சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 27, 2017

இறைவனைக் காணும் திவ்யதிருஷ்டி!



கீதை காட்டும் பாதை 45

கீதையின் பதினோராம் அத்தியாயமான விஸ்வரூப சந்தர்சன யோகத்தின் துவக்கத்திலேயே அர்ஜுனன் தன் பேராவலை வெளிப்படுத்துகிறான்.

தாமரைக்கண்ணா! சகல பூதங்களின் தோற்றம், மறைவு இவைகளைப் பற்றியும் அழிவில்லாத உன் மகிமைகளைப் பற்றியும் விரிவாக நீ உரைக்க நான் கேட்டேன்.

பரமேஸ்வரா! உன்னைப் பற்றி நீ என்ன சொன்னாயோ அது அப்படித்தான்; வேறுவிதமாக இல்லை. ஆயினும் புருஷோத்தமா! உன்னுடைய ஈஸ்வர ரூபத்தைக் காண நான் விரும்புகிறேன்.

ப்ரபோ யோகேஸ்வரா! அந்த ரூபத்தை நான் பார்க்கலாம் என்று நீ எண்ணுவாயானால் அழிவில்லாத உன் வடிவத்தை எனக்குக் காட்டியருள வேண்டும்.

உடனிருப்பவன் இறைவன், அவனுடைய உண்மையான திருவுருவும் இந்த மனித உருவமல்ல என்பது உணர்ந்த பின் அர்ஜுனனுடைய இந்த ஆவல் எழுகிறது. அர்ஜுனன் யோகியல்ல. தலைசிறந்த பக்தன் என்றும் அவனைச் சொல்ல முடியாது. இந்த இரண்டுமே இறைவனைத் தரிசிக்க உதவுபவை. இந்த இரண்டுமே இல்லாத நிலையில் அந்த பரம்பொருளின் ஈஸ்வர ரூபத்தைக் காணும் தகுதி தனக்கு இல்லை என்கிற உணர்வு அவனிடம் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ‘அந்த ரூபத்தை நான் பார்க்கலாம் என்று நீ நினைத்தால் உன் ஈஸ்வர ரூபத்தைக் காட்டியருள வேண்டும்என்று கோரிக்கை விடுக்கிறான்.

கருணை மயமான ஸ்ரீகிருஷ்ணர் அவன் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அவர் கூறுகிறார்.

அர்ஜுனா! நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் உள்ள என் உருவங்களைப் பார். அவை பற்பல விதமாகவும், தெய்வீகமாகவும், பற்பல வர்ணனைகளைக் கொண்டதாகவும் இருப்பதைப் பார்.

என்னுடைய இந்த தேகத்திலேயே சராசரப் பிரபஞ்சம் முழுவதையும் இன்னும் நீ எதை எதைப் பார்க்க விரும்புகிறாயோ அவைகள் எல்லாவற்றையும் இப்போது பார்.

ஆனால் உன்னுடைய இந்தக் கண்களால் என்னைப் பார்க்க முடியாது. தெய்வீகமான பார்வையை உனக்குத் தருகிறேன். அதனால் என்னுடைய ஈசுவர சம்பந்தமான யோக மகிமையைப் பார்.

மனிதக் கண்களின் சக்திகளுக்கு எல்லைகள் உண்டு, வரம்புகள் உண்டு. கண்ணால் கண்டால் தான் நம்புவேன் என்று அவன் பிடிவாதம் பிடிக்க முடியாது. காற்றும் மின்சாரமும் அவன் கண்ணால் பார்த்து இருக்கிறது என்று முடிவு செய்வதில்லை. அவற்றின் செயல்திறன்களை வைத்தும், விளைவுகளை வைத்துமே அவன் அவை இருப்பதாக நம்புகிறான். இப்படி இயற்கையின் சக்திகளையே கூட அவனால் நேரடியாகக் காண முடியாத போது இறைவன் விஸ்வரூபத்தை அவனால் புறக்கண்களால் எப்படிப் பார்த்து விட முடியும்? எனவே அதைக் காணும் விசேஷ சக்தியை, திவ்ய திருஷ்டியை ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளிக்கிறார்.  

(இந்த திவ்ய திருஷ்டி மட்டுமல்ல எந்தப் பேருண்மையைக் காணவும், உணரவும் முடியும் பெரும் சக்தியையும் இறைவன் அளித்தால் ஒழிய ஒருவருக்குக் காணவோ, உணரவோ முடிவதில்லை. யாரெல்லாம் பேருண்மைகளை உணர்கிறார்களோ அவர்களெல்லாம் இறைவனால் ஆசிர்வதிக்கவும், அனுக்கிரக்கவும் பட்டவர்கள் என்பது பொருள்.)

வயலுக்குப் பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்ந்தது போல அர்ஜுனனுக்கு கிடைத்த அந்த மகத்தான வாய்ப்பு, திருதராஷ்டிரனுக்கு குருக்‌ஷேத்திரத்தில் நடப்பதை எல்லாம் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்த சஞ்சயனுக்கும் கிடைக்கிறது. தர்மாத்மாவும், புண்ணியாத்மாவுமான சஞ்சயன் திருதராஷ்டிர மன்னனிடம் மெய்சிலிர்த்து இப்படி வர்ணிக்கிறான்.

திருதராஷ்டிர மகாராஜனே! யோகங்களுக்கெல்லாம் பெருந்தலைவனான ஹரி இப்படிச் சொல்லி அர்ஜுனனுக்குத் தன்னுடைய ஜகதீஸ்வர ரூபத்தைக் காண்பித்தான்.

பல முகங்கள், பல கண்கள், பல அற்புதக் காட்சிகள், பல திவ்யாபரணங்கள், பல திவ்யாயுதங்கள், இவைகளைக் கொண்டதும், திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்ததும், திவ்யமான சந்தனத்தைப் பூசியதும், எல்லா ஆச்சரியங்களுக்கும் இருப்பிடமும், ஒளிவீசுவதும், காலத்தைக் கடந்ததும், எல்லாத் திக்குகளிலும் முகங்களையுடையதுமான தன் ரூபத்தைக் காட்டினார்.

ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில் கிளம்பினால் அது அந்த மஹாத்மாவினுடைய ஒளிக்குச் சமமாக இருக்கும்.

பலவிதமாகப் பிரிந்துள்ள உலகம் யாவும் அந்த தேவதேவனின் சரீரம் ஒன்றிலேயே இருப்பதை அர்ஜுனன் கண்டான்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். வார்த்தைகளுக்கு அடங்காத அற்புதங்களே ஆனாலும் அந்த பேரானந்த அனுபவத்தைப் பெற்றவனால், அறிந்த வார்த்தைகளால், முடிந்த வரை விவரிக்காமல் இருக்க முடிவதில்லை. கடலை, துளிகளின் உவமையினால் விளக்கி விளங்க வைக்க முடியுமா? ஆனாலும் முயற்சி செய்து வர்ணிக்கிறது மனித மனம்.

எத்தனை முகங்கள், எத்தனை உருவங்கள், எத்தனையெத்தனை காட்சிகள், எல்லைகள் இல்லாத பேராச்சரியங்கள் என்று இறைவனின் விஸ்வரூபம் விரிந்து கொண்டே போக மெய் மறந்து தரிசிக்கிறார்கள் அர்ஜுனனும், சஞ்சயனும். ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் தோன்றினால் அந்த ஒளி மகாத்மாவான ஸ்ரீகிருஷ்ணரின் ஒளிக்குச் சமமாக இருக்கும் என்று தனக்குத் தெரிந்த மட்டில் வர்ணிக்கிறான் சஞ்சயன்.  

பல கோடி கோடிகளாய் பிரிந்து வியாபித்திருக்கும் உலகங்கள் யாவும் தேவர்களுக்கெல்லாம் தேவனான ஸ்ரீகிருஷ்ணர் சரீரத்திலேயே இருப்பதை அர்ஜுனன் காண்கிறான். அனைத்துக்கும் மூலமான இறைவனிடத்தில் அனைத்தையுமே ஒரே சமயத்தில் காண முடிந்தால் பின் இந்த உலகத்தில் காண வேண்டியது என்ன இருக்க முடியும்?

வேறுபாடுகள் மாயையினால் உருவாக்கப்படுகின்றன. இறைவனை உணர்ந்தவர்கள் வேறுபாடுகளுக்குப் பின்னால் இருக்கும் ஒருமைப்பாட்டை உணர்கிறார்கள். எல்லாவற்றுக்கும் இறைவனே மூலம் என்றால் பயப்படவோ, கவலைப்படவோ என்ன இருக்கிறது?

பாதை நீளும்....


என்.கணேசன்

2 comments:

  1. வேற்றுமையில் ஒற்றுமையை காணச் செய்யும் வல்லமை , அவன் அருளினால் என்பதை தெளிவாகச் சொல்லியுள்ளீர்ககள். நன்றி , நல்ல பகிர்வு

    ReplyDelete
  2. Arputhamana pathuvu....arumaiyana vilakkam...super sir

    ReplyDelete