சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 2, 2017

இருவேறு உலகம் – 19


ணீஷிடம் ஹரிணி போன் செய்து பேசினாள். “என்னடா இது, க்ரிஷ் காணாம போயிட்டானாம். ஒரு போலீஸ் ஆபிசர் வந்து இப்ப தான் பேசிட்டு போறார். என்னடா ஆயிருக்கும்?

அவள் கவலை அவனுக்கு வலித்தது. “தெரியல ஹரிணி. அந்தப் போலீஸ் ஆபிசர் இங்கயும் வந்துட்டுப் போனார். கேள்விப்பட்டவுடன நானும் அதிர்ச்சி ஆயிட்டேன்.... என்ன நடந்துருக்கும்னு ஒன்னுமே புரியல. அந்தப் போலீஸ் ஆபிசர் இந்த விஷயத்த வெளிய சொல்ல வேண்டாம். மீடியாக்குத் தெரிஞ்சா அது துப்பறிய இடைஞ்சலா இருக்கும்னு வேற சொல்லிட்டுப் போனார்

“என் கிட்டயும் சொன்னார்..... கேள்விப்பட்டதுல இருந்து மனசே சரியில்ல....அவள் தன்னால் எந்த வேலையிலும் முழுமனதோடு ஈடுபட முடியவில்லை என்கிற வகையில் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள். ஆனால் அவன் காதில் எதுவும் விழவில்லை. அவள் க்ரிஷுக்காகக் கவலைப்பட்டுத் துடிக்கிற விதம், சொல்கிற வார்த்தைகள் எல்லாம் அமிலமாக அவன் இதயத்தை அரித்துக் கொண்டிருந்தது. அவள் தன் மன வேதனைகளை எல்லாம் ஒரு நல்ல நெருங்கிய நண்பனிடம் கொட்டி விட்ட திருப்தியில் பேச்சை முடித்தாள். ஆனால் அவன் மனதில் அதிருப்தி மலையாக உயர்ந்து அழுத்தியது....

செல்வச்செழிப்பில் பிறந்து வளர்ந்த அவனுக்குச் சின்ன வயதிலிருந்தே எந்தக் குறையும் தெரியாமல் அவன் தந்தை மாணிக்கம் வளர்த்தார். ஒரே மகன் மீது அவர் உயிரையே வைத்திருந்தார். அவனை ஊட்டி கான்வெண்டில் படிக்க வைத்தார். அவனும் பள்ளியில் ஒவ்வொரு தேர்விலும் முதல் மாணவனாகவே தேர்ச்சி பெற்று  வந்தான். பள்ளியில் அவன் நண்பர்களுக்கு இடையே இரண்டாம் இடத்துக்குத் தான் போட்டியே இருந்தது. முதலிடத்திற்கு வருவது மணீஷ் இருக்கும் வரை சாத்தியம் இல்லை என்ற சக மாணவர்கள் நம்பினார்கள். ஆசிரியர்கள் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். வீட்டில் அவன் பெற்றோர் பெருமிதம் கொண்டார்கள். மொத்தத்தில் வெற்றியின் உருவமாகவே அவன் வாழ்ந்தான். பழகும் போது தராதரம் பார்த்து மட்டுமே பழகுவான். தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்குபவர்கள், பணத்திலும் அந்தஸ்திலும் உயர்ந்தவர்கள் மட்டுமே அவன் நட்பு வட்டத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். அதிலும் பல தரங்கள் வைத்திருந்தான். சிலருக்கு புன்னகை மட்டுமே, சிலரிடம் சிறு பேச்சுகள் மட்டுமே, சிலரிடம் மட்டுமே அதிக நெருக்கம் போன்ற பலநிலைகள் இருந்தன.

அரசியலில் தன் தந்தைக்கு இணையான நிலையில் இருந்த கமலக்கண்ணன் குடும்பத்தைக் கூட அவன் தங்களுக்குச் சரிசமமாக நினைக்கவில்லை. அவன் பெற்றோர் இருவரும் பட்டதாரிகள். கமலக்கண்ணனும், பத்மாவதியும் பத்தாம் வகுப்பு தாண்டாதவர்கள். அரசியலுக்கு வரும் முன் கமலக்கண்ணன் சரியான வேலை எதுவும் இல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்தவர் என்று கேள்விப் பட்டிருந்தான். அந்த மனிதர் அதை வெளிப்படையாகவே வெட்கம் இல்லாமல் சொல்வதையும் கேட்டிருக்கிறான்.

ஆனால் அவனைப் போலவே க்ரிஷும் எப்போதும் முதல் மாணவனாகவே ஒவ்வொரு தேர்விலும் வருவது தெரிந்ததால் க்ரிஷ் அறிவு தனக்கு இணையாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியிருக்கிறது. மேலும் க்ரிஷிடம் எதைப் பற்றியும் பேச முடியும். எதையும் சீக்கிரமாகப் புரிந்தும் கொள்வான். ஆகவே ஓரளவாவது அவனுக்கு உண்மையான சரிசமமான நண்பன் க்ரிஷ் தான் என்பதை சிறுவயதிலேயே தீர்மானித்திருந்தான். ஆகவே விடுமுறை நாட்களில் சென்னை வரும் போதெல்லாம் அவன் க்ரிஷ் வீட்டுக்குப் போவான். அவனுடன் விளையாடுவான்.

ஆனாலும் மனதின் ஒரு மூலையில் ‘என்ன இருந்தாலும் க்ரிஷ் உள்ளூர் பள்ளியில் படிப்பவன். நான் ஊட்டி கான்வெண்டில் படிப்பவன்என்ற கர்வம் இருந்தது. க்ரிஷும் ஊட்டி கான்வெண்டில் படிக்க வந்தால் இரண்டாம் இடத்தைத் தான் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாக நினைத்தான். மாணிக்கம் தன் நண்பர் கமலக்கண்ணனிடம் க்ரிஷையும் ஊட்டி கான்வெண்டிலேயே சேர்த்து விடும்படி சில முறை வற்புறுத்தி இருக்கிறார். பள்ளியிலும் நண்பர்கள் சேர்ந்திருந்தால் வீட்டில் இல்லாத குறை ஓரளவு மகனுக்குக் குறையும் என்பது அவர் அபிப்பிராயமாக இருந்தது.  ஆனால் பத்மாவதி “நானெல்லாம் என் பிள்ளையை விட்டு இருக்க மாட்டேன்..என்று உறுதியாகச் சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

க்ரிஷின் அறிவைக் குறைத்து மதிப்பிட்டு விட்டோம் என்பது மணீஷுக்குப் புரிந்தது கல்லூரியில் சேர்ந்த பின் தான். க்ரிஷிடம் ஒரு பழக்கம் உண்டு. தன் நண்பர்கள் எந்த அறிவுநிலையில் இருக்கிறார்களோ அதே அறிவுநிலையில் இருந்து தான் எதைப் பற்றியும் பேசுவான். யாருக்குமே அவன் அவர்களை விட உயர்ந்தவன் என்கிற உணர்வு தன் பேச்சால் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நிலைப்பாடு அவனிடம் உறுதியாக இருந்தது.   அதனால் மணீஷிடமும் அவன் அப்படியே பழகி வந்திருக்கிறான்.

கல்லூரியில் அவனுடன் சேர்ந்து படிக்கும் போது தான் மணீஷுக்கு இந்த உண்மை புரிந்தது. முதல் நிலையிலேயே இருந்து பழக்கப்பட்ட அவன் ஐ ஐ டியில் வந்த பிறகு எப்போதுமே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டான். அவனும் மிகச்சிறந்த மாணவன், அறிவாளி என்றாலும் கூட க்ரிஷ் முன்னால் அவன் மங்கிப் போனான். க்ரிஷை ஆஹா ஓஹோ என்று கொண்டாடிய சில பேராசிரியர்களும், சக மாணவர்களும் மணீஷ் அறிவைக் கவனிக்க மறந்து போனார்கள். சில இடங்களில் க்ரிஷின் நண்பன் என்ற வகையிலேயே மணீஷை பலரும் அறிந்திருந்தார்கள். மணீஷுக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் சகிக்க வேண்டியதாக இருந்தது.

கிட்டத்தட்ட அவன் மனநிலையிலேயே இருந்த அவன் தந்தையும் மகன் இரண்டாம் இடத்துக்கு வந்து விட்டதை சகிக்க முடியாதவராக இருந்தார். அவர் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் அவர் திகைப்பை அவன் கல்லூரி சேர்ந்த சில மாதங்களிலேயே அவனால் உணர முடிந்தது. கல்லூரிக் காலத்தில் தான் அவன் தாயும் இறந்து போனாள். ஒன்றின் பின் ஒன்றாக வந்த சோதனைகள் எல்லாவற்றிலும் பேரிடியாக அவன் உணர்ந்தது ஹரிணி விஷயத்தில் தான்.

அழகான பெண், அறிவாளியான பெண், தைரியமான பெண், சுறுசுறுப்பும், துடிப்பும் நிறைந்த பெண், தானிருக்கும் இடத்தை கலகலப்பாக்கவும், சந்தோஷமானதாகவும் ஆக்க முடிந்த பெண் என பன்முகச் சிறப்பு கொண்ட ஹரிணி பழக ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே அவன் மனதில் இடம் பிடித்து விட்டாள். இத்தனைக்கும் அவள் அந்தஸ்தில் அவனுக்கு இணையானவள் அல்ல. கண்ணாடி அணிந்திருந்தாள். அதுவும் அவனுக்குப் பிடித்தமானதல்ல. ஆனால் அதையெல்லாம் அவன் மனம் பொருட்படுத்தவில்லை.

ஆரம்பத்தில் அவள் அவனிடம் தான் நட்பானாள். க்ரிஷ் பின்னர் தான் நட்பு வட்டத்திற்குள் வந்தான். ஆனால் க்ரிஷ் வந்த பிறகு அவள் அவனிடம் கூடுதல் நெருக்கமாக ஆரம்பித்தாள். க்ரிஷ் எல்லோரிடமும் நன்றாகப் பழகுபவனாக இருந்த போதும் மிக நெருக்கமாவதைத் தவிர்ப்பவன். அவனும் தன் வழக்கத்தை மீறி ஹரிணியிடம் நெருக்கமாக ஆரம்பித்தான். தன் கண் முன்னே இந்த நெருக்கம் வளர்ந்தது மணீஷ் இதயத்தில் ஈட்டியைச் சொருகுவது போல் இருந்தது.

ஹரிணியைப் பொருத்த வரை மணீஷ் நல்ல நண்பன். அவனை அந்த ஸ்தானத்திலேயே வைத்திருந்தாள். அவனிடம் பேசுவதையும் பழகுவதையும் எந்த விதத்திலும் அவள் குறைத்துக் கொள்ளவில்லை. ஆனால் க்ரிஷ் அவள் மனதில் தனியிடம் பிடித்துக் கொண்டது தெளிவாகவே மணீஷுக்குத் தெரிந்தது. அதற்கு காதல் என்று பெயரிட அவன் அவசரம் காட்டவில்லை. ஆனால் க்ரிஷுடன் ஹரிணி இருந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்குள் வார்த்தைகள் இல்லாமல் பார்வைப் பரிமாற்றங்களிலேயே இழையோடிய நெருக்கம் காதல் தான் என்று அடித்துச் சொன்னது. மற்ற எல்லாவற்றிலும் இரண்டாம் இடம் பிடிக்க ஆரம்பித்தது கூட அவனுக்கு வலிக்கவில்லை. உண்மையாகவே க்ரிஷ் ஜீனியஸ் , அதை மற்றவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்ற புரிதலை கஷ்டப்பட்டு அடைந்திருந்தான். ஆனால் காதல் விஷயத்திலும் தோற்றுப் போக மனம் சம்மதிக்கவில்லை.

அவன் இதயத்தின் ரணத்தை ஆற்றுவது போல் திடீரென்று க்ரிஷ், ஹரிணி இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் திடீரென்று அறுந்தது. என்ன காரணம் என்று இருவரும் சொல்லவில்லை. ஆனால் பார்வைகள் பேசிக் கொண்டது நின்று போய் விட்டது. மறுபடி சாதாரண நண்பர்கள் ஆக இருவரும் நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த முறை தான் அதிசயமாக க்ரிஷ் மணீஷிற்கும் பின்னால் தள்ளப்பட்டான். ஹரிணியும் க்ரிஷும் பேசிக் கொள்வது குறைந்து போனது. விதி தனக்கு சாதகமாக இயங்க ஆரம்பித்திருப்பது மணீஷுக்குப் பேரானந்தத்தைத் தந்தது.

க்ரிஷின் பழைய இடத்தை ஹரிணி மணீஷுக்குத் தந்து விடவில்லை. என்றாலும் பழகியவர்களில் முன்னிடத்தில் மணீஷ் இருந்தான். ஒருநாள் அவள் அவனைக் காதலிக்கவும் செய்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு உறுதியாக இருந்தது. அந்த ஒரு பொன்னாள் வருவதற்காக அவன் காத்திருந்தான்.

இப்போது க்ரிஷ் காணாமல் போனது கேட்டு ஹரிணி பதறிய பதற்றமும், துக்கமும் பார்க்கையில் மறுபடி அவன் காதல் கேள்விக்குறியாகியது. கண்களை மூடி நீண்ட நேரம் மணீஷ் யோசித்துக் கொண்டிருந்தான். எல்லாமே குழப்பமாக இருந்தது.....


ISTRAC  ஆராய்ச்சியாளன் வினோத்தும், பெண் விஞ்ஞானி உமா நாயக்கும் அனுப்பி இருந்த தகவலை வெறித்துப் பார்த்தபடி டைரக்டர் தன் புனே ஆபிசில் அமர்ந்திருந்தார்.  பாம்பு கடித்து செத்த அந்த வாடகைக் கொலையாளி குறித்து அவர்கள் சொன்ன தகவலுக்கு அவர் முக்கியத்துவம் தராதபடி காட்டிக் கொண்டாலும் இப்போது ஆராய்ச்சிக்களம், கொலை வழக்கின் களமாகவும் மாறி விட்டிருப்பதன் ஆபத்தை அவர் உணராமல் இல்லை. அதிகார வர்க்கம் ஆபத்தானது. சில விஷயங்கள் பிரச்னையாகும் போது பரிகாரத்திற்குப் பதிலாக அவர்கள் பலிக்கடாவைத் தான் தேடுவார்கள். அந்தப் பலிக்கடாவாக அவர் விரும்பவில்லை. அதனால் புதுடெல்லிக்கு நிலவரத்தைச் சொல்லி விடுவது பாதுகாப்பானது என்று முடிவெடுத்து உடனே போன் செய்தார்.  


செந்தில்நாதன் இருட்டுவதற்கு முன்பே அந்த மலைக்குப் போய்விட்டார். இருட்டும் வரை அந்த மலையை ஆராய்ந்தார். மலை உச்சியில் சின்னதாய் ஒரு கோயில், பெரிதாய் சில பாறைகள், வறண்ட தட்பவெப்பத்திலும் வளரும் மரங்கள், செடிகொடிகள்....  க்ரிஷ் சம்பந்தப்பட்ட ஏதாவது தடயம் அங்கு கிடைக்கிறதா என்று பார்த்தார். அப்படி எதுவும் கிடைக்கவில்லை....

இருட்டிய பின்னும் அங்கேயே அவர் தங்கினார். காரிருள் என்பதற்கு அர்த்தமாக இருந்தது அந்த இரவு. இந்த இரவிலாவது ஏதாவது செய்தியைச் சொல்லுமா இந்த மலை? இரவு நேரத்தில் காற்று அதிகமாகியது. அந்தப் பெருங்காற்று  அமானுஷ்யமான ஒலியோடு வந்தது. சாதாரண மனிதர்களை இந்த அமானுஷ்ய ஒலியே பயமுறுத்தலாம் என்று தோன்றியது. இந்த மலையைச் சுற்றிப் பேசப்பட்ட பழைய பேய்க்கதைகள் இந்த ஒலியை மையப்படுத்திப் புனையப்பட்டவை என்று தோன்றியது.

மலையுச்சியிலிருந்து கொண்டு அவர் அமைதியாக ஆகாய நட்சத்திரங்களை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கீழே பார்க்க ஆரம்பித்தார். தூரத்தில் நகர விளக்குகள் வைரத்துகள்களாக மின்னிக் கொண்டிருந்தன. நகரத்திலிருந்து இந்த மலைக்கு வரும் சாலையில் அதிக விளக்குகள் இல்லை. இருந்த சில விளக்குகளும் ஒன்றிரண்டு தவிர எரியவில்லை.....

திடீரென்று தூரத்தில் இருந்து ஒரு கார் அந்தச் சாலையில் மலையை நோக்கி வந்து கொண்டிருப்பது அவர் கவனத்தை ஈர்த்தது.  அவர் உஷாரானார்.

(தொடரும்)
என்.கணேசன்



2 comments:

  1. Your heroes are real heroes. They teach us a lot.

    ReplyDelete
  2. சுஜாதாMarch 2, 2017 at 7:13 PM

    செம விறுவிறுப்பு. க்ரிஷ் கேரக்டர் சூப்பர். மணீஷ் மனநிலை ரொம்ப நேச்சுரல். பல பக்கங்கள்ல இருந்தும் நீங்க பிசிறில்லாமல் கதையை நகர்த்தற விதம் பிரமிப்பா இருக்கு. இந்தக் கதை மத்தவற்றை விட டாப்ல போகும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete