சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 16, 2017

அரங்கன் கணக்கு!

ஆஸ்திரேலிய தமிழ் இணையதளம் நடத்திய அமரர் அருண்விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2016ல் மூன்றாவது பரிசு பெற்ற என் சிறுகதை 



வானம் பெரிதான மழைக்கு ஆயத்தமாகி இருந்தது. நல்ல வேளையாக  வெங்கடேசன் பெருமழை பெய்ய ஆரம்பிக்கும் முன் அரங்கன் கோயிலை எட்டி விட்டார். அவர் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கனத்த மழை பெய்யும் என்றும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அறிவிப்புகள் வர ஆரம்பித்திருந்தன. அதனால் காரில் நூறு கிலோமீட்டர் தூரப் பயணம் செய்து அரங்கனைத் தரிசிப்பதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு. இன்னோரு நாள் போனால் என்ன, அரங்கன் ஓடியா போய் விடுவார்? ஆனால் நவம்பர் இருபதாம் தேதியான இன்று அரங்கனைத் தரிசிக்காமல் இருக்க மாட்டேன் என்று அவர் பிடிவாதமாகக் கிளம்பி வெற்றிகரமாக வழக்கமான மதிய நேரத்தில் வந்து சேர்ந்தும் விட்டார்.

கடந்த பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த சந்திப்பைப் புயலும், மழையும், எதிர்ப்பும் நிறுத்தி விட முடியுமா என்ன! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமான தடங்கல் வந்து கொண்டு தானிருந்தது. உடல்நிலை சரியில்லாமை, கார் பழுது, வியாபார அவசரங்கள், திருமணங்கள், இழவுகள் என்று அந்த சமயங்களில் ஏதாவது ஒரு தடை முன்னே வந்து நிற்க, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு அவர் அந்த நாளில் அரங்கனைத் தரிசித்து வந்திருக்கிறார். இன்றும் வருகையில் வழியெல்லாம் மழையால் போக்குவரத்து நெருக்கடி தான். சில இடங்களில் நிறைய நின்று, சில இடங்களில் ஊர்ந்து தான் வரவேண்டி இருந்தது. ஆனால் இதெல்லாம் அரங்கன் வைக்கும் பரிட்சைகளல்லவா?


காரிலிருந்து இறங்கி வெங்கடேசன் அண்ணாந்து கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டார். அரங்கனுடைய அந்தக்கோயில் மிகப்பழைய கோயில். திருவிழாக் காலத்தைத் தவிர மற்ற நாட்களில் அதிகம் கூட்டம் காணாத கோயில். கனத்த இரும்புச் சங்கிலிகளும், பித்தளைக் குமிழ்களும், மரச்செதுக்கு சிற்பங்களும் கொண்ட உயரமான கோயில் கதவுகள் மதிய உச்சி பூஜை முடிந்து சாத்தப்பட்டு இருந்தன. ஆனால் வலது கதவின் கீழ்ப்பகுதியில் சிறியதாய் ஒரு சின்னக்கதவு இழைக்கப்பட்டு இருந்தது. அந்தக் கதவு இரவு வரை எப்போதும் திறந்தே இருக்கும். அந்தச் சிறிய கதவு வழியாக வெங்கடேசன் கோயிலுக்குள் நுழைந்தார். உள்ளே யாருமே இல்லை. இனி மாலை நான்கு மணி வரை இப்படித் தான் கோயில் வெறிச்சோடிக் கிடக்கும். அதன் பின் தான் சில பக்தர்களாவது வருவார்கள். இப்போது மணி இரண்டரை. ஒன்றரை மணி நேரம் அரங்கனோடு தனியாக இருக்கலாம்.

வெங்கடேசன் எப்போதுமே இந்த நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்து வருவார். இறைவனிடம் ஒப்பிக்க இந்த வருடத்திய கணக்கு நிறைய இருந்தது. அது கூட்டம் இருக்கும் போது சாத்தியப்படுவதில்லை. பூசாரி உட்பட இடைஞ்சல் போலத் தான் அவருக்குத் தோன்றும். கற்பாளங்களாலான ஈரத்தரையில் சில இடங்களில் பாசி படர்ந்திருந்தது. கவனமாக அதில் கால் வைத்து மூன்று முறை சுற்றி விட்டு கருவறை முன் இருந்த உள்மண்டபத்திற்கு அவர் வந்தார்.

அரங்கன் கம்பிக்கதவுகளிற்குப் பின்னால் கருவறையில் பள்ளி கொண்டிருந்தான். இரண்டு பக்கமும் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் கூடுமான வரை இருளைப் போக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. அரங்கனை மங்கலான ஒளியில் தரிசித்த போது வெங்கடேசனுக்கு மெய்சிலிர்த்தது. மனம் லேசானது. “அரங்கனே உன் பக்தன் வந்திருக்கிறேன்.... மண்டபத்தில் அரங்கனை ஒரு முறை வணங்கி விட்டு அவனைப் பார்த்தபடி அப்படியே உட்கார்ந்தார். ஓரிரு நிமிடங்களில் காலத்தை மறந்து போனார்.....

பத்து வருடங்களுக்கு முன்னால் இதே நவம்பர் இருபதாம் தேதி இதே நேரத்தில் இதே இடத்தில் அரங்கன் முன் கனத்த இதயத்துடன் வந்தவர் அவர். இப்போதைய வானம் போல அன்று அவர் மனம் இருண்டிருந்தது. தற்கொலை செய்து கொள்ள மனம் தீர்மானித்திருந்தது. அதை நிறைவேற்ற அவர் சட்டைப் பையில் விஷம் இருந்தது. வியாபாரத்தில் பெருத்த நஷ்டம், பல இடங்களில் பெருங்கடன், பல இடங்களிலிருந்தும் ஒருமித்த நெருக்கடி, அதிலிருந்து மீள வழியில்லாமை, எல்லாமாகச் சேர்ந்து அவரை இந்த முடிவுக்கு வரவழைத்திருந்தன. மனைவிக்கு ஒரு மன்னிப்புக் கடிதமும், மனைவியையும், மகளையும் பார்த்துக் கொள்ளச் சொல்லி மாமனாருக்கு ஒரு உருக்கமான வேண்டுதல் கடிதமும் அவரது சட்டைப்பையில் இருந்தன. அதே வேண்டுதலை தன் இஷ்ட தெய்வமான அரங்கனிடம் வேண்டி விட்டு இறக்கத் தான் இந்தக் கோயிலுக்குள் அன்று வந்திருந்தார்.

அன்று அவர் அரங்கன் முன் அவர் குமுறிக் குமுறி அழுதிருக்கிறார். அரங்கனே நான் நிறைய முட்டாள்தனங்கள் செய்திருக்கிறேன் நிறையவே அஜாக்கிரதையாக இருந்திருக்கிறேன். அதனால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் உணர்ந்த இப்போதோ எல்லாமே தலைக்கு மேலே போய் விட்டது. சரி செய்ய வழியே இல்லை. அத்தனை தவறும் என்னுடையது. என் தவறுகளுக்காக என் மனைவியும், மகளும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற என் மாமனாருக்கு தீர்க்காயுளையும், சக்தியையும் கொடு.....

அழுது ஓய்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு அரங்கனிடமும் மனதார விடைபெற்றுக் கொண்டு அவர் எழுந்து நகர்ந்த போது காலை ஏதோ இடறியது. ஒரு சிவந்த தோல்பை அது. யாரோ விட்டுச் சென்றிருக்க வேண்டும். தோல் பையின் ஜிப் சற்றே விலகி உள்ளே கட்டுக் கட்டாய் பணம் தெரிந்தது. ஒரு கணம் அவரது இதயத்துடிப்பு நின்று போனது. அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. குனிந்து ஜிப்பை விலக்கிப் பார்த்தார். கட்டுக் கட்டாய் பணத்துடன் தங்க நகைகளும் இருந்தன. இதயம் சம்மட்டியாக அடிக்க ஆரம்பிக்க, கோயிலை அவசரமாக ஒரு முறை சுற்றிப் பார்த்தார். யாருமே இல்லை. அவருக்கு வியர்த்தது. மறுபடி அரங்கன் முன் அமர்ந்து பணத்தைக் கணக்கிட்டார். இருபது லட்ச ரூபாய் இருந்தது. தங்கநகைகள் சுமார் ஐம்பது பவுனாவது இருக்கும்.

அரங்கனைப் பார்த்தார். அரங்கன் படுத்தபடியே மந்தஹாசப் புன்னகை பூத்தான். யாரோ இறைவனுக்கு என்று இதை ஒப்படைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் போலத் தோன்றியது. இறைவன் அவர் மீள ஒரு வழியைக் காண்பித்திருக்கிறான். ‘இதை வைத்துக் கொண்டு மறுபடியும் ஆரம்பி...என்று அரங்கன் சொல்வதாக ஒரு தோணல். கலியுகத்தில் இவ்வளவு சீக்கிரம் கடவுள் கருணை காட்டுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது. மீண்டும் அழுதார். அந்தப் பையை எடுத்துக் கொண்டு வந்தவர் விஷத்தை குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு, சட்டைப் பையில் வைத்திருந்த கடிதங்களை சுக்கு நூறாகக் கிழித்து விட்டு ஊர் திரும்பினார்.

அவர் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்தது. கடன்களைத் தீர்த்து விட்டு மீதி இருந்த பணத்தைத் தொழிலில் போட்டு கவனமாகவும், கஷ்டப்பட்டும் உழைத்தார். இறைவனுடைய முதலும் அவருடைய உழைப்பும் சேர்ந்ததால் நல்ல பலன் கிடைத்தது. செல்வம் குவியத் தொடங்கியது. வந்த இலாபத்தில் பாதியை மட்டும் தனக்கு வைத்துக் கொண்டார். மீதியை அரங்கன் கணக்காக நினைத்து தர்ம காரியங்களுக்குச் செலவு செய்தார். அவரும், அரங்கனும் சேர்ந்த கூட்டணி அவரை மலைக்க வைக்கும் உயரத்திற்குக் கொண்டு சென்றது. ஆனால் அவர் பழையதை மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் நவம்பர் இருபதாம் தேதி வந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி வணங்குவதில் தவறவில்லை. இலாபத்தில் அரங்கனுடைய பங்கை எப்படி எல்லாம் செலவு செய்திருக்கிறார் என்று நேரடியாக வந்து கணக்கை ஒப்புவிக்கத் தவறவில்லை....

காலத்தை மறந்து அரங்கனுடன் இருந்த அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக வானம் இரைச்சலுடன் பொழிய ஆரம்பித்தது. யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. ஓடி வந்த மனிதருக்கு அறுபதுக்கும் மேற்பட்ட வயதிருக்கும். சாயம் போன சட்டையும், பழைய வேட்டியும் அணிந்திருந்தார். வந்தவர் தன் மேலே போட்டிருந்த துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டார். அவர் மழைக்கு ஒதுங்குபவர் போல அந்த உள் மண்டபத்தில் ஒதுங்கினாரே ஒழிய அரங்கன் பக்கம் திரும்பவில்லை. அரங்கனுக்கு முதுகைக் காட்டியபடியே நின்றார்.

வெங்கடேசனுக்கு அரங்கனுடன் இருந்த அந்த இனிமையான தனிமை பறி போனதால் அந்த மனிதர் வரவை ரசிக்க முடியவில்லை. கோயிலில் யாரும் வரலாம், அரங்கனுக்கு அனைவரும் ஒன்று தானே என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவராக கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வது போல பாவனை செய்தார். ஆனாலும் மனம் அந்த பாவனையில் ஒன்றவில்லை. மழையுடன் இடி மின்னலும் சேர்ந்து கொண்டது. கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்து இருக்க முடியாமல் சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்தார்.

அந்த முதியவர் அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். வெங்கடேசன் கண்களைத் திறப்பதற்காகக் காத்திருந்தவர் போல உடனே கேட்டார். “நீங்கள் வெங்கடேசன் தானே?

வெங்கடேசன் பலவந்தமாய் புன்னகையை வரவழைத்துக் கொண்டு ஆமாம் என்று தலையாட்டினார்.

முதியவர் முகத்தில் மிகுந்த மரியாதை தெரிந்தது. “உங்களைப் பற்றி பத்திரிக்கைகளில் நிறைய படித்திருக்கிறேன். அனாதை ஆசிரமங்கள், இலவச முதியோர் இல்லங்கள், ஏழைகள் படிப்புக்கு உதவித்தொகை என்று எத்தனையோ நல்ல காரியங்கள் செய்திருக்கிறீர்கள். ரொம்ப பெரிய மனது உங்களுக்கு....

வெங்கடேசனுக்கு கூச்சமாய் இருந்தது. அடக்கத்துடன் அரங்கனைக் காண்பித்துச் சொன்னார். “எல்லாம் அவன் போட்ட பிச்சை. நானாகச் செய்தது எதுவுமில்லை

முதியவர் பார்வை அப்போதும் அரங்கன் பக்கம் போகவில்லை. அந்த உள் மண்டபத்தில் பதித்திருந்தஉபயம்- வெங்கடேசன் என்ற வாசகத்தின் மீது அவர் பார்வை தங்கியது. இந்த மண்டபம் கூட நீங்கள் தான் கட்டியது. இல்லையா. ஒரு காலத்தில் இப்படி இருக்கவில்லை...

வெங்கடேசன் சங்கோஜத்துடன் தலையசைத்தார். பின் தயக்கத்துடன் சொன்னார். “எல்லாம் அவன் கொடுத்தது. அவன் கொடுத்ததிலேயே இதைக் கட்டி விட்டு உபயம் என்று என் பெயரைப் போட்டது சரியல்ல. ஆனால் நான் சொன்னாலும் கேட்காமல் போட்டு விட்டார்கள்.

முதியவர் முகத்தில் தெரிந்த மரியாதை கூடியது. “உங்களை மாதிரி ஒரு நல்ல மனிதரை நேரில் பார்த்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது”.  சொல்லி விட்டு அவர் கை கூப்பினார். பின் சினேகத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “நான் ராமமூர்த்தி. பக்கத்து ஊரில் தான் இருக்கிறேன். அங்கே ஒரு தனியார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராய் இருக்கிறேன்.

வெங்கடேசனும் கை கூப்பினார். “நீங்கள் அதிர்ஷ்டசாலி. பக்கத்து ஊரிலேயே இருக்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் வந்து அரங்கனை தரிசிக்கலாம்.

முதியவர் முகம் சுருங்கியது. மெல்லச் சொன்னார். நான் இந்த இடத்திற்கு வந்து பத்து வருஷமாகி விட்டது

அரங்கன் சன்னிதியைக் கோயில் என்று சொல்லாமல் இந்த இடம் என்று அவர் சொன்னதும் சொன்ன விதமும் வெங்கடேசனை நிறையவே பாதித்தது.

அவர் முகபாவனையிலேயே அதைப் புரிந்து கொண்ட ராமமூர்த்தி குரலை சற்று மென்மையாக்கிக் கொண்டு சொன்னார். உங்களுக்கு இவன் இறைவனாய் இருக்கலாம். நல்லது நிறைய செய்திருக்கலாம். என்னைப் பொறுத்த வரை இவன் திருடன். தண்டிக்க முடியாத திருடன். முதலில் எல்லாம் நான் இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தவன் தான். என் தாத்தா, அப்பா, நான் என்று எல்லாரும் வம்சாவளியாக இங்கே வந்து வணங்கியவர்கள் தான். ஆனால் பத்து வருஷமாய் தான் நான் வணங்குவதை நிறுத்தி விட்டேன். இப்போது கூட வந்திருக்க மாட்டேன்.  வேறொரு வேலையாக இந்த ஊருக்கு வந்தேன். வேலையை முடித்துக் கொண்டு போகிற நேரத்தில் இப்படி மழை பிடித்துக் கொண்டது. பக்கத்தில் ஒதுங்க எந்த கட்டிடமும் இல்லை. அதனால் தான் என்னை அறியாமல் பழைய பழக்க தோஷத்தில் இங்கே வந்து விட்டேன்...

வெங்கடேசன் திகைப்புடன் அவரைப் பார்த்தார். அரங்கன் சன்னிதியில் நின்று கொண்டு அரங்கனையே பழித்துப் பேசும் அந்த முதியவரின் செயல் அவருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. கோபத்தை பேச்சில் காண்பிக்கக் கூடாது என்று எண்ணியவராக இயல்பான குரலில் கேட்டார். அப்படி என்ன தான் அரங்கன் செய்து விட்டான்?

ராமமூர்த்தி உடனடியாக பதில் சொல்லவில்லை. அரங்கனைப் பார்க்கவும் பிடிக்காதவராய் பெய்கின்ற மழையையே சிறிது நேரம் வேடிக்கை பார்த்து விட்டு மெல்ல சொன்னார். “மாளிகையில் இருந்த என்னை ஒரே நாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டான்....

வெங்கடேசன் திகைப்போடு அவரைப் பார்த்தார்.

மழை குறைகிற மாதிரி தெரியவில்லை. ஆக்ரோஷத்துடன் பெய்து கொண்டிருந்தது. ராமமூர்த்தி பெய்யும் மழையைப் பார்த்தபடியே தளர்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தார். “ஒரு காலத்தில் பம்பாயில் நல்ல விதமாய் வியாபாரம் செய்து கொண்டு இருந்தேன். நான், என் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் எல்லாரும் சந்தோஷமாய் இருந்தோம். மூத்த மகனுக்கும், மகளுக்கும் கல்யாணம் செய்து முடித்திருந்தேன். கடைசி மகன், மகள் பிறந்து பத்து வருடம் கழிந்து பிறந்தவன். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது பம்பாயில் தொழில் மந்தமாக ஆரம்பித்தது. கலவரங்களும் அதிகமாக இருந்தன. அந்தத் தொழிலை விட்டு விட்டு தமிழ்நாட்டிற்கே வந்து புதிதாக தொழில் ஆரம்பித்தால் என்ன என்கிற எண்ணம் வந்தது. தமிழ்நாட்டில் மனை விற்பனை  நன்றாகப் போகிறது, அதில் பணம் போட்டால் நல்ல இலாபம் வரும் என்று இங்கிருந்த சிலர் ஆலோசனை சொன்னார்கள். எல்லாவற்றையும் விற்று விட்டு பணத்தோடு தமிழ்நாட்டிற்கே வந்து அப்படி தொழில் ஆரம்பித்து விடலாமா என்று இங்கே வந்து குல தெய்வமான இந்த அரங்கனிடம் பூப் போட்டு உத்தரவு கேட்ட போது செய் என்று பதில் வந்தது. மலிவான விலையில் நல்ல இடத்தில் வீடு கட்டி விற்க பன்னிரண்டு ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருந்தது. விற்பவன் கணக்கில் குறைவாகத் தான் காண்பிப்பேன், பெரும்பகுதியை ரொக்கமாகத் தான் தரவேண்டும் என்று சொன்னான். அப்படியே பணத்தையும், போதாதற்கு இருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு, இதே நவம்பர் மாதம் இதே இருபதாம் தேதி இவனை வணங்கி விட்டு வியாபாரம் முடிப்பதற்காக, முதலில் இதே இடத்திற்கு வந்தேன்.....

வெங்கடேசன் இதயத்தை ஏதோ கனமாக அழுத்தியது போல உணர்ந்தார்.

அதைக் கவனிக்காமல் மழையிலும் கடந்த காலத்திலும் லயித்தபடி ராமமூர்த்தி தொடர்ந்து சொன்னார். “வந்த நேரம் கூட கிட்டத்தட்ட இதே நேரம் தான். சாயங்காலம் பூசாரி வந்து தீபாராதனை காட்டுகிற வரை காத்திருக்க நேரம் இல்லை. அதனால் வணங்கி விட்டுக் கிளம்பினேன். ஒரு பெரிய பையின் உள்ளே துணிமணியோடு பணம் நகை வைத்த சிறிய சிவப்புப்பை பாதுகாப்பாய் வைத்திருந்தேன். அதை எடுத்து இவன் முன்னால் வைத்துக் கும்பிட்டேன். பின் அதை எடுத்தவன் உள்ளே வைக்க எப்படி மறந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. பெரிய பையில் அதை எடுத்து வைத்து விட்டதாய் நினைத்து கிளம்பி விட்டேன். நிலம் விற்பவனிடம் போன பிறகு தான் அந்தப் பையை இங்கேயே விட்டு விட்டதைக் கண்டு பிடித்தேன். உடனடியாகத் திரும்பி இங்கே ஓடோடி வந்தேன். அரங்கன் முன் வைத்த பணம் அவன் கண்காணிப்பில் பத்திரமாய் தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால்.... ஆனால் .....இங்கே வந்த போது அந்தப் பை மாயமாய் மறைந்திருந்தது.....


வெங்கடேசன் இதயத்தை அழுத்த ஆரம்பித்த கனம் இமயமாக மாறியது. சரியாக மூச்சு விடக்கூட அவரால் முடியவில்லை.

ராமமூர்த்தி குரல் கரகரக்க ஆரம்பித்தது. “பணம் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. பணம் போனதோடு எல்லாம் போகும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படித் தான் ஆனது. மூத்த மகன், மகள் பெயரில் நான் சேர்த்து வைத்திருந்த சொத்துகளைத் தவிர எல்லாவற்றையும் இந்த வியாபாரத்திற்காக நான் விற்றிருந்தேன். அதனால் நிலைமையை சரிக்கட்ட அவர்கள் பெயரில் இருந்த சொத்து எனக்கு தேவைப்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் கையெழுத்துப் போட மறுத்து விட்டார்கள். பெற்ற பிள்ளைகளே அப்படி செய்வார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை ஜீரணிக்க முடியவில்லை. மற்ற உறவுகளும், நட்பும் கூட அப்படியே உதிர்ந்து போய் விட்டது. நானும், என் மனைவியும், என் சின்ன மகனும் நடுத்தெருவில் நின்றோம்...... நான் செய்த ஒரே தவறு இவனை வணங்க இங்கே வந்தது தான். இவன் முன்னால் நான் விட்டுப் போன என் பணத்தை எனக்குக் காப்பாற்றித் தரத் தெரியாதவன் இந்த உலகத்தையே காப்பாற்றுவானாம்..... சொல்லி விட்டு ராமமூர்த்தி ஏளனமாகச் சிரித்தார்.

வெங்கடேசன் உள்ளே நொறுங்கிக் கொண்டிருந்தார். ஒரு மனிதனை குடும்பத்தோடு நடுத்தெருவிற்குக் கொண்டு வந்து விட்டுத் தான் அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றி விட்டிருக்கிறார்... அந்த அப்பாவி மனிதரின் அழிவில் தான் இன்று பெரியதாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.... அந்த உள் மண்டபத்தின் சுவரில் இருந்த “உபயம்-வெங்கடேசன்என்ற வாசகம் அவரைப் பார்த்து ஏளனமாய் சிரித்தது. இத்தனை காலம் கணக்கு ஒப்பித்தவர் இந்தக் கணக்கை எங்கே சொல்ல முடியும்? என்ன கணக்கு இது? இது பாவக்கணக்கே அல்லவா?

வெங்கடேசனைப் பார்த்த போது ஏதோ ஒரு விபரீதம் நடப்பது ராமமூர்த்திக்கு விளங்கியது. அவர் முகத்தில் தெரிந்த பெரும் வலியைக் கண்டு ராமமூர்த்தி பயந்து போனார். வெங்கடேசனுக்கு மாரடைப்பு வந்து விட்டதா என்ற சந்தேகம் வலுக்க வேகமாக அவர் அருகே வந்து கேட்டார். “என்ன ஆயிற்று உங்களுக்கு? உடம்பு சரியில்லையா?

சொல்லப் போவதை கேட்டு விட்டால் இந்தக் கருணை அந்த மனிதரிடம் இருந்து பறந்து போகும் என்பதில் வெங்கடேசனுக்கு சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அரங்கன் முன்னால் பத்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்த அந்த பாவக்கணக்கு அவன் சன்னிதியில் அவன் முன்னிலையில் இன்று தீர்க்கப் பட வேண்டும் என்பதில் வெங்கடேசன் உறுதியாக இருந்தார். அந்தப் பணத்தை யாராவது தவறுதலாக விட்டுப் போயிருக்கக் கூடும் என்ற அறிவுபூர்வமான எண்ணம் தோன்றாததற்குக் காரணம் தன்னுடைய அப்போதைய சுயநலம் என்று இன்று விளங்கியது. யாரோ வேண்டுமென்றே விட்டுப் போயிருக்க வேண்டும் என்று நினைத்தது அப்போதைய நிலைமைக்கு வசதியாக இருந்ததாக இப்போது உணர்ந்தார். ஆனால் பிழைக்க வழி கிடைத்தது என்று அன்று நினைத்தாரே ஒழிய ஒருவர் பிழைப்பில் மண்ணைப் போடுவோம் என்று நினைத்திருக்கவில்லை.  அப்படியே குனிந்து அந்த மனிதரின் கால்களை கெட்டியாகத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார்.

ராமமூர்த்தி பதறிப் போனார். “ஐயோ, என்ன இது.என்று கால்களைப் பின்னுக்கு இழுக்க முயற்சி செய்தார். ஆனால் வெங்கடேசன் அவர் கால்களை விடுவதாய் இல்லை. இந்தப் பாவியை மன்னித்து விடுங்கள் ஐயா. என்னை மன்னித்து விடுங்கள்....

ராமமூர்த்தி குழப்பத்துடனும், தர்மசங்கடத்துடனும் கேட்டார். “எதற்கு?

ராமமூர்த்தியின் கால்களைப் பிடித்தபடியே வெங்கடேசன் பத்து வருடத்திற்கு முந்தைய நவம்பர் இருபதில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தார். வெளியே பெய்த மழையை ஒன்றுமில்லாததாக்கியது வெங்கடேசனின் கண்ணீர். ஒன்றையும் மறைக்காமல் வெங்கடேசன் சொன்னதைப் பேச்சிழந்து கேட்டுக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி.

கடைசியில் வெங்கடேசன் கதறிபடி சொன்னார். “ஐயா எல்லாத்தையும் திருப்பித் தந்து விடுகிறேன். நீங்கள் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பத்து வருஷத்தில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு மட்டும் பரிகாரம் என்னால் செய்ய முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்....அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. கண்ணீரால் ராமமூர்த்தியின் கால்களைக் கழுவியபடியே அவர் கூனிக் குறுகியிருந்தார்.

ராமமூர்த்தியின் பார்வை முதல் முறையாக அரங்கன் பக்கம் திரும்பியது. அரங்கனையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். அவர் மனதில் ஏராளமான எண்ணங்களும் உணர்வுகளும் அலை மோதின. அவர் நீண்ட நேரம் பேசவில்லை. ஒரு கனத்த மௌனம் அங்கே நிலவியது.

அவர் ஒன்றும் சொல்லாதது வெங்கடேசனை மேலும் துக்கப்படுத்தியது. அவர் சொன்னார். “ஐயா எதாவது சொல்லுங்கள். என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள். அரங்கனைத் திட்டாதீர்கள்.... எல்லாத் தவறும் என்னுடையது. என்னோட வடிகட்டிய சுயநலம் தான் இதற்கெல்லாம் காரணம். இப்போதே நீங்கள் என் கூட வந்தால் நான் இது வரை சம்பாதித்ததை எல்லாம் அப்படியே திருப்பித் தந்து விடுகிறேன். சரி என்று சொல்லி ஏற்றுக் கொண்டு இந்தப் பாவியைத் தயவு செய்து மன்னியுங்கள் ஐயா....

அரங்கனைப் பார்த்தபடியே சிலையாக நின்றிருந்த ராமமூர்த்தி அப்போதும் ஒன்றும் பேசவில்லை. ஆழ்ந்த யோசனையில் அவர் மூழ்கி இருந்தார்.


வெங்கடேசனுக்கு அவர் ஏதாவது சொல்லா விட்டால் பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது. என்ன ஐயா யோசிக்கிறீர்கள்? இந்தப் பாவி மன்னிப்புக்கும் ஏற்றவன் இல்லை என்றா?


ராம்மூர்த்தி மெல்ல வெங்கடேசன் பக்கம் திரும்பினார். இரு கைகளாலும் அவரைப் பிடித்து எழுப்பினார். “நீங்கள் ஏன் இந்த மாதிரி பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்கிறீர்கள்? நடந்ததை
இப்போது இன்னொரு தடவை யோசித்துப் பார்த்தால் எனக்கு உங்களையோ, அரங்கனையோ தப்பு சொல்லத் தோன்றவில்லை

வெங்கடேசன் திகைத்துப் போனார். “ஐயா என்ன சொல்கிறீர்கள்?

“அந்தப்பணம் என்னிடமே இருந்திருந்தால் உங்களை மாதிரி இத்தனை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தியிருக்க மாட்டேன். அந்த அளவு பெரிய மனம் எனக்கு இருந்ததில்லை. உங்களிடம் அந்தப்பணம் வந்ததால் தான் இத்தனை நல்ல காரியம் நடந்திருக்கிறது. அதனால் தான் அரங்கன் அந்தப் பணத்தை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். ஒருவிதத்தில் அந்தப் பணம் என் கையை விட்டுப் போனதும் நல்லது தான் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது வெங்கடேசன். பணத்துக்காக ஒட்டியிருந்த உறவுகளும், நட்புகளும் அந்தப் பணத்துடனேயே போய் உண்மையான உறவுகளும், நட்புகளும் மட்டுமே என் வாழ்க்கையில் மிஞ்சினது ஒரு விதத்தில் யோசித்தால் அருமையான நிகழ்வு இல்லையா? இல்லாவிட்டால் நான் போலிகளை எல்லாம் நிஜம் என்று கடைசி வரை ஏமாந்து போயிருப்பேன். அந்த வகையில் அரங்கன் எனக்கு உதவி தான் செய்திருக்கான். இது தாண்டா நிஜம். நிஜத்தை மட்டுமே கொண்டாடு என்று காட்டியிருக்கிறான்....

“ஐயா...வெங்கடேசன் திகைத்தார்.

ராமமூர்த்தி கனிவாகச் சொன்னார். “உங்களை சமாதானப்படுத்த நான் சொல்லவில்லை. இப்போது யோசித்தால் என் வாழ்க்கையில் செல்வம் தான் போனதே ஒழிய மற்றபடி இவன் அருளில் எல்லாம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்றும் அளவு சம்பாதிக்க எனக்கு ஒரு வேலை கிடைத்தது. பணம் இல்லாததால் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கடைசி மகன் நன்றாகப் படித்தான். அவனுக்கு பேங்கில் ஒரு வேலை கிடைத்து இப்போது அவன் என்னையும் என் மனைவியையும் நன்றாகவே பார்த்துக் கொள்கிறான். என்னை வேலைக்குப் போக வேண்டாம் என்று தான் சொல்கிறான். நான் தான் சும்மா இருக்க முடியாமல் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னிடம் இப்போது பணம் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையைக் கௌரவமாக ஓட்டத்தேவையான அளவு பணம் இருக்கிறது. முக்கியமாக நிம்மதி இருக்கிறது.. நிம்மதிக்கு மேல் என்ன வேண்டும். சொல்லுங்கள்.

வெங்கடேசன் அந்த வார்த்தைகளில் மேலும் நொறுங்கினார். இத்தனை நல்ல மனிதர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியது திருட்டுக்கு அல்லவா சமானம் என்று தோன்றியது. “ஐயா இந்த திருடனுக்கு பரிவாகப் பேசுகிறீர்களே. என் பாவக் கணக்கை நான் எங்கே போய் சொல்வேன்.... என்று உடைந்த குரலில் கதறினார்.

ராமமூர்த்தி அந்த நல்ல மனிதரை அணைத்துக் கொண்டார். “வெங்கடேசன். இது பாவக்கணக்கு அல்ல. இது அரங்கன் கணக்கு. அவன் சரியான கணக்கு தான் போட்டிருக்கிறான். என்னிடம் இருந்து பணத்தை எடுத்து அரங்கன் எனக்கு நல்லதைச் செய்திருக்கிறான். அந்தப் பணத்தை உங்களுக்கு கொடுத்து உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லதைச் செய்திருக்கிறான். நான் தான் இத்தனை நாள் இது புரியாமல் இவன் மேல் கோபமாய் இருந்திருக்கிறேன்....


“நீங்கள் என்னை சபிக்காமல் இந்த அளவு பெருந்தன்மை காட்டினதை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நீங்கள் நிஜமாகவே பெரிய மனிதர். நீங்கள் இப்போதே என் கூட வந்தால் நான் அத்தனையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவேன். என் ஆடிட்டரிடம் பேசி முறைப்படி செய்து விடலாம்... வெங்கடேசன் ஆத்மார்த்தமாகச் சொன்னார்.


“நான் தான் கணக்கு சரியாகத் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டேனே. பணம் திரும்பி வந்தது தெரிந்தால் உதிர்ந்த உறவுகளும், நட்புகளும் வெட்கமே இல்லாமல் திரும்பி வந்து ஒட்டிக் கொள்ளும். என் மனைவிக்கு இளகின மனம். நான் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அவள் ஏற்றுக் கொள்வாள். நானும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கும். பணம் இனி எனக்கு நல்லது செய்வதை விட கெட்டது தான் அதிகம் செய்யும்.... ராமமூர்த்தி புன்னகையோடு சொன்னார்.

வெங்கடேசன் திகைப்புடனும், விவரிக்க முடியாத பிரமிப்போடும் ராமமூர்த்தியைப் பார்த்தார். ராமமூர்த்தி அவரிடம் நிறைந்த மனதுடன் தொடர்ந்து சொன்னார். “அரங்கன் அருளால் உங்கள் வியாபாரம் இனியும் தொடர்ந்து நன்றாய் நடக்கட்டும். உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து  இதே மாதிரி நல்லதை நிறைய செய்யுங்கள். உங்கள் கணக்கை அரங்கனிடம் எப்போதும் போல் ஒப்புவியுங்கள். இந்த விஷயம் நம் மூன்று பேருக்குள்ளேயே இருக்கட்டும். வெளியே யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை....


வெங்கடேசனிடம் சொல்லி விட்டுத் தெளிந்த மனத்துடன் பத்து வருடங்கள் கழித்து அரங்கனை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் ராமமூர்த்தி.  சொல்ல வார்த்தைகள் எதுவும் கிடைக்காமல் சிலையாக நின்றிருந்தார் வெங்கடேசன். மௌன சாட்சியாய் அங்கு பெருமழை பெய்து கொண்டிருக்க, மாறாத புன்னகையுடன் தன் இரு பக்தர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான் அரங்கன்.


- என். கணேசன் 

நன்றி:
http://akkinikkunchu.com/2017/01/13/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-2/

23 comments:

  1. சரோஜினிJanuary 16, 2017 at 4:40 PM

    நல்ல கருத்தை அழகாக சொல்லி இருக்கீங்க. படித்து முடிக்கையில் கண்கலங்கி விட்டேன். பாராட்டுகள்

    ReplyDelete
  2. அற்புதமான கதை. நடுவிலேயே யூகிக்க முடிந்தாலும் முடிவில் ராமமூர்த்தி அவர்கள் சொல்லும் விளக்கம் நிறைவாகவும் எதிர்பாராததாகவும் இருந்தது. தாங்கள் வரைந்த அரங்கனின் படம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

      Delete
  3. படித்து முடித்தவுடன் கண்ணிர் வந்துவிட்டது

    ReplyDelete
  4. What a great story? Surprising ending .... Ranganatha .... Narayana .... Perumalae!

    ReplyDelete
  5. வரதராஜன்January 16, 2017 at 8:16 PM

    அரங்கன் முன் நானும் இருந்து பார்த்தது போல் ஒரு உணர்வு. நெகிழ்ந்தேன். அருமை.

    ReplyDelete
  6. மனம் நெகிழ வைக்கும் எழுத்துக்கள். உளமார்ந்த பாராட்டுக்கள்- பொன்மலை பாபு

    ReplyDelete
  7. அற்புதமான எழுத்து! நெகிழ்ந்தேன்!!

    ReplyDelete
  8. மிகவும் அருமை. எப்பொழுதும் போல் தங்கள் எழுத்துக்களை படிக்கும்பொழுது ஏற்படும் உணர்வு மாற்றத்தை உணர முடிந்தது. ஒரு நல்ல கதை ஆசிரியருக்கு கிடைக்கும் மிக பெரிய பரிசாக நான் நினைப்பது தன் கதையை படிப்பவரின் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்பதும், சரியான வழியில் மேலும் செல்ல தூண்டுவதும் தான். அது தங்களின் அனைத்து படைப்பிலும் உள்ளது. வாழ்த்துக்கள் ஜி.

    அன்புடன்,
    B.Saravanakumar,
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  9. Superrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  10. What Ganesan sir also got changed I thought
    When I first started reading!

    You will never change, always makes a difference
    What a wonderful story, as usual cried.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள். அருமை, கதைக்களத்திற்கு படிக்கும் வாசகரை அழைத்து சென்று விட்டீர்கள். கதையின் முடிவில் மூன்று பேரைத்(அரங்கன், வெங்கடேசன், ராமமூர்த்தி) தவிர, படிக்கும் வாசகனுக்கும் ஒரு இடத்தை கொடுத்து பெருமைப் படுத்தி விட்டீர்கள். எளிய ஒரு வரி கதை ஆனால் விவரித்த விதமும், ராமமூர்த்தியின் தெளிவான விளக்கமும் கதையை வெகுவாக அழகு படுத்தி உள்ளது. காரண காரிய கர்மவினையை அத்தனை சுலபமாக அறிய முடியாது. கர்மபலன்களை நாம் அனுபவிக்க தான் முடியுமே ஒழிய, எதனால் அந்த பலன் வந்தது, எந்த ஜென்மத்தில் நாம் விதைத்த விதையின் விளைவு என அறிய முடியாது என்பதை அரங்கனின் கணக்கு அழுத்தமாக சொல்கிறது. அரங்கனின் கணக்கை அறிய முடிந்துவிட்டால் அது தான் அரங்கனை நிரந்தரமாக அடையும் பொழுதாக இருக்கும். அரங்கனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என முடிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான இன்னுமொரு அனுபவத்தைக் கொடுத்த ஆசிரியர் நா.க அவர்களுக்கும், அதன் சாரத்தை பிழிந்ததைபோன்ற தங்களின் வாசகர் கடிதத்தைக் கொடுத்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றி, பாராட்டுகள், நல்வாழ்த்துகள், ப்ரார்த்தனைகள்....
      - திருமதி பார்வதி (கணேசன்) விஸ்வேஸ்வரன் (கானடா)

      Delete
  12. very nice story. God is doing everything is right for us. God is great!

    ReplyDelete
  13. Arputhamana kathai, mikka magilchi

    ReplyDelete
  14. கதை அருமையாக இருந்தது. படித்தவுடன் கண்களில் நீர் கசிந்தது. கடவுள் கொடுப்பதும், எடுப்பதும் நம் நன்மைக்கே. நம் அறியாமையால்தான் அவனை குறை சொல்கிறோம். தொடர்ந்து நல்ல படைப்புகளை தாங்கள் தர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  15. மிகவும் அருமை .. மனம் கனத்துவிட்டது .. இப்படி வெளிப்படையாகப் பேசும் மனிதர்களை வாழ்வில் சந்திப்பது அரிதான ஒன்று. அதை கதைகளில் படிக்கும்போது உண்மையான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தான் தேடத் தோன்றுகிறது. கண்களில் நீர் துளிர்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா..

    ReplyDelete
  16. அருமையான கதை, எழுத்து நடையும் சுவாரசியமாக இருந்தது. வாழ்த்துக்கள் அண்ணன்.

    ReplyDelete