ஜுலை 21 முதல் 31 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 159ல் எனது நூல்களை சிறப்புத்தள்ளுபடியுடன் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம்....

Friday, July 21, 2017

சென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 159ல் என் நூல்கள்!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

ஜுலை 21 முதல் 31 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடக்கும் புத்தகத்திருவிழாவில் என் நூல்கள் அனைத்தும் அரங்கு எண் 159 ல் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும். அருகில் இருக்கும் வாசக அன்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேண்டும் நூல்களை வாங்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேலதிக விவரங்களுக்கு -  பதிப்பாளரின் தொலைபேசி எண்.9600123146.

அன்புடன்
என்.கணேசன்.

Thursday, July 20, 2017

இருவேறு உலகம் – 39றுநாள் க்ரிஷ் கல்லூரிக்குப் போகவில்லை. அவள் முகத்தின் வலியைப் பார்க்கும் தெம்பை அவன் பெற்று விடவில்லை. திரும்பத் திரும்பப் பயிற்சிகள் மனதில் எடுத்துக் கொண்டு, சொல்லப் போனால் மனம் மரத்துப் போகும்படி செய்து கொண்டு, இரண்டு நாள் கழித்து தான் அவன் கல்லூரிக்கே போனான்.  ஒவ்வொரு நாளும் முதல் முறை சந்திக்கும் போது எப்போதுமே இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ளும். எத்தனையோ தகவல்கள் பரிமாறிக் கொள்ளும். சில வினாடிகள் கழிந்த பிறகு தான் மெல்ல விடுபடும். ஆனால் அன்று கல்லூரியில் அவளைப் பார்த்த போது அவன் மேலோட்டமாகவே பார்த்தான். இரண்டு நாட்கள் முன்பாவது ஆராய்ச்சியில் அவன் தன்னை மறந்து போனதாக அவள் நினைத்திருந்தாள். இன்று அதை நினைக்கவும் அவளுக்கு வழியில்லை. திகைப்புடன் ஒன்றும் புரியாமல் அவள் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையை படிக்காதது போல அவன் நகர்ந்தான்.  பிறகு அவன் பேசிய போது அவள் இறுக்கமான முகத்துடன் பதில் அளித்தாள். அவன் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இயல்பாகவே இருந்தான். அவள் வலியுடன் ‘என்ன ஆயிற்று உனக்கு?என்பது போல அவனைப் பார்த்த போது உள்ளே அவன் பெரும் சித்திரவதையை அனுபவித்தான். அந்தப் பார்வைக்குப் பதில் சொல்லாமல் இருப்பதை விட செத்தே போகலாம் என்று கூட அவனுக்குத் தோன்றியது. ஆனால் முகத்தை மிக இயல்பாக வைத்துக் கொண்டு மற்ற எல்லோரையும் போல் தான் அவளும் என்பது போல் நடந்து கொண்டான்.

வீட்டிற்கு வந்த பின் பல முறை அவள் படத்தைப் பார்த்து “என்னை மன்னிச்சுடு ஹரிணி. என்னை மறந்துட்டு யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு ஹரிணிஎன்று அழுதிருக்கிறான். சில நாட்கள் இரவு அவனால் உறங்க முடியவில்லை. அவன் சரியாகப் பேசவில்லை என்றானவுடன் ஹரிணி சற்று அதிகமாக மணீஷிடம் பேசினாள். மணீஷ் அவளுக்கு நல்ல கணவனாவான் என்று கூட க்ரிஷுக்குத் தோன்றியது. மணீஷுக்கு அவள் மீது அதிக ஈர்ப்பு இருந்ததை க்ரிஷ் கவனித்திருக்கிறான். ஆனால் இப்போதும் ஹரிணி எத்தனை அதிகம் பேசினாலும் அவனிடம் நண்பன் என்ற எல்லையை என்றுமே தாண்டத் தயாராக இருக்கவில்லை என்பது தூரத்திலிருந்து கவனிக்கையில் தெளிவாகத் தெரிந்தது. அவன் மனம் மேலும் ரணமானது. கடைசியில் ‘எல்லா மனக்காயங்களையும் காலம் ஆற்றி வைக்கும்என்ற ஒரு நம்பிக்கையில் தான் அவன் சிறிதாவது ஆறுதல் அடைந்தான்.

அதிகமாகக் கடவுளைக் கும்பிடாதவன் தினமும் “கடவுளே என் ஹரிணிக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுஎன்று மானசீகமாக வேண்டுவதை மட்டும் அவன் நிறுத்தவில்லை.....

வேற்றுக்கிரகவாசி அவனிடம் அடுத்த அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை தொடர்பு கொள்ளவில்லை. அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பு க்ரிஷின் லாப்டாப்பில் கேள்வி மின்னியது. “முடிவெடுத்து விட்டாயா?

அவன் மனப்போராட்டத்தையும், முடிவையும் கண்டிப்பாக வேற்றுக்கிரகவாசியால் அறிய முடிந்திருக்கும். ஆனாலும் கேட்கிறான் என்று நினைத்தவனாக க்ரிஷ் பதிலளித்தான். “முடிவெடுத்து விட்டேன். சம்மதம்

“மகிழ்ச்சி. அமாவாசை அன்று அதே மலையில் சந்திப்போம்என்ற பதில் மின்னியது.

அதோடு மாஸ்டருக்குக் கிடைத்திருந்த நிகழ்வலைகள் முடிந்து போயின. எதிரி அதற்கு மேல் இருந்த நிகழ்வலைகளை அழித்து விட்டிருந்தான். வேற்றுக்கிரகவாசி என்ற போர்வையில் எதிரி வந்ததால் தான் க்ரிஷ் எதிரி வலையில் விழுந்திருக்கிறான் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. எந்தப் புது அறிவையும் பேரார்வத்துடன் வரவேற்கும் க்ரிஷுக்கு ஒரு ஏலியனுடன் நட்பை விடக் கவர்ச்சிகரமான தூண்டில் வேறு இருக்க முடியாது. பூமி அழிவு, நல்லவர்கள் பொறுப்பு என்று கூடுதல் செண்டிமெண்டுகளையும் சேர்த்து எதிரி தன் வலையில் இழுத்து விட்டான். இனி எதிரி என்ன செய்வான்?.... பறவை வடிவம் எடுப்பது, வழக்கமான முறைகளில் அல்லாமல் கம்ப்யூட்டரில் தொடர்பு கொள்வது, பழைய தடய அலைகளை அழிப்பது மட்டும் அல்லாமல் இனி என்ன வித்தைகள் எல்லாம் எதிரி வைத்திருக்கிறானோ?

திடீர் என்று தன்னுடைய ஜாதகத்தை யாரோ ஒரு முதியவர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி ஒன்று மாஸ்டரின் மனத்திரையில் வந்து போனது. மாஸ்டர் திகைத்தார்...  அந்த முதியவரை இதற்கு முன் எப்போதும் பார்த்த நினைவில்லை..... யாரந்த ஆள்? ஏன் என் ஜாதகத்தைப் பார்க்கிறார்?


ஜாதக பலன்களை நான் உங்க முதலாளி கிட்ட நேரடியாய் தான் சொல்வேன். சம்மதமா?என்று கேட்ட சதாசிவ நம்பூதிரியிடம் மனோகரால் உடனே சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. “என் முதலாளியைக் கேட்டுச் சொல்கிறேன்என்று சொல்லி விட்டு வெளியே வந்து மர்ம மனிதனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

விலையைக் கூட்டிப் பாரேன்

“கோடி கொடுத்தாலும் அந்த ஆள் சொன்னதில் இருந்து மாறும் ரகம் அல்ல. இப்பவே பணத்துக்காக பார்க்க அந்த ஆள் ஒத்துக்கலை. விசேஷ விசித்திர ஜாதகம்னு படம் போட்டு பின் தான் ஒத்துக்க வெச்சிருக்கேன்

மறுமுனை பெருமூச்சு விட்டது. “நீ படம் போடவில்லை. உண்மையாகவே அந்த ரெண்டு ஜாதகமும் விசேஷ விசித்திர ஜாதகம் தான். அது சரி, நீ என்ன நினைக்கிறாய்? அந்த ஆள் என்னை நேரில் பார்த்து விட்டால் பின்னால் நமக்குப் பிரச்னை வர வாய்ப்பிருக்கா?

“அப்படி வர வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். அந்த ஆள் திங்கக்கிழமை சிவன் கோயிலுக்கும், சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கும் போறதைத் தவிர வேறெங்கேயும், யார் வீட்டுக்கும் போகிற ஆள் அல்ல. கோயில்லயும் யார் கிட்டயும் பேச மாட்டார். வீட்டுலயும் அவர் பேசறது குறைவு. ஆன்மீக புஸ்தகம் படிச்சுட்டு காலத்தை ஓட்டறவர்....

உன் முதலாளின்னு வேற யாரையாவது அனுப்பினா?

“என் முதலாளி ஜோதிடத்தைக் கரைச்சுக் குடிச்சவர்னு அவர் கிட்ட சொல்லியிருக்கேன்... அதனால ஜோதிடத்துல நல்ல ஞானம் இருக்கற ஆளை அனுப்பறதானா அனுப்பலாம். ஏன்னா அவர் ஜாதக சம்பந்தமான நுணுக்கங்கள் எதாவது பேசினா பதிலுக்கு சரியா  சொல்லத் தெரிஞ்ச ஆளா இருக்கிறது நல்லது....

ஒரு நிமிடம் யோசித்து விட்டு மறுமுனை சொன்னது. “வேண்டாம். நானே போறேன்....

மனோகர் மறுபடி சதாசிவ நம்பூதிரியிடம் வந்து பவ்யமாக நின்றான். “என் முதலாளி சரின்னு சொல்லிட்டார்...

சரி போய்ட்டு வியாழக்கிழமை சாயங்காலம் அவரைக் கூட்டிகிட்டு வாங்கோ

பணிவுடனே தலையாட்டி விட்டு இருபதாயிரம் ரூபாயை அவன் அவரிடம் நீட்டினான். அவர் அதை வாங்கவில்லை. “என் பிள்ளை கிட்டயே குடுத்துட்டுப் போங்கோ.என்றார்.

கீழே வந்து சங்கர நம்பூதியிரிடம் அந்த ஆள் அந்தப் பணத்தைத் தந்தான். “உங்கப்பா ஒத்துகிட்டார். இந்தப் பணத்தை உங்க கிட்டயே தரச் சொன்னார்.....

சங்கர நம்பூதிரி திகைப்புடன் பணத்தை வாங்கிக் கொண்டார். ‘இந்த ஆள் நிஜமாவே கைதேர்ந்த வியாபாரி தான். அவரையே ஒத்துக்க வெச்சுட்டானே!’


செந்தில்நாதன் இரண்டு நாட்கள் இரவு நேரத்தில் அந்த மலைப்பாதைக்குப் பிரிகிற தெருமுனையில் இருட்டில் நின்று கொண்டிருந்தார். மலையடிவாரத்தில் இப்போதும் அவர்கள் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றாலும் இந்த இடத்தில் சில மணி நேரங்கள் தடுப்புகள் வைத்து விலக்கிக் கொண்ட மனிதர்கள் பற்றி ஏதாவது புதிய தகவல் கிடைக்கும் வரை அவரால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

அந்த வழியாகப் போகிறவர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அவ்வப்போது தெரு விளக்கின் வெளிச்சத்துக்கு வந்து அவர்கள் தினமும் இந்த நேரத்தில் இந்த வழியாகப் போகிறவர்களா என்று கேட்டு, ஆமென்றால் அமாவாசை இரவு அன்று இங்கே ஏதாவது வித்தியாசமாகப் பார்த்தார்களா என்று விசாரித்தார். பழைய பதில்களே கிடைத்தன.

திடீரென்று வேறு ஒரு யோசனை வந்தவராய் அருகே இருந்த தொழிற்சாலைக்கே சென்று லேட் நைட் ஷிஃப்டிலிருந்து அந்த மலைப்பாதைப் பிரிவுப் பகுதியைத் தாண்டிச் செல்பவர்கள், லேட் நைட் ஷிஃப்டுக்கு அந்த வழியாக தொழிற்சாலைக்கு வருபவர்கள் யாரெல்லாம் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு அவர்களிடமும் அந்தப் பகுதியில் அமாவாசை இரவு ஏதாவது வித்தியாசமாய் பார்த்தார்களா என்று கேட்டார்.

அங்கும் பழைய பதில்களே கிடைத்தன என்றாலும் ஒரே ஒருவன் மட்டும் வித்தியாசமான தகவல் சொன்னான். “நான் இந்த லேட் நைட் ஷிஃப்டுக்கு வந்திட்டிருந்தப்ப வண்டிய ஒரு இடத்துல நிறுத்திட்டு தம்மடிச்சுட்டுப் போலாம்னு நினைச்சு பைக்க நிறுத்தினப்ப ஒருத்தன் வேகமா கார்ல க்ராஸ் பண்ணிட்டுப் போனான்.  என்ன இந்த வேகத்துல போறானேன்னு நினைச்சா ஒரு ரெண்டு நிமிஷத்துல இன்னொரு  காரும் அப்படியே வேகமா க்ராஸ் பண்ணிப் போச்சு...

“அந்த ரெண்டு காரையும் விவரிக்க முடியுமா?

“அத அவ்வளவு சரியா கவனிக்கல.....

அந்தக் கார்ல இருந்தவங்க பத்தி ஏதாவது சொல்ல முடியுமா?

“முதல் கார்ல ஓட்டிகிட்டுப் போனவன் மட்டும் தான் இருந்தான். இரண்டாவது கார்ல ரெண்டு பேர் இருந்தாங்க. ரெண்டு கார்ல போனவங்க முகமும் சரியா தெரியல. ஆனா டிரைவருக்குப் பக்கத்துல உட்கார்ந்திருந்தவர் முடி வெள்ளையா இருந்துச்சு. இந்தியன் சினிமால கமல் வெச்சிருந்தாரே. அந்த மாதிரி வெள்ளைமுடி...

“அந்த ஆளை நேர்ல பார்த்தா அடையாளம் காமிக்க முடியுமா?

“இல்லை சார். முடி தான் பளிச்சுன்னு தெரிஞ்சுதே தவிர முகம் அந்த இருட்டுல சரியாத் தெரியல....

செந்தில்நாதன் அந்த ஆளையே கூர்ந்து பார்த்துக் கேட்டார். “நீங்க இன்னைக்கு அந்த வழியா இங்கே வந்த மாதிரி தெரியலையே...

“மூணு நாளா நான் என் சகலை வீட்ல இருந்து வேலைக்கு வர்றேன் சார். அதனால அந்தப் பக்கமா வராமல் இந்தப்பக்கமா வந்துட்டுருக்கேன்....

இந்தியன் தாத்தா மாதிரி வெள்ளைமுடி இருக்கிற ஆட்கள் யாராவது தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று அவர் யோசித்துப் பார்த்தார். சடாரென்று நினைவுக்கு வந்தது சகுனி தான். மந்திரி மாணிக்கத்தின் மாமன்!...

(தொடரும்) 
என்.கணேசன்
(ஜுலை 21 முதல் 31 வரை சென்னை, இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 159 ல் என் நூல்கள் சிறப்புத் தள்ளுபடியுடன் கிடைக்கும். - என்.கணேசன்)

Monday, July 17, 2017

வூடூவுக்கு எதிரான விமர்சனங்கள்!


வூடூ பற்றிய சுவாரசியமான தகவல்கள் பலவற்றை இது வரை பார்த்த நாம் அதற்கு எதிராக வலுவாக சொல்லப்படும் விமர்சனங்களையும் கவனிக்காமல் விட்டால் வூடூவை முட்டாள்தனமாக நம்புகிற கூட்டத்தில் சேர்ந்து விட நேரிடும். எனவே அதையும் பார்ப்போம். 

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்த ராபர்ட் எல்.பார்க் (Robert L. Park) என்பவர் 2000 ஆம் ஆண்டு எழுதிய வூடூ அறிவியல்: முட்டாள்தனத்தில் இருந்து மோசடிக்கான பாதை (Voodoo Science: The Road from Foolishness to Fraud) என்ற நூலில் வூடூவை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்த அறிஞர்களை சாடியிருக்கிறார். அப்படி அறிவியல் ரீதியான அற்புதங்கள் இல்லவே இல்லை என்று பல உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார். பலரும் பார்க்க விரும்பியதையே பார்த்து அதற்கு சாமர்த்தியமாக அறிவியல் சாயம் பூசுகிறார்கள் என்பது அவரது வாதமாக இருந்தது. ஆனால் அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் “அவர் பார்க்க விரும்பாததைப் பார்க்கவில்லை. சில குறிப்பிட்ட நிகழ்வுகளையும், தகவல்களையும் அலசியிருக்கிறாரே ஒழிய வூடூவின் அனைத்து அம்சங்களையும் திறந்த மனதுடன் ஆராயத் தவறிவிட்டார்என்று அவரைக் குற்றம் சாட்டுகிறார்கள்.     

ராபர்ட் பார்க்கைப் போலவே வால்டர் பி. கேனன் (Walter B. Cannon) என்ற ஆராய்ச்சியாளர் 1942 ஆம் ஆண்டு வூடூ சாவு (Voodoo’ Death) என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். அதில் வூடூ சாவுகள் சிலவற்றை ஆராய்ச்சியில் எடுத்துக் கொண்டு அந்த சாவுகள் வூடூ சக்திகளால் ஏற்பட்டவை என்பதை விட வூடூ குறித்து மக்கள் மனதில் இருந்த பயத்தினால் ஏற்பட்டவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். அவர் காலத்தில் மருத்துவ விஞ்ஞானம் இன்றைய அளவு முன்னேறி இருக்கவில்லை என்றாலும் அவர் அன்று அனுமானித்தவை சரியே என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர் எடுத்துக் கொண்ட நிகழ்வுகளின் அலசலில் அவருக்குப் புரியாத சில அம்சங்களுக்கு இன்றைய விஞ்ஞானம் பதிலை எட்டியிருக்கிறது என்பதை இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வூடூ மரணம் குறித்து வால்டர் பி. கேனன் மற்றும் இன்றைய மருத்துவர்கள் கருத்துக்கு ஆதாரமாக எண்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ந்யூ சயிண்டிஸ்ட் (New Scientist) என்ற பத்திரிக்கை 2009 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டிருக்கிறது. அந்த சம்பவத்தை நான்கு மருத்துவர்கள் நேரடி சாட்சிகளாகக் கண்டிருந்து அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த சுவாரசியமான உண்மை நிகழ்வைப் பார்ப்போம்.

அமெரிக்காவில் அலபாமாவின் ஒரு மயானத்தில் ஒரு நள்ளிரவில் வான்ஸ் வேண்டர்ஸ் (Vance Vanders) என்பவருக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு சூனியக்காரன் ஒரு பாட்டிலில் வைத்திருந்த நாற்றமெடுத்த ஒரு திரவத்தை அவர் முகத்தருகே கொண்டு வந்து ஊதி “இனி நீ சில நாளில் இறந்து விடுவாய். யாருமே உன்னைக் காப்பாற்ற முடியாது” என்று சொல்லி விட்டான். அவர்களுக்குள் முன் பகை எதாவது இருந்ததா, ஏன் அவன் அப்படிச் செய்தான் என்ற தகவல்கள் அந்தப் பத்திரிக்கையில் தரப்படவில்லை.

வீட்டுக்கு வந்த வான்ஸ் வேண்டர்ஸ் படுத்த படிக்கையாகி விட்டார். அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. மிகவும் ஒல்லியாகி விட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு போனார்கள் எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளில் ஒரு பிரச்னையும் தெரியவில்லை. மருத்துவர்களே குழம்பினார்கள். நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டே வந்த வேண்டர்ஸ் கிட்டத்தட்ட இறந்தே போய் விடுவார் என்ற நிலை வந்து விட்டது. ”காரணம் இல்லாமல் இப்படியாக வாய்ப்பே இல்லையே, இது மருத்துவத்திற்கே சவாலாக இருக்கிறதே” என்று ட்ரேடன் டொஹெர்ட்டி (Drayton Doherty) என்ற தலைமை மருத்துவர் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய போது வேண்டர்ஸின் மனைவி டொஹெர்ட்டியிடம் அலபாமா மயானத்தில் சூனியக்காரன் ஒருவன் சூனியம் செய்த விவரத்தைத் தயக்கத்துடன் தெரிவித்தார்.

டொஹெர்ட்டி மனித மனத்தையும் அதன் நம்பிக்கைகளின் வலிமையையும் நன்றாக உணர்ந்தவர். அவர் ஆழமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் அவர் வேண்டர்ஸின் படுக்கைக்கு அருகே அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்தார். அவர்களிடம் பரபரப்புடன் சொன்னார். “நேற்று இரவு அந்த சூனியக்காரனை நான் தந்திரமாக அதே மயானத்திற்கு வரவழைத்தேன். அவன் கழுத்தை நெறித்து ஒரு மரத்தோடு அவனை நசுக்கி நிறுத்தி வைத்துக் கேட்டேன். “நீ வேண்டர்ஸுக்குச் செய்த சூனியம் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? என்று கேட்டேன். அவன் உண்மையைக் கக்கி விட்டான். அவன் அப்படி ஊதிய போது சூனிய மந்திரத்தைச் சொல்லி ஒரு பல்லியின் கால்களை வேண்டர்ஸின் வயிற்றில் தடவி இருக்கிறான்.  அந்த சூனியப் பல்லியின் முட்டை ஒன்று வேண்டர்ஸின் வயிற்றிற்குள் போயிருக்கிறது. அந்த முட்டை பொறித்து வேண்டர்ஸின் வயிற்றில் பல்லி உருவாகி அவர் உடலின் உட்பகுதிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதாம்....

வேண்டர்ஸின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள் என்றால் வேண்டர்ஸ் நிலைமை எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம். மிக பலவீனமான நிலையிலும் அவர் வாயைப் பிளந்தார்.

டொஹெர்ட்டி சொன்னார். “இவரைப் பிழைக்க வைக்க ஒரே வழி அந்தப் பல்லியை வெளியே எடுப்பது தான்.”  குடும்பத்தினர் சம்மதித்தார்கள்.   

டொஹெர்ட்டி ஒரு ஊசியை வேண்டர்ஸுக்குப் போட்டார். அடுத்த சில நிமிடங்களில் வேண்டர்ஸ் வாந்தியெடுக்க ஆரம்பித்து விட்டார். அவரால் வாந்தியை சிறிதும் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லோரும் வேண்டர்ஸையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் யாரும் பார்க்காத தருணத்தில் முன்பே ஒரு கருப்புப் பையில் கொண்டு வந்திருந்த பச்சை நிறப் பல்லியை வாந்தி வெள்ளத்தில் நழுவ விட்டார்.

பின் உற்சாகத்துடன் கத்தினார். “வேண்டர்ஸ் உங்கள் வயிற்றில் என்ன இருந்திருக்கிறது என்று பாருங்கள். உங்கள் உடலில் இருந்து சூனியம் வெளியேறி விட்டது”.  வேண்டர்ஸ் பேராச்சரியத்துடன் கண்களைத் திறந்து பலவீனமாக அந்தப் பல்லியைப் பார்த்தார். பின் மிகவும் களைப்புடன் கண்களை மூடிய அவர் நிம்மதியாக உறங்கினார். மறு நாள் தான் கண் விழித்தார். பின் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. மருந்துகளும், ஒழுங்காய் உணவு உட்கொண்டதும் அவரைப் பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்ப வைத்தது. ஒரு வாரத்தில் வீடு திரும்பினார்.

டொஹெர்ட்டி தந்திரமாய் அந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கா விட்டால் வேண்டர்ஸ் வீடு திரும்புவதற்குப் பதிலாக மயானத்திற்கே சென்று புதைக்கப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. மனித மனதில் பயம் ஆழமாக வேரூன்றி விடும் போது அந்தப் பயமே ஒருவரை மரணம் வரை அழைத்துச் செல்ல வல்லது என்பதற்கும், அந்தப் பயம் வேரோடு அழிக்கப்பட்டு நம்பிக்கையை உணர்ந்தால் அதுவே அவரைக் காப்பாற்றி விடுகிறது என்பதற்கும் இதுவே நல்ல உதாரணம்.

இந்த அடிப்படையில் பார்க்கையில் வால்டர் பி கேனன் வூடூ சாவுகள் குறித்து எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் ஆதாரமற்றவை அல்ல என்பதை நம்மாலும் உணர முடிகிறது.  வூடூ சூனியம் வைத்த பின் இறப்பு நிச்சயம் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கையில் அவன் நம்பிக்கையே அவனைச் சாகடிக்க ஆரம்பித்து விடுகிறது. அவன் மரணத்திற்காகக் காத்திருக்கையில் அவனைச் சுற்றி இருப்பவர்களும் நம்ப ஆரம்பித்து இறுதிச்சடங்குகளுக்குக் கூட ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டே இருக்கும் அந்த நபர் பிழைக்க வழி இருக்கிறதா என்ன?

வூடூ சாவுகள் குறித்து தென்னமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் வெளிவந்த செய்திகள் எல்லாம் வூடூ சக்தியின் விளைவே என்று சொல்ல முடியாது என்றும் அவை சாதாரண விஷமூட்டப்பட்டதன் விளைவாகக் கூட இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். அக்காலங்களில் வூடூ சாவுகளுக்கு முறையான பிரேத பரிசோதனைகள் கூட சரியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்ததால் பல கொலைகள் அடையாளம் காணப்படாமலே போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 

இது போன்ற காரணங்களால் வூடூ குறித்து எதிர்மறையான கருத்துகள் சமூகத்தில் நிலவி வருகின்றன. அதற்கேற்றாற் போல் வில்லியம் சீப்ரூக் (William Seabrook) எழுதிய மேஜிக் ஐலண்ட் போன்ற நாவல்களும், ஜேம்ஸ் பாண்ட் படம் லிவ் அண்ட் லெட் டை (Live and Let Die) போன்ற திரைப்படங்களும் வூடூவைத் தவறானபடியாகவே சித்தரிப்பதும் வூடூ பற்றிய சந்தேகங்களை வளர்க்கின்றன. சரி அப்படியானால் உண்மை தான் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.

- என்.கணேசன்

- நன்றி: தினத்தந்தி 16.5.2017

Thursday, July 13, 2017

இருவேறு உலகம் – 38டபடக்கும் இதயத்துடன் க்ரிஷ் கேட்டான். என்ன நிபந்தனை?

“உன் உணர்வுநிலையின் உள்ளே நுழைய என்னை அனுமதிக்க வேண்டும்...

எனக்குப் புரியவில்லை

உன் கம்ப்யூட்டரில் புதிய சாஃப்ட்வேர் போட்டுக் கொள்வது போலத் தான் இது....

“அதை எப்படிச் செய்வது....

“அதை நான் செய்து கொள்கிறேன். ஆனால் மன அளவில் உன் எதிர்ப்பு சிறிதளவு இருந்தாலும் என்னால் உன் மனதுக்குள் புக முடியாது...

மனிதனின் மனம் அவனுடைய தனிச் சொத்து. அவன் அந்தரங்கமாய் நினைக்கும் விஷயங்களை அடுத்தவர் புகுந்து காண்பதை எப்படி சகிக்க முடியும் என்று க்ரிஷ் யோசித்தான்.

அதற்கு உடனே வேற்றுக்கிரகவாசியின் மறுமொழி வந்தது. நீ நினைப்பதை என்னால் இப்போதும் அறிய முடியும். ஆனால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள உன் உணர்வுநிலை போதாது. அதற்கு உனக்குக் கூடுதல் திறன் தேவை. அதற்குத் தான் உன் அனுமதி கேட்கிறேன். அதற்கு அனுமதி தந்தாயானால் இந்தக் கம்ப்யூட்டர் இல்லாமலேயே நாம் இருவரும் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். 

க்ரிஷ் யோசித்தான். எல்லாம் மாயாஜாலக்கதை போல் இருக்கிறதே!

உடனே மறுமொழி வந்தது. “இது எதுவுமே மாயாஜாலம் அல்ல. உங்களுக்குப் புரியாத இன்னொரு இயற்கை விதியே. இதை உங்கள் சித்தர்களும், யோகிகளும் அறிந்திருந்தார்கள். இப்போதும் சில அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் உன்னிடத்தில் இணைக்கப் போவது, உங்கள் பாஷையில் சொன்னால் மிகவும் அட்வான்ஸ்டு வெர்ஷன்....

க்ரிஷ் கேட்டான். “நாம் இருவரும் ஏன் அப்படிப் பேசிக்கொள்ள வேண்டும்?

மிகவும் வெளிப்படையாக, தயக்கமில்லாமல் அவன் கேட்டவுடன் வேற்றுக்கிரகவாசி சிறிது யோசித்தது போலிருந்தது. பின் பதிலுக்கு ஒரு கேள்வி வந்தது.   

“உன் பூமி அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது தெரியுமா?

அழிவுப்பாதை என்றதும் க்ரிஷ் மனதில் உடனே நினைவுக்கு வந்தது அணு ஆயுதங்கள் தான். பயன்படுத்த மாட்டோம் என்று எல்லா முக்கிய நாடுகளும் சத்தமாகச் சொல்கின்றன. ஆனால் எல்லா நாடுகளும் அது குறித்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. பயன்படுத்தப் போகாத ஒன்றிற்கு ஆராய்ச்சிகள் எதற்கு?

அவன் எண்ணி முடிவதற்குள் வேற்றுக்கிரகவாசியின் கருத்து லாப்டாப்பில் மின்னியது. “பிரச்னை அணு ஆயுதங்களில் இல்லை. அழிவுக்கான சாத்தியக்கூறுகளில் ஒன்று தான் அணு ஆயுதங்கள். இன்னும் நீ ஆழமாய்ப் போக வேண்டும். அதற்காகத் தான் நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.....

க்ரிஷ் கேட்டான். “பூமி அழியப் போவதில் வேற்றுக்கிரகவாசிக்கு என்ன அக்கறை?

இந்த இடத்தில் மாஸ்டருக்கு க்ரிஷை மெச்சாமல் இருக்க முடியவில்லை. அவனைப் பொருத்த வரை எதையும் வெளிப்படையாகவும், தயக்கமில்லாமலும் கேட்டிருக்கிறான். நாம் இருவரும் ஏன் அப்படிப் பேசிக் கொள்ள வேண்டும்?என்று கேட்டதும் சரி இதில் உனக்கு என்ன அக்கறை?என்று கேட்டதும் சரி பளார்கேள்விகள் தான். ஆனால் எதிரி அவனைக் கச்சிதமாக அறிந்து எல்லாவற்றிற்கும் தயாராகத் தான் வந்திருக்கிறான்....

“நீங்கள் அழியப் போகிற உயிரினங்கள் என்று சில விலங்குகளை காப்பாற்ற சகல முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே. ஏன்? மனிதன் எதற்கு ஏதோ சில விலங்குகள் அழிவதற்கு வருத்தப்பட வேண்டும்? ஏன் அவற்றைக் காப்பாற்றவும் பெருக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டும்?

க்ரிஷ் ஒரு கணம் யோசித்து விட்டுக் கேட்டான். “சரி, இதில் என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? நான் என்ன செய்ய முடியும்?

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும் அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது...

க்ரிஷுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பல சமயங்களில் உண்மைக்கு மறுமொழி மௌனமாகவே அல்லவா இருக்கிறது.

வேற்றுக்கிரகவாசி கேட்டான். “உன் உள்ளுணர்வில் புக இப்போதாவது என்னை அனுமதிக்கிறாயா?

உடனே ஆமாம், இல்லை என்று சொல்வதில் எப்போதுமே சிக்கல் உண்டு என்பதால் க்ரிஷ் எச்சரிக்கையோடு சொன்னான். “எனக்கு யோசிக்க சிறிது காலம் வேண்டும்

“யோசி. அடுத்த அமாவாசைக்கு முன் ஒரு முடிவுக்கு வா. நீ சரி என்றால் நான் சில மாதங்கள் இந்தப் பூமியில் இருப்பேன். மாட்டேன் என்றால் அடுத்த அமாவாசை அன்றே போய் விடுவேன்.... இனி திரும்ப மாட்டேன்

“ஏன்?

“அழியப்போகும் பூமியில் அதிக காலம் தங்குவதில் அர்த்தமில்லை..... உனக்கு சம்மதம் என்றால் அடுத்த அமாவாசை அன்று இந்த மலைக்கே திரும்பி வா? இல்லை என்றால் வீட்டில் இருந்தே உன் லாப்டாப்பில் தெரிவித்தால் போதும்....  நான் கிளம்பட்டுமா?

அடுத்த கணம் தீப்பந்தமாய் ஒரு வினாடி தோன்றிய ஒளி மறுகணம் மறைந்து கரிய பெரிய பறவை பறக்க ஆரம்பித்தது தெரிந்தது. அந்தக் கரிய பறவை போவதையே பிரமிப்போடு பார்த்து நின்று கொண்டிருந்த க்ரிஷ் சில வினாடிகளில் அது இருட்டில் கரைந்து காணாமல் போன பிறகு களைப்புடன் கீழே சாய்ந்தான். எல்லாமே கனவு போலவும், கற்பனை போலவும் இருந்தது.

தொடர்ந்த நாட்களிலும் க்ரிஷால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. முதலில் அவனுக்கு இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதையே கூட ஜீரணிப்பதில் சிறிது சிரமம் இருந்தது. அவன் ஏலியன்ஸ் பற்றி இது வரை கிடைத்திருக்கும் ஆதாரங்களைத் தேடித் தேடிப் படித்தான். எதுவுமே அவன் அனுபவம் போல் இல்லை. வேற்றுக்கிரகவாசி சொன்னதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அவன் நினைவில் பதிந்திருந்தது. திரும்பத் திரும்ப யோசித்தான். முன்பின் தெரிந்தராத அந்த சக்தி ஏதோ ஒரு சாஃப்ட்வேரைஅவனுக்குள் புகுத்த அவன் அனுமதிக்க வேண்டுமா? அது அதோடு நிற்குமா? அதன் பின் அவனுக்கு முழு சுதந்திரம் இருக்குமா? முக்கியமாய் அவன் அவனாக இருக்க முடியுமா? எதற்கும் உத்திரவாதமில்லை.

அம்மாவும், அப்பாவும் அடிக்கடி சொல்லும் அவனுக்கு ‘கண்டம்இருக்கும் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கண்டத்தைக் கொண்டு வருவதே அந்த வேற்றுக்கிரகவாசியாக இருக்கலாமோ?  

இந்த எண்ணத்தில் விடாப்பிடியாக நின்று யோசித்து முடிவெடுத்திருந்தால் கண்டிப்பாக க்ரிஷ் ஆபத்திலிருந்து தப்பித்திருப்பான் என்று மாஸ்டர் நினைத்தார். ஆனால் விதி வலியதாக இருந்ததால் க்ரிஷ் வேறு பலவும் யோசித்தான்.

புதிய அனுபவங்கள், புதிய சாதனைகள் காணாத வாழ்க்கையில் அர்த்தம் என்ன இருக்கிறது? எல்லைகளை நீட்டிக் கொண்டு போகாமல் ஒவ்வொரு கணமும் உண்மையாக வாழாமல் பயந்து பயந்து சாவதிலும், நேற்றைய சாதனைகளிலேயே திருப்தி அடைந்து தேக்கநிலை வாழ்க்கை வாழ்வதிலும் என்ன பெருமை இருக்கிறது.  ஒரு ஏலியனின் தொடர்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அதன் மூலம் புதிய பரிமாணங்களைக் காணும் வாய்ப்பு யாருக்கு வாய்க்கும். இதை எல்லாம் விட்டு விட்டு பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடிவெடுத்தால் வாழ்க்கையில் பாதுகாப்பு இருக்கலாம், நிறைவு இருக்குமா? ஒரு பொன்னான வாய்ப்பை இழந்து விட்டோமே என்ற ஒரு ஏக்கம் இருந்து கொண்டே அல்லவா இருக்கும்? பரமேசுவரப் பணிக்கர் கணித்தது போல அவனுக்கு மரணமே வந்தால் தான் என்ன?  சாகச முயற்சியில் செத்தால் தான் என்ன? என்றேனும் ஒரு நாள் எல்லோரும் சாக வேண்டியவர்களே அல்லவா? கடைசியில் பிறந்ததற்கு புதிய பரிமாணங்களையும், புதிய அனுபவங்களையும் பெற்றுவிட்டு மடிவதே உத்தமம் என்று தோன்றியது.

இந்த எண்ணம் வலுப்பட்ட போது அவன் குடும்பமும், ஹரிணியும் தான்  அதற்கு எதிரணியில் அவன் மனதில் இருந்தார்கள். அவர்களுடைய துக்கம் தான் அவனை நிறைய யோசிக்க வைத்தது. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் உதய் இருக்கிறான். துக்கப்படும் நாட்கள் அதிகமானாலும் ஒருநாள் அவர்கள் அவன் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறுவார்கள். உதய்க்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்தால் பேரக்குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பிக்கும் போது அவர்கள் மனக்காயம் கண்டிப்பாக ஆறும். உதயும் தன் குடும்பம், குழந்தைகள் என்று ஆனவுடன் கண்டிப்பாய் தம்பியை நினைப்பது குறைந்து போகும். ஆனால் ஹரிணி? அவன் அவளை அறிவான். அவள் கண்டிப்பாக இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டாள். அவன் மனதில் அவளைத் தவிர வேறொருத்திக்கு எப்படி இடம் தர முடியாதோ அதே போல் அவளாலும் அவனைத் தவிர வேறொருவனுக்கு இடம் தர முடியாது.  அவன் அறிவான். அவள் வாழ்க்கையில் நிரந்தர வெறுமை தங்குவதை மட்டும் தான் அவனால் சகிக்க முடியவில்லை.

பல ஆழமான சிந்தனைகளுக்குப் பின் தான் அவள் மனதில் தன் இடத்தை வலுவாக்காமல், அழிக்கும் முடிவை எடுத்தான். அவள் அவன் வீட்டுக்கு வந்த நாளில் அலட்சியப்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது போல் காட்டிக் கொண்டான். அவள் அவமானத்தை உணர்ந்தவளாய் அவன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது அவன் இதயத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எதிலேயோ மூழ்கி இருப்பதாய் காட்டிக் கொள்வதற்கு அவன் படாதபாடு பட்டான். பதினைந்து நிமிட அலட்சியத்திலேயே அவள் போக வேண்டும் என்று எதிர்பார்த்தான். பாவம் அவள் மிக நல்லவள். அவன் மேல் இருந்த காதல் காரணமாக மேலும் தங்கினாள். ஒவ்வொரு வினாடியும் அவள் உணர்ந்த வேதனைக்குப் பத்து மடங்கு அதிக வேதனையை அவன் அனுபவித்தான்.  

ப்ளீஸ் ஹரிணி போயிடு....என்று ஒரு மணி நேரம் கழிந்த பின் க்ரிஷ் மனதினுள் கதற ஆரம்பித்தான். ஆனால் அவள் அதற்கு மேலும் ஒரு மணி நேரம்- அறுபது நிமிடம்- 3600 வினாடிகள் தங்கி அவன் இதயத்தைப் பிழிந்து விட்டுத் தான் போனாள். அவள் போனவுடன் கதவைச் சாத்திக் கொண்டு அவன் நாள் முழுவதும் அழுதான்.

காதல், லௌகீக வாழ்க்கை என்று எதிலும் சிக்காமல் வாழ்ந்த மாஸ்டருக்கே அவன் அழுத காட்சியை மறு ஒளிபரப்பில் பார்த்த போது மனம் உருகியது. காதலைக்கூடத் தியாகம் செய்து எதிரியிடம் ஏமாந்து விட்டாயே க்ரிஷ்!

(தொடரும்)

என்.கணேசன் 

Monday, July 10, 2017

விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி?

சமுத்திரம் அலைகளை இடைவிடாது உருவாக்குவது போல சமூகம் விமர்சனங்களை இடைவிடாது உருவாக்கிக் கொண்டே இருக்கும். அதனால் விமர்சனங்களில் இருந்து நாம் தப்பி விட முடியாது. இந்த விமர்சனங்கள் இனிமையானதல்ல என்றாலும் சந்தித்தே அல்லவா ஆக வேண்டும். சரியாக விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி? பார்ப்போம்

Thursday, July 6, 2017

இருவேறு உலகம் – 37


ந்த மலையின் பெயர் க்ரிஷின் லாப்டாப்பில் மின்னிய போது அவன் மனம் அந்த மலை பற்றிக் கேள்விப்பட்ட வினோதமான, அமானுஷ்யமான செய்திகளுக்குத் தாவி விட்டு மீண்டது. இந்த அமானுஷ்ய மனிதன் இதற்கு முன்னும் அந்த மலைக்கு வந்திருக்கலாம்.....

“அந்த மலை பற்றி கேள்விப்பட்ட செய்திகளுக்கெல்லாம் காரணம் நீங்கள் தானா?என்று க்ரிஷ் கேள்வி எழுப்பினான்.

“ஒன்றிரண்டை மட்டும் தான் அங்கிருந்தவர்கள் என்னால் கண்டார்கள். மீதி எல்லாம் மற்றவர்கள் தாங்களாக உருவாக்கியவை. அதில் என் பங்கு எதுவுமில்லைஎன்ற பதில் வந்தது. அப்படியானால் இதற்கு முன் அந்த ஆள் அங்கு வந்திருப்பது உண்மை....

“அது தான் உங்கள் இருப்பிடமா?

“நான் சிலகாலமாய் அவ்வப்போது வரும் இடம்.

“அப்படியானால் உங்கள் நிரந்தர இருப்பிடம் எது?

“அது தொலைதூரத்தில் இருக்கிறது....

அது அவர் சொன்ன 16000 கிலோமீட்டர் தூரத்திலேயே இருக்கலாம். ஆனாலும் உறுதி செய்து கொள்ள தொலைதூரத்தில் எங்கே என்று அவன் கேட்பதற்குள் அடுத்த வாசகம் லாப்டாப்பில் மின்னியது. “அடுத்த அமாவாசை அன்று இரவு எட்டு மணிக்கு அந்த மலைக்கு வருகிறாயா? மலை உச்சியில் சந்திப்போம்....

க்ரிஷுக்கு அந்த மலையில் நடந்த வினோத சம்பவங்கள் எல்லாம் அமாவாசை இரவில் தான் அரங்கேறியவை என்பது உடனே நினைவுக்கு வந்தது. இப்போதும் அமாவாசை அன்று தான் அந்த ஆள் வரச் சொல்கிறான்...

“ஏன் அமாவாசை நாளையே நம் சந்திப்புக்குத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஏதாவது பிரத்தியேக காரணம் இருக்கிறதா?

“அந்த நாள் தான் நான் அங்கே வருவேன். அதனால் தான் அந்த நாள் வரச் சொல்கிறேன்... வரும் போது லாப்டாப்பையும் கொண்டு வா

அவன் படித்து விட்டு நேரில் சந்திக்கையில் லாப்டாப் எதற்கு என்ற அடுத்த கேள்வி கேட்பதற்கு முன் அந்த வாசகம் மறைந்து போனது.  பின் எந்த வாசகமும் வரவில்லை. க்ரிஷ் ஹலோஎன்று அழைக்க கீ போர்டை அழுத்தினான். அவன் அழுத்தும் எந்த எழுத்துமே இப்போது லாப்டாப் திரையில் வரவில்லை. அந்த மர்ம மனிதன் தகவல் ஏதாவது அனுப்பும் போது மட்டுமே அதற்கு அவன் பதில் எழுத முடிகிறது. அதுவும் ஆச்சரியமாய் இருக்கிறது.

அன்றிரவு அந்த மர்ம மனிதன் குறித்த சிந்தனைகளால் அவனால் உறங்க முடியவில்லை. யாரவன்? எதற்கு இப்படி தொடர்பு கொள்கிறான்? எப்படி அவனால் இப்படி தொடர்பு கொள்ள முடிகிறது?.... யாராக இருந்தாலும் அவன் தன்னை விட அறிவாளி என்பதில் க்ரிஷுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனிடம் பதிலும் இல்லை, எப்படி நடக்கிறது என்று அவனால் யூகிக்கவும் முடியவில்லை.

என்றைக்குமே க்ரிஷ் தன்னை விடச் சில விஷயங்களில் அறிவாளிகளாக இருப்பவர்கள் மீது பொறாமை கொண்டதில்லை. அவர்களது மேலான நிலையை ஒப்புக் கொள்ளவும் தயங்கியதில்லை. ஏனென்றால் புதியதாக அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் என்கிற உற்சாகமே எல்லாவற்றையும் விட பிரதானமாக அவனிடம் மேலோங்கி நிற்கும். இப்போதும் அந்த ஆள் அந்த உற்சாகத்தையே ஏற்படுத்தினான். அந்த ஆளைச் சந்திக்க அமாவாசை வரை காத்திருப்பது தான் கஷ்டமாய் இருந்தது.

அடுத்த அமாவாசை வரை இணையத்தில் இது போன்ற அபூர்வ சக்திகள் பற்றிய தகவல்களைத் தேடினான். அதில் நிறைய தகவல்கள் இருந்தன. ஆனால் கற்பனைகள், பொய் விளம்பரங்கள், அரைகுறை அனுமானங்கள் ஆகியவற்றின் மத்தியில் உண்மையைத் தேடுவது சுலபமாய் இருக்கவில்லை. ஆனாலும் சலிப்பில்லாமல் அதில் ஒவ்வொன்றையும் ஆழமாய் அலசினான். அந்த மலையில் அமாவாசை நாட்களில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டிப் படித்தான். நெருப்பு ஜூவாலை, பேய்க்காற்று, மர்ம சக்தி நடமாட்டம் போன்ற  அந்தத் தகவல்களிலும் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் கற்பனை பாதி என்றால் பத்திரிக்கைகள் முதலான ஊடகங்கள் பரபரப்புக்கு வேண்டி சிருஷ்டி செய்து கொண்ட விஷயங்கள் பாதியாக இருந்தன. உண்மை என்றுமே தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் சிரமத்தை எடுத்துக் கொள்வதில்லைஎன்று தோன்றியது.

அடுத்த அமாவாசை நாள் வரை அவனுடன் எந்த விதத் தொடர்பும் அந்த மர்ம நபர் வைத்துக் கொள்ளவில்லை. க்ரிஷ் அந்த நாட்களில் லாப்டாப்பை அடிக்கடி பார்த்தான். எந்த வாசகமும் மின்னவில்லை. அமாவாசை மாலை கிளம்பும் முன் சின்னதாய் ஒரு தயக்கமும் அவனுக்கு வந்தது. அவன் போய், அந்த மர்ம நபர் வராமல் போனால்....? அப்படி ஒருவேளை அந்த ஆள் வராமல் போனால் அந்த இடத்தில் உலாவும் சக்திகள், அமானுஷ்யங்கள் பற்றி ஆராய்ந்து விட்டு வரலாம்என்று எண்ணியவனாய் அமாவாசை அன்று இருட்டுவதற்கு முன்பே கிளம்பிப் போனான்.

அந்த மலையை அவன் அடைந்த போது ஆட்கள் யாருமேயில்லை. மலை மேல் இருந்த சிறிய அம்மன் கோயில் கதவு சாத்தப்பட்டிருந்தது. கைகூப்பி வணங்கி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். சில மரம், செடி, கொடி, பாறைகளைத் தவிர வேறு எதுவும் அங்கில்லை. சூரியன் தூரத்தில் அழகாய் அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்தது. அந்த அழகை நின்று முழுவதுமாய் க்ரிஷ் ரசித்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தான்.   

இருள் சூழ ஆரம்பித்தது. வீசிய காற்று ஒரு புதிய ஒலியைப் பெற ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் ஒலியும் கூடுதல் அமானுஷ்ய தொனி பெற ஆரம்பித்தது. பேய்க் காற்று என்று சொல்வது இதைத் தானோ?....

அமாவாசை இருட்டில் வானத்தில் மின்னிய வைர நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டிருக்கும் போது தான் க்ரிஷ் அந்தப் பெரிய கரிய பறவையைக் கவனித்தான். அமாவாசை இருட்டிலும் அந்தக் கரிய பறவை வித்தியாசமாய் இருந்தது. பறந்து கொண்டிருக்கும் அசைவினால் அதைப் பார்க்க முடிகிறதே ஒழிய அது அசைவற்று ஆகாயத்தில் இருந்தால் அந்த அமாவாசை இருட்டில் தெரிய வாய்ப்பில்லை.  கண்டிப்பாக அது காகமல்ல.... காகத்தை விடப் பெரிய பறவை. சுமார் ஐந்து மடங்காவது பெரிதாக இருக்கலாம்.... இது போன்ற அண்டக்காக்கைகள் வட அமெரிக்கப் பகுதியில் தான் இருக்கின்றன... அவை கூட இவ்வளவு பெரியவை அல்ல...

அந்தப் பறவை சில முறை அந்த மலையைச் சுற்றி வந்து  திடீரென்று மறைந்தது. அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டு. ஆகாயத்தில் திடீரென்று ஒரு ஒளி தெரிந்தது. நெருப்புப் பந்தமாய் மின்னிய ஒளி அந்த மலை உச்சியில் இறங்க ஆரம்பித்தது. அதைப் பார்க்கவே அவனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. இதயத்துடிப்பின் வேகம் கூடியது. பரபரப்பாக இருந்தது. இதைத்தான் உண்மையாகப் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்களோ?

அந்த ஒளி மலையுச்சியைத் தொட்டவுடன் மறைந்தது. ஒளி மறைந்து உருவான கூடுதல் இருட்டில் ஒரு கணம் க்ரிஷால் எதையும் பார்க்க முடியவில்லை. திடீரென்று மூடப்பட்டிருந்த அவன் லேப்டாப்பின் இடுக்கிலிருந்து ஒளி தெரிந்தது. க்ரிஷ் பரபரப்பாக லாப்டாப்பைத் திறந்தான்.

“நீ வந்ததற்கு நன்றிஎன்ற வாசகம் லாப்டாப் திரையில் மின்னிக் கொண்டிருந்தது.   

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?என்று நடுங்கும் கைகளில் கேள்வியை அழுத்தினான்.

“உன் அருகில் தான்என்ற வாசகம் உடனே பதிலாய் மின்னியது.

“என்னால் பார்க்க முடியவில்லையே!

“மனிதக் கண்களால் பார்க்க முடியாதவை ஏராளம்

“யார் நீங்கள்?

“நான் வேற்றுக்கிரகவாசி

க்ரிஷ் ஒரு நிமிடம் பேச்சிழந்தான். ஏலியன்! அந்தப் பெருங்காற்றிலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. கஷ்டப்பட்டு தன்னைச் சமாளித்துக் கொண்டு தன் அடுத்த கேள்வியை அழுத்தினான்.

“எந்தக் கிரகம்?

“இன்னும் மனிதர்கள் கண்டுபிடிக்காத ஒரு தூரத்து கிரகம்

“ஏன் இங்கு வந்தீர்கள்?

“எங்கள் ஆராய்ச்சியில், கண்காணிப்பில் இருக்கும் கிரகம் இது. அதனால் வந்திருக்கிறேன்....

க்ரிஷுக்குத் தலைசுற்றியது. எல்லாமே மாயா ஜாலம் போலவும், கனவு போலவும் தோன்றியது. அவன் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “ஏன் என்னைத் தொடர்பு கொண்டீர்கள்?

“பேரறிவும், மிக நல்ல மனமும் சேர்ந்து உன்னிடத்தில் இருப்பதால் தான் உன்னைத் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டேன்....

“அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

“எல்லாம் அலைகள் மூலமாகத் தான். ஒரு மனிதன் உண்மையில் என்னவாக இருக்கிறான் என்பதை அடுத்த மனிதர்கள் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். ஏன் அவனே அவனை அறிவது கூட அவ்வளவு சுலபமல்ல. ஆனால் அவன் வெளிப்படுத்தும் அலைகள் அனைத்துத் தகவல்களையும் சொல்லும். அதன் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இந்த வித்தையை உங்கள் சித்தர்கள், யோகிகள் அறிந்திருந்தார்கள். இப்போது ஆராய்ச்சிகள் மூலமாக ஓரளவு உங்கள் விஞ்ஞானிகளும் அறிய ஆரம்பித்திருக்கிறார்கள்.... உதாரணத்திற்கு உனக்குப் பிடித்த நிகோலா டெஸ்லா

என்னைப் பற்றி என் அலைகள் மூலமாகத் தெரிந்து கொண்டது சரி. கி.பி.1856ல் பிறந்து 1943ல் இறந்த நிகோலா டெஸ்லா பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும். நான் படித்துக் கொண்டிருந்ததை வைத்தா?

“மனிதர்கள் இறந்தாலும் அவர்கள் எண்ண அலைகள் அவர்களுடன் சேர்ந்து இறந்து விடுவதில்லை.... அவை சாசுவதமானவை உங்கள் ரிஷிகள் சொல்லும் ஆத்மாவைப் போல...

இது விஷயமாக விவாதிக்கவும் தெரிந்து கொள்ளவும் க்ரிஷுக்கு நிறைய இருந்தது. ஆனால் அதற்கு முன் இந்த வேற்றுக்கிரகவாசியிடம் கேட்க வேண்டிய முக்கியக் கேள்வி முந்தியது.

“இங்கு வந்த பிறகும் நம்மால் லாப்டாப்பில் தான் பேசிக் கொள்ள முடியும் என்றால் சொல்ல வேண்டியதை நான் வீட்டில் இருக்கும் போதே சொல்லி இருக்கலாமே.  என்னை இங்கே ஏன் வரவழைத்தீர்கள்?

உண்மையில் நீ என்னை சந்திக்க முடியும். இந்த லாப்டாப் உதவியில்லாமலேயே என்னிடம் பேச முடியும். அதுவும் இப்போதே முடியும். ஆனால் அதற்கு ஒரே ஒரு நிபந்தனை

க்ரிஷ் இதயம் வேகமெடுத்தது....

இந்தக் காட்சியை மனத்திரையில் மறு ஒளிபரப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மாஸ்டர் இங்கு தான் எதிரி க்ரிஷை அவன் அறியாமலேயே மடக்க ஆரம்பித்திருக்கிறான் என்று எண்ணினார். விதி வலியது!

(தொடரும்)
என்.கணேசன்