார்கள் என்பதை வேண்டுமானால் அவர்கள் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.”

அக்‌ஷயும், ஆசானும் அந்தத் தகவலில் ஒரு நம்பிக்கைக்கீற்றைப் பார்த்தார்கள்.

(தொடரும்)

என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, June 27, 2016

விதி சோதித்த போதும் சோர்வில்லை இவருக்கு!

சிகரம் தொட்ட அகரம்- 4

விதி குறுக்கிடும் வரை மாளவிகா ஐயர் என்ற அந்தச் சிறுமி ஆனந்தமாகவே இருந்தாள். தமிழ்நாட்டில் கும்பகோணத்தைச் சேர்ந்தவள் அவள். அவளுடைய தந்தை வேலை நிமித்தமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீரில் குடியேறி இருந்ததால் அங்கேயே படித்து வளர்ந்து வந்தாள். படிப்பில் சாதாரணமாகவே இருந்த போதும் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் அவளுக்கு இருந்தது. நீச்சல், ஸ்கேட்டிங் இரண்டிலும் அவளுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. கதக் நடனத்தை ஏழு வருடங்களாகப் பயின்று சிறப்பாக நடனமும் ஆடி வந்தாள். எல்லாம் 2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி வரை.

அன்று தான் அந்த பதிமூன்று வயது சிறுமியின் வாழ்வில் விதி விளையாடியது. அன்று அவள் அணிந்திருந்த ஜீன்ஸில் சின்னதாக ஒரு கிழிசல் இருந்தது. ஃபெவிகால் வைத்து அந்தக் கிழிசலை ஒட்டிய மாளவிகாவுக்கு ஒரு கனமான இரும்பால் அதைத் தட்டி சமன்படுத்தினால் ஒட்டியது தெரியாது என்று தோன்றியது. கனமாக ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டே சென்ற போது தெருவில் ஒரு இரும்புக் குண்டு போல ஏதோ தெரிந்திருக்கிறது. அந்தக் குண்டு வெடிகுண்டு என்று மாளவிகாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பகுதியில் இயங்கி வந்த வெடிகுண்டுக் கிடங்கு ஒன்று சில காலத்திற்கு முன் தீக்கிரையாகி அதன் பொருள்கள் அந்தப் பகுதியெங்கும் சிதறிக் கிடந்தன. அவை செயலிழந்தவை என்று கருதியதால் அப்பகுதி மக்கள் அவற்றிற்குப் பெரிய முக்கியத்துவம் தரவில்லை.

மாளவிகா எடுத்த வெடிகுண்டு செயலிழக்காத வெடிகுண்டு. அவள் அதை எடுத்து ஒட்டிய ஜீன்ஸில் பலமாகத் தட்டிய போது அது வெடித்தது. அந்த இடத்திலேயே மாளவிகா தன் இரண்டு கைகளையும் இழந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் பலத்த சேதத்திற்கு உள்ளாயின. வெளியே ஓடி வந்த அவளுடைய தாய் “என் குழந்தையின் கைகள் எங்கே?என்று கதறியது தான் அவள் மயக்கம் அடைவதற்கு முன் கேட்ட கடைசி வார்த்தைகள்.

அதிகமாய் ரத்தம் வெளியேறி இருந்த, கைகள் இல்லாத, கால்கள் உடலில் இருந்து அறுபடும் நிலையில் உள்ள அந்தச் சிறுமி பிழைப்பாளா என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு இருந்தது. பிழைத்தாலும் ஒரு காய்கறியைப் போல தான் அசைவற்று முடங்கி இருக்க வேண்டி இருக்கும் என்று பார்த்தவர்கள் நினைத்தார்கள்.

நினைவு திரும்பியவுடன் மாளவிகா தாயிடம் தன் விளையாட்டுச் செயலால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக முதலில் மன்னிப்பு தான் கேட்டாள். கண் கலங்கிய பெற்றோர்க்கு தங்கள் மகளை முடிந்த வரை சரியாக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தது. மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் தங்களால் முடிந்ததை எல்லாம் செய்தார்கள். முதலில் கால்களை சரி செய்யப் பார்த்தார்கள். ஒரு காலில் அவளுக்கு உணர்ச்சியே இருக்கவில்லை. இன்னொரு காலை அவளால் சிறிதளவுக்கே உயர்த்த முடிந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்து ஓரளவு அவற்றைச் சரி செய்தார்கள். ஆனால் நடந்து நடந்து தான் ஓரளவாவது இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்று சொல்லி விட்டார்கள்.

தன் பெற்றோர் இத்தனை முயற்சிகள் எடுக்கும் போது அவர்கள் மனதில் சிறிய அளவிலாவது திருப்தி ஏற்பட வேண்டும் என்று எண்ணி, உயிர் போகும் அளவு வலி எடுத்தாலும் அதைப் பொருட்படுத்தாது சில மாதங்கள் நடந்து மாளவிகா ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பினாள். அவளுக்கும் முடங்கி விடுவதில் சிறிதும் விருப்பமில்லை.

அடுத்ததாக செயற்கை உயிர் மின்சாரக் கைகள் (bio-electric hands) அவளுக்கு சென்னையில் பொருத்தப்பட்டன. அவற்றையும் பயிற்சிகள் மூலமாகவே அவளால் பயன்படுத்த முடியும் என்கிற நிலை. அதையும் சலிக்காமல் செய்த மாளவிகா அந்தக் கைகளைக் கொண்டு மெல்ல எழுதவும் கற்றுக் கொண்டாள். ஆரம்பத்தில் மிகப் பெரியதாகத் தான் அவளால் எழுத்துக்களை எழுத முடிந்தது.

இதற்குள் இரண்டாண்டு காலம் ஓடி விட்டது. மகள் தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறாளே என்று பெற்றோர் ஆறுதல் அடைந்தனர். ஆனால் மாளவிகா அதில் திருப்தி அடையவில்லை. அவளுக்கு அவளுடைய பள்ளித் தோழி ஒருத்தியின் தொடர்பு போன் மூலம் இருந்து கொண்டே இருந்தது. பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால் அதற்கு மும்முரமாகப் படித்துக் கொண்டிருப்பதாக அந்தத் தோழி தெரிவித்தாள்.

மாளவிகாவுக்கு தானும் அந்தப் பொதுத் தேர்வை எழுத வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. அதை அவள் தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருந்த மகள், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புப் பாடங்களை இது வரை தவற விட்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு மூன்று மாதங்களில் தயாராக முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தாலும் மகளின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போட அவர்கள் விரும்பவில்லை.   

இது போல் உடல் ஊனமுற்றவர்கள் சொல்லச் சொல்ல எழுத அரசு ஆட்களை நியமித்து தேர்வு எழுத அனுமதிப்பதால் அவளை அவளால் முடிந்த வரை படிக்க மட்டும் சொன்னார்கள். மூன்று மாதங்கள் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மாளவிகா படித்தாள். வீடு வந்த பிறகும் மாலையும் இரவும் விடாப்பிடியாகப் படித்தாள்.

மாளவிகா தேர்வு எழுதினாள்.  எட்டாம் வகுப்பு வரை சாதாரண மாணவியாக இருந்த மாளவிகா இத்தனை குறைபாடுகளுக்கு மத்தியில் தேர்வெழுதி மாநில அளவில் ரேங்க் வாங்கியது தான் தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி. கணிதம் மற்றும் அறிவியலில் சதமடித்த அவள் ஹிந்தித் தேர்வில் 97% எடுத்து மாநிலத்தில் ஹிந்தியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள். பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியாளர்கள் எல்லாம் அவள் வீட்டுக்கு ஓடி வந்த போது மாளவிகா பெருமகிழ்ச்சி அடைந்தாள் என்றாலும் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எல்லாம் முடிந்தது என்று ஊர் நினைத்த வேளையில் தங்கள் மகள் சாதித்துக் காட்டியதில் அவர்கள் மனம் நிறைந்து போனது. அதன் பின் மாளவிகா ஒன்றன் பின் ஒன்றாகப் பல சாதனைகள் புரிந்தாள்.

அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது மாளவிகாவை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வரவழைத்து பாராட்டி இருக்கிறார்.  

பி.எச்.டி பட்டம் பெற்ற மாளவிகா யார் உதவியும் இல்லாமல் தானே பயணங்கள் செய்கிறார். இன்று உலகநாடுகள் பலவற்றிற்குச் சென்று பேசும் அளவு உயர்ந்திருக்கிறார். பல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் நடனம் கூட ஆடி பார்வையாளர்களை பிரமிக்கவும் வைத்திருக்கிறார்.  அழகாக உடைகள் உடுத்துவதில் ஆர்வம் உள்ள அவர் உடல் ஊனமுற்றவர்களுக்கான ஆடைகள் விளம்பரத்திலும் இன்று மிளிர்கிறார்.

தைரியத்திற்கும், கடுமையான முயற்சிகளுக்கும் முன் உதாரணமாக இருக்கும் மாளவிகா ஐயருக்கு தனக்கு நடந்த அந்த கோர விபத்தில் சிறிதும் வருத்தமில்லை. அந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால் பலரோடு ஒருவராக அடையாளம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி வந்திருக்கும் என்கிறார் அவர். தன் உள்ளே இருக்கும் சக்தியை முழுமையாக வெளியே கொண்டு வந்திருக்க முடிந்திருக்காது என்கிறார்.

இன்று உடல் ஊனமுற்ற குழந்தைகள் பலருக்கும் ஒரு மகத்தான வழிகாட்டியாக நாட்டில் வலம் வரும் அவர் அது போன்ற எத்தனையோ குழந்தைகளிடம் தானும் நிறைய கற்க இருப்பதாக உணர்ந்து கற்று வருவதாகவும் பணிவாகச் சொல்கிறார்.

எல்லாம் சரியாக இருந்தும், இருப்பதில் அது சொத்தை, இது சொத்தை என்று குறை கண்டு புலம்பி எதையும் முறையாகப் பயன்படுத்தாமல், எதையும் சாதிக்காமல் ஏனோ தானோ என்று வீண் வாழ்க்கை வாழ்ந்து மடியும் வேடிக்கை மனிதர்களுக்கு மாளவிகா ஐயரிடம் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறதல்லவா?  

என்.கணேசன்  


Thursday, June 23, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 104

ந்த சீனக்கப்பலில் அவர்கள் ஏற ஏணி இறக்கப்பட்டது. தேவும் அந்த மீனவனும் சூட்கேஸுடனும், சாக்கு மூட்டைகளுடன் ஏறினார்கள். கப்பலின் கேப்டன் தேவைக் கூர்ந்து பார்த்தான். கேப்டனுக்குப் பின்னால் இரண்டு பேர் துப்பாக்கிகளுடன் தயாராக நின்றிருந்தார்கள். கேப்டனுக்கு லீ க்யாங் அனுப்பி இருந்த படத்தில் தேவ் கோட்டு சூட்டுடன் இருந்தான். இந்த மீனவ வேடத்தில் இருப்பவன் அவன் தானா என்று வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்து விட்டுத் திருப்தி அடைந்த பின் தான் கேப்டன் சின்னதாய் புன்னகை செய்து விட்டு ”வாருங்கள்” என்றான்.

தேவ் அவனது எச்சரிக்கை உணர்வைத் தவறாக எண்ணவில்லை. அவனே அப்படித்தான் எச்சரிக்கையுடன் இருப்பவன். தேவ் தங்களை அழைத்து வந்த மீனவனிடம் பணம் வைத்த உறையை நீட்டினான். ”இதில் ஒரு லட்சம் இருக்கிறது” என்றான்.

முன்பே அவனுக்கு முன்பணம் ரூ25000/- தரப்பட்டு இருந்தது. எனவே பேசியபடி மீதம் ரூ75000/- அல்லவா வர வேண்டும் என்று மீனவன் குழம்பிய போது “பரவாயில்லை. வைத்துக் கொள்” என்று தேவ் புன்னகையுடன் சொன்னான். அவன் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு ஏணியில் இருந்து இறங்கினான்.

அவன் படகு போவதையே பார்த்துக் கொண்டு சிறிது நின்று விட்டு தேவ் திரும்பினான். இரண்டு பேர் அந்த சாக்கு மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு கப்பலின் ஒரு தனி அறைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். அந்த அறை ஓட்டல் அறை போல சகல வசதிகளுடன் இருந்தது. பின்னாலேயே வந்த கேப்டன் ”என்ன தேவை என்றாலும் எண் ஏழு அழுத்துங்கள்.. என்னிடம் பேச வேண்டியிருந்தால் எண் ஒன்றை அழுத்துங்கள். நாளை காலை பார்ப்போம். இரவு வணக்கம்” என்று அங்கிருந்த இண்டர்காமை காண்பித்து ஆங்கிலத்தில் சொல்லி விட்டுப் போனான். சாக்கு மூட்டைகளைத் தரையில் கிடத்தி விட்டு அந்த ஆட்களும் போய் விட்டார்கள்.

கதவைத் தாளிட்டுத் திரும்பிய தேவ் இரு சாக்குமூட்டைகளையும் பிரித்து சிறுவர்களை அங்கிருந்த இரு கட்டில்களில் ஒன்றில் படுக்க வைத்து விட்டு தன் சூட்கேஸை இன்னொரு கட்டிலில் வைத்து அதிலிருந்து உடைகள் எடுத்து உடைமாற்றிக் கொண்டு திரும்பின போது மைத்ரேயன் கட்டிலில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அதிர்ந்து போன தேவைப் பார்த்து புன்முறுவல் பூத்த மைத்ரேயன் “தண்ணீர் வேண்டும்” என்று கேட்டான்.

தேவுக்கு இது கனவா, நனவா என்ற சந்தேகம் வந்து விட்டது. கண்களை ஒரு முறை கசக்கிக் கொண்டு மூடித் திறந்து விட்டு அங்கே மேசையில் வைத்திருந்த புதிய தண்ணீர் பாட்டில்களில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்ட மைத்ரேயன் அதைக் குடிக்க ஆரம்பித்தான். இந்தப் பையனும் ஏதோ கனவு பிரமையில் இருக்க வேண்டும். அது தான் இப்படி நடந்து கொள்கிறான் என்று நினைத்துக் கொண்ட தேவ் அவனை வினோதமாய் பார்த்தான்.

மைத்ரேயன் எழுந்து போய் அந்தத் தண்ணீர் பாட்டிலை மேசையில் அதே இடத்தில் வைத்து விட்டு மறுபடி கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

தேவ் மயக்க ஊசியை இந்தச் சிறுவனுக்குப் போட்டு விடுவது தான் நல்லது என்று நினைத்த மாத்திரத்தில் மைத்ரேயன் சொன்னான். “ஊசி எல்லாம் போட வேண்டாம். நான் கத்தவோ, இங்கேயிருந்து தப்பிக்கவோ போவதில்லை.....”

தேவ் அதிர்ந்து போனான். இவனால் மனதில் உள்ளதைப் படிக்கவும் முடிகிறது. யோசிக்கையில் ’காரில் இவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது பிரமை அல்ல’ என்ற எண்ணம் வந்து போனது. பின் ஏன் இவன் எதுவும் செய்யாமல் அங்கிருந்தே அமைதியாக வந்தான் என்று தேவ் திகைத்தான். மைத்ரேயன் கட்டிலில் பத்மாசனத்தில் அமர்ந்தபடியே தியானம் செய்ய ஆரம்பிக்க தேவ் தூங்காமல் அவனையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அப்படியே தூங்கிப் போனான். எத்தனை நேரம் தூங்கி இருப்பான் என்று அவனுக்கே தெரியவில்லை. பேச்சு சத்தம் கேட்டு கண்விழித்தான். கண்விழித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அப்படிப் படுத்திருந்தபடியே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டான்.

கௌதம் அழுகையுடன் கேட்டான். “நாம் எங்கே இருக்கிறோம்...?”

“ஒரு கப்பலில்....”

“நம்மைக் கடத்திக் கொண்டு வந்து விட்டார்களா... ஏன்?”

“என்னை ஏதோ அவதாரம் என்று நினைத்துக் கடத்துகிறார்கள். கூட இருந்ததால் உன்னையும் கடத்தி விட்டார்கள்....”

”அவதாரம் என்றால் கும்பிடத்தானே வேண்டும். ஏன் கடத்துகிறார்கள்?” கௌதம் குழப்பத்துடன் கேட்டான்.

”அவர்களைத் தான் கேட்க வேண்டும்.”

கௌதம் அழ ஆரம்பித்தான். “எனக்கு வீட்டுக்குப் போக வேண்டும். அம்மாவைப் பார்க்க வேண்டும்....”

”உஷ்ஷ்... அழாதே. அழுதால் அந்த ஆள் மயக்க ஊசி போட்டு மயங்கச் செய்து விடுவார். அவர் சூட்கேஸில் இரண்டு பாட்டில் மயக்க மருந்து இருக்கிறது....”

தேவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. உண்மையாகவே அவன் சூட்கேஸில் இரண்டு பாட்டில் மயக்க மருந்து இருக்கிறது... எப்படித் தெரியும். தூங்கிக் கொண்டிருக்கும் போது சூட்கேஸைத் திறந்து பார்த்து விட்டானா, இல்லை....

கௌதம் அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டான். “உனக்கு பயமாய் இல்லையா?”

“இல்லை. நீ இது வரை கப்பலில் போயிருக்கிறாயா?”

”இல்லை. ”

”நாம் அழாமல் முரண்டு பிடிக்காமல் சமர்த்தாக இருந்தால் அந்த ஆள் நம்மை வெளியே கூட்டிக் கொண்டு போயும் காட்டுவார்.... நாம் இந்தக் கப்பலில் ஏதாவது விளையாடவும் செய்யலாம்.”

கௌதம் ஆனந்தம் அடைந்து மறுபடி அது தணிந்து கவலையுடன் கேட்டான். “அப்படியானால் வீட்டுக்குப் போவது எப்போது?”

“கூட்டிக் கொண்டு போக உன் அப்பா வருவார்”

திடீரென்று கௌதமுக்கு அண்ணன் வருண் முன்பு சொல்லி இருந்தது நினைவுக்கு வந்து உற்சாகமாகச் சொன்னான். “ஆமாம் அண்ணா சின்னதாய் இருந்த போது அவனையும் கடத்திக் கொண்டு போய் விட்டார்களாம். எங்கப்பா போய் கூட்டிக் கொண்டு வந்து விட்டதாய் சொல்லி இருக்கிறான். எங்கப்பா ஒரு சூப்பர்மேன்...”

”அவர் வரும் வரை நாம் ஜாலியாய் இருக்கலாம் சரியா?”

“சரி....... எனக்கு பசிக்கிறது”

தேவுக்கு தலை சுற்றியது.



க்‌ஷயும், ஆசானும் உளவுத்துறை அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு அதிகாரி சில நாட்களுக்கு முன்னாலேயே புதுடெல்லிக்கு “கோயமுத்தூரில் சில புகழ்பெற்ற தனியார் துப்பறியும் நிறுவனங்களின் ஒற்றர்கள் கணிசமான அளவில் கூடி இருக்கிறார்கள்” என்ற தகவல் கிடைத்திருக்கிறது என்றும் அதை அவர்கள் கோயமுத்தூருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்ததாகவும் சொல்கிறார்கள் என்றும் தெரிவித்தார். அந்த மின்னஞ்சல் இங்கு வந்து சேர்ந்த போது பணியில் இருந்த அதிகாரி இப்போது மாயமாக மறைந்து போய் விட்டார் என்று வருத்தத்தோடு சொல்லி முடித்த போது எதிரிகள் காய்களை மிக புத்திசாலித்தனமாக நகர்த்தி இருக்கிறார்கள் என்பது அக்‌ஷய்க்குப் புரிந்தது.

இன்னும் மைத்ரேயன் கௌதம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எங்கோ அவர்கள் ஒளித்து வைக்கப்ப்பட்டிருக்கவும் கூடும் என்ற ஒரு கருத்தும் உளவுத்துறையில் இருந்தாலும் அக்‌ஷய் அதை நம்பவில்லை. வேகமாக அவர்கள் இலக்கை நோக்கிப் போக என்ன செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் என்றே அவனுக்குத் தோன்றியது.... அக்‌ஷய் நீண்ட யோசனைக்குப் பின் சொன்னான். “எனக்கு ஒரு உதவி வேண்டும்?”

“சொல்லுங்கள்”

“என் எதிர் வீட்டில் குடியிருந்த சேகர் எங்கிருக்கிறான் என்பது தெரிய வேண்டும். அவனிடம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது” அவன் அமைதியாகச் சொன்ன விதத்தில் அந்த மனிதனுக்கிருந்த ஆபத்தை அங்கிருக்கும் அனைவரும் உணர்ந்தார்கள்.



“இந்தப் பையன்கள் நிஜமாகவே கடத்தப்பட்டவர்கள் தானா, இல்லை நீங்கள் ஆள் மாறி இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டீர்களா?” கேப்டன் தன் சந்தேகத்தை வெளிப்படையாகவே தேவிடம் கேட்டு விட்டார்.

தேவ் கப்பலின் மேல் தளத்தில் மிக உற்சாகத்துடன் ஆடிக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்களைப் பார்த்தபடியே சொன்னான். “என் இத்தனை வருட அனுபவத்தில் நானும் இது போல் பார்த்ததில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.”

அந்த சரக்குக் கப்பலில் இருந்த சில மாலுமிகளும் அந்தப் பையன்களை சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சிறுவர்களின் உற்சாகம் அவர்களையும் தொற்றிக் கொண்டது போல் இருந்தது.

தேவ் கேட்டான். “நாம் எப்போது கராச்சி போய் சேருவோம்”

“இதே வேகத்தில் போனால் மூன்று நாளில் போய் விடலாம்.” கேப்டன் சொன்னார்.

‘இந்த மூன்று நாளுக்குள் எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் இருக்க வேண்டும்’ என்று தேவ் நினைத்துக் கொண்டான்.

அவன் அன்று காலை எழுந்தவுடனேயே மைத்ரேயன் தன் நண்பனுக்காகவும் அவனிடம் பேசினான். “என்னை மாதிரியே இவனும் சமர்த்தாய் பிரச்னை இல்லாமல் இருப்பான்... நீங்கள் இவனுக்கும் மயக்க ஊசி போடத் தேவையில்லை. சரியா?”

தேவ் தலையசைத்தான். மைத்ரேயன் சொன்னான். “இவனுக்குப் பசிக்கிறதாம்....”

கௌதம் நன்றாகச் சாப்பிட்டாலும் மைத்ரேயன் அளவாகவே சாப்பிட்டதை தேவ் கவனித்தான். சாப்பிட்டு விட்டு கப்பலின் மேல் தளத்திற்குச் செல்ல சிறுவர்கள் ஆசைப்பட்டார்கள். சின்ன தயக்கத்துக்குப் பிறகு அவன் அவர்களை அழைத்துப் போனான். சுட்ட வெயில் அந்தச் சிறுவர்களின் உற்சாகத்தைக் குறைத்து விடவில்லை. மதியம் சாப்பிட்டும் விளையாட ஆரம்பித்தார்கள். மாலை ஆகி இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மெல்ல மாலுமிகளும் விளையாட்டில் சேர்ந்து கொண்டார்கள்....

கேப்டன் அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னான். “எனக்கென்னவோ அந்த திபெத் பையன் மாயக்காரன் போல தெரிகிறது....”

தேவுக்கு அதை மறுக்கத் தோன்றவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்


(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)



Monday, June 20, 2016

பரம(ன்) இரகசியம்! இரண்டாம் பதிப்பு வெளியீடு


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

தங்கள் பேராதரவினால் பரம(ன்) இரகசியம் நாவல் இரண்டாம் பதிப்பைச் சந்தித்திருக்கிறது. விசேஷ மானஸ லிங்கம் மட்டுமல்லாமல், கணபதி, ஆனந்தவல்லி, குருஜி போன்ற கதாபாத்திரங்களும் வாசகர்கள் மனதில் தங்கிப் போனதை என்னால் தொடர்ந்து அறிய முடிகிறது. எத்தனையோ வாசகர்கள் என்னிடம் அந்தக் கதாபாத்திரங்களை நிஜ மனிதர்கள் போலவே பாவித்து என்னிடம் சிலாகித்திருக்கிறார்கள். கதைக்களத்தோடு, அந்தக் கதாபாத்திரங்களுடன் தோன்றியிருந்த அன்னியோன்னியம் பலரையும் அந்த நாவலை வாங்க வைத்து, பலருக்கு சிபாரிசும் செய்ய வைத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பே ஸ்டாக் தீர்ந்து விட்ட போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வர தாமதமாகி விட்டது. பலர் தொடர்ந்து போன் செய்து பரம(ன்) இரகசியம் நாவலைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியிலும் கேட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் பதிப்பாளர் தெரிவித்தார். இன்று இரண்டாம் பதிப்பு வெளியாகி விட்டதால் இனி
வழக்கம் போல் கடைகளிலும், பதிப்பாளரிடமும் கிடைக்கும்.

அன்பு வாசகர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

பதிப்பாளரின் அலைபேசி 9600123146 மின்னஞ்சல் blackholemedia@gmail.com

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV



அன்புடன் உங்கள்
என்.கணேசன்

Saturday, June 18, 2016

”புத்தம் சரணம் கச்சாமி” நாவல் வெளியீடு!


அன்பு வாசகர்களே!

வணக்கம். நீங்கள் ஆவலோடு படித்து வந்த ’புத்தம் சரணம் கச்சாமி’ நாவல் இன்று வெளியாகியுள்ளது.

கடத்தப்பட்ட மைத்ரேயன் எங்கு கொண்டு செல்லப்படுகிறான், லீ க்யாங், மாரா என்ற இரண்டு பெரிய எதிரிகளிடம் அவன் நிலை என்ன, அக்‌ஷய்க்கு மைத்ரேயனும், கௌதமும் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிகிறதா, அவர்களைக் காப்பாற்றுகிறானா, போலி மைத்ரேயனை லீ க்யாங் அரங்கேற்றம் செய்யும் திட்டம் நிறைவேறுகிறதா, லீ க்யாங், மாரா, மைத்ரேயன் என்ற மும்முனை சக்தி சதுரங்க ஆட்டத்தில் ஒருவருக்கு மற்ற இருவர் எதிரிகள் என்ற நிலையில் யார் யாரை எப்படி வெல்கிறார்கள், மைத்ரேயன் தன் அபூர்வ சக்திகள் எதையாவது கடைசியிலாவது பயன்படுத்துகிறானா, முடிவில் என்ன ஆகிறது என்ற  கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நாவல் 122 அத்தியாயங்கள் வரை பல சுவாரசிய திகில் திருப்பங்களுடன் நீள்கிறது.

600 பக்கங்களுக்கும் மேலான இந்த நாவலை வாங்கிப்படிக்க விரும்புபவர்கள் பதிப்பாளரை 9600123146 எண் அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். விலை ரூ.570/-

வலைப்பூவில் வழக்கம் போல் வியாழன் தோறும் புத்தம் சரணம் கச்சாமி தொடரும்.

அன்புடன்
என்.கணேசன்

Thursday, June 16, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 103


யங்கிக் கிடக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் விழித்துக் கொண்டது எப்போது என்று தெரியவில்லை. அவனிடமிருந்து ஒரு சத்தமும் இல்லை.... இப்போது பார்த்தால் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தேவின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைத்தது. ஸ்தம்பித்த இதயம் இப்போது ஒலிம்பிக்கில் ஓடியது.... தேவ் காட்சிப்பிழையோ என்று நினைத்து மைத்ரேயனைக் கூர்ந்து பார்த்தான். இப்போது மைத்ரேயன் கண்மூடியிருந்தான். மறுபடி வெளிச்சம் போய் விட்டது. இப்போது இருட்டில் இருந்து கொண்டே மைத்ரேயன் பார்ப்பது போன்ற பிரமை தேவுக்கு ஏற்பட்டது.

நகரப் பகுதியை நெருங்கும் போது அவன் கத்த ஆரம்பிக்கலாம். நாலு பேர் கவனத்தைக் கவர முயற்சிக்கலாம்....என்றெல்லாம் தோன்ற ஆரம்பிக்க தேவ் ஆபத்தை உணர்ந்தான். கடத்திய பின் ஏற்றியிருந்த மயக்க ஊசி மருந்து இன்னும் பல மணி நேரம் வேலை செய்யக்கூடியது. அவன் எத்தனையோ முறை பயன்படுத்தியிருப்பதால் அதில் அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனால் இந்தச் சிறுவனிடம் அது சரியாக வேலை செய்யவில்லையோ? இன்னொரு முறை அந்த மயக்க மருந்தைப் பயன்படுத்த வேண்டி இருக்குமோ? எதற்கும் பொறுத்திருந்து பார்த்து தேவையானால் பயன்படுத்தலாம்..... அதிகமாய் அதை பயன்படுத்தினால் உயிருக்கும் ஆபத்து.... உயிரோடு ஒப்படைப்பதாக லீ க்யாங்கிடம் வாக்கு தந்திருக்கிறான்.

கார் கொச்சினை நெருங்கியது. ஆட்கள், சிக்னல்கள் என கார் கடக்க ஆரம்பித்த போது தேவ் இறுக்கத்தை உணர்ந்தான். மைத்ரேயன் எப்போது வேண்டுமானாலும் கத்த ஆரம்பிக்கலாம் என்று பயந்தான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படியானால் அவன் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது போல் தோன்றியது பிரமையோ?



சான் ஆஸ்பத்திரி வராந்தாவில் அக்‌ஷயைச் சந்தித்தார். அவரைப் பார்த்தவுடன் அக்‌ஷய் வாழ்க்கையில் முதல் முறையாகக் கூனிக்குறுகினான். அவர் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டு வேதனையுடன் சொன்னான். “என்னை மன்னித்து விடுங்கள் ஆசானே. ஒத்துக் கொண்டபடி மைத்ரேயனை உங்களிடம் என்னால் ஒப்படைக்க முடியவில்லை. எதிர்பாராமல் என்னென்னவோ நடந்து விட்டது....”

ஆசான் அவன் இரண்டு கைகளையும் தன் கண்களில் ஒத்திக் கொண்டு கண்கள் ஈரமாகச் சொன்னார். “உங்கள் உயிரைப் பணயம் வைத்து மைத்ரேயரை அழைத்து வந்ததற்கு நானும், என்னைச் சேர்ந்தவர்களும் பல பிறவிகள் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம் அன்பரே. இந்தியா வந்ததும் எங்களிடம் ஒப்படைக்க நான் சம்மதித்திருந்தால் உங்கள் பங்கு முடிந்திருக்கும். இங்கு வரை மைத்ரேயரை அழைத்து வர வைத்ததால் தான் அவரும், அவரோடு சேர்ந்து உங்கள் மகனும் கடத்தப்படும்படி ஆகி விட்டது. நான் தான் உங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் அன்பரே. என்னை மன்னித்து விடுங்கள்.....”

“எல்லாவற்றிற்கும் தயாராக நான் இருந்திருக்க வேண்டும் ஆசானே” அக்‌ஷய் குற்ற உணர்ச்சி குறையாமல் சொன்னான்.

“தங்கள் மீது தவறில்லை அன்பரே. விதி ஒத்துழைத்தால் ஒழிய மனிதன் எதற்கும் தயார் நிலையில் இருக்க முடிவதில்லை என்பதை என் இத்தனை நீண்ட வாழ்க்கையில் அனுபவப்பட்டிருக்கிறேன் அன்பரே. அதைப் பின்பு பேசுவோம். உங்கள் மூத்த மகன் இப்போது எப்படி இருக்கிறார்?”

“நலமாக இருக்கிறான். வீட்டுக்கு அழைத்துப் போய்க் கொள்ளும்படி இப்போது தான் டாக்டர் சொன்னார்.....”


வீட்டுக்குப் போகும் போது ஆசான் கூடவே வந்தார். மரகதம், சஹானா, வருண் மூவருக்கும் மைத்ரேயனைப் பார்த்துக் கொண்டதற்காக ஹிந்தியில் நன்றி தெரிவித்தார். கௌதம் கடத்தப்பட்டதற்கு அவர்களிடமும் வருத்தம் தெரிவித்தார். மகன் நினைவில் உடைந்து போய் கண்கலங்கிய சஹானாவிடம் “போதிசத்துவர் அருளால் உங்கள் மகனுக்கு எந்தக் கெடுதலும் நேராது.... சீக்கிரமே வந்து விடுவான்” என்று தைரியம் சொன்னார்.

தனியாக அவரிடம் பேசும் போது அக்‌ஷய் சொன்னான். “எல்லா இடங்களிலும் தேடுதல் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கிறது. இது வரை எந்தத் தகவலும் இல்லை.... பிரதமர் கூட நிலவரத்தை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று உளவுத்துறை ஆட்கள் சொன்னார்கள்....”

தலையசைத்து விட்டு ஒரு கணம் அமைதியாகக் கண்மூடி பிரார்த்தனை செய்த அவர் பின் அவனிடம் ஆவலுடன் கேட்டார். “எனக்கு மைத்ரேயரைப் பற்றிச் சொல்லுங்கள் அன்பரே. இத்தனை நாட்கள் அவருடன் இருக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள். என்னவெல்லாம் நடந்தது... அவர் அந்த நேரங்களில் எப்படி நடந்து கொண்டார்...?”

அக்‌ஷய் அவரிடம் எல்லாவற்றையும் சொன்னான். மிகவும் பரவசத்துடன் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். மைத்ரேயனின் விளையாட்டு ஆர்வத்தை அவன் சொன்ன போது சின்னக்குழந்தை போல் மனதார சிரித்தார். பின் சின்ன வருத்தத்துடன் சொன்னார். “எனக்கு தான் அவருடன் விளையாடக் கொடுத்து வைக்கவில்லை.....”

அக்‌ஷய் பிரமிப்பு கலந்த புன்முறுவலுடன் அவரைப் பார்த்து விட்டு மற்றவற்றைச் சொன்னான். மைத்ரேயனை அடிக்க வேண்டி வந்ததை அவன் சொன்ன போது தானே அடிபட்டது போல ஆசான் துடித்தார். அக்‌ஷய் மறுபடி ஒருமுறை குற்ற உணர்ச்சியை உணர்ந்தான். ஆசான் பின் சமாளித்துக் கொண்டு தொடரச் சொன்னார். கடைசியில் புத்தகயா அனுபவத்தையும், கடத்தபடுவதற்கு முந்தைய நாளிரவு கண்ட கனவு அனுபவத்தையும் அக்‌ஷய் சொன்ன போது அவர் சிந்தனையில் மூழ்கினார்.



தேவ் கொச்சியைச் சென்றடைந்த போது இரவு மணி பதினொன்று. மீனவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் காரை நிறுத்திய போது அங்கு அவன் ஆட்கள் காத்திருந்தார்கள். கூட ஒரு மீனவனும் இருந்தான். கோவையிலிருந்து கூட வந்த பெண் காரிலிருந்து இறங்கி தன் மூதாட்டி வேடத்தைக் கலைக்க ஆரம்பித்தாள். தேவின் ஆட்கள் காரிலிருந்து மைத்ரேயனையும் கௌதமையும் இறக்கி இரண்டு சாக்குகளுக்குள் புகுத்திக் கட்டினார்கள். தேவ் கூர்மையாக மைத்ரேயனைக் கவனித்தான். உண்மையில் விழிப்பிருந்தால் இங்காவது கத்தவோ, திமிறவோ, சாக்குக்குள் புக மறுக்கவோ செய்வான் என்று எதிர்பார்த்தான். அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படியானால் காரில் அவன் விழித்துக் கொண்டிருந்தது போல தான் கண்டது பிரமையாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் சற்று நிம்மதியடைந்தான்.

பின் தேவ் மின்னல் வேகத்தில் மீனவ வேடத்திற்கு மாறினான். அவன் ஒரு கையில் தன் சூட்கேஸையும் மறு கையில் மைத்ரேயன் இருக்கும் சாக்கு மூட்டையை எடுத்துக் கொள்ள அங்கிருந்த மீனவன் கௌதம் இருக்கும் சாக்கு மூட்டையை எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவரும் சாக்குமூட்டைகளை சுமந்து கொண்டு முன் செல்ல அவன் ஆட்கள் கலைந்து போனார்கள். அந்தப் பெண் சிவப்பு ஸ்கார்ப்பியோ காரைக் கிளப்பிக் கொண்டு போனாள். யாரும் ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை.

தேவும், அந்த மீனவனும் ஒரு பெரிய படகை அடைந்தார்கள். அப்போது தான் தேவ் வாயைத் திறந்தான். “ரோந்துப் படகுகள் வரும் நேரம் உனக்குச் சரியாகத் தெரியும் தானே?”

“நான் பல வருடங்களாய் இந்தக் கடலில் போய் வந்துகொண்டிருக்கிறேன்... எனக்கு ரோந்து படகுகள் வரும் நேரங்கள் அத்துபடி....”

“ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் அல்லவா ரோந்து வருவார்கள்....”

“அவை ஆட்களைப் பொறுத்து மாறும்.... இன்று ட்யூட்டியில் இருக்கும் ஆட்கள் யார் என்று தெரியும். அவர்கள் எப்படி எங்கே வருவார்கள் என்பதும் தெரியும்....” அந்த மீனவன் உறுதியாகச் சொன்னான். இந்த வேலைக்கு அவனை சிபாரிசு செய்தவன் அந்த மீனவனைப் பற்றி பிரமாதமாகச் சொல்லி இருந்தான். பணத்தை தாராளமாகக் கொடுத்தீர்கள் என்றால் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடுவான். வேகமானவன் மட்டுமல்ல விவரமானவன் கூட.....”

இந்த ஒரு வேலைக்கு அவனுக்கு ஒரு லட்சம் தருவதாக பேசி முடிக்கப்பட்டு இருந்தது. படகில் இரண்டு மூட்டைகளையும் ஏற்றினார்கள். படகு கிளம்பியது. அந்த மீனவன் அதிகம் பேசாதவனாக இருந்தான். அது தேவுக்குப் பிடித்திருந்தது. படகை அவன் செலுத்திய விதமும் மிக லாவகமாகவும், வேகமாகவும் இருந்தது.

தேவுக்கு கிடைத்த தகவலின்படி எல்லா விமானநிலையங்களும், துறைமுகங்களும் கடுமையான சோதனைக்குள்ளாகி இருந்தன. கோவைக்கு அருகிலேயே கொச்சி இருப்பதால் அந்தத் துறைமுகத்தில் கெடுபிடி அதிகம் இருப்பதாகச் சொன்னார்கள். அதே போல எல்லா சோதனைச்சாவடிகள் கூட கடுமையாக சோதிக்கப்பட்டுக் கொண்டு இருந்தன. அவர்கள் சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கையிலேயே தேவ் அந்த சிறுவர்களோடு இந்திய எல்லைப் பகுதியைக் கடந்து போய்க் கொண்டே இருப்பான்.

திடீரென்று ஒரு பாறையின் பின்னால் மீனவன் படகை மறைத்து நிறுத்தினான். தேவ் ஏன் என்று கேட்கவில்லை. ஒரு வேலையில் திறமையானவன் என்று கண்டுபிடித்து அந்த வேலையை ஒப்படைத்த பின் அனாவசியமாய் கேள்வி கேட்பதோ, இடையில் மூக்கை நுழைப்பதோ அவனுக்கு பிடிப்பதில்லை. நான்கு நிமிடங்கள் கழிந்து ஒரு ரோந்துப் படகு தூரத்தில் தெரிந்தது.

ரோந்துப்படகு கண்பார்வையிலிருந்து மறையும் வரைக் காத்திருந்து விட்டு வேகமாக படகை மீனவன் செலுத்த ஆரம்பித்தான். சிறிதும் சலிக்காமல், ஓய்வெடுக்காமல் துடுப்புகளை அவன் இயக்கியது தேவை வியக்க வைத்தது. இரண்டு மணி நேரம் கழித்து தொலை தூரத்தில் ஒரு கப்பல் தெரிய ஆரம்பித்தது.

மீனவன் அவனிடம் கேட்டான். “இது தானா நீங்கள் சொன்ன கப்பல்?”

பைனாகுலரில் தேவ் பார்த்தான். கப்பலின் மேல் சீனக்கொடி தெரிந்தது. “அது தான்...” என்று தேவ் சொன்னான். மேலும் வேகமாக மீனவன் துடுப்புகளை இயக்கினான்.

இந்திய கடல் எல்லைக்கு அப்பால் சென்று கொண்டிருந்த அந்த சீனக்கப்பல் சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு வாடிக்கையாய் செல்லும் கப்பல். அது எப்போதுமே இந்திய எல்லைக்குள் நுழைவதில்லை. அதனால் அந்தக் கப்பலில் மைத்ரேயன் கடத்தப்படலாம் என்கிற சந்தேகமே யாருக்கும் ஏற்பட வாய்ப்பில்லை.

படகு அந்தக் கப்பலை அடைந்தவுடன் தேவ் திருப்தியுடன் புன்னகைத்தான்.


(தொடரும்)

என்.கணேசன்

Monday, June 13, 2016

உலகப் பழமொழிகள் – 13


121. அறிவாளிகளுக்கு புத்திமதி தேவையில்லை. மூடர்கள் அதை ஏற்க மாட்டார்கள்.


122. மின்மினிப்பூச்சியைக் கண்டு சூரியன் கோபிக்கக் கூடாது.


123. ஒரு ரூபாயின் மதிப்பு தெரிய வேண்டுமானால் யாரிடமாவது கடனாகக் கேட்டுப்பார்.


124. மனிதன் சவக்குழியில் புகழப்படுகிறான்.


125. கண்ணியமானவனை நீதியில்லாமல் புகழ்ந்தால் வருந்துவான்.


126. வசையால் செத்தவனும் இல்லை. வாழ்த்தால் வாழ்ந்தவனும் இல்லை.


127. எல்லாத் துயரங்களுக்கும் இரண்டு பரிகாரங்கள் உண்டு. ஒன்று காலம். மற்றது பொறுமை.


128. சரியாகச் செய்யாத வேலையை இரண்டு முறை செய்ய நேரிடும்.


129. பாய் முடைபவர்கள் பாயில் படுப்பதில்லை.


130. சிடுமூஞ்சி கடை வைக்கக் கூடாது.


தொகுப்பு: என்.கணேசன்


Thursday, June 9, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 102

 

ரு மனிதனை மிகச்சரியாகப் புரிந்து கொள்வது சாதாரண சமயங்களில் சாத்தியமல்ல. பெரும் பிரச்னைகளை அவன் எதிர் கொள்ளும் காலங்களில் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதே அவனது ஆழத்தையும் அடையாளம் காட்டும். அப்படித்தான் அக்‌ஷயை மாதவன் அறிந்து பிரமித்தார். வருணை அவன் கையில் சுமந்து கொண்டு வந்து உதவி கேட்ட நேரத்திலிருந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே காத்திருந்த இந்தக் கணம் வரை அவனைக் கவனித்துக் கொண்டிருக்கும் அவர் மனதில் அவன் இமயமென உயர்ந்து போனான். அந்தப் பாசம், அந்த துக்கம், அதை எல்லாம் மீறீய நிதானம், தைரியம், பொறுமை எல்லாம் அந்த சில மணி நேரங்களில் அவரால் உணர முடிந்தது.

அவன் வருணின் தந்தை அல்ல என்பதை எந்த விதத்திலும் ஒருவரால் யூகிக்க முடியாது. அழுது கொண்டிருந்த சஹானாவை அணைத்துக் கொண்டு அவன் சொன்னான். “அழாதே சஹானா. என்னை விட்டு என் மகனைப் பிரிக்க எமனால் கூட முடியாது.” சாதாரண ஆசுவாசப்படுத்தும் வார்த்தைகள் அல்ல அவை. ஆத்மார்த்தமாய் இதய ஆழத்திலிருந்து உறுதியாக வந்த வார்த்தைகள் அவை. அதன் பிறகு தான் சஹானாவின் துக்கம் குறைந்தது. அவள் அனுபவத்தில் அவன் அந்த அளவு உறுதியாகச் சொல்லி இருந்தவற்றில் ஒன்று கூட இது வரை பொய்த்ததில்லை. அக்‌ஷய்க்கும் வருணுக்கும் இடையே இருந்த பந்தம் தந்தை-மகன் என்பதையும் தாண்டி ஆழமானது. அந்த ஆழத்தில் அவள் கணவன் உணர்ந்து சொல்வது பொய்க்காது....

வந்தனா வந்து தந்தையுடன் அமர்ந்து கொண்டாள். சோகத்தில் இருந்த அவள் முகத்தை மாதவனுக்குப் பார்க்கவே சகிக்கவில்லை. என்ன தான் கோபம் என்றாலும் உண்மையான அன்பிருக்கையில் இது போன்ற சந்தர்ப்பங்களில் கரைந்து போய் அன்பு மாத்திரமே மிஞ்சுகிறது என்று அவர் நினைத்துக் கொண்டார்.

டாக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்து வருணின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதைச் சொன்னார். வாந்தியிலேயே முக்கால் பாக விஷம் வெளியேறி விட்டதென்றும் மீதியையும் அப்புறப்படுத்தி விட்டதாகவும், தெரிவித்து விட்டுப் போனார். அக்‌ஷய் சஹானாவைப் பார்க்க அவள் கணவனின் கைகளை நன்றியுடன் இறுக்கப் பிடித்துக் கொண்டாள். மறுபடி கண்ணீர் வழிந்தது. அவளைப் போலவே ஆனந்தக் கண்ணீர் விட்ட இன்னொருத்தி வந்தனா.

மாதவன் எழுந்து நிம்மதியாக மகளுடன் கிளம்பினார். அக்‌ஷயும், சஹானாவும் அவரிடம் ஆத்மார்த்தமாய் நன்றி சொன்னார்கள்.

மாதவனும், வந்தனாவும் வீடு வந்து சேர்ந்த போது ஜானகி இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“என்ன தலைவலியா?” என்று மாதவன் கேட்டார்.

“வலி இல்லை. இடியே விழுந்த மாதிரி இருக்கிறது....” என்ற ஜானகி ஆத்திரத்துடன் நடந்ததை எல்லாம் அழாதகுறையாகச் சொன்னாள். அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவள் காரித்துப்பியதைச் சொன்ன போது மாதவன் முகம் சுளித்தார்.

அதைப் பார்த்த ஜானகி ஆத்திரத்துடன் சொன்னாள். “அந்த நேரத்தில் கையில் விளக்குமாறு கிடைத்திருந்தால் அதிலேயே நாலடி கொடுத்தும் இருப்பேன்....”

மனைவி அதைச் செய்யக்கூடியவள் தான் என்பதில் மாதவனுக்கு சந்தேகம் இல்லை. அவர் மனம் அக்‌ஷயை நினைத்துப் பார்த்தது. இப்போது அக்‌ஷயைப் பற்றி எண்ணிய போது அவர் மனதில் அவன் மேலும் உயர்ந்து போனான். அவனுடைய உண்மையான மகன் கடத்தப்பட்ட நேரத்தில் கூட வருண் மீது இப்படி பாசம் கொட்டி அங்கே அமர்ந்திருக்க அவனால் எப்படி முடிந்தது?

மாதவன் மனைவியிடம் கேட்டார். “மேலே அந்த ஆள் இன்னும் இருக்கிறானா, போய் விட்டானா?”

“அவன் நான் துப்பி ஐந்து நிமிடத்தில் போய் விட்டான். கதவைப் பூட்டக்கூட இல்லை. அவனை விடுங்கள். வருண் எப்படி இருக்கிறான்....?” ஜானகி கேட்டாள்.

“ஆபத்து இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார்...” என்று மாதவன் சொன்னார். ஜானகி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவள் காதுகளில் இப்போது மரகதம் சேகரிடம் சொன்ன வார்த்தைகள் ரீங்காரம் செய்தன. “என் பேரன் பிழைப்பான். என் இன்னொரு பேரன் திரும்பக் கிடைப்பான். இது வரைக்கும் எங்களைக் கைவிடாத கடவுள் இனியும் கைவிட மாட்டார். உன்னைப் பெற்றதைத் தவிர நான் எந்தப் பாவமும் செய்ததில்லை. அந்தப் பாவத்திற்கு பலனை நான் எப்பவோ அனுபவித்து முடித்தும் விட்டேன். என் மகனும் மருமகளும் எந்தப் பாவமுமே செய்யாதவர்கள். அதனால் சீக்கிரமே எல்லாம் சரியாகி நான், என் மகன், மருமகள், பேரன்கள் நன்றாகத் தான் இருப்போம்...”

நன்மையை மட்டுமே செய்து வரும் நல்ல உள்ளம் மட்டுமே இப்படி உறுதியாகச் சொல்ல முடியும். சொன்னபடி நடக்கவும் நடக்கும்.....

ஜானகி தர்மசங்கடத்துடன் கணவனிடம் சொன்னாள். “அந்த நாசமாய் போன நாதாரி நாய் சொன்னதை நம்பி வருண் வீட்டுக்காரர்களிடம் எப்படியெப்படியோ நடந்து விட்டேன்.... நான் இனி எப்படி அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன்?....

மாதவன் சொன்னார். “நான் அன்றைக்கே சொன்னேன். ஓடி ஒளிகிற ஆள் நல்லவனாய் இருக்க மாட்டான்னு...

ஜானகி முறைத்தாள். “ இந்த அளவு மோசமான மனசாட்சியும் இல்லாத புளுகனை நான் இது வரைக்கும் பார்த்ததில்லை. அதனால் நான் ஏமாந்துட்டேன்.... அதைச் சொல்லிச் சொல்லிக் காட்ட வேண்டுமா? நீங்கள் இது வரைக்கும் யார் கிட்டயும் ஏமாந்ததே இல்லையா...

எல்லா நேரங்களிலும் அம்மாவிடம் திட்டு வாங்கும் அப்பாவை வந்தனா புன்னகையுடன் பார்த்தாள்...


சான் கோயமுத்தூரை அடைந்த போது அவருடைய புதிய அலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்தது. மைத்ரேயனும், கௌதமும் கடத்தப்பட்ட தகவலையும், நடந்த சூழலையும் உளவுத்துறை அதிகாரி சுருக்கமாகச் சொல்லி விட்டு எல்லா இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்தான்.

ஆசான் பேரதிர்ச்சியில் தளர்ந்து போனார். தலாய் லாமாவின் கனவு பலித்து விட்டது.....

 
ருண் நினைவு தெளிந்த பிறகு அப்பாவிடம் எல்லாவற்றையும் விளக்கி மன்னிப்பு கேட்க முற்பட்ட போது அக்‌ஷய் மகனைப் பேச விடவில்லை. “வருண் உன்னை இந்த அப்பாவுக்குப் புரியும்..... நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை…..” 

என்றைக்குமே அவனுக்குக் குற்ற உணர்ச்சியையோ, தர்மசங்கடத்தையோ ஏற்படுத்தாத அந்த மாமனிதனை அளவில்லாத பாசத்தோடு வருண் பார்த்தான். இவர் எங்கே? அந்த விஷ ஜந்து எங்கே? சந்தித்த முதல் கணத்திலிருந்து இந்தக் கணம் வரை நல்லதைத் தவிர வேறெதையும் நினைக்கும் சந்தர்ப்பமே ஏற்பட்டதில்லையே! திடீர் என்று தம்பியின் நினைவு வந்தது. மனம் பாரமானது.... தந்தையிடம் மெல்லக் கேட்டான். “தம்பி?

அக்‌ஷய் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாகச் சொன்னான். “தகவல் இதுவரை இல்லை. மைத்ரேயனைக் கடத்தியவர்கள், கூட அவனையும் கடத்தினால் நம் மீது கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும் என்று நினைத்துக் கடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதனால் பயப்பட ஒன்றும் இல்லை....

வருண் தம்பியை நினைத்துப் பார்த்தான். கௌதம் ஒரு நாளும் அம்மாவை விட்டு இருக்காதவன். பெரிதாய் பேசினாலும் பயந்த சுபாவம் தான். கண்கலங்க வருண் சொன்னான். “ஆனால் கௌதம் பயப்படுவானேப்பா...

மைத்ரேயன் கூட இருக்கிறான். அவன் பார்த்துக் கொள்வான்...

வருணுக்கு சந்தேகம் வந்து அக்‌ஷயைக் கேட்டான். “மைத்ரேயனுக்கு அடுத்தவர் மனதில் இருக்கிறதெல்லாம் தெரியும் என்று அன்றைக்குச் சொன்னீர்கள். அது உண்மையென்று எனக்கும் படுகிறது.  அப்படிப்பட்டவனை கடத்த ஒருவர் நெருங்கினால் அதற்கு முன்னேயே அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் தானேப்பா. அவன் ஏன் கத்தவில்லை. ஏன் வேறு எதாவது செய்யவில்லை......?”

எனக்குத் தெரிந்து அவன் எந்த சக்தியையும் பயன்படுத்தி எதையும் செய்ததாய் நினைவில்லை....ஒரே ஒரு முறை சம்யே மடாலயத்தில் தலைமைபிக்குவின் வீக்கம் குறைந்ததையும் அவனுக்கு மைத்ரேயனின் திட்டமிட்ட செயலாய் நினைக்கத் தோன்றவில்லை.   

“பயன்படுத்தாத சக்தி இருந்து என்ன பிரயோஜனம்ப்பாவருண் ஆற்றாமையுடன் கேட்டான்.

அவனுக்கு அக்‌ஷய் பதில் சொல்லவில்லை. கௌதம புத்தருடைய சீடர்கள், வழி வந்தவர்கள் எல்லாம் மகாசக்திகளைப் படைத்தவர்களாயும், அவற்றைப் பயன்படுத்தியவர்களாயும் இருந்திருக்கிறார்கள். பத்மசாம்பவா, போதி தர்மர் என்று எத்தனையோ பேரைச் சொல்லலாம். ஆனால் புத்தர் எந்த மகாசக்தியையும் பயன்படுத்தி அற்புதங்கள் புரியவில்லை என்று சொல்கிறார்கள். புத்தரின் அவதாரமும் அப்படியே இருக்க முயல்கிறதோ?


சிவப்பு ஸ்கார்ப்பியோ கார் கொச்சின் நகரத்தை நோக்கி வேகமாய் போய்க் கொண்டிருந்தது. தேவ் வயதான தோற்றத்தில் இருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த இளம்பெண்ணும் பாட்டியாக மாறியிருந்தாள். திட்டத்தின்  அடுத்த பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கையில் மனம் கூர்மையாய், எச்சரிக்கையாய், இளைப்பாறாமல் இருக்க வெளி இருட்டையே பல யோசனைகளுடன் தேவ் பார்த்துக் கொண்டு வந்தான்.

வழியில் ஒரு இடத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் தெருவிளக்கை அந்தக் கார் கடக்கையில் தேவின் பார்வை அவன் காலடியில் விழுந்தது. மைத்ரேயன் கண்விழித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். தேவின் இதயம் ஓரிரு துடிப்புகளை மறந்து ஸ்தம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்   


Monday, June 6, 2016

ஆன்மிக வானில் ஒரு எரிநட்சத்திரம்!

மகாசக்தி மனிதர்கள்-60

ராபர்ட் ஆடம்ஸ் என்ற அமெரிக்கருக்கு திருவண்ணாமலையை விட்டு வேறெங்கும் செல்லாத ரமண மகரிஷி அமெரிக்காவில் காட்சி அளித்தார் என்பதைப் பார்த்தோம். அது தென்னிந்தியாவில் வசிக்கும் ரமண மகரிஷி என்ற யோகி என்பதை அறிந்த பின் ராபர்ட் ஆடம்ஸ் ரமண மகரிஷியின் தீவிர பக்தரானார். ரமணரின் உபதேசங்களையும், அத்வைதத்தையும், ஞான யோகக் கோட்பாடுகளையும் கலிபோர்னியாவில் ஆன்மிக அன்பர்களுக்கு உபதேசித்து வந்தார்.

பால் ப்ரண்டன், ராபர்ட் ஆடம்ஸ் போலவே ரமண மகரிஷியால் சோமர்செட் மாகம் (Somerset Maugham) என்ற பிரபல ஆங்கில நாவலாசிரியர், கார்ல் ஜங் (Carl Jung) என்ற பிரபல மனோதத்துவ மேதை, ஆர்தர் ஓஸ்போர்ன் (Arthur Osborne) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் முதலானோரும் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் ரமண மகரிஷையை இந்தியா வந்து தரிசித்து விட்டுப் போனார்கள். அவர்களில் ஆர்தர் ஓஸ்போர்ன் நீண்ட காலம் ரமணருடன் ரமணாசிரமத்தில் தங்கியும் இருந்தார். அவர் ரமணரின் உபதேசங்கள் குறித்தும், ரமணருடனான தன் அனுபவங்கள் குறித்தும் நூல்களை எழுதி இருக்கிறார். ஆத்மஞானத்தின் பாதை என்ற அவரது நூலுக்கு அப்போதைய குடியரசுத் துணைத்தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அணிந்துரை எழுதி இருக்கிறார்.

திருவண்ணாமலையில் இருந்த ரமணமகரிஷி அமெரிக்காவில் ராபர்ட் ஆடம்ஸுக்குக் காட்சி அளித்தது போலவே, கணபதிமுனி என்ற தீவிர பக்தருக்குத் திருவொற்றியூரில் காட்சி அளித்திருக்கிறார். அந்த நிகழ்வை மெய்சிலிர்ப்போடு கணபதிமுனி பதிவு செய்திருக்கிறார். திருவொற்றியூரில் ஒரு பிள்ளையார் கோயிலில் அமர்ந்திருக்கையில் ரமணரைக் காண வேண்டும் என்ற பேராவல் தன்னுள் திடீர் என்று எழுந்ததாகவும் சிறிது நேரத்தில் ரமண மகரிஷி அந்தக் கோயிலில் நுழைவதைப் பார்த்து ஆச்சரியமும், ஆனந்தமும் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். ரமணமகரிஷியைக் கண்டவுடன் ஓடிச்சென்று அவர் காலைத் தொட்டு வணங்கியதாகவும், ரமணர் தலையைத் தொட்டு ஆசி வழங்கியதாகவும், ரமணர் தலையைத் தொட்டவுடன் சக்தி வாய்ந்த அலைகள் தன் உடலை ஊடுருவியதாக உணர்ந்ததாகவும், அந்த உணர்வின் தாக்கம் நீண்ட நேரம் அவருக்கு இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன் சக்திகளை அனாவசியமாக வெளிப்படுத்துவதிலோ, பிரபலப்படுத்துவதிலோ ரமண மகரிஷிக்கு ஆர்வம் இல்லாத போதிலும் சில அதிசயங்கள் தானாகவே அவர் மூலம் நடந்தன. அப்படி நடந்த இன்னொரு நிகழ்வைப் பார்ப்போம்.

கிரிதலூர் சத்யநாராயண ராவ் என்பவர் புற்று நோயின் முற்றிய நிலையில் இருந்தார். தண்ணீரோ, மருந்தோ, உணவோ உட்கொள்ளக்கூட முடியாத கொடிய நிலை. அவரது குடும்பத்தினர் ரமணரது பரம பக்தர்கள். அவர்கள் சத்யநாராயண ராவை வந்து ஒரு முறை பார்த்து விட்டுச் செல்லும்படி ரமணரை வேண்டிக்கொண்டார்கள். அதனை ஏற்று ரமணர் சத்யநாராயண ராவைச் சென்று பார்த்தார்.

ரமணரைப் பார்த்தவுடன் சத்யநாராயண ராவ் அவரது கையைப் பிடித்துக் கொண்டு கதறினார். “நான் வேண்டுமானால் பாவியாக இருக்கலாம். ஆனால் என் தாயும் சகோதரனும் தங்களுடைய தீவிர பக்தர்கள் அல்லவா? அவர்களுக்காகவாவது என்னைக் காப்பாற்றக் கூடாதா?”

பதில் எதுவும் சொல்லாமல் அவரைப் படுக்கச் சொல்லி விட்டு அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ரமணர் அங்கிருந்து கிளம்பினார். அன்றிரவு சத்யநாராயண ராவ் ரத்த வாந்தி எடுத்தார். ரத்தத்தோடு சதைகளும் வெளியேறின. உள்ளே யாரோ அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த சதைப்பிண்டமும் ரத்தமும் போலத் தோன்றின. மறு நாள் முதல் சத்யநாராயண ராவ் சாப்பிடவும், மருந்து உட்கொள்ளவும் முடிந்தது.

இந்த அளவு அற்புதங்கள் ரமண மகரிஷியின் பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த போதிலும் அவர் ஒரு முறை கூட அந்த அற்புதங்களில் தனக்குப் பங்கு இருப்பதாக எந்த சூழ்நிலையிலும் சொல்லிக் கொள்ளவில்லை.

ஞானியால் நிகழ்த்தப்படும் அற்புதங்களைப் பற்றிய பேச்சு ஒரு முறை வந்த போது சொன்னார். “ஏதோ ஒரு சக்தி ஞானியின் மூலமாக வேலை செய்கிறது. அவனது தேகத்தை உபயோகித்து தன் வேலையை முடித்துக் கொள்கிறது.” எல்லாமே அப்படிப்பட்ட சக்தியின் வேலை தான் என்று பட்டும் படாமலும் சொன்னவர் அந்த சக்தியோ, ஞானியோ அவர் என்று மறைமுகமாகவும் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை.

ஒரு முறை அவருடைய ஆசிரமத்திற்கு வந்த ஒருவர் தனது குருவைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். மூன்று வருடங்களுக்கு முன் இறந்து புதைக்கப்பட்ட அவருடைய குரு மறுபடியும் மனித உருவில் வந்து இனி என்ன செய்ய வேண்டும் என்பதை உபதேசித்தார் என்று அவர் சொன்னதைக் கேட்டு விட்டு மெல்ல ரமண மகரிஷி சொன்னார். “ஒரு மனிதன் எத்தனை உடல்களில் புகுந்த போதும் அவன் தன் உண்மையான உறைவிடத்தைக் கண்டு கொண்டான் என்பது ஆகி விடுமா?”. யோசிக்க வேண்டிய உண்மை அல்லவா இது?

விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் நூலைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த பி.வி.நரசிம்ம சுவாமி என்பவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் தொடுதல் மூலமாகவே ஒரு முறை மெய்ஞானப் பேரனுபவத்தை ஏற்படுத்தியதைச் சுட்டிக் காட்டி ரமண மகரிஷிக்கும் அது போன்ற சக்தி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அவர் பதில் கூறும் முன் எச்சம்மாள் என்ற பக்தை ’மகாசக்திகள் அனைவருக்கும் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தவையா’ என்று கேட்டார்.

இரண்டு கேள்விக்கும் பதில் அளிக்கும் விதமாக ரமண மகரிஷி சொன்னார். ”தன்னை அறிந்து தன் உண்மை நிலையிலேயே தங்கி இருப்பது தான் ஒருவனது உண்மையான சாதனையாக இருக்க முடியும். மற்ற அனைத்து சாதனைகளும் கனவில் கண்ட சக்திகள் போன்றவை. உறக்கத்தில் இருந்து விழிக்கும் போது அவை உண்மையாக இருக்குமா? உண்மையை உணர்ந்து அந்த நிலையில் தங்கி இருப்பவனை உண்மையல்லாதவற்றை நீங்கி இருப்பவனை அவை ஏமாற்ற முடியாது”

அவருக்கே புற்று நோய் வந்த போது அவரது பக்தர்கள் வற்புறுத்திய போதும் அதைப் போக்கிக் கொள்ள அவர் சிறிதும் முயற்சிக்கவில்லை. உடலைத் துறப்பது என்பதை சுமையை இறக்கி வைப்பது போலவும், சாப்பிட்ட பின் இலையைத் தூக்கி எறிவதைப் போலவும் உவமை சொன்ன ரமணர் ”நான் போய் விடப் போகிறேன் என்று கவலைப் படுகிறார்கள். எங்கே போவது? எங்கே வருவது? போக்கேது? வரவேது?” என்று கேட்டார்.

ஆனால் பக்தர்கள் முயற்சியால் அறுவை சிகிச்சை உட்பட பல மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் ஒத்துழைத்தார். அவரது முதுகில் புற்று நோயால் ஏற்பட்டிருந்த கட்டியை மயக்க மருந்து இல்லாமலேயே அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அவர் அனுமதி அளித்தார். ஆனால் எந்தச் சிகிச்சையும் பலன் அளிக்காமல் போய் புற்று நோயின் பாதிப்புகள் திரும்பத் திரும்ப வந்த போது துக்கப்பட்டவர்கள் அவருடைய பக்தர்கள் மட்டுமே. அவர் சிறிதும் பாதிக்கப்படாமல் தன் இயல்பான அமைதியிலேயே லயித்திருந்தார்.

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இரவு ரமண மகரிஷி உயிர்நீத்த அதே நேரத்தில் வானில் தெற்கே இருந்து கிளம்பி பேரொளி கொண்ட ஒரு எரிநட்சத்திரம் திருவண்ணாமலை உச்சியைத் தொட்டு பின்புறம் மறைந்தது. அதை திருவண்ணாமலையிலும் சுற்றி உள்ள பகுதிகளிலும் பலரும் கண்டிருக்கிறார்கள். ஹென்றி கார்ட்டியர் ப்ரெஸ்ஸன் (Henri Cartier-Bresson) என்ற பிரெஞ்சுப் புகைப்படக்காரர் அந்த சமயத்தில் ரமணாசிரமத்திற்கு வெளியே இருந்திருக்கிறார். அந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டு கடிகார நேரத்தைப் பார்த்து விட்டு ஆசிரமத்திற்கு உள்ளே போன போது சரியாக அந்த 8.47 மணி நேரத்தில் ரமணரின் உயிர் பிரிந்திருப்பதை அறிந்ததாக அவர் சொல்லி இருக்கிறார். இந்த அற்புத நிகழ்வு ரமணரின் மகாசக்திக்கு கடைசி உதாரணமாக இருக்கிறது.

இத்தொடரை ரமண மகரிஷியோடு முடித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அபூர்வ சக்திகள் பெற்றிருப்பது சிறப்பு தான் என்றாலும் ரமணர் சுட்டிக் காட்டியது போல அபூர்வ சக்திகள் என்றுமே மெய்ஞான சித்திக்கு அடையாளமாகி விடாது என்பதை நாம் மறந்து விடலாகாது. அதற்காகவே இத்தொடரில் ஞானிகள், யோகிகள் அல்லாத சிலர் பற்றியும் எழுதி இருந்தோம். ஆனால் அஷ்டமகாசக்திகள் கண்டிப்பாக கற்பனை அல்ல. யோக மார்க்கத்தில் அவை இயல்பாகவே ஒருவருக்கு கைகூடுகின்றன. அவற்றை தேவை இருக்கையில் உபயோகித்துக் கொண்டாலும் உண்மையான யோகிகளும், ஞானிகளும் பின்னர் அதைத்தாண்டிச் சென்று விடுகிறார்கள். அப்படிச் செல்ல முடிவதில் மட்டுமே இருக்கிறது அவர்களின் சிறப்பு!

இது வரை இத்தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு இந்த உண்மையை வலியுறுத்தி விட்டு அன்புடன் விடை பெறுகிறேன்.

- என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 9.10.2015

(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)



Thursday, June 2, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 101

ருண் வீடு திரும்பிய போது அக்‌ஷய் வாசலிலேயே மகனுக்காகக் காத்திருந்தான். பின்னாலேயே சஹானாவும் மரகதமும் நின்றிருந்தார்கள். ஆட்டோரிக்‌ஷாவில் இருந்து இறங்கிய மகனை அக்‌ஷய் ஆரத்தழுவிக் கொண்டான். வருணுக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த அன்புக்கு நான் இவருக்குத் திருப்பித் தந்ததெல்லாம் என்ன என்ற கேள்வி மட்டுமே மனதில் மேலோங்கி கனமாய் நின்றது.

எதுவும் பேசாமல் அக்‌ஷய் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்த போது அவனுக்கு வயிறு குமட்டிக் கொண்டு வந்தது. அங்கேயே வாந்தி எடுத்தான்.

அக்‌ஷய் வருணிடம் சந்தேகத்துடன் கேட்டான். “என்ன வருண்..... அந்த ஆள் ஏதாவது சாப்பிடக்கொடுத்தானா?”

வருணுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. “அவன்.... தரவில்லை.... நான் தான் விஷம் சாப்பிட்டேன். எனக்கு உங்க மடியிலயே சா...க.....” என்று சொன்னபடியே மயங்கி கீழே விழ பதறிப் போன அக்‌ஷய் மகனை அப்படியே இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.

எதிர் வீட்டில் மாதவன், ஜானகி, வந்தனா மூவரும் எங்கோ போய் விட்டு அப்போது தான் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். சஹானா பின் தொடர அக்‌ஷய் ஓடித் தெருவைக் கடந்து மாதவனிடம் கெஞ்சும் குரலில் சொன்னான். “அவசரமாய் ஆஸ்பத்திரிக்குப் போகணும்.... வருண் உயிருக்கே ஆபத்து....”

மாதவன் அடுத்த வார்த்தை கேட்க நிற்கவில்லை. காரின் பின் கதவைத் திறந்து கை காண்பித்து விட்டு வேகமாக டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார். வருணோடு அக்‌ஷயும், சஹானாவும் பின் சீட்டில்  உட்கார கார் வேகமாகச் சென்றது.

வந்தனாவும், ஜானகியும் திகைப்புடன் சிறிது நேரம் அப்படியே நின்றார்கள். ஜானகி சீக்கிரமே திகைப்பில் இருந்து மீண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் அவள் மகள் அவளைப் பின் தொடரவில்லை. பிரமை பிடித்தவளாய் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். ஜானகி வெளியே வந்து மகள் தோளைத் தொட்டு உள்ளே வர சைகை செய்தாள். வந்தனா நடைப்பிணமாய் உள்ளே நுழைந்தாள்.



சேகர் மாடியில் இருந்து நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். கோயமுத்தூரை விட்டுப் போகும் முன் தன் எதிரி வீடு துக்கத்தில் மூழ்குவதைப் பார்த்து ரசித்து விட்டுப் போக அவன் மனம் ஆசைப்பட்டது. வருண் தற்கொலைக்கு முயல்வான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சின்ன மகனை இழந்து சஹானாவும், அவளது கணவனும் தவிப்பதை மட்டும் தான் பார்த்து ரசிக்க அவன் அங்கே வந்திருந்தான். ஆனால் அவன் வார்த்தைகளைப் பின்பற்றி வருண் விஷம் சாப்பிட்டு வீடு போய் சேர்ந்தது கூடுதல் போனஸாக அவனுக்கு இருந்தது. அவனை அப்பாவாக ஏற்றுக் கொள்ளாத அந்த தறுதலை சாவதில் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. எப்போதுமே எதற்குமே கலங்காமல், வணங்காமல் இருந்த சஹானா உடைந்து போவதை இப்போதாவது பார்த்து ரசிக்க நினைத்தவனுக்கு இப்போதும் அவள் முகத்தில் துக்கம் இருந்தாலும் அவன் எதிர்பார்த்த அளவு அது தாங்க முடியாததாய் இல்லை. ஏதோ இன்னும் நம்பிக்கை பாக்கி இருப்பது போல் தான் இருந்தாள். அவனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் போகப் போக உடைந்து உருகி அழிந்து போவாள்....  அழிந்து  போக வேண்டும்... என்று நினைத்தவனாய் அவனுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

கீழே வந்தனா அலைபேசியில் பேசுவது கேட்டது. “அப்பா எந்த ஆஸ்பத்திரிப்பா.... நான் வர்றேன்ப்பா”

தாயிடம் எதுவுமே சொல்லாமல் வந்தனா தன் ஸ்கூட்டியில் வேகமாகப் போனாள். வெளி கேட் வரை வந்த ஜானகி திகைத்து நிற்பது தெரிந்தது.

மரகதமும் ஜன்னல் வழியே வந்தனா செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மகள் தன் பார்வையில் இருந்து மறைந்த பிறகு ஜானகி உள்ளே போய் விட்டாள். அப்போது தான் எதிர் வீட்டு மாடி ஜன்னலில் நிழலாய் ஒரு உருவம் தெரிவதை மரகதம் கவனித்தாள். சேகர் இன்னமும் அங்கே தான் இருக்கிறானா? அவள் மனதுக்குள் ஆயிரம் உணர்ச்சிகள் அலைமோதின. அவள் ஒரு முடிவெடுத்தவளாய் வீட்டைப் பூட்டிக் கொண்டு எதிர் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் தன் வீடு தேடி வருவதை ஜன்னல் வழியாகப் பார்த்த ஜானகி தர்மசங்கடப்பட்டாள். அந்தம்மாள் வந்தால் அவரிடம் எப்படிப் பேசுவது, என்ன சொல்வது என்றெல்லாம் மனம் குழம்பியது. ஆனால் மரகதம் வெளி கேட்டைத் திறந்த பிறகு அவள் வீட்டு அழைப்பு மணியை அழுத்தாமல் பக்கவாட்டில் இருந்த மாடிப்படிகளில் ஏறுவதைப் பார்த்த போது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. வருணின் அப்பா மேலே குடியிருக்கிறார் என்பதை அக்‌ஷயின் பெரியம்மாவான இந்தக் கிழவி கண்டுபிடித்து விட்டாளோ? சரி மேலே கதவு பூட்டியிருக்கும், அதைப் பார்த்து விட்டுப் போய் விடுவாள் என்று காத்திருந்தாள். ஆனால் மரகதம் கதவைத் தட்ட சில வினாடிகள் கழித்து கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது....

சேகர் கதவைத் தட்டியது மரகதம் என்பதை அறியவில்லை. வந்தனா போவதைப் பார்த்து விட்டுத் திரும்பிய அவன் மரகதம் தெருவைக் கடந்து வருவதைப் பார்த்திருக்கவில்லை. கதவைத் தட்டுவது ஜானகி என்று நினைத்தான். அவன் நடந்த சத்தம் கேட்டு அவள் மேலே வந்திருக்க வேண்டும். அவன் மகன் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறான் என்பதைச் சொல்ல வருகிறாள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். சோகமாய் கேட்டுக் கொண்டு சகிக்க முடியாமல் ஊரை விட்டுப் போவது போல நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தான். வாசலில் அவனைப் பெற்றவள் நின்றிருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்தான். மெல்ல பின் வாங்கினான். மரகதம் உள்ளே நுழைந்தாள். நுழைந்தவள் அவனையே கூர்மையாகப் பார்த்தாள்.

அவன் தாய் முன்பெல்லாம் அவன் எதிரில் வந்து நிற்கக் கூடத் தயங்குவாள். இன்று அவனை அளவெடுப்பது போல பார்க்கும் அளவு அவள் மாறியதை அவன் ரசிக்கவில்லை. ”என்ன அப்படிப் பார்க்கிறாய்?” என்று அவன் எரிச்சலோடு கேட்டான்.

“உயிரோடு இருக்கும் போதே செத்துப் போனதாய் நாடகம் ஆடிக் காணாமல் போனவன், பெற்ற தாய், கட்டிய மனைவி, ஒரே பிள்ளை – மூன்று பேரையும் அனாதரவாய் தவிக்க விட்டுப் போனவன், ஏன் திரும்பி வந்தாய்? ஏன் உன் மகனையே கடத்திக் கொண்டு போனாய்? அவன் தற்கொலை செய்யப் போகும் அளவு ஏன் நடந்து கொண்டாய். என்ன சாதனை இது சேகரா? உனக்கு எப்படி மனம் வந்தது?”

இரண்டு மூன்று வார்த்தைகள் கூட அவன் முன் சேர்ந்து பேசியிராதவள் நீதிபதி போல நின்று விசாரணை தொனியில் இவ்வளவு கேட்டது அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

“உன் மருமகள் கூட வாழ எனக்குப் பிடிக்கவில்லை.... அதனால் தான் செத்த மாதிரி நாடகமாடி போனேன்.,,,” சேகர் அலட்சியமாய் சொன்னான்.

“விவாகரத்து செய்திருக்கலாமே? உங்கள் காலம் எங்கள் காலம் போல அல்லவே?”

“விவாகரத்து செய்தால் அவளுக்குப் பணம் தர வேண்டும். எனக்கு அவளுக்கு ஒரு பைசா கொடுக்கவும் விருப்பமில்லை....”

“அவளைப் பிடிக்கவில்லை சரி. உன் மகன் என்ன செய்தான். நான் என்ன செய்தேன்.....?”

“அவள் வயிற்றில் பிறந்த அவனும் அவள் மாதிரி தான் இருந்தான்...”

“நான்....?”

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. மரகதம் பதில் எதிர்பார்த்து நின்றாள். பதில் வராமல் போகவே சொன்னாள். “சஹானா என்னை கூட வைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால், உன் மேல் இருக்கும் வெறுப்பை உன்னைப் பெற்ற என் மேல் காட்டி இருந்தால், நான் நடுத்தெருவில் பிச்சை அல்லவா எடுக்க வேண்டியிருந்திருக்கும்....”

“உனக்கு கை கால் எல்லாம் நன்றாகத் தானே இருந்தது. நாலு வீட்டில் வேலை செய்து பிழைத்திருக்கலாமே. இப்போதும் சரி, அப்போதும் சரி வீட்டு வேலை செய்கிறவர்களுக்கு நல்ல வருமானம் தானே”


வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த ஜானகிக்கு வினாடிக்கு வினாடி அதிர்ச்சியும், இரத்தக் கொதிப்பும் அதிகரித்துக் கொண்டே போனது. இவன் மகா அயோக்கியன், இந்தம்மாள் அக்‌ஷயின் பெரியம்மா அல்ல, இந்த அயோக்கியனைப் பெற்றவள், சஹானா ஓடிப்போகவில்லை, இவன் தான் ஓடிப்போனவன் என்கிற உண்மைகள் எல்லாம் அவளை அதிர வைத்துக் கொண்டிருந்தன. இவ்வளவு செய்து விட்டு இப்போதும் எப்படி கொடூரமாய் பேசுகிறான்....

மரகதம் மகனை இகழ்ச்சியுடன் பார்த்தபடி சொன்னாள். “சஹானா நல்லவள். என்னை அந்த நிலைமைக்கு விட்டு விடவில்லை. சரி நீ ஏன் திரும்பி வந்தாய்?”

“உன்னை ஒருநாள் வழியில் பார்த்தேன். பின்னாலேயே வந்து வீட்டைக் கண்டுபிடித்தேன். நான் போன பிறகு நீயும், உன் மருமகளும் எப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று பார்க்க வந்தேன். சரி நீ எதற்கு இப்போது வந்தாய்?”


”நீ போன பிறகு தான் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம் எனக்கு மகனாகவும், அவளுக்கு கணவனாகவும், வருணுக்கு அப்பாவாகவும் வந்தான். எங்களுக்கு சந்தோஷம்னா என்ன என்றே அதற்குப் பிறகு தான் தெரிய வந்தது. இதெல்லாம் நீ போனதால் தான் கிடைத்தது. அதனால உனக்கு நன்றி சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன்....”

”உன் பேரன் உயிர் ஊசலாடுது. அவளோட இன்னொரு பையன் காணோம். இப்பவும் இவ்வளவு திமிராய் பேசுகிற உனக்கு மூளை வேலை செய்யலைன்னு நினைக்கிறேன்....”

“என் பேரன் பிழைப்பான். என் இன்னொரு பேரன் திரும்பக் கிடைப்பான். இது வரைக்கும் எங்களைக் கைவிடாத கடவுள் இனியும் கைவிட மாட்டார். உன்னைப் பெற்றதைத் தவிர நான் எந்தப் பாவமும் செய்ததில்லை. அந்தப் பாவத்திற்கு பலனை நான் எப்பவோ அனுபவித்து முடித்தும் விட்டேன். என் மகனும் மருமகளும் எந்தப் பாவமுமே செய்யாதவர்கள். அதனால் சீக்கிரமே எல்லாம் சரியாகி நான், என் மகன், மருமகள், பேரன்கள் நன்றாகத் தான் இருப்போம். நீ தான் ஜாக்கிரதையாய் இருக்கணும். உனக்கு அனுபவிக்க நிறைய இருக்கு....”

சொல்லி விட்டு மரகதம் வெளியேறினாள். வெளியே சற்று தள்ளி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஜானகியை அவள் கவனிக்கவில்லை. பேரனுக்காக கந்தர்சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்து விட்டிருந்தாள்.

மரகதம் போனவுடன் ஜானகி ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தாள். சேகர் அவளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பேசியதைக் கேட்டிருப்பாளோ என்ற சந்தேகத்துடன் அவளை அவன் பார்த்தான். அவள் முகத்தைப் பார்த்தால் எல்லாவற்றையும்  கேட்டிருப்பது போலத்தான் தோன்றியது.

எப்போதும் மணிக்கணக்கில் பேசும் ஜானகி அந்த ஜந்து முன் அரை கணமும் நிற்கப் பிடிக்காததால் அந்த நேரத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் “த்தூ” என்று காரி அவன் முகத்தில் துப்பி விட்டுப் போனாள்.

(தொடரும்)

என்.கணேசன்