சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 8, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 115

பாம்பு ஏணி விளையாட்டு அமர்க்களமாகப் போய்க் கொண்டிருந்தது. ஏணியில் ஏறும் போது ஒரு சத்தம், பாம்பில் இறங்கும் போது ஒரு சத்தம் என்று கௌதம் ஆரம்பித்ததை போகப்போக டோர்ஜேயும் பின்பற்ற ஆரம்பித்தான். இரண்டிலுமே இருவரையும் புன்னகையுடன் மைத்ரேயன் ரசிப்பதை ஒற்றைக்கண் பிக்கு கவனித்தார். அதிகாலையிலும், இரவிலும் தியானம் செய்யும் மைத்ரேயன், இப்போது இவர்களுடன் விளையாடும் மைத்ரேயன்- இந்த இரண்டு நிலைகளில் தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்...

சமையல்காரன் சாதாரணமாக வேண்டா வெறுப்பாகத்தான் சமைப்பான். லீ க்யாங்கின் ஒற்றன் என்பதால் அவனை எதுவும் பிக்குவால் கேட்கவும் முடிந்ததில்லை. ஆனால் அவன் ஒரே நாளில் ஒரேயடியாக மாறி விட்டான். இரவு மைத்ரேயனின் தியானத்தின் போது விசித்து விசித்து அழுதவன் அதிகாலை மைத்ரேயன் தியானம் செய்யும் போதும் எழுந்து வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டான். எல்லோருக்கும் ருசியாய் சமைத்துப் போட்டான். சிறுவர்கள் விளையாடும் போது இடை இடையே சாப்பிட ஏதாவது செய்து கொடுத்தான். டோர்ஜே திகைப்புடன் அவனைப் பார்த்தான்.

கௌதமுக்கு அன்பாய் அவ்வப்போது ஏதாவது கொண்டு வந்து தரும் அந்த சமையல்காரனை மிகவும் பிடித்து விட்டது. மாமா என்று அன்பாக அழைக்க ஆரம்பித்தான். சமையல்காரனுக்கும் எப்போதும் உற்சாகமாக இருக்கும் அந்த சிறுவனை மிகவும் பிடித்து விட்டது. அவனுக்காக இந்திய வகைச் சமையலும் செய்து கொடுத்தான். ”மாமா நீங்களும் விளையாட வாங்க” என்று கௌதம் அழைக்க அவர்களுடன் அவனும் விளையாட சேர்ந்து கொண்டான்.

லீ க்யாங் போன் செய்து கேட்ட போது பையன்கள் சமர்த்தாக இருக்கிறார்கள், அவர்களால் ஒரு தொந்தரவும் இல்லை என்று அவன் சொன்னது ஒற்றைக்கண் பிக்குவுக்குக் கேட்டது. மனிதர்கள் எப்படி தலைகீழாய் மாறி விடுகிறார்கள் என்று அவர் வியந்தார். ‘சரியான மனிதர்களுடன் பழக நேரும் போது மற்றவர்களும் சரியாகி விடுகிறார்களோ!’

இரவு கௌதம் தூங்க ஆரம்பித்து மைத்ரேயன் தியானம் ஆரம்பிப்பதற்கு முன் டோர்ஜே தன் பலத்த சந்தேகத்தை மெல்லக் கேட்டான். “தியானத்திற்கு தம்மபதம், தாமரை சூத்திரம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையா?”

மைத்ரேயன் ஒரு கணம் அவனை மென்மையாகப் பார்த்து விட்டுச் சொன்னான். “அவை எல்லாம் தகவல்கள். நீ ஒரு ஊருக்குப் போகப் போகிறாய் என்று வைத்துக் கொள். அங்கு எந்த வழியாகப் போக வேண்டும், எப்படிப் போக வேண்டும், அங்கே என்னவெல்லாம் இருக்கும் என்ற தகவல்கள் அவசியம் இல்லை என்று சொல்ல முடியாது. அவை நல்லது தான். அங்கே கண்டிப்பாகப் போக வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டி விடும். அதுவும் நல்லதே. ஆனால் அவை எதுவும் அந்த இடத்திற்குப் போய் நீயாய் நேரில் பார்ப்பதற்கும், உணர்வதற்கும் ஈடாகி விடாது. அதனால் போவதற்கு முன், அனுபவம் பெறுவதற்கு முன் உபயோகமாக இருக்கும் அவை நேரடி அனுபவம் பெற்ற பின் அவசியமில்லை....”

டோர்ஜே அந்த பதிலில் ஒன்றிப் போய் சிந்திக்க, ஒற்றைக்கண் பிக்கு பிரமித்துப் போனார். என்ன அழகான பதில்.....


மைத்ரேயன் தொடர்ந்து சொன்னான். ”பெரும்பாலான மனிதர்கள் தகவல்களைச் சேர்த்துக் கொண்டே போகிறார்கள். அதிலேயே அனைத்தும் அறிந்து விட்டதாய் ஒரு மாயையில் சிக்கி விடுகிறார்கள். அது சுய ஏமாற்று வேலை. அறிந்தவை அனைத்தும் அனுபவமாகி விடாது. அறிந்ததை வாழ்க்கையில் பயன்படுத்தும் போது தான் அது ஞானமாகிறது. அதனால் அறிந்ததை நன்றாக சிந்தி. அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் சிறிதாவது பயணித்துப் பார். அறிதலின் உண்மையான பயன் அது தான். மற்றதெல்லாம் பிரமையே....”

மைத்ரேயன் பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டான். அவன் வலது பாத அடியில் தர்மசக்கரம் பொன்னிறத்தில் ஒரு முறை சுழன்று நின்றது. பார்த்ததும் ஒற்றைக்கண் பிக்கு கண்களில் நீர் பெருக மண்டியிட்டு அவனை வணங்கினார். டோர்ஜேயும் பேருண்மை ஒன்றின் தரிசனமும் உபதேசமும் கிடைத்தவனாய் தானும் மண்டியிட்டு வணங்கினான்



று நாள் அதிகாலை அந்த வீட்டுக்குக் காவல் இருந்தவர்கள் அவசர அவசரமாய் கிளம்பிப் போனார்கள். மைத்ரேயன் அந்த நேரத்தில் தியானத்தில் இருந்தான். ஒற்றைக்கண் பிக்கு ஜீப்கள் கிளம்பும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தார். ஜீப்களில் போனது காவல் ஆட்கள் தான். என்ன ஆயிற்று என்று திகைத்தவராய் மெல்ல கதவைத் திறந்தும் பார்த்தார். ஒருவர் கூட இப்போது வெளிக்காவலில் இல்லை. கதவை மறுபடியும் சாத்திக் கொண்டார்.

பத்தாவது நிமிடம் வேறு இரண்டு கார்கள் வந்து வெளியே நின்றன. முதல் காரிலிருந்து கருப்பு நிற ஆடைகள் அணிந்த நான்கு பேர் துப்பாக்கிகளோடு இறங்கினார்கள். இரண்டாவது காரில் இருந்து மாரா கம்பீரமாக இறங்கினான். அவனும் முழுமையான கருப்பாடைகளிலேயே இருந்தான். இரண்டு துப்பாக்கி வீரர்கள் முன்னேயும், இரண்டு துப்பாக்கி வீரர்கள் பின்னேயும் வர, அமைதியாக அவன் படிகளேறினான். அவன் யாரென்று உணர்ந்த ஒற்றைக்கண் பிக்குவின் சப்தநாடியும் ஒடுங்கியது. இது வரை பொய், கற்பனை என்று அவர் எண்ணியிருந்த ஒரு மனிதன், சைத்தான், நிஜமாகவே நேரில் வருவது அவருக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

அவர் ஓடிப்போய் மைத்ரேயனை உலுக்கினார். “மைத்ரேயரே, மாரா... வந்திருக்கிறான்....”

மைத்ரேயன் கண்களைத் திறந்தான். அவர் அவன் பின் ஒடுங்கினார்.

கதவு பலமாகத் தட்டப்பட்டது. சமையல்காரன் தூக்கக்கலக்கத்தில் சென்று கதவைத் திறந்தான். அவன் காவல்வீரர்கள் சென்று விட்டதையோ வேறு ஆட்கள் வந்து விட்டதையோ அறிந்திருக்கவில்லை. கதவைத் திறந்தவன் தலையில் ஓங்கி ஒரு அடி விழ அவன் வாசலிலேயே மயக்கமாய் விழுந்தான். இரண்டு துப்பாக்கி வீரர்களும், மாராவும் உள்ளே நுழைந்தார்கள்.

மைத்ரேயன் அமைதியாக முன்னறைக்கு வந்தான். சில வினாடிகள் மாராவும் மைத்ரேயனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றார்கள். அந்த நேரத்தில் பின்னால் வந்த துப்பாக்கி வீரர்கள் இருவரும் உள் அறையில் உறங்கிக் கொண்டிருந்த டோர்ஜேயையும், கௌதமையும் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையால் மயங்க வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். ஒற்றைக்கண் பிக்குவுக்கு அவர்கள் டோர்ஜேயைத் தூக்கிச் செல்வது சகிக்க முடியாததாக இருந்தது. பதற்றத்துடன் அவர் மாராவிடம் சொன்னார். “அவன்.... டோர்ஜே சம்பந்தமில்லாதவன்.”

மாரா அமைதியாகச் சொன்னான். “தெரியும் பிக்குவே”. கௌதமையும், டோர்ஜேயையும் தூக்கிக் கொண்டு இருவர் வெளியேறிய போது மாரா மைத்ரேயனிடம் ஏதாவது உணர்ச்சி தென்படுகிறதா என்று பார்த்தான். இல்லை. புன்னகையுடன மைத்ரேயனைக் கேட்டான். “உனக்கு மயக்க மருந்து தேவை இல்லை அல்லவா?”

அமைதியாக மைத்ரேயன் சொன்னான். “தேவையில்லை.” பின் அவன் ஒற்றைக்கண் பிக்குவைத் திரும்பிப் பார்த்து விட்டு மென்மையாகச் சொன்னான். “டோர்ஜேக்கு எந்த ஆபத்தும் வராது. பயப்படாதீர்கள் பிக்குவே”

மைத்ரேயன் அமைதி மாறாமல் வெளியேற மாரா அவன் அமைதியை ரசித்தபடியே பின்னால் சென்றான். துப்பாக்கி வீரர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். கார்கள் அருகே வந்த பின் மைத்ரேயன் நின்றான். மாரா மைத்ரேயனிடம் இரண்டாம் காரைக் காட்டினான். மைத்ரேயன் அதில் ஏறிக்கொள்ள மாராவும் ஏறி அவன் அருகில் அமர்ந்து கொண்டான். கார்கள் வேகமாகக் கிளம்பிச் சென்றன.

ஒற்றைக்கண் பிக்கு சிலை போல் சிறிது நேரம் நின்றிருந்தார். பின் அதிர்ச்சியில் இருந்து மீண்டவர் கீழே விழுந்து கிடக்கும் சமையல்காரனைப் பார்த்தார். அவன் இன்னமும் மயக்கத்தில் இருந்து மீளவில்லை. தட்டுத் தடுமாறிச் சென்று அலைபேசியை எடுத்து லீ க்யாங்குக்குப் போன் செய்தார்.


லீ க்யாங் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அலைபேசி அடிக்கவே கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து கடிகாரம் பார்த்தான். மணி ஆறே கால். அலைபேசி எடுத்துச் சொன்னான். “ஹலோ”

ஒற்றைக்கண் பிக்கு பதற்றமும் கலக்கமுமாகப் பேசினார். “மைத்ரேயரைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்.... கூடவே டோர்ஜேவையும், அந்த இந்தியப்பையனையும்.....”

“என்ன பிக்குவே உளறுகிறீர்? சமையல்காரன் உங்களுக்கும் ஊற்றிக் கொடுத்து விட்டானா?”

“இல்லை சத்தியமாக”

ஆரம்பத்தில் லீ க்யாங் அமானுஷ்யன் தான் வந்து மகனையும், மைத்ரேயனையும் மீட்டுக் கொண்டு போய் விட்டதாக நினைத்தான். அவனால் தான் அசாதாரணமாக இப்படி எல்லாம் செய்ய முடியும்.”

“காவலில் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களில் ஒருவனிடம் போனைக் கொடுங்கள்”

“அவர்கள் யாரும் இல்லை. அவர்கள் முன்பே போய் விட்டார்கள்”

லீ க்யாங்குக்கு ஒற்றைக்கண் பிக்குவின் மேல் கோபம் வந்தது. “காலையிலேயே என்னிடம் விளையாடாதீர்கள் பிக்குவே. வாழ்நாள் எல்லாம் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.”

“சத்தியமாக விளையாடவில்லை”

“சரி சமையல்காரனிடம் போனைக் கொடுங்கள்”

“அவனை அவர்கள் அடித்துப் போட்டு மயக்கமாகக் கிடக்கிறான்...”

லீ க்யாங் ஒற்றைக்கண் பிக்குவுக்கு புத்தி பேதலித்து விட்டது என்றே எண்ணினான். கற்பனைக்கு ஒரு எல்லை இல்லையா? மெல்லச் சொன்னான். “சரி நடந்ததைச் சொல்லுங்கள்”

அவர் சொல்ல ஆரம்பித்தார். மாராவின் வரவைப் பற்றி அவர் சொல்லும் போதே அவர் உண்மையைத் தான் சொல்கிறார் என்பது புரிய ஆரம்பித்து விட்டது.

கோபம் உள்ளே எரிமலையாய் கொதிக்க, தான் காவலுக்கு ஏற்பாடு செய்திருந்த காவலர்களின் தலைவனுக்குப் போன் செய்தான்.

“காவலில் இருந்து யாரைக் கேட்டு விடுபட்டுக் கொண்டீர்கள்?” நேரடியாய் லீ க்யாங் கேட்டான்.

நடுங்கியபடி பதில் வந்தது. “உளவுத்துறை தலைவரே தான் அப்படி ஆணையிட்டார்..... “

தலையில் இடி விழுந்தது போல் லீ க்யாங் உணர்ந்தான். அவனுக்கும் மேலதிகாரியான உளவுத்துறை தலைவரே கூடக் கருப்பு ஆடா? அதனால் தான் இன்னொரு கருப்பு ஆடு பற்றித் தகவல் தெரிந்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறாரா?  அவனுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.


(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

4 comments:

  1. அர்ஜுன்September 8, 2016 at 6:29 PM

    மைத்ரேயனின் பேச்சு க்ளாசிக் சார்.

    ReplyDelete
  2. வரதராஜன்September 9, 2016 at 7:43 PM

    செம அழுத்தம் மைத்ரேயன். கலக்குகிறான். அமானுஷ்யனுக்கு இனையாக மைத்ரேயனும் என் மனதில் இடம் பிடித்து விட்டான்.

    ReplyDelete
  3. when you are with the one who is correct, you are becoming the correct one...Yes this is true one. The only difference is whether we are looking for someone to be correct or are we trying to be correct!!!!

    ReplyDelete