சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 26, 2017

இருவேறு உலகம் – 14


க்ரிஷோட அந்த ரெண்டு நண்பர்களும் அவர் செய்யற ஆராய்ச்சில எப்பவாவது கலந்துக்கறதுண்டா செந்தில்நாதன் அவர்களைக் கேட்டார்.

இல்லையென மூன்று பேரும் ஒருசேரத் தலையசைத்தார்கள்.

ஆனா அவங்களுக்கு க்ரிஷோட ஆராய்ச்சிகள் பத்தி உங்கள விட அதிகமா தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. இல்லையா?

ஆமென்று அவர்கள் தலையசைத்தார்கள்.

செந்தில்நாதன் சொன்னார். “எனக்கு க்ரிஷோட ரூம், அவரோட கம்ப்யூட்டர் எல்லாம் செக் பண்ணனும்....

அவரை அழைத்துப் போக உதய் எழுந்தான். அவரும் எழுந்து அவனைப் பின் தொடர்ந்தார். போகும் போது அவனைக் கேட்டார். “அவர் கம்ப்யூட்டர் பாஸ்வர்டு உங்களுக்குத் தெரியுமா?

“எல்லாமே ஓப்பனா தான் இருக்கும். எதையும் அவன் வெளிப்படையா தான் வச்சிருப்பான்.....உதய் சொன்னான்.

க்ரிஷின் அறை ஒரு பக்கம் புத்தகங்களால் நிறைந்திருந்தது. பல அலமாரிகள், அதில் ஏராளமான புத்தகங்கள்.... ஆனால் எல்லாம் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் வைக்கப்பட்டிருந்தன. அந்த ஒழுங்கும், நேர்த்தியும், கட்டில், கம்ப்யூட்டர் டேபிள், சில உடற்பயிற்சிக் கருவிகள் என அறை முழுவதும் எல்லாவற்றிலும் தெரிந்தது. பெரும்பாலான அறிவுஜீவிகள் அப்படி இருப்பதில்லை என்பதை செந்தில்நாதன் கண்கூடாகப் பார்த்திருக்கிறார். இதிலும் இவன் வித்தியாசமானவன் தான்....

செந்தில் நாதன் முதலில் புத்தக அலமாரியருகே போனார். நாவல்கள், இலக்கியங்கள், வானவியல், உளவியல், தத்துவம், வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சி, ஆழ்மனசக்தி, ஆன்மீகம், மாந்திரீகம், உடலியல், அறிவியல் என பல பிரிவுகளில் நூல்கள் நூலகத்தில் வைத்திருப்பது போல் வைக்கப்பட்டிருந்தன. அவர் சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தார். அவற்றில் எல்லாம் பல பக்கங்களில் பென்சிலில் அவன் எழுதியிருந்த குறிப்புகள் பக்கவாட்டில் தெரிந்தன. படிக்காமல் வைத்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள் எதுவும் இல்லை போல் தெரிந்தது.

அவர் திரும்பவும் அலமாரியில் வைத்த புத்தகங்கள் சில வரிசைக்கு வெளியில் தெரிய உதய் உடனே அதைச் சரிப்படுத்தினான். அதைக் கவனித்த செந்தில்நாதனிடம் மெல்லச் சொன்னான். “அவன் வந்து பாத்தா திட்டுவான்... நான் பல தடவை அவன் கிட்ட திட்டு வாங்கியிருக்கேன்....

அவர் அதற்குப் பின் எடுத்த புத்தகங்களைக் கவனமாக வைத்தார். பின் மெல்லக் கேட்டார். “நீங்களும் இப்படி தான் உங்க ரூமை வச்சிருப்பீங்களா?

அவனுக்கு குபுக்கென்று சிரிப்பு வந்தது. “ஐயோ, என் ரூம்ல எதுவுமே ஒழுங்கா இருக்காது. அம்மா அப்பப்ப வந்து ஒழுங்குபடுத்திட்டு போவாங்க. ஆனா கொஞ்ச நேரத்துலயே பழையபடி மாறிடும்...

அவன் வெளிப்படையாகச் சொன்ன விதம் அவரைக் கவர்ந்தது. அப்படிப்பட்டவன் இங்கு தம்பியின் அலமாரியில் சற்று விலகிய நிலையில் இருக்கும் புத்தகத்தைக் கூடச் சரிசெய்ததும், தம்பி பார்த்தால் திட்டுவான் என்று சொன்னதும் அவனை வித்தியாசமான கோணத்தில் அவருக்குக் காட்டியது....

க்ரிஷின் மேசையில் ஏதாவது புத்தகங்கள் இருக்கிறதா என்று செந்தில்நாதன் பார்த்தார். இல்லை. இருந்திருந்தால் கடைசியாக அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகம் எது என்பதைத் தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். அவர் உதயிடம் சொன்னார். “உங்க தம்பிக்கு நிறைய விஷயங்கள்ல ஆர்வம் இருந்திருக்கு....

அவன் பெருமையுடன் சொன்னான். “ஆமா.... சில சமயம் கல்லு, சில சமயம் ஓலைச்சுவடி, சில சமயம் ஆளுங்க, சில சமயம் ஆகாயம்னு அவனுக்கு சாதாரணத்துல இருந்து பெரிய விஷயங்க வரைக்கும் உலகத்துல எத்தனையோ விஷயங்க பிரமிப்பானதா இருந்துச்சு. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும், ஆழமா புரிஞ்சுக்கணும்னு நினைப்பான்.... 

க்ரிஷ் பற்றிய அந்தக் கருத்தை அவனைப் பற்றிப் படிக்கையிலேயே உணர்ந்திருந்த செந்தில்நாதன் தலையசைத்து விட்டு கம்ப்யூட்டரை ஆன் செய்றீங்களா?” என்றார்.

உதய் கம்ப்யூட்டரை ஆன் செய்தான். கம்ப்யூட்டர் திரையில் கண்ணாடி அணிந்திருந்த ஒரு அழகான பெண் தெரிந்தாள்...... கண்களில் புத்திசாலித்தனம் தெரிந்தது. இது யார்?என்று செந்தில்நாதன் கேட்க உதய் “இது தான் ஹரிணிஎன்றான்.

அவள் தோழி மட்டுல்ல சற்று அதிகப்படியாகவும் இருக்கலாம் என்று செந்தில்நாதனுக்குத் தோன்றியது. ஆனால் அதை அவர் கேட்கவில்லை. அவர் நாற்காலியில் அமர்ந்து கம்ப்யூட்டரில் தனக்கு ஏதாவது தகவல்கள் கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்.

ஹரிணியின் புகைப்படத்தை தம்பியின் டெஸ்க்டாப்பிலேயே பார்த்த உதய் மனதை சின்னதாய் ஒரு சோகம் சூழ்ந்தது. முதலில் எல்லாம் அடிக்கடி வரும் அவள் கடந்த மூன்று மாதங்களாக வருவதில்லை...

க்ரிஷ் அவளைக் காதலிப்பது அவனுக்குத் தெரியும். காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஒரே ஒருத்தியோடு மட்டும் ஏற்படும் ஆத்மார்த்தமான உணர்வு என்று நம்புபவன் க்ரிஷ். அவளோடு இருக்கிற போதெல்லாம் க்ரிஷிடம் கூடுதல் பிரகாசம் தெரிவதாக உதய்க்குத் தோன்றும். அவளிடமும் அதே பிரதிபலிப்பை அவன் பார்த்திருக்கிறான்.  ஒரு முறை இதே அறையில் இருவரும் மிக நெருக்கமாக இருந்த காதல் தருணத்தை உதய் தற்செயலாகப் பார்த்து விட்டு பல நாட்கள் தம்பியைச் சீண்டி இருக்கிறான். “டேய் எத்தனை தெரிஞ்சு என்ன பிரயோஜனம். சிலதை எல்லாம் செய்யறதுக்கு முன்னாடி ரூம் கதவ தாள் போட்டுக்கணும்கிற சின்ன விஷயம் கூட உனக்குத் தெரியலையே”.

தம்பியின் வெட்கமும், முகச்சிவப்பும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடிக்க வரும் தம்பியிடமிருந்து விலகி ஓடி விடுவான். எதிலும் தம்பியிடம் திருப்பிப் பேச முடியாத அவனுக்குக் கிடைத்த இந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தை அவன் வீணாக்கவில்லை. க்ரிஷ் அவனிடம் பதில் பேச முடியாமல், திட்ட முடியாமல் தர்மசங்கடப்படும் ஒரே விஷயம் அது தான். எனவே உதய்  பெற்றோர் இருக்கையிலும் ஜாடை மாடையாக இதையே  சொல்லித் தம்பியின் வெட்கத்தையும், கோபத்தையும் ரசித்திருக்கிறான். பெற்றோர் என்ன என்று கேட்கும் போது வேறெதோ கதை சொல்லி சமாளித்து இருக்கிறான்...

இப்போது ஏனோ அந்த நினைவுகள் மனதில் கனக்கின்றன.



ஞ்சுத் தலையருக்கு பிறகு தூக்கம் வரவேயில்லை. அவர் போன் செய்து நள்ளிரவிலேயே அந்த சுந்தரத்திடம் எங்கிருந்து போன் வந்தது என்று கண்டுபிடித்துச் சொல்லச் சொல்லியிருந்தாலும் அவன் மறு நாள் காலையில் தான் கண்டுபிடித்துச் சொல்ல முடியும் என்று தன் நிலையை மிகவும் பணிவாகச் சொல்லியிருந்தான்.

நள்ளிரவில் அவன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும் அவருக்கு அவன் மேல் கோபம் வந்தது. “காசை வீசினாலும் சில வேலைகள் வேகமா நடக்க மாட்டேங்குது....என்று மனம் நொந்தவர் எங்கிருந்து யார் இந்த சதிவேலையைச் செய்திருக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார். மணீஷ் சொன்னது போல எதோ ஒரு புறம்போக்கு அந்த மலை மேல் இருந்திருக்க வேண்டும். அவன் தான் அந்த வாடகைக் கொலையாளி மரணத்திற்கும் காரணமாய் இருந்திருக்க வேண்டும். க்ரிஷின் பிணத்தை ஒளித்து வைத்து விளையாடுகிறான். ஒரு வேளை அந்தச் சனியன் வீடியோ கூட எடுத்து வைத்திருக்கலாம்.....

திடீரென்று இப்படிப் போன அவருடைய எண்ணப் போக்கு அவரையே பயமுறுத்தியது. “கற்பனைல மணீஷ மிஞ்சுடுவோம் போல இருக்கே.... ச்சேஎன்று தன்னையே கண்டித்துக் கொண்டவர் அவன் யாராக இருந்தாலும் அவனை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அந்த ஆள் இன்னும் அந்தப் பகுதியிலிருந்து தான் போன் செய்கிறானா, இல்லை அந்த அமானுஷ்யப் பேய்க்காற்றை எதிலாவது பதிவு செய்து வைத்துக் கொண்டு பயமுறுத்துவதற்காக, போன் பேசும் போது போட்டு விடுகிறானா என்று தெரியவில்லை.

பணம் பிடுங்கறதுக்காக என்கிட்ட விளையாடறியா நாயே. உனக்கு நான் யாருன்னு காட்டறேன் இரு....என்று முகம் தெரியாத அவனிடம் மனதில் அடிக்கடி சொல்லிக் கொண்டார்.

அவர் நிலைமையைப் பற்றிக் கவலைப்படாமல் நிதானமாக நகர்ந்தது காலம். ஒருவழியாக விடிந்தது. காலையில் மணீஷிடமும் அவர் போன் செய்து முந்தைய இரவு வந்த அந்தப் போன்கால் பற்றித் தெரிவித்தார். அவன் சிறிது நேரத்தில் அங்கு வந்து விட்டான். இருவரும் தங்கள் யூகங்களைப் பகிர்ந்து கொண்டு தாங்களே சிறிது பயப்பட்டார்கள்.

ஒருவழியாக அவர்கள் இருவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த சுந்தரத்தின் போன் கால் வந்தது. உடனே ஸ்பீக்கரை அழுத்தி விட்டு பஞ்சுத்தலையர் பேசினார். “ஹலோ

“ஐயா அவன் உங்க வீட்டு ஏரியால இருந்து தான் போன் பண்ணிருக்கான்என்று சொன்னான். பஞ்சுத்தலையருக்கு ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தாலும் மூளை வேலை செய்வதை நிறுத்தவில்லை.

“அவன் எனக்குப் போன் செஞ்ச மாதிரி வேற யாருக்காவது போன் செஞ்சிருக்கானா? இல்லை வேற யாராவது அந்த நம்பருக்குப் போன் செஞ்சு பேசி இருக்காங்களா?

இல்லைங்க ஐயா. வேற யார் கிட்டயும் அந்த ஆள் பேசல. அதே மாதிரி வேறெந்த காலையும் அந்த ஆள் அட்டெண்ட் பண்ணல

மணீஷும் பஞ்சுத்தலையரும் கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்  

5 comments:

  1. சூப்பராக போகிறது. உதய் கேரக்டரின் குறும்பும் பாசமும் ரசித்தேன். பஞ்சுத்தலையருக்கு ரத்த அழுத்தம் எகிறுதோ இல்லையோ எனக்கு நீங்கள் தொடரும் போடும் இடம் வருகிற போது எகிறுகிறது. அடுத்த வியாழனுக்கு வெய்ட்டிங்.

    ReplyDelete
  2. Sir, It's marvelous

    ReplyDelete
  3. சீட் நுனிக்கே வந்து விட்டேன் :) .. வியாழன் to வியாழன் பொறுமையாக காத்திருப்பது தான் கஷ்டம்

    ReplyDelete