சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 16, 2017

இருவேறு உலகம் - 17


க்ரிஷ் மாயமாக மறையும் தன்மை குறித்த ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டவுடன் மணீஷிடம் தெரிந்த திடீர் மாற்றத்தை செந்தில்நாதன் திகைப்புடன் பார்த்தார். என்ன ஆயிற்று இவனுக்கு?

உடனடியாக மணீஷ் சமாளித்தான். “வாயுத் தொந்தரவு பல நேரங்கள்ல ஹார்ட் அட்டேக் மாதிரியே வந்து பயமுறுத்திடுதுஎன்று சொல்லிக் கொண்டே கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். எனக்கு இந்தப் பிரச்னை அடிக்கடி வரும்..... என்ன கேட்டீங்க?...

அவர் அவனைக் கூர்ந்து பார்த்தபடியே மறுபடியும் தன் கேள்வியைக் கேட்டார். முழுமையாக சுதாரித்திருந்த அவன் வாய்விட்டுச் சிரித்தான்.... காமிக்ஸ்ல வர்ற மேட்டரை எல்லாம் க்ரிஷ் ஆராய்ச்சிக்கு எடுத்துகிட்டிருப்பான்னு எப்படி சார் நினைக்கிறீங்க

செந்தில்நாதன் அவன் மீது வைத்த பார்வையை விலக்காமல் சொன்னார். “க்ரிஷ் கடைசியா கூகுள்ல தேடிப்படிச்ச விஷயங்கள்ல இதுவும் ஒன்னு. அதான்.....

மணீஷ் மனதில் மறுபடி கலவரம் தலையெடுத்தாலும் வேகமாக யோசித்ததில் க்ரிஷின் ஆராய்ச்சி அவர் சொல்வது போல இருக்க வழியில்லை என்று தோன்றியது. அதற்கான காரணங்களை அவரிடம் வெளிப்படையாகவே சொன்னான். “அவன் ஆராய்ச்சிக்கும் அந்த மலைக்கும் அமாவாசைக்கும் இடையே ஏதோ சம்பந்தம் இருக்கு சார். அதனால தான் அவன் அங்கே போயிருக்கிறான்.  மாயமா மறைகிற ஆராய்ச்சிக்கும் அந்த மலைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?
அவருக்கு அவன் சொல்வது சரியாகவே தோன்றியது. தலையசைத்து விட்டு அடுத்த கேள்வியை அவனிடம் கேட்டார். “க்ரிஷ் யாரையாவது காதலிக்கிறாரா?

சாதாரணமாக ஆமாம் அல்லது இல்லை என்று உடனே  சொல்லக்கூடிய பதிலைச் சொல்ல அவன் சில வினாடிகள் எடுத்துக் கொண்டு எச்சிலை விழுங்கி விட்டு “எனக்குத் தெரிஞ்சு இல்லை.....என்றான்.

அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டே அவர் கேட்டார். “அவருக்கு நீங்களும், ஹரிணியும் தான் நெருங்கிய நண்பர்கள்னு கேள்விப்பட்டேன்.... ஹரிணி அவருக்கு நண்பர் மட்டும் தானா இல்லை அவங்களுக்கிடையே காதலும் இருக்கா?

அவன் முகம் இறுகியது. “எனக்குத் தெரிஞ்சு நட்பு மட்டும் தான்என்று சற்று வேகமாகவே சொன்னான்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் அவன் ‘எனக்குத் தெரிஞ்சுஎன்று சொன்னதை அவர் மனதில் அடிக்கோடிட்டார். பிறகு அவனிடம் வேறு சில கேள்விகள் கேட்டு விட்டு அவர் கிளம்பினார். கிளம்புவதற்கு முன் “எனக்கு உங்கள் உதவி இனியும் தேவைப்படலாம். அப்படி தேவைப்பட்டால் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்....என்றார்.

மறுபடியுமா?என்று மனதில் வெடித்தாலும் ஓ கே சார். ஆனா அதுக்கு முன்னாடியே க்ரிஷ் கிடைச்சுடுவான்னு நம்பறேன்...என்று புன்னகையுடன் அவன் கூறினான்.

அவனுக்குப் பேசும் போது கூர்மையாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆளைப் பிடிக்கவில்லை. தர்மசங்கடமான கேள்விகள் வேறு.... அவர் போன பிறகு பஞ்சுத்தலையருக்குப் போன் செய்தான். “அந்த ஆளு இப்ப தான் போறார். எனக்கு சுத்தமா அந்த ஆள பிடிக்கல. கூர்மையா சந்தேகப்படற மாதிரியே பாக்கறார்

பஞ்சுத்தலையர் அவனிடம் சொன்னார். “அப்படிப் பார்க்கறது போலீஸ்காரன் புத்தி. அதை பெரிசா எடுத்துக்காதே. நீ மட்டும் அமைச்சர் மகனா இல்லாம இருந்தா இந்த மரியாதையும் இருந்திருக்காது. உன் மேலயே முழுசந்தேகம் இருக்கற மாதிரி தான் கேள்விகளும், தோரணையும் இருந்திருக்கும். அதை விடு. அவன் என்னவெல்லாம் கேட்டான். நீ என்னவெல்லாம் சொன்னேன்னு சொல்லு

அவன் எல்லாவற்றையும் சொன்னான். எல்லாம் கேட்டு விட்டு அவர் சொன்னார். “உன் ஃப்ரண்ட் நெஜமாவே மாயமா மறையற ஆராய்ச்சில ஜெயிச்சு மாயமா மறஞ்சிருக்க மாட்டானே... அந்த மலை, அமாவாசை, அந்த மாயமா மறையற ஆராய்ச்சி மூணுக்கும் இடையே ஏதாவது சம்பந்தம் இருந்து அது உனக்கும் எனக்கும் தெரியாம இருந்தா?

“அட நீங்க வேற ஏன் சும்மா பீதியை கிளப்பறீங்க?


வாரணாசியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து சேர்வதற்கு முன்பே அந்த மனிதர் பாம்பு கடித்து இறந்தவனுடைய முழுத்தகவல்களையும் பெற்று விட்டிருந்தார். இறந்தவன் வாடகைக் கொலையாளி என்றும் அவன் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் கொலை செய்வதில் வல்லவன் என்றும் மரணம் பாம்புக்கடியால் ஏற்பட்டது  என்று எல்லோரையும் நம்ப வைத்து விடுவான் என்றும் தகவல் கிடைத்தது. இது போல் பல கொலைகள் செய்திருக்கிறானாம்.... அந்தப் பாம்புக்கடியாலேயே அந்த வாடகைக் கொலையாளியும் செத்திருப்பது இயற்கையின் தீர்ப்பாகி விட்டது என்று எண்ணியவனாக அந்த மனிதர் மெலிதாய் புன்னகைத்தார்....

விமான நிலையத்தில் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர் பார்வையுடன் வெளியே வந்தார். வெளியே வந்தவர் தன் பார்வையைச் சுற்றிலும் ஒரேயொரு முறை சுழற்றினார். பெயரே இல்லாமல் ஒரு வெள்ளை அட்டையைத் தூக்கிப் பிடித்தபடி வெள்ளைச் சீருடையில் ஒரு ஆள் ஓரமாக நின்றிருந்ததைக் கவனித்து நேராக அவனருகே சென்றார்.  அந்த ஆள் அவர் அருகே சென்றதும் தலை குனிந்து வணங்கினார். அந்த மனிதன் லேசாகத் தலையசைத்தான். பின் இருவரும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதி நோக்கி நடந்தார்கள். ஒரு வெள்ளைக் கார் அருகே வந்ததும் அந்த வெள்ளைச் சீருடை ஆள் நின்று கார் சாவியை அந்த மனிதரிடம் நீட்டினான். வாங்கிக் கொண்டு லேசாக அந்த மனிதன் தலையசைத்தார். அந்தச் சீருடை ஆள் போய் விட்டான். அந்த மனிதர் அந்த வெள்ளைக்காரில் ஏறி ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் பார்வை அந்த இடத்தின் சூழலை வேகமாக அலசியது. பின் காரை நிதானமாகக் கிளப்பினார்.

கார் பல சாலைகளைக் கடந்து பின் ஓ எம் ஆர் சாலையில் நிதானமாகச் செல்ல ஆரம்பித்தது. அவர் கண்கள் யாராவது பின் தொடர்கிறார்களா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டன. இல்லை..... சில மைல்கள் பயணத்திற்குப் பின் கார் ஒரு பெரிய பழைய பங்களாவை அடைந்தது. அவர் காரில் இருந்து இறங்கிய போது பைஜாமா ஜிப்பா அணிந்திருந்த, தாடி வளர்த்திருந்த இளைஞன்  இரு கைகளையும் கூப்பிக் கொண்டே அந்த மனிதரை வரவேற்றான்.

அவனைப் பார்த்து அந்த மனிதர் மெலிதாகப் புன்னகைத்தார். அவன் அவரைப் பங்களாவிற்குள் அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்றமர்ந்ததும் அந்த மனிதர் சொன்னார். “நான் இனி சில காலம் இங்கேயே தங்க வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்....

பயபக்தியுடன் அவன் சொன்னான். “சந்தோஷம் மாஸ்டர். அதை நான் யூகிச்சு எல்லா ஏற்பாடும் செய்தாச்சு...”  பின் ஒரு அச்சிட்ட வெள்ளைத்தாளை அவரிடம் நீட்டினான். அதில் முப்பது பெயர்களும் அவர்கள் செல்போன் நம்பர்களும் இருந்தன. பெரிய பதவிகளிலும், அந்தஸ்திலும் இருந்த மனிதர்கள் அவர்கள். மேலோட்டமாய் அந்தத் தாளைப் பார்வையிட்ட அவர் அதை மடித்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். பின் கேட்டார். அந்த வாடகைக் கொலையாளியை அனுப்பினது யார்னு தெரிஞ்சுதா?

“கடைசியா அவன் அதிகம் பேசினது ஒருத்தர் கிட்ட தான். மந்திரி மாணிக்கத்தோட தாய் மாமன் அவர். பேர் சங்கரமணி. ஆனா எல்லாரும் கூப்பிடறது சகுனின்னு. ஆள் கேரக்டரும் அப்படி தான். வாடகைக் கொலையாளி வீட்டாளுகளுக்கு அவனோட மொபைல் போன் கிடைக்கல. ஆச்சரியம் என்னன்னா அந்தக் கொலையாளி செத்த பிறகும் அந்த மொபைல்ல இருந்து சகுனி செல்லுக்கு மூணு கால்ஸ் போனது தான்..... சகுனி அரண்டு போய் கால்ஸ ட்ரேஸ் பண்ணச் சொல்லியிருக்கார். அந்தக் கால்ஸ் அவரோட ஏரியாவுல இருந்தே தான் போயிருக்குன்னு பதில் வந்திருக்கு. இப்ப வீட்ட சுத்தி செக்யூரிட்டி போட்டிருக்கார் மனுஷன்....

மாஸ்டர் என்றழைக்கப்பட்ட அந்த மனிதர் மிகவும் கவனமாக அந்தத் தகவலைக் கேட்டார். ஒரு பெரிய நிகழ்ச்சி ரகசியமாய் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் திடீர் என்று உபகதையாய் இடையே புகுந்து என்ன நடந்திருக்கிறது என்றே தெரியாமல் திரும்பி வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்த போது வேடிக்கையாக இருந்தது.

அவங்க எதுக்கு அந்தப் பையன் க்ரிஷ்ஷ கொல்ல முயற்சி பண்ணினாங்கன்னு தெரிஞ்சுதா?

“இல்லை.... இத்தனைக்கும் ரெண்டு மந்திரி குடும்பங்களும் பல வருஷங்களா  நெருக்கமாத் தான் இருக்காங்க. மாணிக்கத்தோட பையன் மணீஷ் க்ரிஷோட நெருங்கின நண்பன்....

மாஸ்டர் சொன்னார். “அரசியல்வாதிகள் நெருக்கம் தண்ணில பாசி மாதிரி. எத்தனை வருஷமா பழகினாலும் வேர் பிடிக்காது.....

அவனும் சில காலமாகப் பல அரசியல்வாதிகள் கூடப்பழகி வருபவன். அவர் சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “மந்திரி மாணிக்கம் சிங்கப்பூர் போயிட்டு இன்னைக்குத் தான் திரும்பி வர்றார்....

“அந்த ஆள் எப்படி?

“அமுக்கமான ஆள்

“க்ரிஷோட அப்பா

“அவர் நல்ல மனுஷன்...

“அவங்களுக்கு க்ரிஷ் கிட்ட இருந்து ஏதாவது தகவல் வந்திருக்கா?

“இல்லை.... சி.எம். இதை ரகசியமா விசாரிக்க செந்தில்நாதன்கிற போலீஸ் அதிகாரிய நியமிச்சிருக்கார். அவர் திறமையானவர்....


இத்தனை பேரில் யார் மூலமாக களத்தில் இறங்குவது என்று மாஸ்டர் யோசிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

  1. சூப்பர். களம் மேலும் சூடுபிடிக்குது. அரசியல்வாதிகள் நெருக்கம் தண்ணில பாசி மாதிரி வர்ணனை ரசிச்சேன். இப்ப தமிழ்நாட்டு அரசியலுக்கு பொருத்தமான ஸ்டேட்மெண்ட் தான் இது.

    ReplyDelete
  2. Waiting for next Thursday.

    ReplyDelete
  3. சகுனி.... பஞ்சு தலையருக்கு பொருத்தமான பேர் தான் :-)... அவர்கள் இருவரும் மாமனும் மருமகனுமா....ஹரிணி க்ரிஷ் கூட பழகறது மணீஷிக்கு பிடிக்கலை போல... இவர்களுக்கு பெரிய motive ஏதும் இருக்கற மாதிரி தெரில... மாஸ்டர் தான் இந்த கதையின் மாஸ்டர்பீஸ் வில்லனோ?


    //அரசியல்வாதிகள் நெருக்கம் தண்ணில பாசி மாதிரி. எத்தனை வருஷமா பழகினாலும் வேர் பிடிக்காது.....// ஆழமான வரிகள்... ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க... இது சில சந்தர்ப்பவாத மனிதர்களுக்கும் பொருந்தும்...

    ReplyDelete