சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 19, 2017

இருவேறு உலகம் – 13


த்மாவதியின் வார்த்தைகளும், துக்கமும், கமலக்கண்ணனையும், உதயையும் உடனடியாகப் பாதித்தன. கமலக்கண்ணன் அழுது விடக்கூடாது என்று கடுமையாக முயற்சி செய்து அதைச் சாதிக்க அவள் பக்கம் திரும்பாமலேயே இருந்தார். உதய் தன் தாயின் துக்கத்தில் தானும் லேசாகக் கண் கலங்கினான். தாயைத் தோளாடு அணைத்துக் கொண்டபடி சொன்னான்.  அழாதேம்மா. தம்பிக்கு எதுவும் ஆகியிருக்காது. வந்துடுவான்..

செந்தில்நாதனை அந்தக் காட்சி நெகிழ வைத்தது. அந்தத் தாயின் மன ஆழத்திலிருந்து வந்த யதார்த்த வார்த்தைகள், அந்தப் பெற்றோரின் துக்கம், அந்தத் தமையனின் பாசமான வார்த்தைகள் எல்லாம் அன்பான குடும்பம் ஒன்றின் ஆத்மார்த்தமான வெளிப்பாடாக இருந்தன. காட்டான் என்று நினைத்த அந்த இளைஞன், நினைத்த அளவு காட்டான் அல்ல என்று இப்போது தோன்றியது.

பத்மாவதி சிறிது அமைதியடைந்தாள்.  கண்களைத் துடைத்துக் கொண்டாள்.  கமலக்கண்ணன் செந்தில்நாதனை ‘தொடருங்கள்என்பது போல் பார்த்தார்.

“சார், தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா?செந்தில்நாதன் கேட்டார்.

இல்லை”  கமலக்கண்ணன் யோசிக்காமலேயே சொன்னார். செந்தில்நாதனுக்கு அவர் யோசித்துச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

அவர் மெல்லக் கேட்டார். “உங்க நம்பிக்கைக்குப் பாத்திரமா சில காலம் கூட நெருக்கமா இருந்து பிறகு விலகிப் போன உதவியாளர்கள், வேலைக்காரர்கள், கட்சிக்காரர்கள் யாராவது....?

கமலக்கண்ணன் இல்லையென்று தலையசைத்தார்.  அடிமட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்திருந்த கமலக்கண்ணன் நெருக்கமாகத் தன்னுடன் இருந்தவர்களை நன்றாகவே நடத்தினார். கோபப்படுவாரேயொழிய அவமரியாதையாக யாரையும் நடத்தியதில்லை. கொடுக்கும் விஷயத்திலும் தாராளமாகவே அவர்களுடன் நடந்து கொண்டார். அதனால் நெருங்கியிருந்த மனிதர்கள் விலகிப் போகும் சந்தர்ப்பங்கள் வந்ததில்லை.

செந்தில்நாதன் உதயைப் பார்த்தார். அவனும் தந்தை சொல்வது சரியே என்பது போலத் தலையசைத்தான்.

“க்ரிஷ் அந்த மலைக்கு ஏன் போனார்?

கமலக்கண்ணன் என்ன சொல்வதென்று தர்மசங்கடத்துடன் யோசித்தார். பின் வெளிப்படையாகவே சொன்னார். “அவன் எப்பவுமே எதைப்பத்தியாவது ஆராய்ச்சி செஞ்சுகிட்டோ, படிச்சுகிட்டோ இருப்பான்..... அந்த மலைக்குப் போறதும் அந்த மாதிரி ஏதாவதா தான் இருக்கும்னு நினைக்கிறேன்... நாங்க அவன் கிட்ட எதையும் கேக்கறதில்லை.... அவன் சொன்னாலும் எங்களுக்குப் புரியாது....

உனக்கு ஏதாவது தெரியுமா என்பது போல் செந்தில்நாதன் உதயைப் பார்த்தார். உதய் தங்கள் நிலையை சுருக்கமாகச் சொன்னான். “எப்பவாவது எதாவது வித்தியாசமா செஞ்சா கேட்டு தெரிஞ்சுக்க நமக்கு ஆர்வமிருக்கும்.... செய்யறது எல்லாமே வித்தியாசமா இருந்தா என்ன செய்ய முடியும்?  ஆரம்பத்துல ஒன்னு ரெண்டு விஷயத்துல நான் அவனை அப்படிக் கேட்டிருக்கேன். அவன் சொன்னது சுத்தமா எனக்குப் புரியலை. புரியலைன்னவுடனே அவன் விளக்க முயற்சி செஞ்சான். ஆனா அதுவும் தலைசுத்த வெக்கற அளவுல குழப்புச்சு. அதனால கேக்கறதயே விட்டுட்டேன்...

செந்தில்நாதன் பத்மாவதியைப் பார்த்தார். பத்மாவதி சொன்னாள். “படிச்சவன் இவனுக்கே புரியலைன்னா எனக்கு என்ன புரியும். நானும் எதயும் கேட்டுக்கறதில்லை. இந்த மலைப்பக்கம் பேய் உலாவுதுன்னு கேள்விப்பட்டதால அவன் கிட்ட “பேய் இருக்கற இடம்னு பேசிகிட்டாங்களேடா, ஜாக்கிரதையாய் இருன்னு மட்டும் சொன்னேன். அவன் அதுக்கு அப்படி அங்கே பேயும் இருந்துச்சுன்னா ரொம்ப நல்லதும்மா, வாழ்க்கைல ஒரு பேயையாவது ஆராய்ச்சி செஞ்சுடணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னான்....

செந்தில்நாதன் அவள் சொன்னதில் “பேயும் இருந்துச்சுன்னாஎன்ற வாசகத்தை மனதில் அடிக்கோடிட்டார். அப்படியானால் அங்கே வேறெதோ இருந்திருக்கிறது. அதை ஆராய்ச்சி செய்யப் போயிருக்கிறான்....

“அவர் அந்த மலைக்கு அடிக்கடி போவாரோ?

பத்மாவதி சொன்னாள். “அமாவாசை அமாவாசைக்குப் போவான்....சொல்லும் போதே இன்னொரு தகவலும் அவளுக்கு நினைவுக்கு  வர உடனே மூத்த மகன் பக்கம் திரும்பிக் கேட்டாள். “ஏண்டா அங்கே அமாவாசையப்ப தானே பேய்கள் உலாவும்னு பேசிகிட்டாங்க.... அவனை பேய் ஏதாவது செய்துருக்குமோ?

உதய் முகத்தில் குறும்புப் புன்னகை பூத்தது. செந்தில்நாதனை ஒருகணம் அவன் மறந்தான். “ஏதாவது செய்துருக்குமோன்னா?

“அவனை மயக்கமடைய வச்சு எங்கயாவது எடுத்துட்டு போயிருக்குமோ

“அப்படி தூக்கிட்டுப் போயிருந்துச்சுன்னா, உன் பையனுக்கு மயக்கம் தெளிஞ்சவுடனே கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாம அலறியடிச்சுட்டு ஓடியிருக்கும்.....

சின்னதாய் அவள் முகத்திலும் புன்னகை படர மூத்த மகனைப் பொய்க்கோபத்துடன் பார்த்தாள்.

சற்று முன் கண்ணீருடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் இப்போது ஒரு சிறு கணம் அதை மறந்து அளவளாவியதை செந்தில்நாதனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. நல்ல அன்பான மனிதர்கள் தான்.....

அவர் இருப்பதை உடனே உணர்ந்த உதய் மெல்ல “சாரிஎன்றான்.

முதல் முறையாக அவனைப் பார்த்து செந்தில்நாதன் புன்னகைத்தார். “பரவாயில்லை... எப்பவுமே எந்த நேரத்துல அங்கே போய் எந்த நேரத்துல திரும்பி வருவார்?

“மதியமே வீட்டுல இருந்து கிளம்பிடுவான். மறு நாள் காலைல ஒன்பது மணிக்கெல்லாம் வந்துடுவான்....பத்மாவதி சொன்னாள்.

சில வினாடிகள் யோசித்து விட்டு செந்தில்நாதன் கேட்டார். க்ரிஷோட நெருங்கிய நண்பர்கள் கிட்ட தன் ஆராய்ச்சியை அவர் பகிர்ந்திருக்கலாமில்லையா? அவரோட நெருங்கிய நண்பர்கள் பேரை சொல்லுங்களேன்....

மணீஷும், ஹரிணியும் தான் அவனோட நெருக்கமான நண்பர்கள். ரெண்டு பேரும் அவனோட க்ளாஸ்மேட்ஸ். ஐஐடில தான் படிக்கறாங்கஉதய் சொன்னான்.

கமலக்கண்ணன் சொன்னார். “மணீஷ் என் நண்பர் மகன் தான்.... அமைச்சர் மாணிக்கத்தோட மகன்... நல்ல பையன்....


ணீஷிடம் பஞ்சுத்தலையர் சொல்லிக் கொண்டிருந்தார். செந்தில்நாதன் அடுத்ததா உன் கிட்ட தான் பேச வருவான். ஆள் விவகாரமானவன். அவன் கிட்ட ஜாக்கிரதையா இரு. கவனமா பேசு.....

சரியென்று மணீஷ் தலையசைத்தான்.

“உன் அப்பா சிங்கப்பூர்ல இருந்து எப்ப வர்றான்?....

“நாளைக்கு மத்தியானம் வர்றார்...

“க்ரிஷ் விவகாரம் பத்தி என்ன சொன்னான்...?

“நீங்க சொன்னபடி தான் அவரும் என்னை ஜாக்கிரதையா இருக்கச் சொன்னார்.... அவருக்கும் செந்தில்நாதனைப் பிடிக்கலை....

“வேறெதுவும் சொல்லலையா?

இல்லை என்று தலையசைத்த மணீஷ் தன் தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றத்தை அறிவான். சிங்கப்பூரிலிருந்து வரும் அவர் விமானநிலையத்தில் இருந்து நேராக க்ரிஷ் வீட்டுக்குப் போய் அவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாக இருந்தது தான் அவர்களுடைய உண்மையான திட்டம். க்ரிஷின் திடீர் தலைமறைவு இப்போது எல்லாவற்றையும் மாற்றி விட்டது. முந்தைய திட்டம் நிறைவேறியிருந்தால் க்ரிஷின் மறைவு பாம்பு கடித்துச் செத்த மரணமாய் இருந்திருக்கும். யாரும் எந்தக் கேள்வியும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இப்போதோ காணாமல் போன விவகாரமானதால் அவனை நெருங்கியவர்களை எல்லாம் விசாரிக்கும் நிலைமை வந்து விட்டது. நாளையே செந்தில்நாதன் அவனைத் தேடி வரலாம்.... திட்டப்படி சாகாத க்ரிஷ் மேல் அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

பஞ்சுத்தலையர் கொட்டாவி விட்டார். நேற்றிரவெல்லாம் சரியாகத் தூங்காமல் க்ரிஷின் மரணச்செய்திக்காக காத்திருந்தது இப்போது அவர் கண்களைச் சொருக வைத்தது.  அதைக் கவனித்த மணீஷ் கிளம்பினான். “சரி நீங்க தூங்குங்க. நாளைக்குப் பார்க்கலாம்.

“சாயங்காலம் வர்றேன். அதுக்கு முன்னாடியே செந்தில்நாதன் வந்தான்னா கவனமா பேசு.....

சொன்னதையே மனுஷன் எத்தன தடவை சொல்வார். வயசானாலே இந்த மாதிரி பிரச்னை எல்லாம் வந்துடுமோஎன்று நினைத்தவனாக மணீஷ் அங்கிருந்து கிளம்பினான்.

அவர் அவன் போனதும் வெளிக்கதவைத் தாளிட்டுக் கொண்டு உறங்கப் போனார். நேற்றிரவும் தூங்காத பலனாய், படுக்கையில் விழுந்தவுடனேயே உறக்கம் அவரைத் தழுவிக் கொண்டது. எத்தனை நேரம் உறங்கியிருப்பார் என்பது அவருக்குத் தெரியவில்லை. மெல்ல இசைக்க ஆரம்பித்த அவருடைய செல்போன் கடைசியில் கத்த ஆரம்பித்த போது தான் எங்கேயோ ஒலிப்பது போல் அவருக்குக் கேட்டது.

உறக்கம் முழுமையாகக் கலையாதவராக கண்களை மூடிக் கொண்டே அவர் கைகளால் துழாவி செல்போனை எடுத்துப் பேசினார்.  ஹலோ

செல்போனில் அமானுஷ்யமான பேய்க்காற்று ஒலித்ததைக் கேட்ட போது அவர் தூக்கம் முழுவதும் பறந்து போனது. “எவண்டாவன் எங்கிட்டயே வெளையாடறது..... முடிஞ்சா நேர்ல வாடா.....அவர் கத்தினார்.

மறுமுனையில் பதில் இல்லை. அவர் ஆத்திரத்துடன் சொன்னார். நீ வரவேண்டாண்டா. நானே வர்றேன். உனக்கு இருக்குடா சங்கு

இணைப்பு துண்டிக்கப்பட்டது. பஞ்சுத்தலையர் முன்பே வாடகைக் கொலையாளியின் செல்போன் எங்கிருந்து பேசப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருந்த ஆளை உடனடியாகத் தொடர்பு கொண்டார்.


தொடரும்)

என்.கணேசன்

4 comments:

  1. க்ரிஷ் குடும்ப நெருக்கமும், பஞ்சுத்தலையர் டென்ஷனும் சூப்பர். ஆனா கூடவே தொடரும்னு போட்டு எங்களையும் டென்ஷன் பண்ணுவது தான் பிடிக்கவில்லை. (மனிதரில் எத்தனை நிறங்கள் படித்து முடித்து விட்டேன். சிவகாமி கேரக்டர் செம. க்ரேட்)

    ReplyDelete
  2. உங்கள் எல்லா கதையின் விசிறி நான். சூப்பர் அப்டேட். எப்போது அடுத்த அப்டேட் என்று காத்திருக்கிறேன். கிரிஷுக்கு கூட இருந்தே குழி பறிக்கும் நண்பன்.

    ReplyDelete